இளைஞர்மணி

ஆங்கில இலக்கியம் கற்றால் அளவில்லா வேலைவாய்ப்புகள்!

17th Jun 2020 10:01 PM | வி.குமாரமுருகன்

ADVERTISEMENT


சென்ற இதழ் தொடர்ச்சி...

பாராளுமன்ற செயலக ஓய்வு பெற்ற இயக்குநர் என்.எம்.பெருமாள் தொடர்ந்து கூறியதாவது:

""ஆங்கில இலக்கிய மாணவர்களுக்கு உள்ள மற்றுமோர் அரிய வாய்ப்பு ஆட்சிமொழி (இந்தி) அதிகாரிகளாக ஆவதும் ஆகும். மத்திய அரசிலும் அதைச் சார்ந்த நிறுவனங்கள் அனைத்திலும் ஆட்சி மொழி அதிகாரிகள் பதவிகள் கண்டிப்பாக இருக்கும். இளநிலை இந்தி மொழி பெயர்ப்பாளர் ( Junior Hindi Translator ) முதுநிலை இந்தி மொழி பெயர்ப்பாளர் அதிகாரிகள் போன்ற பதவிகள் மத்திய அரசில் உள்ளன. ஆண்டுதோறும் நடக்கும் எஸ்.எஸ்.ஸி இந்தி மொழிபெயர்ப்பாளர் தேர்வில் ஆங்கிலத்திலிருந்து இந்திக்கு மொழி பெயர்க்கும்

திறனும், இந்தியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்க்கும் திறனும் சோதிக்கப்படும். இரண்டுக்கும் சம அளவில் மதிப்பெண்கள் உண்டு. இத்தேர்வில் முதுகலை நிலையில் ஆங்கிலமும் இளங்கலை நிலையில் இந்தியும் அல்லது முதுகலை நிலையில் இந்தியும் இளங்கலை நிலையில் ஆங்கிலமும் படித்திருக்க வேண்டும். மொழி பெயர்ப்பில் பட்டய அளவில் Diploma in Translation தகுதி பெற்றிருப்பது வேலை வாய்ப்பில் முன்னுரிமை கிடைக்கும் நிலை உள்ளது.

ADVERTISEMENT

இளைஞர்கள் தென்னிந்திய இந்தி பிரசார சபை நடத்தும் தேர்வுகளில் கலந்து கொண்டு தகுதி நிலை பெறலாம். பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் போன்றவை முதுகலை இந்தி பட்டப் படிப்பை தொலைதூரக் கல்வி மூலமாக அளிக்கிறார்கள். இளைஞர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

உடற்கட்டு வாய்ந்த ஆங்கில இலக்கிய மாணவர்களுக்கு சிறந்த வாய்ப்பை அளிக்கும் தேர்வு ஒருங்கிணைந்த பாதுகாப்புத் துறை சேவைகள் தேர்வு (Combined Defence Services) ஆகும். இத்தேர்வு மூலமாக முப்படைகளிலும் உயர் நிலை அதிகாரிகளாக (குரூப் - 1 நிலையில்) சேரலாம். CDS என்றழைக்கப்படுகிற இத்தேர்வு மத்திய தேர்வாணையத்தால் (UPSC) ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படுகிறது. வயது வரம்பு 20 வயது முதல் 24 வயது வரை.

இத்தேர்வு மூலமாக மிலிடரி அகாதமி, ஏர்போர்ஸ் அகாதமி, அதிகாரிகள் பயிற்சி அகாதமி (OTA), கப்பற்படை அகாதமி ஆகிய நான்குக்கும் தகுந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மிலிடரி அகாதமிக்கும் அதிகாரிகள் பயிற்சி அகாதமிக்கும் எல்லாப் பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். ஏர்போர்ஸ் அகாதமிக்கு , +2 நிலையில் கணிதமும் இயற்பியலும் படித்த எந்த பட்டதாரியும் விண்ணப்பிக்கலாம். கடற்படை அகாதமிக்கு பொறியியல் பட்டதாரிகள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். இத்தேர்வின் எழுத்துப் பகுதியில் ஆங்கிலம் , பொதுஅறிவு , அடிப்படைக் கணிதம் ஆகிய மூன்று தாள்கள் இருக்கும். ஒவ்வொரு தாளும் 100 மதிப்பெண்களைக் கொண்டதாகவும் இரண்டு மணி நேர அளவு உள்ளதாகவும் இருக்கும். ஞபஅக்கு மட்டும் அடிப்படைக் கணிதத்தாள் கிடையாது. ஆங்கிலம் மற்றும் பொது அறிவு மட்டுமே இருக்கும்.

சமீபத்தில் நடந்த ஒரு OTA தேர்வில் எழுத்துப் பகுதியில் கட் ஆஃப் மதிப்பெண்கள் 200-க்கு 78 மட்டுமே. ஆங்கில இலக்கிய மாணவர்கள் ஆங்கிலப் பாடத்தில் மட்டுமே 85 சதவீதம் எடுத்தால் தேர்வில் வெற்றி பெற பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன. பொது அறிவில் குறைந்த பட்ச மதிப்பெண்களும் எடுக்க வேண்டும். எழுத்துத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் , முப்படை சேவைகள் தேர்வு மையம் (SSB) நடத்தும் நேர்முக சோதனையில் தேர்வு பெற வேண்டும். எழுத்துத் தேர்வு நேர்முக சோதனைத் தேர்வு இரண்டிலும் பெறும் மதிப்பெண்களை வைத்து இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். இதற்கு பெண்களும் விண்ணப்பிக்கலாம். இத்தேர்வில் வெற்றி பெறுபவர்கள் லெப்டினன்ட் என்ற பதவி நிலையில் நியமிக்கப்படுவார்கள். பயிற்சிக்குப் பின் ஆரம்ப ஊதியமே கிட்டத்தட்ட ரூபாய் ஒரு லட்சம் ஆகும்.

ஆங்கிலப் புலமை வாய்ந்தவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ள தேர்வு SSC நடத்தும் தில்லி போலீஸ் மற்றும் மத்திய காவல் படைகளுக்குண்டான துணை ஆய்வாளர் மற்றும் உதவித்துணை ஆய்வாளர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்வு (SI and ASI in Delhi Police and other Central Police Organisations) ஆகும்.

இத்தேர்வில் முதல் நிலையில் பொது அறிவு, ஆங்கிலம் , கணக்கு, புத்திக்கூர்மை ஆகிய நான்கு பகுதிகளுக்கும் தலா 50 மதிப்பெண்கள் வீதம் மொத்த மதிப்பெண்கள் 200 ஆகும். இரண்டாம் நிலைத் தேர்வில் ( Main Examination) 200 மதிப்பெண்கள் கொண்ட ஆங்கிலப் பாடம் மட்டுமே கொண்டுள்ளது. இரு நிலைத் தேர்வுகளிலும் உள்ள மொத்த மதிப்பெண்களில் 400- இல் 250 ஆங்கிலப் பாடத்துக்கு மட்டுமே உள்ளது. உடற்கட்டு வாய்ந்த ஆங்கில இலக்கிய மாணவர்கள் இரு பாலரும் எளிதில் வெற்றி பெற நிறைந்த வாய்ப்புள்ளது. இத்தேர்வில் உடற்தகுதித் தேர்வும் மருத்துவ சோதனைத் தேர்வும் இருக்கும். ஆண், பெண் இரு பாலரும் இத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.

இது போன்று வங்கித் தேர்வுகளிலும் மத்திய அரசின் பல்வேறு துறைகள் நடத்தும் தேர்விலும் ஆங்கிலப்புலமை வாய்ந்தவர்களும் ஆங்கில இலக்கிய மாணவர்களும் வெற்றி பெரும் வாய்ப்புகள் அதிகம்.

நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் முழுமையான கல்வி பெறவில்லை. பல்வேறு நிலையிலுள்ள கல்வி நிலையங்களும் மிகவும் அதிக நிலையில் கிடையாது. இருந்தபோதிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மத்திய அரசு வேலைகளில் இந்தியா முழுமைக்கும் குறிப்பிடத்தக்க அளவில் இருந்தார்கள். இன்றோ அனைத்து தரப்பு மக்களிடையேயும் பல்வேறு துறைப் பட்டதாரிகள் நிறைந்து உள்ளனர்.

கல்வி நிலையங்களும் மிக அதிக அளவில் பெருகி உள்ளன. இருந்த போதிலும், அன்று வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களில் பத்தில் ஒரு பங்கு கூட மத்திய அரசு வேலைகளுக்கு வருவதில்லை. சொல்லப் போனால் தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு வேலைகளில் கூட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் முழுமையாக வருவதில்லை. இந்நிலையை மாற்ற இளைஞர்கள் முயல வேண்டும்'' என்றார் என்.எம்.பெருமாள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT