இளைஞர்மணி

எல்லாருக்கும் பொது இடம்... கண்டுபிடிக்கும் செயலி!

10th Nov 2020 12:00 AM | - ந.ஜீவா

ADVERTISEMENT

 

சென்னை போன்ற பெரிய நகரங்களில் நண்பர்கள், உறவினர்கள் எல்லாம் ஆளுக்கொரு மூலையில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். ஒருவரைச் சந்திக்க வேண்டும் என்றால் குறைந்தது 40 கி.மீ. தூரம் வரை பயணம் செய்ய வேண்டும். போக்குவரத்து நெரிசல் மிக்க சாலைகளில் ஊர்ந்து செல்ல வேண்டும். பேருந்தின் படியில் தொங்கிக் கொண்டு பயணிக்க வேண்டும்.

நான்கைந்து நண்பர்கள் ஓர் இடத்தில் சந்திக்க வேண்டும் என்றால் எல்லாருக்கும் சம தூரத்தில் உள்ள பொது இடத்தைக் கண்டுபிடிப்பது மிக மிகச் சிரமம். ஐந்து பேரில் யாராவது ஒருவர் வாழும் இடம் மிக அதிக தூரத்தில் இருக்க வாய்ப்பு உண்டு.

இந்தப் பிரச்னையைத் தீர்க்கும்விதமாக செயலி ஒன்றை உருவாக்கியிருக்கிறார் சென்னை நீலாங்கரையைச் சேர்ந்த பிரசாந்த் குருநாத். தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பி.டெக் படித்த இளைஞரான அவருடைய அந்தச் செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் யார் வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ADVERTISEMENT

அவர் உருவாக்கிய அந்தச் செயலி பற்றி பிரசாந்த் குருநாத்திடம் பேசினோம்.

""நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னைதான். பி.டெக் படிப்பை எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் படித்தேன். படிக்கும் காலத்திலேயே எனக்கு ஸ்டார்ட் அப்களில் ஆர்வம் அதிகம். ஓரிடத்தில் வேலைக்குச் சேர்ந்து வாழ்நாளைச் செலவழிப்பதை விட, சொந்தமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். கல்லூரியில் படிக்கும்போதே 4 ஸ்டார்ட்அப்களில் பயிற்சி பெற்றேன். சாஃப்ட்வேர் டெவலப்பரான நான் அது தொடர்பான பயிற்சிகளையே அங்கு பெற்றேன்.

"சிட்டிஸ்கொயர்' செயலியை உருவாக்கும் எண்ணம் எனக்கு முதன்முதலாகத் தோன்றியது சென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மாலில்தான். எனக்கு நண்பர்கள் அதிகம். நண்பர்கள் எல்லாரும் பீனிக்ஸ் மாலில் சந்திப்பதாக முடிவெடுத்தோம். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் இருசக்கர வாகனம் இல்லை. யாரையாவது பார்க்க வேண்டும் என்றால் பஸ்ஸில்தான் செல்ல வேண்டும். இல்லையென்றால் வாடகைக் காரில் செல்ல வேண்டும். அப்போது எனக்கு பஸ் கிடைக்கவில்லை. உரிய நேரத்தில் அங்கு செல்ல முடியவில்லை. நண்பர்கள் ஒவ்வொருவரும் வேறு வேறு இடங்களில் இருந்து வர வேண்டியிருந்தது. சிலர் அங்கு வந்து சேரவே கிட்டத்தட்ட 2 மணி நேரத்துக்கும் மேல் ஆனது. எல்லாருக்கும் சம தூரத்தில் உள்ள பொதுவான இடம் ஒன்றில் சந்தித்தால் இப்படி சிரமப்பட வேண்டியதில்லையல்லவா? என்று அப்போது நினைத்தேன்.

சமதூரத்தில் உள்ள பொதுவான இடத்தை எப்படிக் கண்டுபிடிப்பது? கூகுள் மேப்பில் தேடினேன். ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குப் போவதற்கான வழிகாட்டியாக கூகுள் மேப் இருக்கிறது. அதை வைத்து பொதுவான இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பொதுவான இடத்தைக் கண்டுபிடிப்பதற்கான செயலியை உருவாக்கினால் என்ன என்ற எண்ணம் அப்போதுதான் எனக்குத் தோன்றியது.

நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் காலத்திலேயே இதற்கான வேலையைத் தொடங்கிவிட்டேன். இரண்டாம் ஆண்டு படிக்கும்போதே 2017} இல் கிட்டத்தட்ட செயலியை உருவாக்கிவிட்டேன். அதை நான் மட்டும் பயன்படுத்தி வந்தேன்.

2019 இல் பொறியியல் படிப்பு முடிந்தபிறகு, ரெட்பிளாக் ட்ரீ என்ற நிறுவனத்தில் சாஃப்ட் வேர் டெவலப்பராக வேலை செய்தேன். இருந்தாலும் எனக்குள் இருந்த ஸ்டார்ட்அப் கனவு விடாமல் தொந்தரவு செய்து கொண்டே இருந்தது. வேலையை விட்டுவிட்டேன்.

இந்த ஆண்டு மே மாதம் எனது சிட்டிஸ்கொயர் செயலியை வெளியிட்டேன். இந்தச் செயலியின் மூலமாக வெவ்வேறு இடங்களுக்கான, பொதுவான, சமதூரத்தில் உள்ள ஓர் இடத்தைக் கண்டுபிடிக்க முடியும். பொதுவான இடத்தில் நான்கு பேர் சந்திக்க முடியும். இதனால் பயண தூரம், நேரம் குறையும். பயணச் செலவும் குறையும். வாகனங்களில் இருந்து வெளிவரும் புகையால் ஏற்படும் சுற்றுச்சூழல் கேடு குறையும். பெட்ரோல் செலவு குறையும். எல்லாவற்றுக்கும் மேலாக தொலைதூரப் பயணத்தால் ஏற்படும் களைப்பு குறைவாக இருக்கும்.

ஆன்ட்ராய்டு போனுக்கான இந்தச் செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சொமோட்டோ செயலியுடன் இணைந்து எனது சிட்டிஸ்கொயர் செயலி செயல்படுகிறது. இதனால் பொதுவான இடத்தைக் கண்டுபிடிப்பதுடன் கூட, அந்தப் பொதுவான இடத்தில் சந்திக்கத் தகுந்த ரெஸ்டாரண்ட் எது? அங்கு என்னவெல்லாம் கிடைக்கும் என்பதை எல்லாம் எனது செயலியின் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

இது தவிர, நிறைய உணவகங்களுடன் தொடர்பு கொண்டு அவை பற்றிய தகவல்களையும் இந்தச் செயலியில் இணைக்கும் பணி இப்போது நடந்து வருகிறது.

இந்தச் செயலியின் மூலமாக உலகின் எந்தப் பகுதியிலும் உள்ள பல இடங்களுக்கான பொதுவான ஓர் இடத்தைக் கண்டுபிடிக்க முடியும். எனது இந்த செயலியை உருவாக்குவதில், செயல்படுத்துவதில் ரோஹிக் பிரகாஷ், ஷிவானி சுந்தர், மைத்ரேயி ஸ்ரீநிவாஸ், யாசீர் ஆகிய நண்பர்கள் குழு எனக்கு உதவியாக இருந்ததை, இருப்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

இந்தச் செயலியைப் பயன்படுத்துவதும் எளிது. குரல் ஒலியின் மூலமாகவே இந்தச் செயலியைப் பயன்படுத்த முடியும். டைப் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. இது எனது இரண்டாவது செயலி.

இதற்கு முன்பு டெக்ஸ்ட்டை பேச்சாக மாற்றும் "ஓசிஆர்: மை டெக்ஸ்ட் ஸ்கேனர்' என்ற செயலியைக் கண்டுபிடித்திருக்கிறேன்.

ஜப்பானிய மொழி, தைவான் மொழி, ஆங்கிலம், பிரெஞ்ச், சீன மொழி, இத்தாலிய மொழி, ஜெர்மானிய மொழி உட்பட பல மொழிகளின் எழுத்துகளைப் படித்து ஒலியாக மாற்றி இந்தச் செயலி உச்சரிக்கும். இதை தற்போது 2000 பேர் பயன்படுத்துகிறார்கள்.

ஒரு காகிதத்தில் எழுதப்பட்டதை, அல்லது புத்தகத்தில் வெளிவந்ததைப் படம் பிடித்தால் போதும், அதைப் படித்து நம்மிடம் இந்தச் செயலி சொல்லும்'' என்றார்.

Tags : தமிழ்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT