இளைஞர்மணி

எங்கேயும்... எப்போதும்!

10th Nov 2020 06:00 AM | -ஜீவா

ADVERTISEMENT


ஸ்விட்சர்லாந்தில் சைவ உணவு அலை!

உலக சைவ உணவு தினம் நவம்பர் 1 - இல் கொண்டாடப்பட்டது. ஸ்விட்சர்லாந்த்
மக்களிடம் சைவ உணவின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஏடபிள்யூபி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சைவ உணவு என்றதும் நம்மூர் சாம்பார், பொரியல், கூட்டு என்று நினைத்து
விடாதீர்கள். பர்கர் மாதிரியான வெளிநாட்டு உணவு வகைகளை முழுக்க முழுக்க காய்கறிகளைக் கொண்டு அங்கே தயாரிக்கிறார்கள்.

இந்த ஆண்டில் மட்டும் கிட்டதட்ட 70 வகையான சைவ உணவுப் பொருள்கள் ஸ்விட்சர்லாந்தில் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. இந்த உணவுப் பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனங்களின் விற்றுமுதல் (டர்ன்ஓவர்) சென்ற ஆண்டுடன் ஒப்பிடும்போது இரண்டு மடங்காகியுள்ளதாம். இதனால் இவற்றை விற்பனை செய்யும் சில்லறை வணிகர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள்.

ADVERTISEMENT

 

ஒலி எழுப்பும் இ ஸ்கூட்டர்!

வாகனங்களில் இருந்து வெளிவரும் புகையால் காற்று மாசடைகிறது என்பதற்காக பல நாடுகளில் எலக்ட்ரிக் வாகனங்கள் வரவேற்கப்படுகின்றன. டீசல், பெட்ரோல் என்ஜின்களில் இருந்து புகை மட்டும் வெளியே வருவதில்லை. ஒலியும் வெளியே வருகிறது. ஒலியின் அளவைக் குறைக்க வாகனங்களில் சைலன்ஸர்கள் வைக்கப்படுகின்றன. நம்மூர் இளம் வயதினர் சைலன்ஸர்களில் உள்ள குழாயைக் கழற்றி வீசிவிட்டு சாலைகளில் மிகுந்த ஒலியுடன், பிறரைப் பயமுறுத்தும் வேகத்துடன் பறந்து செல்வதைப் பார்த்திருப்பீர்கள்.

ஆனால் எலக்ட்ரிக் வாகனங்களில் எந்த ஒலியும் வெளிவருவதில்லை. காற்று மாசை மட்டுமல்ல, ஒலி மாசையும் எலக்ட்ரிக் வாகனங்கள் அதிக அளவில் குறைத்துவிடுகின்றன.

இந்த ஒலியின்மையே ஒரு புதிய பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. ஒலியே இல்லாமல் வாகனங்கள் வருவதால் விபத்துகள் ஏற்படுகின்றன. வாகனத்தில் ஒலி இல்லாததால் பார்வைக்குறைபாடு உள்ளவர்கள் வாகனம் வருவது தெரியாமல் விபத்தில் அதிகமாகச் சிக்கி கொள்கிறார்கள் என்று பல பிரச்னைகள் ஏற்பட்டன.

இதனால் தற்போது இங்கிலாந்தில் இ ஸ்கூட்டர்கள் ஓடும்போது செயற்கையாக ஒலி ஏற்படும்படி செய்திருக்கிறார்கள்.

இ ஸ்கூட்டர் ஓட்டுபவர்கள் அதிக வேகத்துடன் செல்வது, போக்குவரத்து விதிகளை மீறிச் செல்வதுதான் அதிகமான விபத்துகள் நடக்கக் காரணம்; இந்த செயற்கை ஒலி எல்லாம் வேலைக்காகாது என்று செயற்கை ஒலிக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களும் இருக்கிறார்கள்.


புதுமையான முகக்கவசம்!

"முகக்கவசம் அணிதல் முகத்திற்கழகு' என்று எல்லாரும் நினைக்கும்நிலை இப்போது ஏற்பட்டுவிட்டது. கரோனா தீ நுண்மி தொற்றிக் கொள்ளாமல் இருக்க முகக்கவசம் அணிகிறோம். தில்லி போன்ற காற்று மாசு நிறைந்த நகரங்களில் கரோனாவுக்கு முன்பே முகக்கவசம் அணியும் வழக்கம் வந்துவிட்டது. முகக்கவசம் அணிந்தாலும், அவை எந்த அளவுக்கு தீ நுண்மித் தொற்றைத் தடுக்கின்றன என்ற கேள்வி ஒருபுறமிருக்க, முகக்கவசம் அணிந்து சுவாசிக்கும் காற்று உண்மையில் தூய்மையானதுதானா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

வெளியில் உள்ள காற்றில் கலந்துள்ள பல்வேறு மாசுகளை வடிகட்டி, ஆக்சிஜன் நிறைந்த காற்றை நாம் சுவாசிக்க உதவும்விதமாக உருவாக்கப்பட்டுள்ளதுதான் லைஃபி என்ற நிறுவனம் தயாரித்துள்ள ஸ்போர்ட்ஸ்மாஸ்க். இந்த முகக்கவசம் நாம் சுவாசிக்கும் காற்றை 99.97 சதவீதம் தூய்மைப்படுத்திவிடுகிறது. காற்றில் உள்ள கிருமிகள், நச்சு வாயுக்கள், புகை ஆகியவற்றை வடிகட்டிவிடுகிறது. அதற்காக இதனுடன் எச்இபிஏ பிஎம் 2.5 காற்று வடிகட்டி இணைக்கப்பட்டுள்ளது. வடிகட்டப்பட்ட தூய்மையான காற்றை மிக எளிதாகச் சுவாசிக்க இதில் இணைக்கப்பட்டுள்ள மின்விசிறி உதவுகிறது. தேவைக்கேற்ப இந்த மின்விசிறி சுற்றும் வேகத்தை 3 விதங்களில் மாற்றி அமைத்துக் கொள்ள முடியும். ஒருமுறை சார்ஜ் செய்தால் குறைந்தது ஆறிலிருந்து எட்டு மணிநேரங்கள் வரை இந்த முகக்கவசத்தில் உள்ள மின்விசிறி இயங்கும்.

இதை அணிந்து கொண்டு உடற்பயிற்சி செய்ய முடியும். மருத்துவப் பணியாளர்கள், பல் மருத்துவர்கள், பொருள்களை டெலிவரி செய்பவர்கள் என மக்களுடன் அதிகம் தொடர்பு உள்ளவர்களுக்கு இந்த ஸ்போர்ட்ஸ்மாஸ்க் மிகவும் உதவும் என்று இதைத் தயாரித்த லைஃபி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

ட்ரேஸ்டுகெதர்!

கரோனா தொற்றின் காரணமாக அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கம் பல நாடுகளில் தளர்த்தப்பட்டுள்ளன.

"இயல்பு வாழ்க்கையும் நடக்க வேண்டும்; கரோனா தொற்றிலிருந்தும் மக்கள்
தப்பிக்க வேண்டும்' என்ற நோக்கத்துடன் சிங்கப்பூர் அரசு ஒரு புதிய முறையை
அறிமுகப்படுத்தியுள்ளது. "ட்ரேஸ்டுகெதர்' என்ற டோக்கன் அல்லது செல்பேசியில் பயன்படுத்தக் கூடிய செயலி இவற்றில் ஏதாவது ஒன்றை மக்கள் கண்டிப்பாகப் பயன்படுத்த வேண்டும் என்று அது கூறியுள்ளது.

இந்த ட்ரேஸ்டுகெதர் என்ற டோக்கனை அணிந்து கொண்டு ஒருவர் சென்றால், அவருக்கு அருகில் கரோனா தொற்று பாதிக்கப்பட்ட ஒருவர் இருந்தால் அது கண்டுபிடித்துக் கொடுத்துவிடும்.

அதுபோன்று, ட்ரேஸ்டுகெதர் ஆப் என்ற செயலியை ஒருவர் தனது செல்லிடப் பேசியில் பதிவிறக்கம் செய்திருந்தாலும், அருகில் உள்ள நபர் கரோனா தொற்று உள்ளவரா என்பது தெரிந்துவிடும்.

இதுவரைக்கும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரோனா தொற்று உள்ளவர்கள் இந்த ட்ரேஸ்டுகெதரால் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் கூறியுள்ளார்.

இதுவரைக்கும் 5 லட்சத்து 70 ஆயிரம் குடும்பத்தினர் ட்ரேஸ்டுகெதர் டோக்கனைப் பெற்றிருப்பதாகவும், 27 லட்சம் மக்கள் ட்ரேஸ்டுகெதர் செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வரும் டிசம்பர் 1 -ஆம் தேதி முதல் பொது இடங்களுக்குச் செல்லக் கூடியவர்கள் இந்த ட்ரேஸ்டுகெதர் இல்லாமல் சென்றால் அனுமதிக்கப்படமாட்டார்கள்; மாணவர்கள் ட்ரேஸ்டுகெதர் இல்லாமல் சென்றால் பள்ளி, கல்லூரிகளுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஒருவேளை மாணவர்கள் ட்ரேஸ்டு கெதர் டோக்கனை மறந்துவிட்டுச் சென்றாலோ, காணாமல் ஆக்கியிருந்தாலோ மட்டுமே விசாரித்து உள்ளே அனுப்புவார்களாம்.

Tags : இளைஞர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT