இளைஞர்மணி

இளைஞர்களின் வழிகாட்டி!

17th Nov 2020 06:00 AM | - வி.குமாரமுருகன்

ADVERTISEMENT


போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதற்கான பயிற்சிகளை இளைஞர்களுக்குத் தொடர்ந்து வழங்கி சத்தமின்றி சேவையாற்றி வருகிறார் தென்காசி மாவட்டம் அய்யாபுரம் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வரும் தர்மராஜ். திருநெல்வேலி சேவியர் கல்லூரியில் பொருளாதாரம் படித்த அவர் வாலிபால் விளையாட்டு வீரர். அதில் பல்வேறு பதக்கங்களையும் பெற்று வருகிறார். போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதற்கான பயிற்சிகளை மட்டுமல்லாமல், இளைஞர்களின் விளையாட்டிற்குத் தேவையான உதவிகளையும் செய்து வருகிறார். அவருடைய சேவைகளைக் குறித்து அவரிடம் பேசினோம்:

""குற்றங்களைக் கண்டறிந்து குற்றவாளிகளைக் கைது செய்வது மட்டுமே காவல்துறையினரின் வேலை அல்ல. குற்றவாளிகள் உருவாகாமல் தடுப்பதும் காவல்துறையினரின் வேலைதான். குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களிடம் விசாரித்தால் அவர்களின் குடும்ப சூழல்தான் அத்தகைய நிலையை அவருக்கு ஏற்படுத்தியிருக்கும் என்பது புரியும். அதே சமயம் அவர்களுக்கு ஒரு நிரந்தர வேலைவாய்ப்பினை உருவாக்கி கொடுத்து விட்டால் அவர்களின் வாழ்க்கை புதிய மாற்றத்துடன் நல்வாழ்க்கையாக மாறிவிடும்.

கிராமப்புறங்களில் படித்த இளைஞர்கள் அதிகம் பேர் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு வழிகாட்டுவதற்கு சரியான ஆட்கள் இல்லாததால் கிடைக்கும் வேலையைச் செய்து கொண்டு மீதி நேரத்தில் பொழுதை வீணாகக் கழித்து வருகின்றனர்.

இதனால் தேவையில்லாமல் இளைஞர்கள் கூட்டம் கூடுவதும், அதன் விளைவாக சில விரும்பத்தகாத சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. பொழுதுபோக்கிற்காகக் கூடும் இளைஞர் கூட்டத்தை நல்வழிப்படுத்தி அவர்களுக்கு தேவையான விஷயங்களை வழங்கினால் அது அவர்களுக்குப் பயனுள்ளதாகவும் இருக்கும்; சமூகத்திற்கும் நலம் பயக்கும் என்ற நோக்கத்துடன் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புப் பயிற்சியினை தனியாளாக அளிக்கத் தொடங்கினேன்.

ADVERTISEMENT

1997 - இல் விருதுநகர் மாவட்டத்தில் இரண்டாம் நிலைக் காவலராகப் பணியில் சேர்ந்தேன். அப்போது அங்கு உதவி ஆய்வாளராக இருந்த கனகசுந்தரம் இலவசமாக இளைஞர்களுக்குப் பயிற்சி வகுப்புகள் நடத்தி வந்தார். அதில் சேர்ந்து பயிற்சி பெற்று தேர்வு எழுதி வெற்றி பெற்று 2006-இல் உதவி ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தேன்.
காவல் துறையைச் சேர்ந்த ஒருவர் இலவசமாக நடத்திய பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயிற்சி பெற்று, நாம் உதவி ஆய்வாளராகச் சேர்ந்தது போல், வழிகாட்டுதல் இல்லாமல் இருக்கும் கிராமப்புற படித்த இளைஞர்களும் வேலைவாய்ப்பைப் பெற வேண்டும் என நினைத்து அத்தகைய மாணவர்களை ஒருங்கிணைத்து பயிற்சி அளிக்கத் தொடங்கினேன்.
அய்யாபுரம் காவல் நிலைய எல்லைக்குள் சுமார் 34 கிராமங்கள் உள்ளன. இங்குள்ள பழைய தலைமுறையினர் விவசாயம் செய்து வருகின்றனர். ஆனால்,
இன்றைய தலைமுறையினர் ஏராளமானோர் படித்திருந்தாலும் அவர்களுக்கு வழிகாட்டுவதற்கான ஆட்கள் இல்லாததால் கிடைக்கும் வேலைக்குச் சென்று
கொண்டிருந்தனர்.
நான் அந்தப் பகுதி இளைஞர்களிடம் பலமுறை நட்புடன் பேசினேன். அவர்களும் என்னைப் புரிந்து கொண்டு செயல்படுவதாகக் கூறினர். அதன் பின் அங்குள்ள கோயில் வளாகம், மரத்தடி, சமுதாய நலக்கூடம் உள்ளிட்ட பகுதிகளில் அவர்களை வரச்சொல்லி அவர்களுக்குப் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகளை அளிக்கத் தொடங்கினேன்.
தொடக்கத்தில் குறைந்த எண்ணிக்கையிலேயே அவர்கள் வருகை தந்தனர். அதன் பின்னர் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள இளைஞர்களை ஒருங்கிணைத்து அந்தந்த கிராமப் பகுதிகளில் கிடைக்கும் இடத்தில் போட்டித் தேர்வுக்கான பயிற்சிகளையும் ,தேர்வு எழுதும் பயிற்சிகளையும் அளிக்கத் தொடங்கினேன்.
அரசு பணியில் உள்ள நண்பர்கள், ஆசிரியர்களாக உள்ள நண்பர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோரும் என்னுடன் கைகோர்த்து போட்டித்தேர்வுக்கான பயிற்சிகளை அளிக்க முன்வந்தனர். இது தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு கிராமத்திலும் இளைஞர்கள் ஒருங்கிணைந்து போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருவதுடன், அப்பகுதிகளுக்கு தேவையான நல்ல விஷயங்களையும் செய்ய தொடங்கிவிட்டனர். இதனால் அவர்கள் தேவையில்லாத விஷயங்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு இல்லாமல் போய் விடுகிறது'' என்கிறார் தர்மராஜ்.
இளைஞர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு தேவையான உளவியல் ரீதியான பயிற்சிகளையும் உதவி ஆய்வாளர் தர்மராஜ் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இவரின் சேவையைப் பாராட்டி "நதிகள் அறக்கட்டளை', "தேசத்தின் சிற்பி' என்ற விருதினை வழங்கி கெüரவித்துள்ளது. இது போல் பல சமூக அமைப்புகள் அவருக்கு விருதுகளை வழங்கியுள்ளன. இருப்பினும் விருது வழங்கும் அமைப்புகளிடம், விருதை விட போட்டித் தேர்விற்கான புத்தகங்களை மட்டுமே வழங்குமாறு கேட்டு வருகிறார். இது தவிர இலவசமாக பயிற்சி வகுப்பு நடத்தி வரும் இடங்களுக்கும் சென்று பயிற்சியளித்து வருகிறார். அத்துடன் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மரக்கன்றுகளை நட்டு அவற்றைப் பராமரித்தும் வருகிறார்.

Tags : இளைஞர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT