இளைஞர்மணி

பறக்கும் கார்!

10th Nov 2020 06:00 AM | அ.சர்ஃப்ராஸ்

ADVERTISEMENT

 

போக்குவரத்து நெரிசலில் நீண்ட நேரம் சிக்கி வாகனங்களுக்குள் அசையாமல் இருக்கும்போதெல்லாம், அங்கிருந்தபடியே இறக்கையை விரித்துப் பறந்துவிடலாம் என்றுதான் அனைவருக்கும் எண்ணத் தோன்றும்.

அப்படிப்பட்ட காட்சிகளைத் திரைப்படங்களில் கண்டு இருப்போம். இந்த கனவுக் காட்சியை கிழக்கு ஐரோப்பா, ஸ்லோவாகியா நாட்டைச் சேர்ந்த "கிளைன் விஷன்' நிறுவனம் நனவாக்கியுள்ளது.

சாலையில் செல்லும் காரின் எடை கூடுதலாக இருக்கும் என்பதால், அதை அப்படியே பறக்க வைப்பது சவாலானதாக இருந்தது. இந்தப் பிரச்னைக்கு சுமார் 30 ஆண்டுகளாக ஆய்வு செய்து தீர்வு கண்டுள்ள அந்த நிறுவனம், வெறும் மூன்று நிமிடங்களில் காரையே விமானமாக மாற்றி, பறக்க வைத்து சாதனை படைத்துள்ளது.

ADVERTISEMENT

ஐந்தாம் தலைமுறை பறக்கும் காரை பேராசிரியர் ஸ்டீபன் கிளைன் உருவாக்கியுள்ளார்.

இரண்டு இருக்கைகளைக் கொண்ட இந்த பறக்கும் காரில் பிஎம்டபுள்யு 1.61 என்ஜினும், 140 ஹெச்பி திறனை வெளியேற்றும் சக்தியும் உள்ளது. மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பறக்கும் திறன் கொண்ட இந்த கார், ஒரு மணி நேரத்துக்கு 18 லிட்டர் எரிபொருளைப் பயன்படுத்துகிறது.

இந்த பறக்கும் காரின் மொத்த எடை 1,100 கிலோவாகும். கூடுதலாக 200 கிலோ வரை எடுத்துக் கொண்டு பறக்கக் கூடும்.

ஸ்வோவாகியாவில் உள்ள பியஸ்டனி விமான நிலையத்தில் இதன் சோதனை ஓட்டம் இரண்டு முறை நடத்தப்பட்டது.

சாலையில் சாதாரணமாக வலம் வரும் காரில் பொத்தானைத் தட்டியவுடன் உள்ளே இருந்து இரண்டு இறக்கைகளும், பின்னே ஒரு ஃபேனும் வெளியே வந்து விமானமாக மாறி 1, 500 அடி உயரம் வரை பறந்து பின்னர் காரின் சக்கரங்களைக் கொண்டு தரையிறங்கியதும், ஒரே பொத்தானைத் தட்டியதும் இறக்கைகள் உள்ளே சென்று சாதாரண காராக மாறி சாலையில் சென்றது. இந்த விடியோ இணையத்தில் "ஏர் கார்' என்று வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

டிரோன்கள் மூலம் மனிதர்கள் பயணம் செய்யும் வான் போக்குவரத்து தொடங்கப்பட உள்ள நவீன காலத்தில், காரையே விமானமாக மாற்றி இயக்கப்படும் இந்த புதிய தொழில்நுட்பத்தில் உருவான பறக்கும் கார் விற்பனைக்கு வந்தால் அனைவரையும் ஈர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.

Tags : இளைஞர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT