இளைஞர்மணி

மாணவர்கள் கண்டுபிடிப்பு... தண்ணீரைத் தூய்மையாக்கும் புதிய முறை!

ந. ஜீவா

தண்ணீரைத் தூய்மையாக்க எவ்வளவோ வழிகள் இருக்கின்றன. எந்தவிதமான வடிகட்டுதல்களும் இல்லாமல், தண்ணீரை வெப்பப்படுத்தாமல், தண்ணீரில் எந்த வேதிப் பொருளையும் கலக்காமல் தூய்மையாக்கும் வழிமுறை ஒன்றை சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதிக செலவில்லாத இந்த முறைக்கு மத்திய அரசின் "ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்' விருது கிடைத்துள்ளது. இந்த முறையைக் கண்டுபிடிப்பதற்காக மாணவர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியவர் சோனா தொழில்நுட்பக்கல்லூரியின் சிவில் இன்ஜினியரிங் துறைத் தலைவர் ஆர்.மாலதி. அவர் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் "விஸ்வேஸ்ரய்யா சிறந்த ஆசிரியர் விருது 2020'-ஐ பெற்றிருக்கிறார். அவரிடம் பேசியதிலிருந்து...

""எங்கள் கல்லூரி முதல்வர் எஸ்ஆர்ஆர் செந்தில்குமாரின் ஊக்குவிப்பில், எங்கள் கல்லூரியைச் சேர்ந்த சிவில் இன்ஜினியரிங் துறை மாணவர்களான தினேஷ்குமார், லோகேஸ்வர், மணிகண்டன், மணிமொழிச்செல்வன், கருப்பசாமி ஆகியோர் அடங்கிய குழு தண்ணீரைத் தூய்மையாக்கும் முறை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. இதில் கருப்பசாமி ஆராய்ச்சி மாணவர்.

கட்டடம் கட்டும்போது பயன்படுத்தப்படும் கான்கிரீட் கலவையில் சேர்க்கப்படும் தண்ணீரைப் பற்றிய ஆராய்ச்சியைத்தான் முதலில் அவர்கள் மேற்கொண்டனர்.

சிமெண்ட், மணலைக் கலக்கப் பயன்படும் தண்ணீர் உப்புத் தண்ணீராக இருந்தால் சிமெண்ட் கலவையின் தரம் குறைந்து போகிறது. ஆனால், பல இடங்களில் உப்புத்தண்ணீர்தான் கிடைக்கிறது; நல்ல தண்ணீர் கிடைப்பதில்லை. உப்புத் தண்ணீரை நல்ல தண்ணீராக மாற்ற என்ன செய்யலாம் என்று யோசித்தபோது உருவானதுதான் தண்ணீரைத் தூய்மையாக்கும் புதிய முறை. மாணவர்களின் கண்டுபிடிப்பின் மூலமாக உருவான தூய்மைப்படுத்தப்படும் தண்ணீரை கான்கிரீட் கலவையில் கலந்து கட்டடம் கட்டப் பயன்படுத்தினோம். ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட சிமெண்ட்டை விட 30 சதவீதம் சிமெண்ட் குறைவாகவே தேவைப்பட்டது.

தூய்மைப்படுத்திய தண்ணீரைப் பயன்படுத்தி செய்யப்பட்ட கான்கிரீட் கலவைகளைக் கொண்டு நடைமேடையில் போடப்படும் சிமெண்ட் ஓடுகளைச் செய்தோம். பயன்படுத்தப்பட்ட சிமெண்ட்டின் அளவை விட குறைவான சிமெண்ட்டைப் பயன்படுத்தினாலும் இந்த சிமெண்ட் ஓடுகள் வலிமையானவையாக இருந்தன.

Caption

தூய்மையாக்கப்பட்ட தண்ணீரைத் தோட்டங்களுக்குப் பாய்ச்சினால் என்ன விளைவு ஏற்படும் என்பதைக் கண்டறிவதற்காக எங்கள் கல்லூரியில் உள்ள இரண்டு தோட்டங்களில் ஒன்றுக்கு சாதாரண தண்ணீரையும், இன்னொன்றுக்கு எங்களால் தூய்மையாக்கப்பட்ட தண்ணீரையும் பாய்ச்சினோம்.

இரண்டு தோட்டங்களுக்கும் இடையே வேறுபாடு நன்றாகவே தெரிந்தது. தூய்மைப்படுத்தப்பட்ட தண்ணீரைப் பாய்ச்சிய தோட்டத்தின் செடிகள் செழிப்பாக வளர்ந்ததுடன், நல்ல விளைச்சலையும் தந்தன.

கரும்புத் தோட்டங்களுக்கும், நெல் வயல்களுக்கும் தூய்மைப்படுத்தப்பட்ட தண்ணீரைப் பாய்ச்சி சோதனை செய்யும் ஆராய்ச்சியில் தற்போது இறங்கியிருக்கிறோம்.

தண்ணீரைத் தூய்மைப்படுத்த எங்கள் மாணவர்கள் மேற்கொண்ட முயற்சி மிகவும் எளிமையானது. அதிக செலவில்லாதது. ரூ.5 ஆயிரம் செலவழித்தாலேயே தண்ணீரைத் தூய்மைப்படுத்தும் இந்த அமைப்பை ஏற்படுத்திவிடலாம்.

உப்புத்தண்ணீர், தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் ரசாயனக் கழிவுகள் நிறைந்த தண்ணீர் என்று எந்தத் தண்ணீராக இருந்தாலும் இந்த முறையில் தூய்மையாக்கிவிடலாம்.

தண்ணீரில் அப்படி என்னதான் மாற்றங்களை எங்கள் மாணவர்கள் செய்தார்கள்? வேறொன்றுமில்லை.

ண்ணீரை காந்தமயமாக்கியிருக்கிறார்கள். அதாவது உப்புத் தண்ணீரை, ரசாயன கழிவுகள் கலந்த தண்ணீரை காந்தமயமாக்கியிருக்கிறார்கள்.

காந்தத்தின் வழியாகத் தண்ணீரைச் செலுத்தும்போது, தண்ணீர் காந்தமயமாகிறது. தண்ணீரின் மூலக்கூறுகளான ஹைட்ரஜன், ஆக்சிஜன் அணுக்களின் பிணைப்புக் கோணம் 104.5 டிகிரியிலிருந்து 103 டிகிரி அளவுக்குக் குறைந்துவிடுகிறது. மூலக்கூறுகள் உடைந்துவிடுகின்றன. இதனால் தண்ணீரின் தன்மை முற்றிலும் மாறிவிடுகிறது. தண்ணீரில் உள்ள உப்புத்தன்மை, ரசாயனக் கழிவுகள் குறைந்துவிடுகின்றன. தண்ணீர் தூய்மையாகிவிடுகிறது.

தாவரங்கள் வளரப் பயன்படுபவை நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற மண்ணில் உள்ள தூதுப் பொருள்கள். காந்தமயமாக்கப்பட்ட தண்ணீர் அவற்றின் மீது பட்டதும் அவற்றின் தன்மை மாறிவிடுகிறது. தாவரங்கள் எளிதில் அவற்றை உட்கிரகிக்க முடிகிறது. அதனால் தாவரங்கள் நன்றாக வளர்கின்றன.

தூய்மையாக்கப்பட்ட இந்தத் தண்ணீர் குடிநீர் அளவுக்குத் தூய்மையானது இல்லை. என்றாலும் இதை விவசாயத்துக்குப் பயன்படுத்தலாம். பம்ப் செட் மூலம் இறைக்கப்பட்ட நீர் வரும் குழாயில் காந்தத்தை உரிய முறையில் பொருத்திவிட்டால் போதும், அதன் வழியாகச் செல்லும் தண்ணீர் தூய்மையாகிவிடும். இந்த தண்ணீர் பாய்ச்சப்பட்ட நிலத்தில் உள்ள சத்துப் பொருள்கள் எளிதில் உட்கொள்ளத் தக்கதாக மாறிவிடுவதால், தாவரங்களுக்குத் தேவையான சத்துப் பொருள்கள் மண்ணிலிருந்தே கிடைத்து
விடுகின்றன.

கூடுதலாக ரசாயன உரங்களைப் போட வேண்டியதில்லை. தண்ணீரைத் தூய்மையாக்கும் இந்த முறையுடன் ஐஓடி (இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ்) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். அப்படிப் பயன்படுத்தினால், எவ்வளவு தண்ணீர் பாய்ச்ச வேண்டும்? மண்ணில் உள்ள எந்த உரச்சத்து, எவ்வளவு குறைந்து இருக்கிறது? எந்த உரச்சத்து தேவைப்படுகிறது என்பன போன்ற விவரங்களை எல்லாம் விவசாயி தனது செல்லிடப் பேசியிலேயே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

SCROLL FOR NEXT