இளைஞர்மணி

கரோனா கால கருவிகள்!

17th Jun 2020 08:40 PM | -- ந.ஜீவா

ADVERTISEMENT

மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது. கரோனா வைரஸ் தொற்றிக் கொள்ளாமல் இருக்க மனிதர்கள் இடைவெளிவிட்டு நிற்க வேண்டும்; முகக்கவசம் அணிய வேண்டும் என்றெல்லாம் வலியுறுத்தப்படுகிறது. பொதுமுடக்க காலத்தில் குறிப்பிட்ட நேரத்தைத் தவிர, யாரும் வீட்டைவிட்டு வெளியே வரக் கூடாது; கும்பலாகச் செல்லக் கூடாது என்றெல்லாம் கூறப்பட்டது.

கரோனா வைரஸ் தொற்றிக் கொள்ளாமல் இருக்க அரசாலும், மருத்துவத்துறையினராலும் கூறப்பட்டவற்றை மிகவும் ஒழுங்காகக் கடைப் பிடித்து வாழ்கிறவர்களும் இருக்கிறார்கள். இவற்றில் எதையும் கடைப்பிடிக்காமல் விரும்பியபடி ஊர் சுற்றுகிறவர்களும் இருக்கிறார்கள். இப்படி ஒழுங்கைக் கடைப்பிடிக்காதவர்களைக் கண்டுபிடிக்க உலகெங்கும் பல கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன.

நம்நாட்டில் உள்ள விஹண்ட் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம், இத்துறையில் புதிய கண்டுபிடிப்புகளை அளித்திருக்கிறது.

ஐஐடி -- தில்லியில் படித்த அனூப் ஜி பிரபு, கபில் பர்தேஜா ஆகிய இருவரும் நொய்டாவில் 2005--ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தைத் தொடங்கினார்கள். அதற்கு ஐஐடி -- தில்லி உதவியிருக்கிறது.

ADVERTISEMENT

இவர்கள் ஏற்கெனவே ட்ராஃபிக் என்ஃபோர்ஸ்மென்ட் சிஸ்டம் (TES) என்ற போக்குவரத்து விதிகளை மீறுபவர்களைக் கண்டுபிடித்துக் கொடுக்கும் சிஸ்டத்தை உருவாக்கியிருந்தார்கள். இந்த அடிப்படையில் இவர்கள் உருவாக்கிய "ஆட்டோமேட்டடு நம்பர் பிளேட் ரீடிங்' என்ற கருவி, நகரங்களின் முக்கியான, போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டது.

அதிக வேகத்துடன் செல்லக் கூடியவர்களை-- ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டிச் செல்பவர்களை-- சிக்னலை மதிக்காமல் செல்பவர்களை-- வேறு போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை இந்தக் கருவி கண்டுபிடித்துக் கொடுத்துவிடும். இவ்வாறு மீறும் வாகனங்கள் எந்தப் போக்குவரத்துவிதிகளை மீறின என்ற தகவலையும் இந்தக் கருவி சொல்லும். வாகன எண்ணைப் பதிவு செய்து கொண்டு, அந்த வாகன எண் குறித்த ஆர்டிஓ அலுவலகத் தகவல்களின் அடிப்படையில் போக்குவரத்துவிதிகளை மீறிய வாகன ஓட்டிகளைக் கண்டுபிடித்து இந்தக் கருவி சொல்லிவிடும். அதன் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகளை காவல்துறையினர்
எடுப்பார்கள்.

இந்தக் கருவியை கரோனா வைரஸ் தொற்று உள்ள இக்காலத்தில் இந்த நிறுவனம் மேம்படுத்தியுள்ளது. பொதுமுடக்க காலத்தில் குறிப்பிட்ட கால இடைவெளியைத் தாண்டி வாகனங்களில் செல்பவர்களை, இரவு நேரங்களில் வாகனங்களில் சுற்றுபவர்களை, குறிப்பிட்ட பகுதியைத் தவிர வேறு பகுதிகளுக்கு வாகனங்களில் செல்பவர்களைக் கண்டுபிடித்துக் கொடுக்கும் கூடுதல் வேலைகளை இந்தக் கருவி இப்போது செய்கிறது.

இந்தக் கருவியை மட்டுமல்லாமல், ஃபெப்ரிஐ என்ற கருவியையும் இந்த நிறுவனம் உருவாக்கியிருக்கிறது. இந்தக் கருவியில் வெப்பநிலையை அளக்கும் கேமரா, காட்சிகளைப் பதிவு செய்யும் கேமரா ஆகியவை உள்ளன.

கூட்டம் நிறைந்து உள்ள ஓர் இடத்தில், இயல்பை விட அதிக உடல் வெப்பநிலை உள்ளவர்களை இந்தக் கருவி என்று கண்டுபிடித்துவிடும். மைனஸ் 0.3 டிகிரி செல்சியஸிலிருந்து பிளஸ் 0.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையைக் (+/- 32.54 ஃபாரன்ஹீட்) கூட இந்தக் கேமரா கண்டுபிடித்துச் சொல்லிவிடும்.

யார் முகக்கவசம் அணியவில்லை, யார் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவில்லை என்பதையும் இந்தக் கருவி கண்டுபிடித்து உடனே
எச்சரிக்கை செய்யும்.

இந்தக் கருவியை விமானநிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், தயாரிப்பு நிறுவனங்கள், ஹோட்டல்கள், வணிக வளாகங்கள், ஷாப்பிங் மால்கள் என மக்கள் அதிகமாகக் கூடும் எல்லா இடங்களின் நுழைவு வாயில்களிலும் பொருத்திவிட்டால், காய்ச்சல் அதிகமுள்ளவர்கள் யார் வந்தாலும் உடனே எச்சரிக்கை செய்துவிடும். அவரை அந்தப் பகுதிக்குள் நுழையவிடாமல் தடுத்துவிட முடியும். அதேபோன்று முகக் கவசம் அணியாதவர்களை முகக் கவசம் அணியச் சொல்லியும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கச் சொல்லியும் உத்தரவிட முடியும்.

இந்தக் கருவியிலிருந்து சற்று மாறுபட்ட வடிவில் "கோவிட் அனலிட்டிக்ஸ்' என்ற அமைப்பையும் உருவாக்கியிருக்கிறார்கள். ஒரு பகுதியில் நுழைபவர்களின் உடல் வெப்பநிலையைத் தவிர, ஃபெப்ரிஐ செய்யக் கூடிய எல்லாச் செயல்களையும் இந்த அமைப்பு செய்கிறது.

உதாரணமாக ஒரு வளாகத்தின் வெளியே, உள்ளே பல கேமராக்கள் ஏற்கெனவே பொருத்தப்பட்டிருக்கலாம். இந்த எல்லா கேமராக்களையும் ஒருங்கிணைத்து, அவற்றில் இருந்து கிடைக்கக் கூடிய காட்சிகள், தகவல்களின் அடிப்படையில் இந்த செயற்கை நுண்ணறிவு முறை உருவாக்கப்பட்டு இருக்கிறது.

முகக்கவசம் அணியாதிருத்தல், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் இருத்தல் ஆகியவற்றை மட்டுமல்ல, வளாகத்திற்குள் வந்து செல்லும் வாகனங்களைக் கண்காணிப்பதையும் இந்த அமைப்பு செய்கிறது. இதை சாலையின் முக்கிய சந்திப்புகள், நிறுத்தங்களிலும் பொருத்தி பயன்படுத்த முடியும்.

""எங்களுடைய நிறுவனத்தின் கோவிட் அனலிட்டிக்ஸ் கருவிகளை ஹைதராபாத், லக்னெள, போபால், ராய்ப்பூர் ஆகிய நகரங்களில் செயல்படுத்திக் காண்பித்தோம். தெலங்கானா, சத்தீஷ்கர் மாநில அரசுகளுடன் இந்தக் கருவியைப் பயன்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இது தவிர, நெதர்லாந்தில் எங்களுடைய ஆராய்ச்சிப் பிரிவைத் தொடங்கியிருக்கிறோம். இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்தாவிலும் எங்களுடைய அலுவலகங்களைத் திறந்து இருக்கிறோம். இந்த அனலிட்டிக்ஸ் கருவிகளின் 60 சதவீத பாகங்கள் நம்நாட்டில் தயாரிக்கிறோம். 40 சதவீத பாகங்களை இறக்குமதி செய்கிறோம்'' என்கிறார் இந்நிறுவனத்தின் தலைமைச் செயல் இயக்குநரான கபில் பர்தேஜா.

ADVERTISEMENT
ADVERTISEMENT