எந்தவொரு உறவிலும் சிறிய அளவிலான மனஸ்தாபங்கள் ஏற்படுவது இயல்பே. அதிலும், அலுவலகத்தில் எந்தவொரு வேலையையும் மற்றவர்களுடன் மோதல் ஏற்படாமல் செய்து முடிப்பது அரிதான காரியம். ஒரே அலுவலகத்தில் பணியாற்றும் நெருங்கிய நண்பர்கள், பணி தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு தங்களுக்குள்ளான நட்பையே முறித்துக் கொள்வதும் உண்டு.
பணி நிமித்தமாக பணியாளர்களுக்கிடையே தோன்றும் கருத்து வேறுபாடுகள் பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டவை. உங்களிடம் உள்ள தலைமைப்பண்பை வளர்த்துக் கொள்வதற்கும் மற்றவர்களைத் திறம்பட வழிநடத்துவதற்கும் சக பணியாளர்களுடன் கருத்து வேறுபாடின்றி எவ்வாறு பணியாற்றுவது என்பதை அறிந்து கொள்வது மிகவும்அவசியம்.
இக்கட்டான சூழலிலும் மற்றவர்களுடன் இணைந்து கருத்தொற்றுமையுடன் பணியாற்றக் கற்றுக் கொள்ள வேண்டும். மற்ற பணியாளர்களிடையே கருத்து மோதல் எழும்போதும் அவர்களுக்கிடையே சமரசம் ஏற்படுத்தும் வகையில் தலைமைப்பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். பணி தொடர்பாக மற்றவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் தனிப்பட்ட உறவில் எந்தவித விரிசலும் ஏற்படாத வகையில் தீர்வு காண்பதற்கு எளிய வழிமுறைகள் உள்ளன.
முதலில் செய்ய வேண்டியது பிரச்னையை எதிர்கொள்வதற்கான மனப்பாங்கை வளர்த்துக் கொள்வதுதான். மற்ற பணியாளர்களுடன் ஏற்படும் சிறிய அளவிலான மனஸ்தாபங்கள் தானாகவே சரியாகி விடும் தன்மை
கொண்டவை.
குறிப்பிட்ட விவகாரத்தில் மாற்றுக் கருத்து கொண்டுள்ளவர்களிடம் தனிப்பட்ட முறையில் கலந்துரையாட வேண்டும். நீங்கள் தெரிவிக்க விரும்பும் கருத்துகளை அவர்களிடம் தெரிவிக்க வேண்டும். அக்கருத்துகளுக்கு ஆதரவான ஆவணங்களையும் அவர்களிடம் வழங்கலாம். அதன் பிறகு அவர்கள் முன்மொழியும் கருத்துகளுக்கு நீங்கள் செவிசாய்க்க வேண்டியது அவசியம்.
அவர் தெரிவிக்கும் கருத்துகளைத் திறந்த மனதுடன் கேட்க வேண்டும். நீங்கள் ஏற்கெனவே முடிவைத் தீர்மானித்துவிட்டு அவரிடம் ஆலோசனை நடத்துவது எந்தப் பலனையும் அளிக்காது.
பிரச்னைக்குத் தீர்வு காண அவரும் உரிய பங்களிப்பை அளித்து வருகிறார் என்பதை உணர்ந்து கொண்டு செயல்படுவது அவசியம். அது அவர் மீதான நேர்மறையான மனப்பான்மை, பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கான வழியை நோக்கி உங்களை அழைத்துச் செல்லும். அவரின் கருத்துக்கு இடையிடையே மறுமொழி கூற வேண்டாம். அவர் தனது முழு கருத்துகளையும் தெரிவிக்க அவகாசம் அளிக்க வேண்டும்.
இதன் மூலம் தன்னுடைய கருத்தைத் தெரிவிப்பதற்கும் உரிய வாய்ப்பு வழங்கப்படுகிறது; தனக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படுகிறது என்ற நம்பிக்கை அவருக்கு ஏற்படும். அதனால் நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்கும் அவர் செவிசாய்ப்பார். அதைத் தொடர்ந்து, பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கு நீங்கள் கொண்டுள்ள கருத்தை அவரிடம் விரிவாக எடுத்துரைக்க வேண்டும்.
இருவரது கருத்துகளிலும் ஒத்துப்போகும் விஷயங்களைக் கண்டறிந்து அவற்றைக் குறித்துக் கொள்ள வேண்டும். கருத்தொற்றுமை ஏற்படாத விஷயங்களையும் தனியாகக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலான விவகாரங்களில் கருத்துகள் ஒத்துப்போனால், இருவருக்கும் ஒரே மாதிரியான கண்ணோட்டம் நிலவுவது தெளிவாகும். இது பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கான வாய்ப்பை எளிதாக்கும்.
கருத்தொற்றுமை ஏற்படாத விஷயங்கள் குறித்து தீவிரமாக ஆராயலாம். அந்த விவகாரங்களுக்கு சுமுகமான தீர்வை எட்ட வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து அது தொடர்பான கருத்துகளை அவரிடம் நீங்கள் தெரிவிக்கலாம். இதன் மூலமே பிரச்னைக்கு உரிய தீர்வை எட்டிவிட முடியும்.
மற்றவர்களுடனான பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பது, உங்கள் தலைமைப்பண்பை வளர்க்க உதவும். மற்றவர்கள் மீதான அன்பும் மரியாதையும் மாறாமல் மாற்றுக் கருத்தை முன்வைப்பதற்கான திறனையும் மற்றவர்களின் மாற்றுக் கருத்துகளை ஏற்றுக் கொள்வதற்கான பண்பையும் வழங்கும்; மற்றவர்களை வழிநடத்தும் பண்பு மேலோங்கும்.