இளைஞர்மணி

கனவு... இலட்சியம்: வெற்றிக்கு விதை - விஞ்ஞானி வெ. பொன்ராஜ் (அப்துல்கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகர்)

25th Feb 2020 03:20 PM

ADVERTISEMENT

மிச்சமெல்லாம் உச்சம் தொடு 57
நடிகை கங்கனா ரானாவத் முதல் விமான பைலட்டாக தேஜாஸ் என்ற இலகு ரக போர்விமானத்தை ஒட்டும் இந்திய விமானப் படை விமானியாக "தேஜாஸ்' என்ற திரைப்படத்தில் நடிக்கும் செய்தி கடந்த வாரம் டிவிட்டரில் டிரென்டிங் ஆனது. 2016- இல் பெண்களை போர் விமானத்தை ஓட்டும் பணிக்கு ஈடுபடுத்தியதில் நாட்டின் பாதுகாப்பு படைகளில் இந்திய விமானப் படை (IAF) முதலிடத்தில் இருந்தது. இந்த படம் 2021-இல் வெளியாகும் என்ற செய்திக்கும், இந்தியாவின் போர்விமானத்தை உருவாக்கும் இந்தியாவின் தற்சார்பு தொழில்நுட்ப வளர்ச்சிக்கும், முன்னாள் குடியரசுத் தலைவர் கலாமிற்கும் என்ன சம்பந்தம்? இந்தத் திட்டத்தையும், அதில் ஏற்பட்ட பல்வேறு தொழில்நுட்ப சோதனைகளை, வளர்ந்த நாடுகள் விதித்த தொழில்நுட்ப தடைகளையும் தாண்டி சாதனைகளாக மாற்றிக் காண்பித்ததில், கலாமிற்கு முக்கிய பங்கு இருக்கிறது. இத்தனை சோதனைகளையும் தாண்டி உருவாக்குவதை விட இறக்குமதி செய்வது நல்லது என்று நினைப்பவர்கள், "இந்தியாவின் போர் விமான உற்பத்தி திட்டம் மிகவும் தாமதமாகிறது' என்று சொன்ன குற்றச்சாட்டையும் தாண்டி இன்றைக்கு இந்த விமானம் இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட்டு விட்டதன் மூலம் அப்துல் கலாமின் போர்விமான கனவு நனவாகியிருக்கிறது. 
இந்திய விமானப்படை (IAF) 83 இலகு ரக போர் விமானம் (LCA) தேஜாஸ் போர் விமானங்களை வாங்க இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) உடன் சுமார் 45,000 கோடி ரூபாய் ஆர்டர்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வு உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தி திறனுக்கான ஒரு பெரிய ஊக்கமாக இருக்கும். 
LCA தேஜாஸ் விமானம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (DRDO) முழுமையாக உருவாக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் தொடக்கத்தில், DRDO தலைவர் ஜி சதீஷ் ரெட்டி, LCA -க்கான இறுதி செயல்பாட்டு அனுமதி (FOC) சான்றிதழை IAF மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு வழங்கினார். எந்தவோர் இந்திய நிறுவனத்திற்கும் இது முதல் வகையான ஆர்டராக இருக்கும்; இது உள்நாட்டு பாதுகாப்புத் தொழிலுக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும். 
ரூ 45,000 கோடி ஆர்டரின் 65 சதவீதத்திற்கும் அதிகமான நிதி நாட்டில் இருக்கும் தனியார் மற்றும் பொதுத் துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்க உதவும்.
ஆரம்ப செயல்பாட்டு அனுமதி மற்றும் இறுதி செயல்பாட்டு அனுமதி தரங்களில் 40 எல்.சி.ஏ விமானங்கள் ஐ.ஏ.எஃப் செயல்பாட்டுப் பயிற்சிகளில் பங்கேற்று ககன் சக்தி சோதனையில் வெற்றி பெற்று தங்களை நிரூபித்துள்ளன. இது விமானப்படைக்கு வழங்கி முடிந்ததும் முதல் எல்.சி.ஏ மார்க் 1 ஏ விமானம் 2023 -க்குள் தயாரிக்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. 
LCA Mk 1A என்பது தேஜாஸ் விமானத்தின் மேம்பட்ட பதிப்பாகும். IAF -ஆல் வழங்கப்பட்ட தர தேவைகளின்படி, முதல் LCA Mk 1A  விமானம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதிலிருந்து 36 மாதங்களில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய LCA Mk 1A விமானம் விமானப்படைக்கு வழங்கப்படும் ஆரம்ப 40 LCA களை விட மேம்பட்ட ஏவியோனிக்ஸ் மற்றும் ரேடார்களை கொண்டிருக்கும். HAL இதுவரை 16 எல்.சி.ஏ.க்களை 45 படைப்பிரிவின் கீழ் தமிழ்நாட்டின் சூலூரில் விமானப்படை தளத்திற்கு வழங்கியுள்ளது.
10 வயது சிறுவனாக அப்துல் கலாம் கண்ட கனவு நனவாகியிருக்கிறது என்றால், அதற்கு காரணம், கனவு கண்டால் மட்டும் போதாது, அந்தக் கனவை நனவாக்க தொடர்ந்து உழைக்க வேண்டும். பறவை எப்படி பறக்கிறது என்று பாடம் நடத்தி, கடற்கரைக்கு அழைத்துச் சென்று நேரடியாக கடற்பறவைகளைக் காண்பித்து அவருடைய ஆசிரியர் சிவசுப்பிரமணி ஐயர் விளக்கியபோது அனைத்து மாணவர்களுக்கும் புரிந்தது பறவை எப்படி பறக்கிறது என்பது; ஆனால் அப்துல் கலாமிற்கு மட்டும் தானும் பறவை போல் பறக்க வேண்டும் என்ற கனவு பிறந்தது. அது இலட்சியமாக மாறியது. இலகு ரக போர் விமானத்தை பல்வேறு தடைகளைத் தாண்டி பறக்க வைத்ததில் அந்த கனவு நனவானது. பாடத்தைப் புரிந்தவர்கள் அனைவரும் விஞ்ஞானியாகவோ, ஜனாதிபதியாகவோ ஆகவில்லை. ஆனால் அந்த கனவை இலட்சியமாக ஆக்கி அதற்காக தொடர்ந்து உழைத்ததினால் தான் கலாம் விஞ்ஞானியானர், ஜனாதிபதியானார். 
நாம் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள். நான் தனித்துவமானவன், தனித்துவமானவள் என்று நீங்கள் உணர்ந்த அடுத்த வினாடி வரலாற்றில் உங்களுக்காக ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டு விடும். அந்த பக்கத்தை உங்கள் வருங்கால சந்ததியை திரும்பத் திரும்ப படிக்க வைக்கவேண்டுமானால் உங்களுக்குள் எழும் கனவை, இலட்சியமாக மாற்றி, தோல்வி மனப்பான்மைக்கு தோல்வி கொடுத்து வெற்றி பெறக் கூடிய விடாமுயற்சி வேண்டும். 
எனது 14 வயதில் ஒரு கனவு பிறந்தது. அது எப்படி நனவானது. காலை எழுந்தவுடன் நான் பிறந்த தோணுகால் கிராமத்தில் சவுண்டையா டீ கடையில் டீ குடித்துவிட்டு பத்திரிகை படித்துவிட்டு, எங்கள் அண்ணன் பொன்னையாவின் கிணற்றுக்குச் சென்று குளித்துவிட்டு பள்ளிக்குச் செல்வது வழக்கம். 19 ஜூலை 1980 அன்று காலை வழக்கம் போல டீக்கடையில் பத்திரிகையைப் படித்த போது, "இந்தியா முதன் முதலாக சொந்தமாக வடிவமைக்கப்பட்ட எஸ்.எல்.வி 3 ராக்கெட்டை விண்ணில் ஏவி ரோகிணி செயற்கைக்கோளை நிலை நிறுத்தியது; அப்துல் கலாம் சாதனை' என்ற செய்தியை படித்தேன், அப்போது எனக்கு 14 வயது. அந்தச் செய்தி எனக்குள் ஓர் உத்வேகத்தைக் கொடுத்தது. தொடர்ந்து படித்தேன். அன்றைக்கு எனக்குள் ஒரு கனவு பிறந்தது. நானும் அப்துல் கலாமைப்போல ஒரு விஞ்ஞானி ஆகவேண்டும். ஒரு நாளாவது அவரைச் சந்திக்க வேண்டும் என்ற கனவு எனக்குள் பிறந்தது. அதிலிருந்து அப்துல் கலாம் பற்றிய செய்திகளைப் படிப்பது வழக்கம். தொடர்ந்து பிரித்வி ஏவுகணை, அக்னி ஏவுகணை ஏவியது போன்ற செய்திகளை ஆர்வத்துடன் படிப்பேன். அந்தக் கனவை ஆழ்மனதிற்குள் சுமந்து கொண்டு படித்தேன். தொடர்ந்து படித்தேன். நான் கணிணி அறிவியல் மற்றும் கணித துறையில் மேல் பட்டப்படிப்பு முடித்து பல்வேறு நிலைகளில் பணியாற்றும் போது, பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்திற்கு கீழ் வரும் இலகு ரக போர் விமானம் (LCA - Light Combat Aircraft) வடிமைத்து தயாரிக்கும் பணியில் இருக்கும் ஏரோநாட்டிகல் டெவலப்மெண்ட் ஏஜென்ஸில் (ADA) விஞ்ஞானி சி பிரிவில் தேர்வு பெற்று 16 ஆகஸ்டு 1995 -இல் சேர்ந்தேன். சேர்ந்த பின்பு தான் தெரியும் ADAவின் டைரக்டர் ஜெனரல் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் என்று. எனக்குள் அளவில்லா மகிழ்ச்சி. என் கனவு நாயகனை ஒரு முறையாவது சந்திக்கவேண்டும் என்ற எனது கனவு ஒரு கண்டிப்பாக நனவாகும் என்று நம்பினேன். 
LCA வடிமைப்பு நிறைவு பெற்று ரோல் அவுட் என்று சொல்லப்படக்கூடிய முதல் பரிசோதனை உருட்டல் அதாவது முழுமையாக வடிவமைக்கப்பட்ட மாதிரியை சோதனை முறையில் எச்.ஏ.எல் விமான தளத்தில் உருட்டல் அல்லது இழுத்து ஓட்டிப் பார்த்தல் என்ற நிகழ்ச்சி 17 நவம்பர் 1995 -இல் நடைபெற்றது. அன்று எனது 15 ஆண்டுகால கனவு நனவானது. ஆம். அந்த நிகழ்ச்சிக்கு அன்றைய பாரத பிரதமர் நரசிம்மராவ், பாதுகாப்பு அமைச்சர், அவரது ஆலோசகர் அப்துல்கலாம் ஆகியோர் வந்து அந்த ரோல் அவுட் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்கள். நான் சேர்ந்து 3 மாதங்கள் ஆன நிலையில் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை செய்து கொண்டு அந்த நிகழ்வில் எனது சக விஞ்ஞானிகளுடன் கலந்து கொண்டேன். முதன் முதலில் 15 ஆண்டு கால கனவு நாயகனைப் பார்ப்பது ஒரு வகை மகிழ்ச்சி என்றால், அப்போது நடந்த ஒரு நிகழ்வு அப்துல் கலாம் மேல் எனக்கு இருந்த மதிப்பை பன்மடங்கு அதிகப்படுத்தியது. 
எச்.ஏ.எல் பெங்களூர் விமான தள வளாகத்தில் எல்.சி.ஏ. போர்விமான ரோல்அவுட் நிகழ்ச்சி தொடங்கியது, அந்த நிகழ்ச்சிக்கு பிரதமர், கலாம் உள்ளிட்ட அனைவரும் மேடையில் ஏறினார்கள். அப்போது கலாம் மேடையைச் சுற்றி பார்த்தார், யாரையோ தேடினார். யாரை தேடுகிறார் என்று பார்க்கும் போது ஒரு முக்கியமான நபர் மேடைக்கு அழைக்கப்படவில்லை; அந்த முக்கியமான நபரை மேடைக்கு அழைத்து தனது இருக்கையில் உட்காரச் சொன்னார். உடனே கூடியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளும், பொறியாளர்களும் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். அது அடங்க நேரம் பிடித்தது. உடனே அவருக்கும் இருக்கையைப் போட்டார்கள். அவர் தான் எல்.சி.ஏ விமானத்தை வடிவமைத்த முதன்மை விஞ்ஞானியும், ADA 
திட்ட முதன்மை இயக்குநருமான கோட்டா ஹரிநாராயணன். அழைக்கப்படவேண்டியவர் அழைக்கப்படாவிட்டாலும் அவரை அழைத்து அவருக்கு இருக்கை கொடுத்து, அவரைப்பற்றி, அவர் எப்படி இந்த எல்.சி.ஏ என்ற விமானத்தை சிறப்பாக வடிவமைத்தில் மிக முக்கிய பங்காற்றினார் என்று அன்றைய பாரத பிரதமர் நரசிம்மராவின் முன்பாக எடுத்துரைத்தார் கலாம். மிக முக்கியமான விழாவில் எங்கள் திட்ட இயக்குநர் இல்லையே என்று வேதனைப்பட்ட எங்களுக்கு, திறமைக்கும் உழைப்பிற்கும் மதிப்பளித்த கலாமின் செயல் எங்களுக்குள் திறமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற விதையை விதைத்தது. 

பின்னால் கலாம் என்னிடம் ஒரு முக்கிய நிகழ்ச்சியைப் பற்றி சொல்லிய போது இந்த நிகழ்வு எனக்கு மீண்டும் நினைவிற்கு வந்தது. 
அதாவது எஸ்.எல்.வி-3 திட்டத்தின் தலைவராக அப்துல் கலாம் இருக்கும் போது, ராக்கெட் வடிவமைக்கும் திட்டத்தில் நான்காவது கட்ட அபோஜீ மோட்டரின் வடிவமைப்பு பணியில் பணிபுரியும் போது கலாமிற்கு ஏற்பட்ட ஓர் அனுபவத்தைப் பற்றி சொன்னார். விஞ்ஞானி விக்ரம் சாராபாயின் காலத்தில், முத்துநாயகம் மூன்றாம் கட்டத்திற்கான வடிவமைப்பு திட்டத் தலைவராக இருந்தார். எம்.ஆர்.குருப் இரண்டாம் கட்டம், கவாரிகர் முதல் கட்டம். ராக்கெட் வழிகாட்டல் அமைப்பிற்கான வடிவமைப்பு திட்டத் தலைவராக குப்தா இருந்தார். பேராசிரியர் யு.ஆர். ராவ் ரோகிணி செயற்கைக்கோளின் வடிவமைப்புத் திட்டத் தலைவராக இருந்தார். நான்காவது நிலை மற்றும் வெப்பக் கவசத்திற்கான வடிவமைப்பு திட்டத்தின் தலைவராக அப்துல் கலாம் இருந்தார். அப்போது மதிப்பாய்வை இஸ்ரோவின் விக்ரம் சரபாய் மேற்கொண்டார். இது ஒரு ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் வடிவமைப்புக் கட்டமாக இருந்ததால் கல்வி நிறுவனங்களின் சார்பாக மதிப்புரைகளை, ஆய்வுக்காக விக்ரம் சாராபாய் அழைப்பது வழக்கம். இந்த ஆய்வுக்காக நன்கு அறியப்பட்ட வழிகாட்டல் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் உருவகப்படுத்துதலில் நிபுணரான பேராசிரியர் ஐ.ஜி. சர்மா, ஏரோடைனமிக் வடிவமைப்பு மற்றும் வளிமண்டல அறிவியல் நிபுணர் பேராசிரியர் நரஷிமா, ரேடார் அமைப்பு நிபுணர் பேராசிரியர் மகாபத்ரா, விண்வெளி அமைப்பு பேராசிரியர் கே.ஏ.வி. பண்டலை அழைத்திருந்தார். ஒவ்வொரு திட்டத் தலைவரும் தங்கள் பணி தொடர்பான முன்னேற்றம் மற்றும் பிரச்னைகள் குறித்து விளக்கினார்கள். இறுதியாக அப்துல் கலாமின் முறை வந்ததும், திட்டத்தின் ஒட்டுமொத்த நிலை குறித்து மூன்று நிமிட விளக்கக் காட்சியைக் கொடுத்துவிட்டு, பின்னர், சிஸ்டம் டிசைனர் சத்யா, கலப்பு தயாரிப்பு பொறியாளர் அப்துல் மஸ்ஜித், விண்வெளி பொறிமுறை பொறியாளர் மற்றும் ராக்கெட் மோட்டார் வடிவமைப்பாளரான நம்பூதிரி ஆகியோரை துணை அமைப்பு வடிவமைப்பின் முன்னேற்றம் குறித்து குறுகிய விளக்கக் காட்சியை வழங்குமாறு கேட்டுக் கொண்டார். கலாம் குழுவின் விளக்கக்காட்சியை முடித்ததும், விவாத நேரம் வந்தது. பல தொழில்நுட்ப மற்றும் நிர்வாக கேள்விகள் கேட்கப்பட்டன. அது அனைத்திற்கும் அப்துல் கலாம் பதிலளித்தார். அந்த கட்டத்தில் ஓர் அனுபவமிக்க விஞ்ஞானி ஒரு கேள்வி கேட்டார்: ""கலாம் உங்கள் அணியிலிருந்து விளக்கக்காட்சியை ஒன்றன் பின் ஒன்றாகப் பார்த்தேன். நீங்கள் என்ன செய்தீர்கள்?'' என்று கேட்டார். இந்த கேள்விக்கு எவ்வாறு பதிலளிப்பது என்று கலாம் சிந்தித்துக்கொண்டிருக்கும் போது, டாக்டர் விக்ரம் சாராபாய் உடனே பதிலளித்தார்: ""கலாம் செய்தது உண்மையில் ஒட்டுமொத்த திட்ட மேலாண்மை. அது தான் தலைமைப்பண்பு, எல்லாவற்றையும் நான் தான் செய்தேன் என்று அவர் கூறவில்லை, பணியில் உழைத்த அனைவரையும் அழைத்து உண்மையில் பணியைச் செய்தவர்களிடமிருந்து அவர்களுக்கு உரிய வாய்ப்பை தலைவரான என்னிடம் அறிமுகப்படுத்தியிருக்கிறாரே'' என்றார். 
ஒரு திட்டத்திற்கு பங்களிக்கும் நபர்கள் எப்படி அந்த திட்டத்திற்கு மிகவும் முக்கியம் என்பதை உணர்த்திய கலாமின் தலைமைப்பண்பை நான் உட்பட அனைத்து இளம் விஞ்ஞானிகளும் அன்று அறிந்து கொண்டோம். 
15 ஆண்டுகால கனவு நிறைவேறியது. டாக்டர் கலாமை தூரத்தில் வைத்து பார்த்து விட்டோம். எப்படி அவரைபக்கத்தில் வைத்து பார்ப்பது என்று எனது ஆழ் மனது துடித்தது. விழா முடிந்ததும் அஈஅ மாநாட்டு அறையில்பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அப்போது மூத்த விஞ்ஞானிகள் அறையின் முதல் வரிசையில் இருந்தார்கள். நான் உட்பட இளையவர்கள் கடைசி வரிசையில் இருந்தோம். பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்து வரும்போது அவரிடம் கை கொடுத்து, "" வணக்கம் சார்'' என்றேன். "என்ன தமிழ்நாடா?'' என்று கேட்டார். அடுத்து அவர் கேட்ட கேள்வி என்னை சிந்திக்க வைத்தது. அது என்ன, தொடர்ந்து பார்ப்போம்.
உங்கள் கனவுகளை, இலட்சியங்களை 
பகிர்ந்து கொள்ள தொடர்பு கொள்ளுங்கள்:
vponraj@live.com 
(தொடரும்)

ADVERTISEMENT
ADVERTISEMENT