இளைஞர்மணி

நினைவாற்றலும் வெற்றியும்!

19th May 2020 04:29 PM | - கே. பி. மாரிக்குமார்

ADVERTISEMENT

"எவரிடத்திலேனும் எப்போதும் விடாமல் மறதி இல்லாத குணம் மட்டும் இருக்கும் என்றால், அதைப்போன்ற நன்மை வேறு இல்லை.'

- திருவள்ளுவர் (குறள்: 536)

போட்டித்தேர்வுகளுக்குத் தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்த மாணவர் ஒருவர், ""இதுவரைக்கும் என்ன, எதுக்கு படிச்சிட்டு இருந்தோம்ங்கறது கூட மறந்துடுச்சு சார்!'' என்கிற மனக்குறையோடு சென்ற வாரத்தில் ஒருநாள் என்னைச் சந்தித்தார்.

பொது முடக்கம் பலரது மூளையை, மனதை, சிந்தனையை முடக்கிப் போட்டிருக்கிறது. ஆனால், ஒரு சிலருக்கோ அவர்கள் ஏற்கெனவே பார்த்துக் கொண்டிருந்த பணிகளின் அளவை விட பல மடங்கு பணிகள் பெருகி, சுமை கூடியிருக்கிறது. இவரைப் போன்ற மாணவர்களுக்கும் மட்டும் எப்படி இதுமாதிரியான மறதி சாத்தியமாகிறது?

ADVERTISEMENT

இந்த மாணவரது மறதிநிலை அரிதிலும் அரிதான வகை என்று நாம் புறந்தள்ளினாலும், இந்த பொது முடக்க காலங்களில் பலருக்கு நாள், கிழமை, நேரம், மாதம், எதை எப்போது செய்யவேண்டும் என்பதெல்லாம் மறந்துதான் போனது. அல்லது இவற்றில் பலருக்கு ஒரு குழப்பமான, மந்தமான, மயக்கமான மனநிலை இருந்தது என்பதே உண்மை. பொதுவாக மறதிக்கும் மாணவர்களுக்கும் நிறையவே தொடர்பு உண்டென்றாலும்... தேர்வுகளை நோக்கிய கல்வி முறையிலும், வாழ்வுக்கான போட்டித் தேர்வுகளை மையப்படுத்திக் கொண்ட ஒரு யதார்த்த பயணத்திலும் மறதி என்பது கொடிய விஷம். நினைவாற்றல் எனும் வீரியமான மருந்துகொண்டு மறதி நோயைத் தீர்க்காவிட்டால், அது அந்நோயோடு வாழ்பவனை படுபாதாளத்தில் தள்ளிவிடும்.

ஒரு காரியத்தை இதற்கு முன் இல்லாத விதமாய் ஒருவர் செய்கிறபோது, அது ஒருவரது நினைவில் நின்றுவிடும். இது நிதர்சனம். அதேபோல், உரிய இடத்தில் பொருளை வைக்கிற பழக்கம் இருந்தால் வைத்த இடம் மறந்து போகாது. இது அடிப்படை. ஒருமுறை பேராசிரியர் ஒருவர் ரயிலில் பயணித்தார்.

பரிசோதகர் பயணச்சீட்டைக் கேட்க, பேராசிரியர் தேடத் தொடங்கினாராம். எங்குமே கிடைக்கவில்லை.

""சார்! நான் உங்களை நம்புகிறேன். சீட்டை தேடவேண்டாம். விட்டுருங்க'' என்றாராம் பரிசோதகர்.

""இல்ல... பயணச்சீட்டைக் கண்டுபிடிச்சே ஆகணும். ஏன்னா... நான் இறங்கவேண்டிய ஊர்ப் பெயரே அதிலதான எழுதியிருக்கு'' என்றாராம் பேராசிரியர். இது பெரும் படிப்பு மறதி வகை என்றுசொல்லி நாம் கடந்து போய்விட முடியாது; கூடாது.

"பொச்சாவாமை' என்கிற ஓர் அதிகாரத்தை ஒதுக்கி, அதில் பத்து குறள்கள் வாயிலாக மறதியின் கொடுமையை- அதேநேரம் நினைவாற்றலின் வலிமையை - திருவள்ளுவர் வலியுறுத்தியிருக்கிறார் என்றால் ஒருவரது வாழ்வில், வெற்றியில் நினைவாற்றல் என்பதின் பங்கு எவ்வளவு முக்கியம் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.

நினைவாற்றலின் முதல் படி ஆர்வம். ஆம், நாம் எதை நினைவில் வைக்க விரும்புகிறோமோ அதில் நமக்கு முதற்கண் ஆர்வம் இருத்தல் வேண்டும். நினைவாற்றல் எல்லாருக்கும் பிறப்பு கொடுத்த கொடையாக இருக்க வேண்டியதில்லை. இவ்வாற்றலை மெனக்கெட்டு வளர்த்துக் கொண்டு வென்றவர்கள்தான் இவ்வுலகில் ஏராளம்.

நமது நட்பு வட்டாரம் மற்றும் தொடர்பில் உள்ள எத்தனை மனிதர்களின் தொடர்பு எண்கள் நம்மில் எத்தனை பேருக்கு மனப்பாடமாகத் தெரியும்? அவ்வளவு ஏன்... நமது வங்கிக் கணக்கு, ஆதார், ஓட்டுநர் உரிமம், பான் அட்டை போன்றவற்றின் எண்களாவது நமக்கு மனப்பாடமாகத் தெரியுமா? ஒருவரது நினைவாற்றலைப் பெருக்க, இதுபோன்ற எண்களை மனனம் செய்து, பார்க்காமலேயே பயன்படுத்துகின்ற முயற்சியையே நல்ல பயிற்சியாக தொடங்கலாம்.

புலன்கள் வழியாக பெறப்படும் பதிவுகள் யாவும் அடிமனதில் அழியாமல் பதிந்து விடுகின்றன. அடிமனத்திற்கு ஓய்வே கிடையாது. அது இரவும், பகலும் ஓயாது செயல்புரிந்து கொண்டே இருக்கிறது. தூக்கத்தில் அது செயல்புரிகையில்தான் கனவுகள் எழுகின்றன. கனவற்ற உறக்கத்திலும், அது நாம் உணராத வகையில் செயல்பட்டு கொண்டேதான் இருக்கிறது.

அடிமனதை வேலை வாங்கத் தெரிந்தால் போதும்; நாம் பலரும் வியக்கும்வகையிலான ஓர் ஆளுமையாக மாறிவிட முடியும்.

அதிகாலை 3:00 மணிக்கு நாம் எழவேண்டும். பல நேரங்களில் கடிகார மணி அடிப்பதற்கு முன்பாக நம்மில் பலர் விழித்திருக்கின்றோமே, அதெல்லாமே நமது அடிமனதின், ஆழ்மனதின் வேலைகள்தாம். நமது தேவையை கட்டளையாகச் சேமித்து மனமே நம்மை எழுப்பிவிட்டிருக்கிறது. இதை மீண்டும் திட்டமிட்டு செய்து, சோதித்துப் பார்த்தாலே நமக்கு ஆழ்மனது கட்டளையின் வீரியம் புரியும். மிகவும் சிக்கலான பிரச்னைகளுக்கு ஒருவர் இம்முறையால் எளிதாக விடை காணலாம்.

நினைவாற்றலுக்குத் தேவை ஒருமுகச் சிந்தனையே. சீனாவில் ஒரு பழமொழி உண்டாம்: "நான் கேட்டேன் என்றால் நான் மறந்து போனேன்; நான் பார்த்தேன் என்றால் நான் நினைவில் வைத்திருப்பேன்; அதையே நான் எழுதினேன் என்றால் நான் அதில் இருந்து கற்றறிவேன்' என்பதே அது. எவ்வளவு பெரிய பிரம்ம ரகசியமிது.

மூளையின் இயக்கத்திற்கு பிராண வாயு (ஆக்சிஜன் ) மட்டுமின்றி, பிராண சக்தி எனப்படும் பிராணனும் தேவை என தந்திர யோக நூல்கள் கூறுகின்றன. இந்த பிராண சக்தியை உடலில் அதிகரிக்கச் செய்து, மூளையின் செயல்திறனைப் பலமடங்கு அதிகரிக்கச் செய்யும் நடவடிக்கைகளால், பயிற்சிகளால் ஒருவர் அவரது நினைவாற்றலைப் பெருக்கலாம்.

மறதிக்கான காரணங்களாக... ஆர்வமின்மை, முயற்சியின்மை, சோம்பல், பயம், மனக்குழப்பம், அதிர்ச்சி, தாழ்வு மனப்பான்மை போன்ற குணங்களே பட்டியலிடப்படுகின்றன. இவற்றையெல்லாம் துரத்தியடிக்கின்ற துணிவும், வாழ்வில் வென்றாக வேண்டும் என்கிற வேட்கையும் ஒருவருக்கு இருந்தால் உறுதியாக மறதியை வெல்லலாம். நினைவாற்றலைப் பெருக்கி வெற்றியும் பெறலாம்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT