இளைஞர்மணி

மனநலம்... மன வலிமை!

10th Nov 2020 06:00 AM | வி.குமாரமுருகன்

ADVERTISEMENT

 

நாம் அடிக்கடி இரண்டு வார்த்தைகளைக் கேள்விப்பட்டிருப்போம். ஒன்று மெண்டல் ஸ்ட்ரென்த் எனப்படும் மன வலிமை. மற்றொன்று மென்டல் ஹெல்த் எனப்படும் மனநலம்.

இவை இரண்டுமே ஒன்றல்ல.

இரண்டிற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் உடல் வலிமைக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் உள்ள வேறுபாடு போல்தான்.

ADVERTISEMENT

மனம் ஆரோக்கியமற்ற நிலை இருந்தாலும் கூட ஒருவர் மன வலிமை உடையவராக இருக்க முடியும். நம்முடைய சிந்திக்கும் திறன்,

உணரும் திறன் மற்றும் செயல்படும் திறன் போன்றவை மன வலிமையுடன் இணைந்து செயல்படும் காரணிகளாக உள்ளன. அதேசமயம் நாம் மேற்கொள்ளும் பயிற்சிகள் நமது மன வலிமையையும், நமது மன நலத்தையும் மேம்படுத்த உதவும் என ஆராய்ச்சிகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் மனம் நலமாக இருந்தால் நமது மன வலிமையும் அதிகரிக்கும்.

மன வலிமை இருந்தால் விரும்பத்தகாத நிகழ்வுகள் நமக்கு நடந்தால் கூட அவற்றை எதிர்கொள்ளும்சக்தியை நமக்கு அது அளிக்கும்.

உணர்வுகளைப் புரிந்து கொள்ள உதவும். உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டிய சரியான தருணத்தை அது நமக்கு அளிக்கும்.

பலரும் சொல்வார்கள், ""மனசிருந்தா செய்யலாம்னு''. மனம் நலமாக இருந்தால் மட்டுமே எந்த ஒரு செயலிலும் முழுமையாக ஈடுபட முடியும்.

மனவலிமையின் மூன்று பகுதிகள்:


சிந்தித்தல்: யதார்த்தமாக ஒரு விஷயம் குறித்து அணுகுதல். ஒரு சினிமாவைப் பார்த்து விட்டு வந்த பின் அந்த கதாநாயகன் போல் தானும் ஒரே பாடலில் பணக்காரன் ஆக வேண்டும் என்று சிலர் நினைப்பார்கள்.

பின்னர் தாங்களாகவே அது குறித்து சிந்தித்து யோசித்து, யதார்த்த வாழ்க்கையில் அது நடைமுறை சாத்தியமில்லை என்று உணர்வார்கள். அதற்கு இந்த மன வலிமை கை கொடுக்கும். ஓர் இக்கட்டான சூழலில் இருக்கும்போது கூட இந்த மன வலிமை அவர்களுக்கு சுய விவரங்களைத் தெளிவுபடுத்தி நல்ல சிந்தனையை உருவாக்கும்.

உணர்தல்: பொதுவாக ஒரு பிரச்னை வரும் போது அருகில் இருப்பவர்கள், "ஐயோ! முடிந்து விட்டதே' என்று உணர்ச்சி ததும்பக் கூறுவார்கள். ஆனால் மன வலிமை என்பது ஒருவரின் உணர்ச்சியை உயர்த்தியோ, தாழ்த்தியோ, முன்னிலைப் படுத்தாமல் யதார்த்தத்தை மட்டுமே அவருக்கு உணர்த்தும்.

செயலாற்றுதல்:

மனதிற்கும் உடல் இயக்கத்திற்கும் பெரும் தொடர்பு உள்ளது. நமது மனம் நினைப்பதை நாம் நமது நடத்தைகள் மூலம் வெளிப்படுத்துகிறோம். துக்கமான நிகழ்வுகளில் நமது வேதனையை நமது நடத்தை வெளிப்படுத்துகிறது. நமது நடத்தைகள் மூலம் நமது மனம் என்ன நினைக்கிறது என்பதை மற்றவர்கள் புரிந்துகொள்ள முடியும். ஒருவரின் மனம் வலிமையாக இருந்தால் மட்டுமே அது நடத்தையாக உருமாற்றம் பெற முடியும்.
மன வலிமையை மேம்படுத்து வதற்கான வழிகள்:

மன வலிமையை மேம்படுத்த பயிற்சிகளும் அவசியம். மன வலிமையை அதிகரிக்கும்போது மன ஆரோக்கியமும் அதிகரிக்கும்.

அறிவுசார் பயிற்சிகள்:

செஸ், சுடோகு போன்றவை அறிவுசார் விளையாட்டுகளாகக் கருதப்படுகின்றன. இது போன்ற பயிற்சிகள் நமது நேர்மறை சிந்தனையை அதிகரித்து, எதிர்மறை எண்ணங்களை அழித்து யதார்த்த சூழலை நமக்குத் தெரிவிக்கின்றன. இது போன்ற பயிற்சிகள் மன வலிமையை அதிகரிக்கும்.

நேர்மறை எண்ணங்கள் மற்றும் உணர்வுகளைத் தொடர்ந்து எழுதுவது, ஒருவரை சுறுசுறுப்பாக இயங்க வைப்பதுடன் நேர்மறை எண்ணங்களையும், உணர்வுகளையும் வலுப்படுத்தும்.

நமது நண்பரிடம் நாம் எவ்வாறு நம்பிக்கை தரும் வார்த்தைகளைப் பேசுகிறோமோ, அதுபோல் நமக்கு நாமே நம்பிக்கை தரும் விஷயங்களைப் பேசிப் பழக வேண்டும். நமக்குப் பிடித்தவரிடம் நாம் காட்டும் அன்பு போலவே
நம்மிடமும், நமக்கு, நாமே அன்பு காட்டப் பழகவேண்டும்.

நாம் சிறப்பான வழியில் பயணித்தாலும் கூட, சில சமயங்களில் நாம் தவறாகச் செய்கிறோம் அல்லது தவறான வழியில் செல்கிறோம் என்பன போன்ற எதிர்மறையான சிந்தனைகள் நமக்குள் தோன்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அது நமது செயலைத் தடைப்படுத்தும். அவ்வாறு இல்லாமல் நம்மால் முடியும். நாம் சரியான பாதையில் தான் செல்கிறோம் என்று நினைத்துச் செயல்பட வேண்டும்.

உணர்வு சார்ந்த பயிற்சிகள்

உணர்வு சார்ந்த பயிற்சிகள் ஒருவருடைய உணர்வுநிலையின் சுய விழிப்புணர்வை அதிகரிக்கும். சுய விழிப்புணர்வு நமக்கு மிக அவசியத் தேவை. எத்தகைய உணர்வு வெளிப்பாடு குறிப்பிட்ட தருணத்தில் உதவியாக இருக்கும் என்பதை இந்த சுய விழிப்புணர்வு மூலம் தான் அறிய முடியும்.

மிக முக்கியமான காலகட்டத்தில் அதாவது கோபம், எரிச்சல் இது போன்ற உணர்வுப்பூர்வமான விஷயங்களை வெளிப்படுத்தும் நேரத்தில் நம்மை சமநிலைப் படுத்த உதவும்.

நமது உணர்வுப்பூர்வமான முடிவுகளை நெறிப்படுத்துவதற்கு உதவியாக எமோஷனல் பயிற்சிகள் இருக்கும். எந்த இடத்தில் எந்த அளவிலான உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டும் என்பதைச் சரியாகத் தீர்மானிக்க இத்தகைய பயிற்சிகள் உதவும்.

சினிமாவை சினிமாவாக மட்டுமே பார்க்க வேண்டும். அதை வாழ்க்கையாக நினைக்கக் கூடாது என்பது போல உணர்வுகளை உணர்வுகளாக மட்டுமே கருத வேண்டும். ஒரு பிரச்னை எழும்போது உணர்வுகளை உணர்வுகளாக மட்டுமே யோசித்தால் நாம் தர்க்க ரீதியாக சிந்தித்து தீர்வு காண முடியும்.

கஷ்டமான சூழல் உருவாகும் நிலையில் நாம் உணர்ச்சி மிக்கவர்களாக மாறி விடுவோம். அத்தகைய நிலையில் நமது மனம் அமைதியற்றுப் போய் விடும்.

அதைத் தவிர்க்க நல்ல புத்தகத்தை வாசிப்பது அல்லது சிறிய அளவிலான நடைப்பயிற்சி மேற்கொள்வது போன்றவை நமது உணர்ச்சிப் பெருக்கை கட்டுக்குள் கொண்டுவரும்.

மேலும் மூச்சுப் பயிற்சி மேற்கொள்வதன் மூலம் நமது கவலை மற்றும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட முடியும் என்பதுடன் உடலையும் பேணிப் பாதுகாக்க முடியும்.

நடத்தை சார் பயிற்சிகள்

ஒரு விஷயத்தை சிறப்பாகச் செய்து முடிக்க இத்தகைய பயிற்சிகள் உதவும்.

வழக்கமான பணிகளை விட்டு விட்டு அதற்கு மாறுதலாக ஒரு சில பணிகளை செய்வது. வீட்டிலிருந்து தொடர்ந்து வேலை செய்து கொண்டிருக்கும் போது இடையிடையே நமக்காக தேநீர் போடுவது அல்லது உணவு தயாரிப்பது போன்றவை.

வேலைகளுக்கு இடையே பொழுதுபோக்கு அம்சங்களையும் கவனத்தில் கொண்டு செயல்படுவது அவசியம். ஓவியம் வரைவது ஆக இருந்தாலும் சரி, கேரம் விளையாடுவதாக இருந்தாலும் சரி, எது மனதிற்குப் பிடித்திருக்கிறதோ அதை இடையிடையே செய்வது.

இத்தகைய பயிற்சிகள் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவது மிக உதவியாக இருக்கும். இதனால் நமது மன வலிமை பன்மடங்கு உயரும்.

திரைப்படத்தில் வரும் சோகமான காட்சிகளைப் பார்க்கும்போது சிலர் கண்ணீர் விட்டு அழுவார்கள். ஆனால் சிலர் அதைப் பற்றி கண்டு கொள்ளவே மாட்டார்கள். கண்ணீர் விடாதவர்கள் மனவலிமை உடையவர்கள் என்று நினைப்பது மிகத் தவறு. உணர்வுகளை உள்வாங்கி அதை வெளிப்படுத்தும் தன்மை கொண்டவர்களை மட்டுமே மன வலிமை உடையவர்களாகக் கருத முடியும். அதனால் உணர்வுகளை நிச்சயம் வெளிப்படுத்தும் தன்மை அவசியம்.
எனவே, இத்தகைய மன வலிமை பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் ஒருவர் மன வலிமையுடன் மன நலத்தையும் பெற முடியும்.

Tags : இளைஞர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT