இளைஞர்மணி

ஒரு நிமிடம் போதும்!

10th Nov 2020 06:00 AM | -சுரேந்தர் ரவி

ADVERTISEMENT

 

புதிய விஷயங்களைத் தொடங்குவதில் நமக்கு எப்போதுமே அலாதியான ஆர்வம் இருப்பதுண்டு. புத்தகம் படிப்பது, இசை கற்பது, வீட்டுத் தோட்டம் அமைப்பது, உடற்பயிற்சி செய்வது உள்ளிட்ட பல்வேறு பழக்கங்களைப் புதிதாகக் கற்க முனைவோர் பலர். ஆரம்பத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் அச்செயல்களில் அவர்கள் ஈடுபடுவார்கள். ஆனால் போகப் போக அச்செயல்பாட்டின் மீதான ஆர்வம் குறைந்து ஒரு கட்டத்தில் அது முடிவுக்கே வந்துவிடுவதுண்டு.

புதிய செயலைச் செய்யத் தொடங்கும்போது இருக்கும் ஈடுபாடு, காலம் செல்லச் செல்ல குறைந்து கொண்டே போகிறது. இதற்குப் பல்வேறு காரணங்களை மனவியல் நிபுணர்கள் முன்வைக்கின்றனர். சோம்பேறித்தனம், இலக்கை முறையாக நிர்ணயிக்காதது, வேறொன்றுக்கு முக்கியத்துவம் அளிப்பது உள்ளிட்டவை செயலின் மீதான முழு ஈடுபாட்டின்மைக்குக் காரணம் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

நம்மில் பலர் புதிய செயலைச் செய்யத் தொடங்குவதற்கு முன் அது குறித்து மிகப்பெரிய இலக்கை நிர்ணயித்து விடுகிறோம். குறிப்பிட்ட காலத்துக்குள் அந்த இலக்கை அடைந்துவிட வேண்டும் என்று அவசரப்படுகிறோம். ஆனால், அந்த அவகாசத்துக்குள் நம்முடைய இலக்கை அடைவதற்குத் தேவையான மனஉறுதி, உடல் வலிமை ஆகியவை நம்மிடம் உள்ளதா என்பதை ஆராய மறந்து விடுகிறோம்.

ADVERTISEMENT

அதன் காரணமாக பாதி இலக்கை எட்டும் முன்பே சோர்வு ஏற்பட்டு அச்செயலை அப்படியே விட்டுவிடுகிறோம். அச்செயலுக்கான இலக்கை அடையாததற்கும் நமக்கு நாமே காரணத்தைத் தேடிக் கொள்கிறோம். அதன் மூலமாக மனதைச் சமாதானப்படுத்தி, சாந்தமடைகிறோம்.

புதிய செயலை ஆர்வமுடன் செய்யத் தொடங்குவது, ஆர்வம் குறைவது, அச்செயலின் மீதான ஈடுபாடு குறைவது, ஒருகட்டத்தில் அச்செயலைத் தொடராமல் விட்டுவிடுவது, சில நாள்களுக்கு எதுவும் செய்யாமல் அமைதியாக இருப்பது, பின்னர் வேறொரு செயலின் மீதோ அல்லது அதே செயலின் மீதோ நாட்டம் கொள்வது, அச்செயலை ஆர்வமுடன் செய்யத் தொடங்குவது, அச்செயலின் மீதான ஆர்வமும் குறைந்து போவது, அச்செயலும் நின்று போவது என இந்தச் சங்கிலிவினைத் தொடரானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதில் இருந்து மீள்வதற்கு எளிய வழி உள்ளது.

செயலின் மீதான முழு ஈடுபாட்டைப் பெறுவதற்கு சிறு வழிமுறையைக் கடைப்பிடித்தாலே போதுமானது. அதன் மூலமாக புதிய விஷயங்களை எந்தவிதத் தடங்கலுமின்றி எளிதில் கற்றுக் கொள்ள முடியும். ஜப்பானில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் "கெய்ஸôன்' என்ற வழிமுறையே அது. அந்த வழிமுறையானது ஒரு நிமிடத்தை அடிப்படையாகக் கொண்டது.

புதிய செயலைச் செய்ய விரும்பும் நபர், தினமும் ஒரு நிமிடத்துக்கு அச்செயலைச் செய்ய வேண்டும். எந்தச் செயலாக இருந்தாலும் சரி, அதைத் தினந்தோறும் ஒரு நிமிடத்துக்குச் செய்ய வேண்டும். எடுத்தவுடன் மிகப் பெரிய இலக்கை நிர்ணயிக்காமல் சிறிய சிறிய இலக்குகளாக நிர்ணயித்து அதை அடைவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

இவ்வாறு சிறு இலக்குகளை தினந்தோறும் ஒரு நிமிடத்துக்கு நிர்ணயித்து அதை நிறைவேற்றி வெற்றி கண்டுவிட்டால், நம் உள்ளம் பூரிப்படையும். அதன் மூலமாக நாம் தன்னம்பிக்கை பெறுவோம். புதிய செயலைச் செய்வதற்கு அடிப்படைத் தேவையே அந்தத் தன்னம்பிக்கை தான். தன்னம்பிக்கை மட்டும் இல்லையெனில், எவ்வளவு சிறிய செயலாக இருந்தாலும் அதை நம்மால் செய்யவே முடியாது. அதே வேளையில், தன்னம்பிக்கை இருந்தால் மலைபோன்ற பிரச்னைகளுக்கும் எளிதில் தீர்வு கண்டுவிட முடியும். எந்தச் செயலையும் வெற்றிகரமாக நிறைவேற்றிவிட முடியும்.

"கெய்ஸôன்' வழிமுறைப்படி தினமும் ஒரு நிமிடத்துக்குப் புதிய செயலைச் செய்து வந்தால், அச்செயலின் மீது ஈடுபாடு அதிகரிக்கும். அச்செயலைச் செய்யும் ஒரு நிமிடம் என்பது 5 நிமிடமாகவும், 15 நிமிடமாகவும், 30 நிமிடமாகவும் பின்னர் ஒரு மணி நேரமாகவும் மாறும். அதையடுத்து, சில மணி நேரங்கள் வரை புதிய செயலைச் செய்தாலும் கூட உங்களுக்கு எந்தவிதச் சலிப்பும் சோர்வும் ஏற்படாது.

சிறிய இலக்கை நிர்ணயித்து, அதை உரிய நேரத்தில் எட்டுவதன் மூலமாகக் கிடைக்கும் மனதிருப்தியும் தன்னம்பிக்கையும் அடுத்த இலக்கை நோக்கி நம்மைச் செலுத்தும். அடுத்தடுத்த இலக்குகளில் கிடைக்கும் வெற்றிகளானது பெரிய இலக்கின் வெற்றிக்கு நம்மை அழைத்துச் செல்லும். இதில் சோர்வு என்பதற்கு இடமே இல்லை.

எந்தவொரு விஷயத்தைச் செய்வதிலும் ஆர்வத்தையும் முழு ஈடுபாட்டையும் வரவழைத்துக் கொண்டால் மட்டுமே அதில் திறம்பட வெற்றியடைய முடியும். மனஉறுதியையும் தன்னம்பிக்கையையும் அதிகரிக்கச் செய்யும் கெய்ஸôன் வழிமுறையைக் கடைப்பிடித்து இலக்குகளை மனச்சோர்வின்றி வெற்றிகரமாகச் சென்றடைவோம்.

Tags : இளைஞர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT