இளைஞர்மணி

சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல்! 86 - தா.நெடுஞ்செழியன்

25th Feb 2020 03:01 PM

ADVERTISEMENT

செவிலியர் பணி செய்பவர்கள் ஒவ்வொரு நாளும் தங்களைப் புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். இந்த புதுப்பித்தல் பணியை முறைப்படுத்தும்விதமாக தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் "தொடர்ச்சியான செவிலியர் பணிக் கல்வி' முறையை - Continuing Nursing Education (CNE) நடைமுறைப்படுத்தி வருகிறது. 
தமிழ்நாட்டில் செவிலியர் பணிபுரிபவர்கள் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தங்களுடைய செவிலியர் உரிமத்தைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு புதுப்பிப்பதற்கு அடிப்படையாக, தமிழ்நாட்டில் செவிலியர் பணிபுரிபவர்கள், அவர்கள் பணியாற்றும் காலத்தில் ஓர் ஆண்டில் குறைந்தபட்சம் 30 மணி நேரம் பயிற்சி வகுப்புகளில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இவ்வாறு 5 ஆண்டுகாலத்தில் குறைந்தபட்சம் 150 மணி நேரம் பயிற்சி வகுப்புகளில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்பதை தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் அடிப்படை விதியாக வைத்திருக்கிறது.
ஓர் ஆண்டில் 60 மணி நேரம் அதிகபட்சமாக பயிற்சி வகுப்பில் ஒருவர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
இதுதவிர பேசிக் லைஃப் சப்போர்ட் சிஎன்இ (Basic Life Support CNE)என்பது உள்ளது. செவிலியர் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரும் இந்தப் பயிற்சியில் கண்டிப்பாக பங்கேற்றிருக்க வேண்டும். இந்தப் பயிற்சியில் ஐந்தாண்டுகளில் இரண்டு முறை பங்கேற்றிருக்க வேண்டும். இந்த பேசிக் லைஃப் சப்போர்ட் சிஎன்இ - இல் ஆன்லைன் மூலமாகப் பயிற்சி பெறுவதும் உள்ளது. நேரடியான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் உள்ளன. 
அதேபோன்று டிசாஸ்டர் மேனேஜ்மென்ட் சிஎன்இ (Disaster Management CNE) புரோகிராம் என்ற பயிற்சியிலும் செவிலியர்கள் பங்கேற்றிருக்க வேண்டும். வெள்ளம், புயல், நிலநடுக்கம் போன்ற இயற்கை பாதிப்புகளின்போது, மருத்துவமனையின் செயல்பாடுகளில் பாதிப்புகள் ஏற்படக் கூடும். உதாரணமாக அறுவைச் சிகிச்சைக் கூடங்களில் ஆக்சிஜன் சப்ளை இல்லாமல் போய்விடலாம். அப்படிப்பட்ட சமயங்களில் மருத்துவமனைகளை நிர்வகிப்பதில் செவிலியர்களுக்கும் பங்கு உள்ளது. அதற்காக செவிலியர்களுக்குத் தரப்படும் பயிற்சிதான் இந்த பேரிடர் கால நிர்வாகப் பயிற்சி. இந்த பயிற்சியை ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொண்டால் போதுமானது. 
நேரடியாக நோயாளிகளுக்குச் சேவை செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கும் செவிலியர்கள் அல்லது நேரடியான பொதுநல மருத்துவப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் செவிலியர்கள் பணியினூடகப் பெறும் பயிற்சிகள் தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலால் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. குறைந்தபட்சம் பெற வேண்டிய 30 மணி நேரப் பயிற்சி வகுப்புகளுக்குப் பதிலாக, இவர்கள் 15 மணி நேரம் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்றால் போதுமானது. இந்த 15 மணி நேரப் பயிற்சி என்பதில் அவர்கள் ஓராண்டில் பயிற்சி பட்டறைகளில், மருத்துவம் தொடர்பான கருத்தரங்குகளில் பங்கேற்ற காலமும் உள்ளடங்கும். ஆன்லைனில் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்றாலும் அவையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். 
நேரடியாக நோயாளிகளுக்குச் சேவை செய்யும் அல்லது பொதுநல மருத்துவப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் செவிலியர்கள் அவர்கள் பணி செய்ததற்கான சான்றுகளை ஒரு டாக்டரிடமோ, அவர்கள் பணி செய்யும் மருத்துவ நிறுவன மனிதவளப் பிரிவிலிருந்தோ பெற்றுத் தந்தால் அதை தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் ஏற்றுக் கொள்ளாது. அவர்கள் இந்த மருத்துவமனையில், இந்தப் பிரிவில், நோயாளிகளின் நேரடியான மருத்துவச் சேவையில் இத்தனை மணி நேரங்கள் ஈடுபட்டிருந்தார்கள் என்பதற்கான குறிப்பான விவரங்கள் அடங்கிய சான்றை நர்சிங் அட்மினிஸ்ட்ரேட்டர் பொறுப்பில் உள்ளவர்கள்தான் தர வேண்டும். 
நேரடியாக நோயாளிகளுடன் தொடர்புடைய மற்றும் நேரடியான பொதுநல மருத்துவப் பணி செய்யும் செவிலியர்கள் தவிர, பிற பணிகள் செய்யும் செவிலியர்களுக்கு இந்த 15 மணி நேரப் பயிற்சி வகுப்புகளுக்கான சலுகை இல்லை. உதாரணமாக, செவிலியர்களை நிர்வகிக்கும் பணி செய்பவர்கள், தரக்கட்டுபாடு பணி செய்யும் செவிலியர்கள், செவிலியர்களுக்குப் பயிற்சி தரும் பணிகளில் ஈடுபட்டிருப்பவர்கள் ஆகியோருக்கு இந்த 15 மணி நேரப் பயிற்சி வகுப்புகளுக்கான சலுகை இல்லை. இவர்கள் 30 மணி நேரம் பயிற்சி வகுப்புகளில் கண்டிப்பாகப் பங்கேற்றிருக்க வேண்டும். 
தமிழகத்தில் சொல்லித் தரப்படுகிற பி.எஸ்சி நர்சிங் கவுன்சில் படிப்புக்கான பாடத்திட்டங்கள் பல சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கிறது. 
தனிப்பட்ட நோயாளிகளை மையப்படுத்திச் செய்யப்படும் செவிலியர் பாடப் பிரிவு அதில் ஒன்று. தனிப்பட்ட நோயாளிகளின் வயது, உடல்நிலை, மனநிலை, நோயின் தன்மைக்கேற்ப செவிலியர் பணி 
எவ்வாறு அமைந்திருக்க வேண்டும் என்பது அதில் கற்றுத் தரப்படுகிறது.
செவிலியர் பணி சார்ந்த, அறநெறிசார்ந்த செவிலியருக்கான பாடப்பிரிவும் உள்ளது. செவிலியர் அறநெறி சார்ந்து எவ்வாறு இருக்க வேண்டும், நோயாளிகளிடம் மனித நேயத்துடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் இந்தப் பாடப்பிரிவு உள்ளது. 
செவிலியர் பணி என்பது நோயாளிகளின் உடல், மன நலன்களை மேம்படுத்துவது மட்டுமல்ல, மருத்துவமனைப் பணியாளர்கள் உட்பட அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்படும் பணியாகும். செவிலியர்களுக்கு தலைமைப் பண்புகள் இருந்தால்தான், அவர்கள் தங்களுடைய பணியைச் சிறப்பாகச் செய்ய முடியும். தலைமைப் பண்புகளை வளர்த்துக் கொள்வதற்கான பாடப்பிரிவும் செவிலியர் இளநிலைப் பட்டப்படிப்பில் உள்ளது. 

எந்தவொரு பணியுமே முறையான செயல் திட்டம், செயல்முறைகளின் அடிப்படையிலேயே நடத்தப்படுகின்றன. செவிலியர் பணியும் அதற்கு விதிவிலக்கல்ல. மருத்துவத்துறையின் செயல்முறைகளுக்குட்பட்டு, நல்ல தரமான மருத்துவப் பணிகளைச் செய்யும் பயிற்சியை வழங்கும் ஸிஸ்டம் பேஸ்டு பிராக்டிஸும் ஒரு பாடப்பிரிவாக பி.எஸ்சி நர்சிங் படிப்பில் உள்ளது. 
செவிலியர் பணியில் மிகவும் முக்கியமானது, மருத்துவம் சார்ந்த தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்வதாகும். மேலும் மருத்துவத்துறையில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களையும் செவிலியர்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள வேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சிகளைப் பயன்படுத்தி நோயாளிகளின் உடல்நிலையைக் கண்டறிவது, அதற்கேற்ற உடனடி முடிவுகளை எடுப்பது, செயல்படுத்துவது ஆகியவை தொடர்பான பாடங்களும் பி.எஸ்சி நர்சிங் படிப்பில் உள்ளன. 
செவிலியர்கள் நல்ல தகவல் தொடர்புத் திறன் மிக்கவர்களாக இருக்க வேண்டும். நோயாளிகளின் உடல்நிலைப் பற்றி மருத்துவர்களிடம் தெரிவிப்பதாகட்டும், நோயாளிகளிடம் கூறுவதாகட்டும், நோயாளிகளின் உறவினர்களிடம் பேசுவதாகட்டும் எல்லாவற்றுக்கும் நல்ல தகவல் தொடர்புத் திறன் தேவைப்படுகிறது. செவிலியர்களின் தகவல் தொழில்நுட்பத் திறன்களை வளர்க்கும்விதமான பாடப் பிரிவும் செவிலியர் கல்வியில் உள்ளது. 
நோயாளிகளுக்கு எந்த தீங்கும் ஏற்படாமல், நோயாளிகளுக்குச் சிறந்தமுறையில் பாதுகாப்பான மருத்துவத்தை தருவது தொடர்பான பாடப்பிரிவும் பி.எஸ்சி நர்சிங் படிப்பில் உள்ளது. 
செவிலியர்கள் ஒவ்வொரு நாளும் நோயாளிகளுக்குச் சேவை செய்கிறார்கள். புதிய தொழில்நுட்பங்களைப் பின்பற்றுகிறார்கள். என்றாலும், எந்தக் காலத்திலும் சிகிச்சை அளிப்பதில் முழுநிறைவான மேம்பாடு அடைந்துவிட்டதாகக் கூற முடியாது. எப்போதும் மருத்துவச் சேவையின் தரத்தை மேம்படுத்த வேண்டிய தேவையிருக்கும். இந்த தர மேம்பாடு தொடர்பாக செவிலியர்களுக்குக் கற்றுத் தர செவிலியர் கல்வியில் ஒரு பாடப் பிரிவு உள்ளது.
மருத்துவச் சேவையில் மிக மிக முக்கியமானது - என்ன நிகழ்ந்திருக்கிறதோ, உண்மையில் என்ன இருக்கிறதோ அதைக் கண்டறிந்து, அதன் அடிப்படையில் தேவையான மருத்துவச் சேவையை செய்வதாகும். அதாவது கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் மருத்துவ சேவை நடைமுறைகளை மேற்கொள்வதாகும். இந்த EVIDENCE BASED PRACTICE பற்றி சிகிச்சை அளிப்பது பற்றி பி.எஸ்சி நர்சிங் படிப்பில் கற்றுத் தரப்படுகிறது. 
செவிலியர் பணி, மிக மிகக் கவனமாக மேற்கொள்ள வேண்டிய பணியாகும். செவிலியர்கள் நோயாளிகளைப் பாதுகாப்பதோடு, தங்களையும் நோய்த் தொற்றுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டியது மிக மிக அவசியமாகும். 
(தொடரும்)
கட்டுரையாசிரியர்
சமூக கல்வி ஆர்வலர் 
www.indiacollegefinder.org

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT