இளைஞர்மணி

சுழல் துப்பாக்கி தந்த சாமுவேல் கோல்ட்!

19th May 2020 05:00 PM | மு.கலியபெருமாள்

ADVERTISEMENT

 

சென்ற வார தொடர்ச்சி

16 வயதில் கருவிலே தோன்றிய எண்ணத்தை வடிவாக்கி முடிக்கும்போது அவருக்கு வயது 21. இந்த ஐந்தாண்டுக் காலத்தில் இந்தச் சுழல் துப்பாக்கியை வெற்றியுடன் வேலை செய்யும்படி அமைக்க அவர்பட்ட இன்னல்கள், அவருக்கு ஏற்பட்ட இடர்பாடுகள் எத்தனை! எத்தனையோ!

கல்கத்தா செலவை ஒருமுறை முடித்துத் திரும்பியதும் மேற்கொண்டு கடற்செலவில் ஈடுபட கோல்ட் விரும்பவில்லை. வீட்டிற்குச் சென்றதும் அவரது தந்தை கேட்ட முதல் கேள்வி, ""வீட்டிற்கு வேண்டிய பணத்தைக் கொண்டு வந்து விட்டாயா? அதற்குள் கடல் பயணத்தை நிறுத்திவிட்டாயே'' என்பதுதான். சற்றும் எதிர்பாராமல் "ஆம்' என்று கோல்ட்டிடமிருந்து வந்த பதில் தந்தையை வியப்பிற்குள்ளாக்கியது. தான் கொண்டு வந்திருந்த மரச் சுழல் துப்பாக்கியை விளக்கி காட்டியதும், தந்தை அதுபோல் செய்ய ஏற்பாடு செய்தார். அவருக்குத் தெரிந்த துப்பாக்கிச் செய்யும் கொல்லரிடம் கோல்ட் சொன்னது போல் இரண்டு துப்பாக்கிகள் செய்தார். அவற்றில் ஒன்று, சுடும்போது உடைந்துவிட்டது. மற்றது வேலையே செய்யவில்லை. என்ன காரணம் என்பதைச் சிந்தித்த கோல்ட், துப்பாக்கியின் பகுதிகள் சரியான அளவில் இல்லை என்பதை உணர்ந்தார். ஆனால் துப்பாக்கி செய்தவர், அந்தத் துப்பாக்கி வேலையே செய்யாது என்று சொன்னார். தந்தையும் அதுபற்றி மறந்துவிடும்படி அறிவுரை கூறினார்.

ADVERTISEMENT

இதனால் உள்ளம் உடைந்த கோல்ட், "தன் கையே தனக்கு உதவி' என்ற நிலையில், அவரது 18-ஆவது வயதில் வீட்டை விட்டு வெளியேறினார். வேண்டிய அளவு பொருள் சேர்த்து மீண்டும் சுழல் துப்பாக்கியைச் செய்ய வேண்டும் என்ற ஒன்றே, அவரது நோக்கமாக இருந்தது. அதற்காக அவர், அப்போது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டிருந்த நகைவளி (laughing gas) - என்பதைப் பற்றிச் சொற்பொழிவாற்றினார். இந்த முயற்சியில் ஈடுபட்ட அவரைச் சுற்றிச் சிரிக்கும் கூட்டம் சேர்ந்ததே தவிர, சுழல் துப்பாக்கியைச் சீராக்க வேண்டிய பணம் சேரவில்லை. இறுதியாக பல நாட்கள், மாதங்கள் இப்படிச் சொற்பொழிகளுக்குப் பின்னர், எஞ்சிய தாடியுடனும் மீசையுடனும் வீட்டிற்கு வந்த கோல்ட், தந்தையிடமிருந்து 800 டாலர் வாங்கி, மீண்டும் தனது சுழல்துப்பாக்கி முயற்சியில் ஈடுபட்டார்.

1832- இல் அவரது சுழல் துப்பாக்கியின் விளக்கத்தை வாஷிங்டனிலுள்ள உரிமைப் பத்திர அலுவலகத்திற்கு (patent office) அனுப்பி வைத்தார். இதற்கிடையில் 1833-ஆம் ஆண்டில் பால்ட்டிமோரில் (Baltimore) கைத் துப்பாக்கி (pistal), துப்பாக்கி (Rifle) இவற்றின் மாதிரி அமைப்பைச் செய்தார். இவற்றிற்கான உரிமைப் பத்திரத்தை, 1835-இல் அவர் இங்கிலாந்திலும் பிரான்சிலும் சுற்றிக் கொண்டிருக்கும்போது பெற்றார். பின்னர் ஒரு திங்கள் கழித்து அமெரிக்கா வந்ததும், 1836- ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 25-ஆம் நாள் அமெரிக்காவில் சுழல் துப்பாக்கியின் உரிமைப் பத்திரத்தைப் பெற்றார். செயல் முறையில் முதன்முதலாக வெளிவந்த சுழல் துப்பாக்கி, கோல்ட்டின் கண்டுபிடிப்பேயாகும்.

உரிமைப்பத்திரம் பெற்ற மூன்று திங்கள்களில் சுழல்துப்பாக்கி செய்வதற்கான ஒரு தொழிற்சாலையை நியூசெர்சியில் (N.J) உள்ள பேட்டர்சனில் (paterson) கோல்ட் நிறுவினார். கோல்ட்டின் சுழல்துப்பாக்கி தனிப்பட்டவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் அரசின் தரைப்படையினரும் (Army) கப்பல் படையினரும் (Navy) அதை ஏற்று வாங்க முன்வரவில்லை. எனவே, 1842- இல் அவரது தொழிற்சாலையை மூட வேண்டியநிலை ஏற்பட்டது. அவருடைய உரிமைப் பத்திரத்தையும் வேறொருவருக்குக் கொடுத்துவிட்டார்.

இதன் பின்னர், நீர்மூழ்கி கப்பலின் மின்னடுக்கு (submarine battery) பற்றி அவர் செய்து வந்த ஆராய்ச்சியில் தனது கவனத்தைச் செலுத்தினார். அடுத்த ஐந்து ஆண்டுகள், பகைவர்களின் கப்பல்களை அழிக்கும் ஆராய்ச்சியில் அவரது காலம் கழிந்தது. அந்த ஆராய்ச்சியின்படி, கப்பல்கள் போய்க்கொண்டிருந்தாலும் சரி, நின்று கொண்டிருந்தாலும் சரி அவற்றை அழிக்கும் முறையினைச் செய்து காட்டினார். வெடி மருந்துகளைப் பற்ற வைப்பதற்கு மின்சாரத்தைப் பயன்படுத்தினார். இதனால், நீர்மூழ்கிக் கப்பலின் வளர்ச்சியில் ஒருபடி முன்னேற்றம் ஏற்பட்டது. அதே நேரத்தில் நீர் மூழ்கிக் கப்பலின் தொலைச் செய்தி அனுப்பும் முறையை ஆராய்ந்து 1843- இல் நியூயார்க்கிலிருந்து (Newyork) கானெய் தீவுக்கும் (coney island) தீத் தீவுக்கும் (Fire island) தொலைச் செய்தி (Telegram) அனுப்பும் முறையை இயக்கி வைத்தார்.

இந்நிலையில் நியூயார்க்கில் ஒரு நாள் கோல்ட், சாம்வாக்கர் (Samwakkar) என்ற ஓர் அந்நியரைச் சந்தித்தார். டெக்சாசு (Texas) காடுகளின் தலைமை மேற்பார்வையாளராகிய அவர், கோல்ட்டிடம் கேட்பாரற்றுக் கிடந்த துப்பாக்கிகளை அப்படியே வாங்கிக் கொண்டுவிட்டார். வரலாற்று ஏடுகளில் பாடப்படாத இந்த இருமனிதர்களின் சந்திப்புதான் மேல்நாட்டவரின் வெற்றிக்கு வழிவகுத்தது. கோல்ட்டின் சுழல் துப்பாக்கியிலிருந்த குறைபாடுகளைச் சுட்டிக் காட்டி, அதைத் திருத்தி அமைப்பதற்கான முறையையும் சொன்னார் வாக்கர். பளுவான சட்டம் (heavier frame) நல்லபிடி (better grip); குதிரைப் படையினருக்கு ஏற்றபடி சாதாரண முறையில் மருந்து அடைத்தல் போன்ற பல கருத்துகளினால், கோல்ட்டின் சுழல் துப்பாக்கியில் பல மாற்றங்களைச் செய்தார். இந்தத் துப்பாக்கி எல்லைப் புறத்திலுள்ளவர்களின் மேல் செயல்படுத்துவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

1844-ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 8-ஆம் நாள் பெடர்னேல்சு சண்டையில் (batter of pedernales) 80 இந்தியர்கள் சாம் வாக்கரையும் அவருடன் வந்த மற்ற 15 மேற்பார்வையாளர்களையும் அம்பும் வில்லும் கொண்டு தாக்கினர். அவர்களின் தாக்குதல்களைச் சமாளிக்க முடியாமல் மேற்பார்வையாளர்கள் இறங்கிவிடுவார்கள் என்று எதிர்பார்த்தனர். ஆனால், அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக, மேற்பார்வையாளர்கள் விரைவாகவும் குறி தவறாமலும் சுடக்கூடிய கருவிகளைக் குதிரைகளின் மேல் வைத்திருந்தனர். எனவே, இந்தியர்கள் திகைக்கும்படியாக அவர்களைப் பின்தொடர்ந்துசென்று, 33 பேர்களைச் கொன்றனர். எல்லாம், கோல்ட்டின் சுழல் துப்பாக்கியின் பேருதவியினால் கிடைத்த பெரும் பயணல்லவா?

ஒருவேளை, கோல்ட் - சாம் வாக்கர் இருவரின் எதிர்பாராத சந்திப்பு நடந்திராவிட்டால், சுழல் துப்பாக்கி என்ற கருவி நமக்கும் கிடைத்திருக்க வியப்பு இல்லாமலேயே போயிருக்கும். இந்தச் சந்திப்பு இறைவன் திருஉள்ளமோ?

1846- ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கும் (U.S) மெக்சிகோவுக்கும் (mexico) போர் மூண்டது. இந்தப் போரில் கேப்டன் தாண்டன் (Captain Thonton) என்ற அமெரிக்கர், தன்னிடமிருந்த எல்லாத் துணைகருவிகளையும் இழந்துவிட்டார். பின்னர், அவரிடமிருந்த இரண்டு கோல்ட் துப்பாக்கியின் உதவியால் உயிர்த்தப்பி வந்தார்.

1847- இல் மெக்சிகோ போர்வந்தபோது அமெரிக்க அரசிடமிருந்து 1000 சுழல் துப்பாக்கிகளுக்கு கோல்ட்டிடம் ஆணை வந்தது. இதன் காரணமாக, கோல்ட் தனது சுழல் துப்பாக்கித் தொழிற்சாலையை மீண்டும் தொடங்கினார். முன்பு விற்றிருந்த உரிமைப் பத்திரத்தை மீண்டும் பெற்றார். நியூ ஹேவனுக்கருகில் (New Haven) விட்னிவில்லே (weitney ville) என்ற இடத்தில் சிறிய தொழிற்சாலையை ஏற்படுத்தினார்.

பின்னர், ஓராண்டு கழித்து 1848-இல் கார்ட் போர்டுக்கு (hard ford) த் திரும்பி வந்து ஒரு மூன்று மாடி வீட்டில் அவரது துப்பாக்கித் தொழிற்சாலையைத் தொடங்கினார். தொழிலும் வணிகமும் வெகுவிரைவில் வளர்ந்தன. அவரது சுழல் துப்பாக்கியில் மேலும் பல திருத்தங்களைச் செய்து, அதனைச் செம்மைப்படுத்தினார்.

கோல்ட்டின் சுழல் துப்பாக்கி உலகம் முழுவதும் பாராட்டப்பட்டது. அமெரிக்க படையினர் அனைவரும் கோல்ட்டின் சுழல் துப்பாக்கிக்காகக் கூச்சலிட்டனர், குரல் கொடுத்தனர். பிற்காலத்தில் இந்தியர்களுடன் நடந்த போர்களுக்கெல்லாம் அமெரிக்கர்கள் கோல்ட்டின் துப்பாக்கியையே பயன்படுத்தினர். அமெரிக்காவின் தென் பகுதியில் வாழ்ந்த மக்கள், கோல்ட்டின் துப்பாக்கியைப்படி எடுத்து, அதனை அவர்களே சொந்தமாகச் செய்து கொண்டனர்.

கோல்ட் துப்பாக்கியின் தேவை மிகுதியாகவே, உற்பத்தியையும் அதிகமாக்க வேண்டியிருந்தது. எனவே, 1854 -55 -இல் மிகப் பெரிய படைக்கருவி தொழிற்சாலை ஒன்றை கார்டு போர்டில் சொந்தமாக கட்டினார். 1856- ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 5-ஆம் நாள் கனெக்டிக்கட்டில் மிடில் டவுனில் (Middle Town) வாழ்ந்த தங்ஸ். வில்லியம் சார்விசு (Rev.william jarris) என்பவரின் மூத்தப் பெண்ணைத் தமது 42-ஆவது வயதில் திருமணம் செய்து கொண்டார்.

கார்ட் ஃபோர் (Hart ford) வந்து படைக் கருவித் தொழிற்சாலையை நிறுவிய பின்னர், தனது இறுதிக்காலம் வரை அதன் இயக்குநராக இருந்தார். இவ்வாறு, இளமை முதலே பல்வேறு இன்னல்களுக்கும் இடர்பாடுகளுக்கும் இடையில் தனது வாழ்க்கைப் பயணத்தை மேற்கொண்ட கோல்ட், அவரது இறுதி காலத்தில் வளமான வாழ்வைக் கண்டார். மிகப்பெரிய படைக்கலத் தொழிற்சாலைக்கு உரிமையாளர் ஆனார்.

பெருஞ்செல்வம் அவரை நாடி வந்தது. ஆனால், நீண்ட காலம் வாழ்ந்து அதனை நுகரும் பேறு பெறவில்லை அவர். 1862- ஆம் வருடம் ஜனவரித் திங்கள் 10-ஆம் நாள் கோல்ட் என்ற சாமுவேல் கோல்ட், தமது 48-ஆவது வயதில் கார்ட்ஃபோர்டிலிருந்த (Hart ford) அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார். அவரது சுழல் துப்பாக்கிக்கு ஏற்பட்ட தேவை, மற்ற தொழில்களை விட பெரிய அளவில் அதனை ஆக்கும் முறைகளில் வளர்ச்சி ஏற்பட, ஒரு தலைமுறைக்கு முன்பே வழிவகுத்தது. கைத்துப்பாக்கி, ஒருமுறை சுடும் சாதாரண துப்பாக்கியாக இருப்பதைக் கண்டார் கோல்ட். அதனை, ஆறுமுறை தொடர்ந்து சுடும் சுழல் கைத்துப்பாக்கியாக (Revolver) விட்டுச் சென்றார் அவர். சாதாரண சுழல் துப்பாக்கியாக இருந்த அது, அவருக்குப் பின்னர் வலிமை மிக்க ஒரு படைக் கருவியாக மாறியது. கோல்ட்டின் வாழ்க்கையைப் படிக்கும் போது, ""எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின்'' என்ற வள்ளுவர் பெருந்தகையின் சொல்லோவியம்தான் நினைவில் நிற்கிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT