இளைஞர்மணி

இணையக் கல்விக்கே எதிர்காலம்!

ந.முத்துமணி


பன்னிரண்டாம் வகுப்பு அல்லது இளநிலை பட்டப்படிப்பு படித்துவரும் மாணவர்கள் மட்டுமல்லாது, முதுநிலைப் பட்டப்படிப்பு படிப்போருக்கும் வெளிநாட்டின் புகழ்பெற்ற கல்விநிறுவனங்களில் ஒரு பட்டத்தையாவது பெற்றுவிட வேண்டுமென்பது கனவாக இருக்கிறது. கரோனா தீநுண்மி தொற்று நோயால் விமானப்பயணங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளதால், வெளிநாட்டு கல்விக் கனவு சிதைந்துவிட்டதாகப் பலரும் நினைப்பது உண்டு. ஒரு கதவு மூடினால், மற்றொரு கதவு திறக்கும் என்பது தானே இயற்கைவிதி.

மனிதவாழ்க்கையும் பொருளாதாரமும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நசிந்து காணப்படும்போது, அதற்கேற்ப புதிய மாற்றங்களுக்கு நம்மை மாற்றிக் கொள்வது தான் சரியாக இருக்கும். வெளிநாடுகளில் படிக்கும் வாய்ப்பு மீண்டும் கிட்டுமா? என்று ஏங்க வேண்டியதில்லை. வெளிநாட்டுக் கல்விக் கனவை நனவாக்கும் நல்வாய்ப்பை உலகின் பல்வேறு நாடுகளைச் சார்ந்த பல்கலைக்கழகங்கள், கல்விக்கூடங்கள் இணையக்கல்வி(ஆன்லைன்) வாயிலாக அளிக்கத் தொடங்கியுள்ளன.
குறையாத தரம்: உலக அளவில் அங்கீகாரம் பெற்றுள்ள பல்கலைக்கழகங்கள், கல்வி நிலையங்கள் வழங்கும் கல்வி வாய்ப்புகள், இணையக் கல்வி என்பதால் தரம் குறைந்ததாக மாறிவிடாது. இணையக்கல்விக்கு மாணவர்கள் காட்டும் ஆர்வத்தை சரியாகப் புரிந்துகொண்டுள்ள பல்கலைக்கழகங்கள் கல்வி திட்டத்தைச் சீராக அமைத்துள்ளன. மாணவர்களின் வாழ்க்கைக் குறிக்கோள்களை நிறைவேற்றிக் கொள்வதற்குத் தேவையான எந்த அம்சத்தையும் கைவிடாமல், நேர்த்தியாக இணையக்கல்வித் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, ஐயர்லாந்து, இங்கிலாந்து, அமெரிக்காவில் உள்ள புகழ்வாய்ந்த கல்விக்கூடங்கள் புதுமையான, தனித்தன்மைவாய்ந்த வகையில் பாடங்களை அமைத்திருக்கின்றன.
கரோனாவுக்குப் பிந்தையகாலத்தில் இணையவழி உரைவீச்சுகள், கருத்தரங்குகள், அசைன்மென்ட்கள், தேர்வுகள் உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அதேவகையில் தான் இணையக்கல்வியும் மாணவர்களால் ஏற்கப்பட்டுவருகிறது. வீடுகளில் அடைந்துகிடந்தாலும், உலகின் பிரபலமான கல்வி நிலையங்களில் இணையக் கல்வியில் சேர்ந்து படிக்க முடியும் என்பது பெரும் வாய்ப்புதானே? பன்னாட்டு பல்கலைக்கழகங்களில் தேவையான படிப்புகளில் பதிவுசெய்துகொண்டு, நேரடியாக கல்லூரி வளாகத்தில் படிப்பதுபோன்ற உணர்வைப் பெறலாம். இதற்காகவே, நேரடிக் கல்லூரியில் பாடம் நடத்தும் அதே பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்வி அறிஞர்களைக் கொண்டு பாடம் நடத்தப்படுகிறது. வீட்டில் இருந்தபடியே, அவர்களோடு பேசலாம்; கருத்து பரிமாற்றங்களைச் செய்துகொள்ளலாம், சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம்.
சாதகமான அம்சங்கள்: இணையக்கல்வியில் பயில்வதால் ஏராளமான சாதகமான அம்சங்கள் உள்ளன. கரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கக் கூறும் அரசின் அறிவுரையை இணையக்கல்வியில் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க முடியும். வெளிநாடுகளில் தங்கிப்படிக்கும்போது ஏற்படும் தங்கும் வசதி, உணவுக்கான செலவு மீதமாகும். இணையக்கல்வியில் படிப்பதால் வேலைவாய்ப்புக்கு குறைவிருக்காது. நேரடியாகப் படித்து பட்டம் பெற்றால் கிடைக்கும் மதிப்பே இணையக்கல்விக்கும் தரப்படும். கல்விநிறுவனம் வழங்கும் நூலகம், வகுப்பறை உள்ளிட்ட வசதிகள் எப்போதும் இணையத்தில் கிடைக்கும். அதேபோல, சந்தேகங்களைத் தீர்க்க பேராசிரியர்களும் 24 மணி நேரமும் செல்லிடப்பேசி, மடிக்கணினி, தனிக்கணினி வாயிலாக இணைய தொடர்பில் கிடைக்கிறார்கள். மாணவர்களுக்கு பேராசிரியர்கள் கல்விபுகட்டும் நேரமும் அதிகமாக்கப்பட்டுள்ளது. பாடங்களைச் சரியாகக் கவனிக்க முடியாவிட்டால் அல்லது வகுப்பில் பங்கேற்க இயலாவிட்டால், பேராசிரியர்கள் எடுத்துள்ள பாடத்தின் பதிவுகள் எப்போதும் இணையதளத்தில் கிடைக்கும். நேரம் கிடைக்கும்போது அவற்றை மீண்டும் பார்த்துக் கொள்ளலாம். கருத்தரங்குகளின் காணொலிப் பதிவுகளும் இணையத்தில் கிடைக்கின்றன. இனிமேல் கல்வியின் அங்கமாக இணையக் கல்வி மாறவிருப்பதால், அதைத் திறம்பட பயன்படுத்திக்கொள்வது நல்லது.
நேரடிக்கல்விக்கும் வாய்ப்பு: மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கூட்டு கற்றல் வகுப்பறை (பிளென்டெட்/ஹைபிரிட் லேர்னிங்) முறையை பன்னாட்டு பல்கலைக்கழகங்கள் அறிமுகம் செய்துள்ளன. ஒரு பருவத்தில் இணையக் கல்வியில் படிக்கும்மாணவர், வெளிநாட்டு பயணங்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதும் அடுத்த பருவத்தில் நேரடிக்கல்லூரிக் கல்வியைப் பெற முடியும். இது இணையம் மற்றும் வளாகக்கல்விக்கும் வாய்ப்பளிக்கிறது.
அதேபோல, முன்னோட்டப்பாடம் (டெஸ்டர் கோர்ஸ்) என்ற புதியமுறையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறுகியகாலப் படிப்புகளை பல்கலைக்கழகங்கள் தொடங்கும்போது, அது எப்படிப்பட்டதாக இருக்குமென்பதை முன்னோட்டப் பாடத்தின் மூலம் தெரியப்படுத்துவார்கள். புதிய திரைப்படம் அல்லது தொலைக்காட்சி தொடர் தொடங்கும்போது பார்வையாளர்களை ஈர்ப்பதற்காக அதன் சுவையான காட்சிகளை முன்னோட்டமாக காட்டுவதில்லையா, அதுபோலத் தான் இதுவும். ஆஸ்திரேலியாவின் டீக்கன் பல்கலைக்கழகம், மோனாஷ் பல்கலைக்கழகம், குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் முன்னோட்டப் பாடத்திற்கு புகழ்பெற்றதாகும். இணையக்கல்வியை சுருக்கமான, சுவையானதாக மட்டுமல்லாது தரமானதாகவும் வழங்க கல்வி நிலையங்கள்பெருமுயற்சி எடுக்கின்றன.
வெளிநாட்டு இணையக் கல்வியைபெறுவதற்கான விண்ணப்பங்கள், கட்டணங்கள் செலுத்துவது எளிமையாக்கப்பட்டுள்ளன. காலக்கெடுவுகளும் நீட்டிக்கப்பட்டுள்ளன. புதிய சேர்க்கைகள் நடந்துவருகின்றன. ஒருசில பாடங்களுக்கான முன் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளன. ஒருசில கல்லூரிகள் கல்விக்கட்டணத்தையும் குறைத்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

400 தொகுதிகளில் வென்று மோடி மீண்டும் பிரதமராவாா் -நயினாா் நாகேந்திரன்

கோவையில் இன்று கனிமொழி பிரசாரம்

வன்கொடுமை வழக்கு: 8 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை

அண்ணாமலையின் பிரமாணப் பத்திரம் அதிகாரிகள் உதவியுடன் மாற்றம்! -பரபரப்பு குற்றச்சாட்டு

நாகை மக்களவைத் தொகுதி: 10 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

SCROLL FOR NEXT