இளைஞர்மணி

வாங்க இங்கிலீஷ் பேசலாம் 228 - ஆர்.அபிலாஷ்

4th Feb 2020 01:21 PM

ADVERTISEMENT

புரொபஸர், கணேஷ், மற்றும் ஜூலி வெளியே வரும் போது ஊரடங்கு உத்தரவுபிரகடனம் பண்ணப்பட்டுள்ளதாய் தெரிய வருகிறது. அவர்கள் ஒரு போக்குவரத்து காவலரிடம் உதவி பெற்று அவர்களின் வாகனத்தில் புரொபஸரின் நண்பர் வீர பரகேசரியின் வீட்டுக்குப் பயணிக்கிறார்கள். அங்கே வாயில் காவலரிடம் பேசி விட்டு திரும்பும் கணேஷும் புரொபஸரும் anachronism எனும் சொல் குறித்து விவாதிக்கிறார்கள்.
புரொபஸர்: நீ parachronism பற்றி கேள்விப்பட்டிருக்கியா? 
கணேஷ்: என்ன சார் அது? 
புரொபஸர்: ஒரு வரலாற்று ஆசிரியர் ஒரு வரலாற்றுச் சம்பவத்தை அது நடந்த காலத்துக்கு முன்போ பின்போ நடந்ததாக தவறாகப் பதிவு பண்ணுவது. அதனால் சமூகத்தில் பல குழப்பங்கள் ஏற்படலாம். வரலாற்றில் parachronism பல ஆபத்துகளை அரங்கேற்றலாம். இதற்கு ஈடான மற்றொரு சொல் தான் metachronism. இன்னொரு வார்த்தை misdating. 
கணேஷ்: அதென்ன சார் தப்பான பொண்ணுங்களை டேட்டிங் பண்ணுவதா? 
புரொபஸர்: இல்லடா எருமை. 
கணேஷ்: பிறகு என்ன சார்? 
புரொபஸர்: வரலாற்றை எழுதும் போது தப்பாக தேதியைக் கொடுப்பது தான் misdating. 
கணேஷ்: சார் இந்த செக்கில் பின் தேதியிடுறதும் இது தானே? 
புரொபஸர்: இல்லடா அது வேற. post-
dating. ஒரு குறிப்பிட்ட வரலாற்றுச் சம்பவம் பின்னால் நடந்ததாக தவறாகத் தேதியிடுவதும் postdating தான். 
கணேஷ்: சில பேர் நாம மறுப்பு சொல்றதுக்கு முன்னாடியே நீ இப்படி சொல்வேன்னு தெரியும்னு சொல்லி கழுத்தை அறுப்பாங்க சார். நான் எங்க அம்மா கிட்ட இன்னிக்கு லேட்டா வருவேன்மான்னு சொன்னா போதும், "அதோட நிக்க மாட்டியே ... பிரண்ட்ஸோட வெளியே போறே, காசு வேணுமுன்னு கேட்பே. சரி நான் உனக்கு பணம் தர மாட்டேன்னு சொல்லல, ஆனால் இங்கே நான் என்ன பணம் காக்கிற மரமா வச்சிருக்கேன். ஆமா உங்க கிட்ட தான் பணம் இருக்குதே, அன்னிக்கு இது இதுக்கெல்லாம் செலவு பன்ணினீங்களேன்னு நீ கேட்பே? நான் உடனே நான் "அப்படி சொல்லலம்மான்னு" சொல்றேன். உடனே அவங்க "நீ சொல்லுவேன்னு தெரியும். இப்போ சொல்லாம இருப்பே. ஆனால் நிச்சயம் பின்னாலே சொல்லுவே. பணத்தை நீ கேட்டவுடனே எடுத்துக் கொடுத்தா நீ கெட்டு வீணாப் போயிடுவே. புரியுதா?" "எனக்கு பணமே வேணாம்மா"ன்னு சொல்வேன். உடனே அவங்க "நீ இப்படி சொல்வேன்னு தெரியும்னு..." அடுத்து புதுசா ஆரம்பிச்சிடுவாங்க. 
புரொபஸர்: ஹா... ஹா... parental anxiety. இதெல்லாம் இல்லாம என்ன சந்தோஷம். ஆனால் உங்க அம்மா பண்றது parachronism இல்ல. அது prebuttal. 
கணேஷ்: அதென்ன சார்? 
புரொபஸர்: Rebuttal கேள்விப்பட்டிருப்பே - ஒரு சர்ச்சையின் போது எதிராளியோட வாதங்களுக்கு திரும்ப பதிலளிப்பது.
Prebuttal என்றால் எதிராளி உனக்கு எதிரா பேசும் முன்பே நீ இதைத் தான் சொல்லப் போறேன்னு கணிச்சிக்கிட்டு அதற்கான பதில்களையும் முதலில் பேசும் போதே கொடுப்பது. சில அரசியல் தலைவர்கள் கற்பனையான எதிரிகளைக் கட்டமைத்து தம் சொற்பொழிவில் அவர்களைத் தட்டி prebuttal பண்ணுவார்கள். இதுக்கு இன்னொரு பேரு prolapse அல்லது procatalepsis. ஆனால் இது ஒரு நல்ல பேச்சு முறை கிடையாது.
கணேஷ்: ஏன் சார்? 
புரொபஸர்: உரையாடல் நடக்கணுமுன்னா எதிராளியைப் பேச விடணும். அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதை நீங்க கணிச்சு அதுக்கு தயாராகலாம். அது preemption. ஆனால் நீ மட்டுமே சதா பேசுறது, எதிராளிக்கும் சேர்த்து நீயே கற்பனை பண்ணி அதுக்கு பதிலும் சொல்றது தப்பு. அது சலிப்பை உண்டாக்கும். அடுத்தவங்களுக்கு உன் கிட்ட பேச அக்கறை போயிடும். 
(இனியும் பேசுவோம்)

ADVERTISEMENT
ADVERTISEMENT