இளைஞர்மணி

வளர்ச்சிக்கு வித்து...அறிவார்ந்த சிந்தனை! விஞ்ஞானி வெ. பொன்ராஜ்(அப்துல்கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகர்)

28th Jan 2020 02:48 PM

ADVERTISEMENT

மிச்சமெல்லாம் உச்சம் தொடு 53

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. 
தத்துவங்கள் தாம் உலகைச் செம்மைப்படுத்த, வளர்ச்சிப்பாதையில் உலகை உருவாக்க, ஒரு வகையில் காரணமாக அமைந்திருக்கிறது. வாய் எழுப்பும் ஒலி பேச்சானது; பேச்சு மொழியானது; மொழியில் இருந்து எழுத்து பிறந்தது; எழுத்து மனிதர்களின் வாழ்வை மேம்படுத்தியது; அறிவாற்றாலால் பாடல்கள் பிறந்தன; தத்துவங்கள் பிறந்தன; கலை பிறந்தது; இலக்கியம் தோன்றியது; நாடகமானது; இசையானது; சினிமாவானது; இப்போது ஒவ்வொரு கைபேசியில் வீடியோவானது. 
இதில் தத்துவங்கள் தாம் மனித வாழ்வை பல்வேறு காலகட்டங்களில் செம்மைப்படுத்தியது; வளர்ச்சியை அடைய வைத்தது. அதே நேரத்தில் சில நேரங்களில் வீழ்ச்சியடைவும் வைத்திருக்கிறது. இது தத்துவங்களை உருவாக்கியவர்களைப் பொருத்தும், அதை பிரபலப்படுத்தியவர்களைப் பொருத்தும், அதை அமல்படுத்துபவர்களைப் பொருத்தும், அதை கடைப்பிடிப்பவர்களை பொருத்தும், தத்துவங்களை ஏற்றுக்கொள்பவர்களைப் பொருத்தும், அதனால் மேம்பாடு அடைந்தவர்களும், வீழ்ந்தவர்களும் உண்டு. தத்துவங்களுக்கு எதிர் தத்துவங்களை உருவாக்கி, வேறுபாடுகளை பெரிது படுத்தி, அடுத்த தத்துவங்களை தாழ்த்தி, குறை சொல்லி, ஒன்றோடு ஒன்று போர் புரிந்து அழிந்ததும் காலம் காலமாக நடந்துகொண்டிருக்கிறது. 
வேறுபாடுகளைப் பெரிதுபடுத்தினால், அதனால் ஏற்படும் சண்டைகளில் அழிவு தான் ஏற்படும். வேறுபாட்டில் தான் ஒற்றுமையை உருவாக்க வேண்டும். அதற்குத்தான் மனிதனுக்கு பேசும் திறனையும், ஆறாம் அறிவையும் இறைவன் கொடுத்திருக்கிறான். இல்லையென்றால் விலங்குகள் போல் சக்திவாய்ந்த விலங்கு குறைந்த சக்தியுள்ள விலங்கை தனது இரையாக்குவது போல் மனிதகுலம் என்றோ அழிந்திருக்கும். ஒரு பாக்டீரியா எப்படி தன்னை அழிக்க வந்த மருந்தில் இருந்து தன்னைக் காக்கும் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொண்டு மீண்டும் பல்கிப்பெருகுகிறதோ, அதே போல் தான் மனித குலமும், எதிர்ப்பின் மூலம் காக்கும் வல்லமையை உருவாக்கி கொண்டு அறிவார்ந்து மீண்டும் அழிவுப்பாதைக்குச் செல்லாமல் தன்னை தகவமைத்துக்கொள்கிறது. அப்படி தகவமைத்துக் கொள்ளவில்லை என்றால் அழிவு நிச்சயம் என்பதை உணர வேண்டும். 
அழிவில் இருந்து நாட்டைக் காக்க தான் அன்பு, பண்பு, பாசம் கொண்டு பிறரை நேசி என்றார்கள் அறிவார்ந்த நம் முன்னோர்களான சான்றோர்கள், இன்றைக்கு நாம் பல்வேறு மத கடவுளாக வழிபடும் இறைதூதர்கள். "இறைவனை உன்னில் தேடு... இறைவனின் நிலைக்கு உன்னை உயர்த்தும் பண்பு நலன்களை உருவாக்கு' என்றார்கள். 
மண்ணில் பிறந்தவர்கள், மண்ணாகும் முன் இந்த மண்ணைக் கெடுக்காமல் வளப்படுத்தி விட்டு செல்வதில் தான் நமது பிறப்பின் அர்த்தம் இருக்கிறது. நாம் அறிவார்ந்து சிந்தித்து, நமது தனித் திறன்களைக் கண்டுணர்ந்து, அதைச் செம்மைப்படுத்தி வளர்த்து, தனித்திறன்கள் மூலம் நல்வாழ்வைக் கட்டமைத்து, மனித குலத்தையும், உலகின் அனைத்து உயிர்களையும், இந்த மண்ணையும் வளப்படுத்தி, அதன் மூலம் இந்த மனித வாழ்வை வளப்படுத்துவதற்குத் தான் சித்தாந்தங்களை, புராணங்களை, இலக்கியங்களை, இலக்
கணங்களை, தத்துவங்களைப் படைத்திருக்கிறார்கள். அதை ஒட்டி கொள்கைகளை உருவாக்கி, ஆட்சி முறை நிர்வாகத்தைப் படைத்து, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியைத் தொடர்ந்து உருவாக்கி இந்த பூமியை வளப்படுத்தி வருகிறார்கள், ஒரு சில ஆக்கப்பூர்வமான தலைவர்கள். இதற்கு எதிர்மறையானவர்கள் இந்த பூமியை, மனித குலத்தை அழித்து வருகிறார்கள். இது தான் இந்த உலகம் உலகப்போர்களில் கண்டறிந்த வரலாறு. 
உலக வரலாற்றைப்போல் நம் நாட்டிற்கும் பழமையான வரலாறு உண்டு. உலகநாடுகளோடு நம் வரலாற்றை ஒப்பிட்டுப் பார்த்தால் நமக்குப் புரியும், நாம் எப்போதெல்லாம் உயர்ந்திருக்கிறோம், எப்போதெல்லாம் தாழ்த்திருக்கிறோம் என்று. 
திருமூலர், சேக்கிழார் சுவாமிகளால் புகழ்ந்து பேசப்பட்ட 63 நாயன்மார்களுள் ஒருவரும், பதினெண் சித்தர்களுள் ஒருவரும் ஆவார். இவர் சிறந்த ஞானியாய் விளங்கியவர். திருமூலர் வரலாற்றை நம்பியாண்டார் நம்பிகள் திருத்தொண்டர் திருவந்தாதியில் சுருக்கமாய்க் கூறுகிறார். இவர் வாழ்ந்த காலம் கி.மு. 5000 வருடங்களுக்கு முந்தியது. இது 3000 பாடல்களைக் கொண்டது. இதனைச் சைவத் திருமுறை பன்னிரண்டினுள் பத்தாவது திருமுறையாய்த் தொகுத்துள்ளனர். திருமூலர் பெயரில் 12-க்கு மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன. அவை 16 -ஆம் நூற்றாண்டில் தோன்றியவை. திருமூல சித்தர் வைத்தியம், யோகம், ஞானம் முதலான பொருள்கள் பற்றி நூல்கள் இயற்றினார். 

கி.மு. 21-ஆம் நூற்றாண்டில் தமிழ் மொழிக்கு இலக்கணம் படைத்தது தொல்காப்பியம். இது மிக மூத்த தமிழ் இலக்கண நூலாகும். பழங்காலத்து நூலாக இருப்பினும், இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவே. 
திருக்குறள் உலகப்புகழ்பெற்ற உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் மொழி இலக்கியம். அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் "முப்பால்" எனப் பெயர் பெற்றது. இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. இவ்வகை வெண்பாக்களால் ஆகிய அக்காலத்திய முதல் நூலும் ஒரே நூலும் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்' என்றும் "திருக்குறள்" என்றும் இது பெயர் பெற்றது. 
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான். 
-திருக்குறள்: 972
என்று வழி நடத்தும் பொது அறமாகும். திருவள்ளுவர் கி.மு. 3 -ஆம் நூற்றாண்டுக்கும் கி.மு. 1 -ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்தவராக இன்றைய ஆய்வாளர்கள் கூறுகின்றனர். திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. 
தமிழ்நாட்டில். கி.மு 3-2 ஆம் நூற்றாண்டில் இதே கால கட்டத்தில் அதியமானுக்கு நெல்லிக்கனி கொடுத்த ஒளவையார் ஆத்திச்சூடி படைத்தார் . ஒளவையாரிலும் மூன்று தலைமுறைக்கு மேல் தொடர்ந்து அறம் பாடி இந்த இனத்தை வளர்த்திருக்கிறார்கள். இருந்திருக்கிறார்கள். சிறுவனான முருகப்பெருமான் சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா என்று ஒளவையாரிடம் கேட்டார். திருவள்ளுவரைப்பற்றியும் அது என்ன நூல் என்பது பற்றியும், ஒளவையாரால் இயற்றப்பட்டதாகக் கூறப்படும் நல்வழி என்பதன் இறுதிப்பாட்டுப் பின்வருமாறு கூறுகிறது: 
"தேவர் குறளும், திரு நான்மறை முடிவும், மூவர் தமிழும், முனிமொழியும் -கோவை திருவாசகமும், திருமூலர் சொல்லும் ஒருவாசகம் என்றுணர்'
மதத்தைத் தாண்டிய உலக தத்துவ ஞானிகள், அரசியல் அறிஞர்கள் மக்களை அறிவார்ந்து சிந்திக்க வைத்தார்கள், அறிவியல், தொழில்நுட்பம், அரசியல் தோன்றியது. 
கி.மு. 500 -இல் வாழ்ந்த ஒரு சீன தத்துவஞானி, அவர் உறவுகள் மற்றும் குடும்பம் எவ்வாறு சமூகத்திற்கு முக்கியமானது மற்றும் அவசியமானது என்பதில் கவனம் செலுத்தினார். அவரது கருத்துக்கள் பிற்கால சீன சிந்தனையை வடிவமைத்து இப்போது கன்பூசியனிசம் என்று அழைக்கப்படுவதற்கு வழிவகுத்தன. 
கி.மு.470 -322 -க்குள் கிரேக்க தத்துவ அறிஞர்கள் சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற ஞானிகள் மேற்கத்திய நெறிமுறை சிந்தனை மரபின் தார்மீக தத்துவஞானிகளாகக் கருதப்பட்டார்கள். பிளேட்டோ பெரும்பாலும் மேற்கத்திய மதம் மற்றும் ஆன்மிகத்தின் நிறுவனர்களில் ஒருவராகக் குறிப்பிடப்படுகிறார். பண்டைய கிரேக்கத்தில் பிளேட்டோவின் மாணவர், அரிஸ்டாட்டில் மெட்டாபிசிக்ஸ், தர்க்கம், கவிதை, மொழியியல் மற்றும் அரசு உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் பங்களித்தார். அவர் வரலாற்றில் நன்கு அறியப்பட்ட தத்துவவாதிகளில் ஒருவர்.
இதே கால கட்டத்தில், அதாவது கி.மு. 5-ஆம் நூற்றாண்டில் இருந்து கி.பி. 4-ஆம் நூற்றாண்டு வரை உலகத்தின் பல்வேறு பகுதிகளில் தோன்றிய ஞானிகள், சித்தர்கள், இறை தூதர்களானார்கள், தங்களுக்கென்று சித்தாந்தங்களையும், தத்துவங்களையும் உருவாக்கினார்கள். பல்வேறு இனங்களும், மதங்களும் தோன்றின. அவை உலகமெங்கும் கிளைவிட்டு வளர்ந்தன. மதங்களில் குறிப்பிடத்தக்க பல்வேறு மதங்கள் கிறித்துவம், இசுலாமியம், பௌத்தம், சமணம், சைவம், வைணவம், இந்து, சீக்கியம் போன்ற மதங்கள் இறைதூதர்களால். சித்தர்களால், புராண இதிகாசத் தத்துவங்களால் உருவாக்கப்பட்டன. முன்னோர்களை வழிபட்டு, குலதெய்வ வழிபாட்டை கொண்டவர்கள் தமிழர்கள். 
மகாபாரதம் இந்தியாவின் இரண்டு இதிகாசங்களுள் ஒன்றாகும். மற்றது இராமாயணம் ஆகும். வியாச முனிவர் சொல்ல விநாயகர் எழுதியதாக மகாபாரதம் கூறுகிறது. இது சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டுள்ளது. இந்தியத் துணைக்கண்ட பண்பாட்டைப் பொருத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த இதிகாசம் இந்து சமயத்தின் முக்கியமான நூல்களில் ஒன்று. அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் மனிதனுடைய நால்வகை நோக்கங்களையும், சமூகத்துடனும், உலகத்துடனும் தனிப்பட்டவருக்கு உரிய உறவுகளையும், பழம்வினைகள் பற்றியும் இது விளக்க முற்படுகின்றது. நவீன இந்து சமயத்தின் முக்கிய நூல்களிலொன்றான பகவத் கீதையும் இந்த இதிகாசத்தின் ஒரு பகுதியே. பாண்டு, திருதராட்டிரன் என்னும் இரு சகோதரர்களின் பிள்ளைகளிடையே இடம் பெற்ற பெரிய போரை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதே மகாபாரதம். 
இதனைத் தமிழில் இலக்கியமாகப் படைத்தவர்வில்லிபுத்தூரார் ஆவார். பாரதியார் மகாபாரதத்தின் ஒரு பகுதியை "பாஞ்சாலி சபதம்' எனும் பெயரில் இயற்றினார். இதன் முற்பட்ட பகுதிகள் வேதகாலத்தின் இறுதிப் பகுதியைச் (கி.மு. 5-ஆம் நூற்றாண்டு) சேர்ந்தவையாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. கி.பி. 4 ஆம் நூற்றாண்டில் தொடங்கிய குப்தர் காலத்தில் இது இதன் முழு வடிவத்தைப் பெற்றிருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது. நீண்ட காலமாகப் படிப்படியாக வளர்ச்சியடைந்தே இது இதன் முழு நீளத்தை அடைந்ததாகச் சொல்கிறார்கள். முறையான பாரதம் எனக் கூறப்படும் இதன் மூலப் பகுதி 24,000 அடிகளைக் கொண்டது என மகாபாரதத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளது.
இராமாயணம் வால்மீகி என்னும் முனிவரால் சமஸ்கிருத மொழியில் இயற்றப்பட்ட மிகப் பழைய இதிகாசமாகும். இது கி.மு. 5 -ஆம் நூற்றாண்டுக்கும் -கி.பி. 2 -ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இது இந்து சமயத்தின் முக்கியமான நூல்களுள் ஒன்று. மூல நூலான வால்மீகியின் இராமாயணத்தைத் தழுவி பல இந்திய மொழிகளிலும், பிற நாடுகளின் மொழிகளிலும் இராமாயணம் இயற்றப்பட்டுள்ளது. கம்பர் இதனைத் தமிழில் எழுதினார்.
இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்று பல்வேறு வடிவங்களில் மக்களுக்கு அறிமுகப்படுத்தி, மக்களின் சக்தியை மீறி இருக்கின்ற இயற்கையை இறைவனாகக் காண்பித்து, இறைவனுக்குப் பயப்படுதலின் மூலம் மக்கள் ஒழுக்கமான வாழ்வை, அன்பான வாழ்வை, பாதுகாப்பான வாழ்வை, அமைதியான வாழ்வை அடைய இந்த மக்களைப் பண்படுத்தி, மண்ணைப் பண்படுத்தி வாழ இதிகாச, இலக்கிய, தத்துவங்களை, புராணங்களை உருவாக்கிய இறைதூதர்களை தங்களது மத கடவுளாக, தெய்வங்களாக மக்கள் வழிபட்டார்கள். அனைத்து இறைதூதர்களும் நமக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியைத்தான் இறைவனாக நமக்கு காண்பித்திருக்கிறார்கள். அப்படி என்றால் "ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்று தான் இது வரை பல்வேறு மதங்களை மக்களுக்கு கொடுத்த இறைதூதர்கள் மக்களை உணர வைத்திருக்கிறார்கள். 
ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு கோட்பாடு உண்டு. வழிபாட்டு முறை, வணங்கும் முறை உண்டு. இறைவனின் தன்மை மற்றும் மத நம்பிக்கையைச் சார்ந்த முறைகளுக்கு பெயர் Theology அதாவது இறையியல். ஆனால் ஒவ்வொரு மதமும் மூலாதாரமாக குறிப்பிடுவது ஆன்மிகம் (Spirituality). அதாவது ஆன்மிகம். ஆன்மிகம் என்றால் பொருள் அல்லது உடல் விஷயங்களுக்கு மாறாக மனித ஆன்மாவை வளப்படுத்துவதாகும். அன்பையும், கருணையையும், அனைத்து உயிர்களையும் நேசிப்பதையும், அனைவரையும் சமமாக மதிக்கும் பண்பையும் கூறுவதாகும். இறையியல் ஒவ்வொரு மதத்திற்கும் தனி வழிபாட்டு முறையைப் போதிக்கிறது. மதம் சார்ந்த இறையியலில் அடுத்த மதத்தவர்கள் தலையிட முடியாது, தலையிடவும் கூடாது. ஆன்மிகம் அனைத்து மதத்திற்கும் பொதுவானது. ஆன்மிகத்தின் மூலம் தான் அனைத்து மதம் சார்ந்த மக்களிடையேயும் இணைப்பையும், ஒற்றுமையைப் பலப்படுத்த முடியும் என்று நம்பினார்கள் மத தத்துவங்களை உருவாக்கிய இறை தூதர்கள். ஆன்மிகம் தான் அன்பால் அனைவரையும் இணைக்கும் பாலமாகும். 
இத்தனையும் படைத்த மனித சமூகம் எப்படிப்பட்ட அறிவார்ந்த சமூகமாக இருந்திருக்க வேண்டும்? அப்படி இருந்த சமூகத்தால் தான் இப்படிப்பட்ட வரலாற்றுச் சான்றுகளை உருவாக்கிச் சென்றிருக்க முடியும். ஆனால் ஒவ்வொரு மதமும் உருவாக்கிய ஆன்மிகத்தை வைத்து அன்பால் மக்களைப் பிணைத்தால் அது அமைதி, வளம், வளர்ச்சிக்கு வித்தாகும். மதக் கோட்பாடுகளை மட்டும் முன்னிறுத்தி வேறுபாடுகளைப் பெரிது படுத்தி, எனது மதம் பெரியது, உனது மதம் சிறியது என்று மக்களை பிரித்தால் பிரச்னை, பிளவு, தோல்விக்கு வித்தாகும். பிரச்னைகள் அதிகமானால் அங்கு வளர்ச்சிக்கு வாய்ப்பில்லை. அமைதியான சமூகத்தால் தான் நாட்டை வளப்படுத்த முடியும். 
நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு அழைத்து செல்வது வேறுபாடா அல்லது அறிவார்ந்த சிந்தனையா? தொடர்ந்து பார்ப்போம்.
உங்கள் கனவுகளை, இலட்சியங்களை 
பகிர்ந்து கொள்ள தொடர்பு கொள்ளுங்கள்:
vponraj@live.com 
(தொடரும்)

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT