பழங்காலத்தில் வஞ்சினம் கூறுதல் என்பதை தற்போது சபதம் என்கிறோம். அதனைச் சங்கற்பம் என்று கூறி பாரதியார் சில சங்கற்பங்களைக் குறித்துள்ளார்.
அ.இயன்றவரை தமிழே பேசுவேன். தமிழே எழுதுவேன். சிந்தனை செய்வது தமிழிலேயே செய்வேன். எப்போதும் பராசக்தியே முழு உலகின் முதற்பொருள். அதனையே தியாகம் செய்து கொண்டிருக்க முயல்வேன். அதனைக் குறித்தே ஓயாமல் எழுதிக் கொண்டிருப்பேன்.
ஆ. பொழுது வீணே கழிய இடம் கொடேன். லெளகீக காரியங்களை ஊக்கத்துடனும், மகிழ்ச்சியுடனும் அவை தோன்றும்போதே பிழையறச் செய்து முடிக்கப் பழகுவேன்.
இ. உடலை நல்ல காற்றாலும், இயன்றவரை உழைப்பாதாலும் தூய்மையுறச் செய்வேன்.
ஈ. மறந்தும், மறைத்தும் தற்புகழ்ச்சி பாராட்டுதல் விரும்பேன்.
உ. மூடரின் உள்ளத்தில் என்னைப் பற்றிய பொய் மதிப்புண்டாக இடம் கொடேன்.
ஊ. சர்வசக்தியுடைய பரம்பொருளை தியானத்தால் என்னுள்ளே புகச் செய்து எனது தொழில்களையெல்லாம் தேவர்களின் தொழில்போல் இயலுமாறு சூழ்வேன்.
எ. பொய் பேசுதல், இரட்டுற மொழிதல், நயவஞ்சனை, நடிப்பு இவற்றால் பொருளீட்டிப் பிழைத்தல் நாய்ப் பிழைப்பென்று கொள்வேன்.
ஏ. இடையறாது தொழில் புரிந்து இவ்வுலகப் பெருமைகள் பெற முயல்வேன். இல்லாவிடின் விதிவசமென்று மகிழ்ச்சியோடிருப்பேன்.
ஐ.எப்போதும் மலர்ந்த முகம், இனிய சொல், தெளிந்த சித்தம் இவற்றோடு இருப்பேன். ஓம்
மேற்கண்ட உறுதியுரைகள், சூளுரைகள். சங்கற்பங்கள் சி.சுப்பிரமணிய பாரதியார், தராசு, சித்தக்கூடல் 5, பல்வேறு எண்ணங்கள் என்ற பகுதியில் இடம் பெற்றுள்ளது.
ஒளவை அருள் எழுதிய "நாளும் நினைவோம்
பாரதியார் -366' என்ற நூலிலிருந்து...