இளைஞர்மணி

ஒரு புதிய பட்டயப் படிப்பு!

10th Nov 2020 06:00 AM | ச.பாலசுந்தரராஜ்

ADVERTISEMENT

 

சில்லறை வணிகம் என்றால் தள்ளு வண்டியில் பழங்கள் விற்பனை செய்வது, மளிகைக் கடை வைத்து நடத்துவது உள்ளிட்ட பல தொழில்களை சில்லறை வணிகம் என நாம் கூறி வருகிறோம்.

சாதாரணமாக நாம் காலையில் எழுந்து பல் துலக்க பயன்படுத்தும் பற்பசைகளை விற்பனை செய்வது முதல், கார் விற்பனை வரை நுகர்வோரிடம் கொண்டு சேர்ப்பதே சில்லறை வணிகம் எனக் கூறுகிறார்கள். சில்லறை வணிகம் இந்தியாவில் ஓர் ஆண்டிற்கு ரூ. 60 லட்சம் கோடி அளவில் நடைபெற்று வருகிறது என ஓர் ஆய்வு கூறுகிறது. இதில் வணிகர்கள், தொழிலாளர்கள் என கோடிக்கணக்கானோர் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தியப் பொருளாதாரம் வளர்ந்து வரும் சூழ்நிலையில் பல சில்லறை வணிகர்கள் தங்களது வணிகத்தைப் பெரிய அளவில் கொண்டு சென்றால்தான் வெற்றியடைய இயலும் என நம்புகிறார்கள். சில்லறை வணிகத்தில் தற்காலத்திற்கேற்ப, சூழ்நிலைக்குத் தகுந்தாற் போல மாற்றங்களைக் கொண்டு வரவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

ஒரு சில்லறை வணிகராகவும்,நுகர்வோராகவும், கணக்கியல், பொருளாதாரம் தெரிந்தவராகவும், முடிவு எடுக்கும் திறன் கொண்டவராகவும், கணினி உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களைக் கையாளக் கூடியவராகவும் இருக்க வேண்டும். சில்லறை வணிகம் குறித்த பட்டயப் படிப்பு படித்தால் வணிகர்கள் தங்களது வணிகத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்ல இயலும்.

ADVERTISEMENT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் ஓர் ஆண்டு பட்டயப் படிப்பாக சில்லறை வணிகம் குறித்த பட்டயப் படிப்பு நடைபெற்று வருகிறது.

இந்தப் படிப்பு குறித்து அக்கல்லூரி முதல்வர் செ.அசோக் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது:

""தற்போது அனைத்துத் துறைகளிலும் புதிய தொழில்நுட்பம், நவீனயுக்திகள் பயன்படுத்தப்படுகின்றன. அதன் அடிப்படையில் சில்லறை வணிகத்தை மேம்படுத்தவும், வணிகர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், சில்லறை வணிகத்தைப் பாதுகாக்கவும் பல்கலைக்கழக மானியக்குழு நிதி உதவி அளித்து இந்த பட்டயப்படிப்பு நடத்தப்பட்டு வருகிறது.

இந்த படிப்பில் சேர்வதற்கு பிளஸ் டூ வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில் சேர்வதற்கு வயது வரம்பு கிடையாது. இந்தப் படிப்பு படிப்பவர்களுக்கு தேர்வு கட்டணம் உள்பட எவ்விதக் கட்டணமும் கிடையாது. இது முற்றிலும் இலவசமான ஓர் ஆண்டு பட்டயப்படிப்பாகும். இதற்கான பாடத்திட்டங்களை எங்கள் கல்லூரி வணிகநிர்வாகவியல்துறையினர் வழங்குகிறார்கள்.

இந்தப் படிப்பில் சில்லறை வணிகத்தின் அடிப்படைத் தன்மைகள், அதன் நோக்கம், நுகர்வோரைத் திருப்தி செயவது, சந்தைப்படுத்தும் முறைகள், கணினியைப் பயன்படுத்துவது, விநியோகம், நுகர்வோரின் தேவைகள், போட்டிகளை எப்படிச் சமாளிக்க வேண்டும், வாடிக்கையாளர்களிடம் பேசும் முறை, வாடிக்கையாளர்களை எப்படித் தக்கவைத்துக் கொள்வது, வாடிக்கையாளர்களுக்குச் செய்ய வேண்டிய சேவைகள் உள்ளிட்ட வணிகத்திற்குத் தேவையான அனைத்து விஷயங்களும் பாடத்திட்டத்தில் உள்ளன.

நுகர்வோரை நேரில் சந்தித்து, அவர்களுக்கு என்ன தேவை என அறிந்து, அவர்களின் தேவைகளை எப்படிப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பது குறித்து மாணவர்கள் களப்பணி செய்ய வேண்டும்.

பொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்வது உள்ளிட்ட பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. சிறு தொழில் செய்பவர்கள், பெரும் வணிகர்கள் உள்ளிட்டோர் கல்லூரிக்கு நேரில் வந்து மாணவர்களிடையே அவ்வப்போது தங்களது அனுபவங்களையும் கருத்துகளையும் பகிர்ந்து கொள்வார்கள். இறுதியில் ஒரு மாதகாலம் பல் பொருள் அங்காடி உள்ளிட்டவற்றில் தினசரி ஒரு மணிநேரம் செயல்முறைப் பயிற்சி பெற வேண்டும். படிப்பின் இறுதியில் திட்ட அறிக்கை தயார் செய்து கொடுக்க வேண்டும். தேர்ச்சி பெற்ற மாணவர்களுககு அரசு அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் வழங்கப்படும். இதன் மூலம், பட்டயப் படிப்பு படித்த மாணவர்கள் வங்கியில் கடன் பெற்று சுய தொழில் செய்யலாம். இது ஒரு சமுதாயக்கல்வி எனக் கூறலாம்.

தற்போது பல் பொருள் அங்காடிகள் பெருகி வருகின்றன. ஜனத்தொகை அதிகரித்து வருவதால் சில்லறை வணிகர்களும் அதிகரித்து வருகிறார்கள். தற்போது நுகர்வோரிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் இந்தப் பட்டயப்படிப்பு, சில்லறை வணிகத்தில் ஈடுபடுபவர்கள்; வாழ்க்கையில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரும்'' என்றார்.

Tags : இளைஞர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT