இளைஞர்மணி

பன்னாட்டு சுற்றுலா கார்ட்டூன் போட்டி!

28th Jul 2020 06:00 AM | - மு. சுப்பிரமணி  

ADVERTISEMENT


உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தொடர்ந்து, அனைத்துத் தொழில்களும் பின்னடைவைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, சுற்றுலாத் தொழில் மிகவும் பின்னடைவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. இந்நிலையில் துருக்கியைச் சேர்ந்த Anatolia Tourism Academy எனும் அமைப்பு, தனது பன்னிரண்டாவது பன்னாட்டுச் சுற்றுலா கேலிச்சித்திரங்கள் போட்டிக்கானஅறிவிப்பினை, கரோனா நோய்த் தொற்றினை அடிப்படையாகக் கொண்டு வெளியிட்டிருக்கிறது. இந்தக் கேலிச்சித்திரப் போட்டிக்கு:

1. கரோனா நோய்த் தொற்று நாட்களில்சுற்றுலா

2. கரோனா நோய்த் தொற்றுக்குப் பின்னால்சுற்றுலா

3.சுற்றுலாவில் சமூக இடைவெளி என்று மூன்று கருத்துருகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

ADVERTISEMENT

இப்போட்டியானது, 16 வயதுக்குட்பட்ட இளையக் கேலிச்சித்திரக்காரர், 16 வயதுக்கு மேற்பட்ட வயது வந்த கேலிச்சித்திரக்காரர் என்று இருவகையாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.

இப்போட்டியில் பங்கேற்பவர்கள் இந்தப் போட்டிக்கான தளத்தில் இடம் பெற்றிருக்கும்விண்ணப்பப் படிவத்தை நிரப்பிச் சமர்ப்பித்திட வேண்டும்.

பங்கேற்பாளர் ஒருவர் மூன்று கேலிச்சித்திரங்கள் வரை சமர்ப்பிக்கலாம். கேலிச்சித்திரத்தினை உண்மை நகல், எண்ணிம வடிவம் அல்லது கணினி அச்சு வடிவில் அனுப்பலாம்.

கேலிச்சித்திரங்கள் அழகிய வண்ணங்கள் அல்லது கருப்பு வெள்ளை நிறத்தில் இருக்கலாம். ஒவ்வொரு கேலிச்சித்திரத்திலும் பங்கேற்பாளரின் கையெழுத்து இருக்க வேண்டும்.

கேலிச்சித்திரத்தின் பின்பக்கத்தில் பங்கேற்பாளரின் பெயர், முகவரி இடம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் பங்கேற்பாளர் குறித்த தகவல்கள் பக்கத்தையும் சேர்த்துச் சமர்ப்பிக்க வேண்டும்.

முன்பு வெளியான அல்லது பரிசு பெற்ற கேலிச்சித்திரங்களை அனுப்புதல் கூடாது.

போட்டிக்கான கேலிச்சித்திரங்களை Prof. Dr. Nazmi KOZAK, Anadolu Üniversitesi, Turizm Fakültesi, Yunus Emre Kampüsü, 26470 Eskiehir / TURKEY / பமதஓஉவ எனும் அஞ்சல் முகவரிக்கோ அல்லது tourismcartoon@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கோ 31-12-2020 ஆம் நாளுக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும்.

இப்போட்டிக்குச் சமர்ப்பிக்கப்பெற்ற கேலிச்சித்திரங்கள் குறித்த தகவல்கள் இந்தப் போட்டிக்கான இணையதளத்தில் 2021, ஜனவரி முதல் வாரத்தில் வெளியிடப்படும். பின்னர் நடுவர் குழுவினைக் கொண்டு சிறந்த கேலிச்சித்திரங்கள் தேர்வுசெய்யப்படும்.

தேர்வு செய்யப்பட்ட கேலிச்சித்திரங்கள் அனைத்தும் வண்ணமயமான கேலிச்சித்திரப் புத்தகமாக வெளியிடப்படும். இதனுடைய மின்பதிப்பு இணையதளத்திலும் வெளியாகும். தேர்வு செய்யப்படும் கேலிச்சித்திரங்கள் அனைத்தும் Anatolia Tourism Academy வெளியிடும் அறிவிக்கைகள், அஞ்சலட்டைகள், கையேடுகள் உள்ளிட்ட அச்சுப்பிரதிகளில் பயன்படுத்திக் கொள்ளப்படும்.

தேர்வு செய்யப்பெற்ற கேலிச்சித்திரங்களில் வயது வந்தோருக்கான பிரிவில் முதல் பரிசாக 1000 அமெரிக்க டாலர்கள் ($1000), இரண்டு மற்றும் மூன்றாவது பரிசாக, விடுமுறை நாட்களில் துருக்கியில் 2 நபர்கள் 5 நாட்கள் தங்கியிருந்து நான்கு இடங்களைச் சுற்றிப் பார்க்க முழு வசதி செய்து தரப்படும். இவை தவிர, பேராசிரியர் அதிலா ஓசெர் சிறப்புப் பரிசாக ஒருவருக்கு 750 அமெரிக்க டாலர்கள் ($750) பரிசாக வழங்கப்படும்.

இளையோருக்கான பிரிவில் பிரிவில் முதல் பரிசாக 750 அமெரிக்க டாலர்கள் ($750), இரண்டு மற்றும் மூன்றாவது பரிசாக, விடுமுறை நாட்களில் துருக்கியில் 2 நபர்கள் 5 நாட்கள் தங்கியிருந்து நான்கு இடங்களைச் சுற்றிப் பார்க்க முழு வசதி செய்து தரப்படும்.

இப்போட்டியில் பங்கேற்ற கேலிச்சித்திரங்களில் இருந்து பரிசுக்குரிய சில கேலிச்சித்திரங்கள் முதற்கட்டமாகத் தேர்வு செய்யப்பெற்று, 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 முதல் 7 வரையிலான நாட்களில் அறிவிக்கப்படும். அதன் பிறகு, 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அந்தக் கேலிச்சித்திரங்களிலிருந்து பரிசுக்குத் தேர்வு செய்யப்பெற்ற கேலிச்சித்திரங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்படும். பரிசு வழங்கும் நிகழ்வு துருக்கியில் ஏதாவதொரு பகுதியில் 2021-ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதத்தில் நடத்தப்படும்.

முந்தைய போட்டிகளில் பரிசு பெற்ற கேலிச்சித்திரங்கள், காட்சிப்படுத்தப்பட்ட நிகழ்வுகள் உள்ளிட்ட தகவல்களுடன் இப்போட்டி குறித்த மேலும் கூடுதல் தகவல்களைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் http://www.tourismcartoon.org/en எனும் இணைய முகவரிக்குச் செல்லலாம்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT