இளைஞர்மணி

சஹாரா பாலைவனமும் செவ்வாய் கிரகத்தில் தண்ணீரும்!

10th Nov 2020 06:00 AM | -எஸ்.ராஜாராம் 

ADVERTISEMENT

 

செவ்வாய் கிரகத்தில் 3.7 பில்லியன் ஆண்டுகளுக்கு (ஒரு பில்லியன்- 100 கோடி) முன்பு தண்ணீர் உருவாகியிருக்கலாம் என்பது விஞ்ஞானிகளின் நம்பிக்கை. ஆனால், அதற்கு முன்பே அதாவது 4.4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே அங்கு தண்ணீர் உருவாகியிருக்கலாம் என டோக்கியோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு இப்போது கண்டறிந்துள்ளது.

ஒரு விண்கல்லில் உள்ள கனிமக் கலவையை ஆய்வு செய்ததன் மூலம் இந்த முடிவுக்கு அக்குழு வந்துள்ளது.

"பிளாக் பியூட்டி' எனப் பெயரிடப்பட்ட இரு விண்கற்கள் சஹாரா பாலைவனத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு கண்டெடுக்கப்பட்டன. இந்த விண்கற்கள் தொடர்பாக இதுவரை பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு செவ்வாய் கிரகம் தொடர்பான ஏராளமான தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளன. இப்போது செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் தொடர்பான தேடலுக்கும் இந்த விண்கல் உதவியுள்ளது.

ADVERTISEMENT

இந்த விண்கற்களின் ஆரம்பகால துண்டுகள் 4.4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் உருவாகியிருக்கலாம் என முதல்கட்டமாக விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இரு கற்களில் 50 கிராம் எடை கொண்ட ஒரு விண்கல்லை குழுவினர் ஆய்வு செய்தபோது, அந்த விண்கல்லில் உள்ள உடைந்த பாறை வடிவமானது அந்த விண்கல்லில் உள்ள "மாக்மா'-விலிருந்து (அதிக வெப்பமான நீர்) உருவாகின்றன என்பதும், அவை பொதுவாக ஆக்சிஜனேற்றத்தால் ஏற்படுகின்றன என்பதும் தெரியவந்தது. 4.4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் அல்லது அதன் தரைப் பகுதிக்கு அடியில் தண்ணீர் இருந்திருக்கும்போது மட்டுமே இந்த ஆக்சிஜனேற்றம் சாத்தியமாகியிருக்கும் என்கிறார் டோக்கியோ பல்கலைக்கழக பேராசிரியர் தகாஷி மிகோச்சி.

""இதுபோன்ற தாக்கம் நிறைய ஹைட்ரஜனை வெளியிட்டிருக்கும். இது செவ்வாய் கிரகமானது ஏற்கெனவே கார்பன் டை ஆக்ûஸடின் அடர்த்தியான மின்கடத்தா வளிமண்டலத்தைக் கொண்டிருந்த நேரத்தில் கிரக வெப்பமயமாதலுக்கு பங்களித்திருக்கும் எனவும் எங்களது பகுப்பாய்வு தெரிவிக்கிறது' என மேலும்சொல்கிறார்'' தகாஷி மிகோச்சி.

செவ்வாய் கிரக விண்கல் மீதான இந்தப் பகுப்பாய்வு முடிவானது, கிரகங்கள் உருவாகும்போது இயற்கையாக உருவாகும் பல பொருள்களில் தண்ணீரும் ஒன்றாக இருந்திருக்கலாம் என்கிற கருத்துக்கு மேலும் வலு சேர்க்கிறது. இந்தக் கண்டுபிடிப்பானது தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்கிற கேள்விக்குப் பதிலளிக்க ஆராய்ச்சியாளர்களுக்கு உதவக் கூடும்.

இது உயிர்களின் தோற்றம் மற்றும் பூமிக்கு அப்பாற்பட்ட வாழ்க்கைக்கான ஆய்வு பற்றிய கோட்பாடுகளிலும் எதிரொலிக்கும் எனவிஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இந்த ஆராய்ச்சி முடிவுகள் "சயின்ஸ் டெய்லி' என்ற இதழில் வெளியாகியுள்ளது. செவ்வாய் கிரகத்தில் நிலத்துக்கு அடியில் மூன்று ஏரிகள் இருப்பதை கடந்த மாதம் விஞ்ஞானிகள் கண்டறிந்த நிலையில், தற்போது தண்ணீர் பற்றிய மேலும் ஓர் ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது.

Tags : இளைஞர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT