இளைஞர்மணி

முந்தி இருப்பச் செயல் - 25

சுப. உதயகுமாரன்

சில தகராறுகளை பேரப் பேச்சின் மூலம் மட்டுமே தீர்க்க முடியும். அண்மையில் ஒடிசா மாநிலத்திலுள்ள கோராபுட் கிராமத்தில் ஒரு தகராறு எழுந்தது. கமலா முதுலி என்கிற பெண்மணி நாக்மணி என்று பெயரிடப்பட்ட தனது பசுமாட்டை வேறொருவர்பிடித்துச் சென்று தனது தொழுவத்தில் கட்டி வைத்திருக்கிறார் என்று உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதே நேரம், பிரமோத் ரவுத் என்கிற ஒருவர் லட்சுமி என்று பெயரிடப்பட்ட பசு மாடு தன்னுடையது என்றும், ஒரு பெண்மணி அதன்மீது தவறாக உரிமை கொண்டாடுகிறார் என்றும் முறையிட்டு அதே காவல் நிலையத்தை அணுகினார்.

காவல் துறையினர் விசாரித்தபோது, இரண்டு பேருமே ஒரே மாட்டைப் பற்றித்தான் முறையிடுகிறார்கள் என்பது தெரிந்தது. இரண்டு தகராறு கட்சிகளும் பூனையும், நாயும் போல சண்டை போட்டுக் கொண்டிருந்த நிலையில், காவல்துறை அதிகாரி அந்த மாட்டிடமே கேட்டுவிடலாம் என்றெண்ணி, மாட்டை காவல் நிலையத்துக்குக் கொண்டு வரப் பணித்தார்.

"மாட்டை அவிழ்த்துவிடுவோம், அது தன்னுடைய தொழுவத்தை தானாகவே தேடிச் சென்றுவிடும்' என்று தீர்ப்பளித்தார் அதிகாரி. ஆனால் மாடோ, காவல் நிலையத்தைவிட்டு எங்குமே நகரமாட்டேன் என்று அங்கேயே நின்றுகொண்டு இருந்தது.

பின்னர், உரிமைகோரும் இரண்டு பேரையும் மாட்டைப் பெயர் சொல்லி அழைக்கச் செய்தார் அதிகாரி. "லட்சுமி' என்று பிரமோத் அன்போடு அழைத்ததும், பசு வாஞ்சையோடு எதிர்வினை ஆற்றியது. பிரச்னை தீர்ந்தது என்று அனைவரும் நிம்மதிப் பெருமூச்சுவிட்ட தருணத்தில், கமலா "நாக்மணி' என்று பிரியத்துடன் அழைத்தார். பசுவோ அதே பாசத்துடன் எதிர்வினை ஆற்றியது.

"எனக்கேன் இப்படியெல்லாம் நடக்கிறது?' என்று காவல்துறை அதிகாரி மண்டையைப் பிய்த்துக் கொண்டார். வேறு என்ன செய்வது என்று ஒன்றும் தோன்றாத நிலையில், உள்ளூர் கால்நடை மருத்துவர்கள் இருவரை காவல் நிலையத்துக்கு அழைத்தார் அதிகாரி.

பிரச்னையை அவர்கள் தீர்த்து வைப்பார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், அவர்கள் மேலும் குழப்பினார்கள். அதே பசுமாட்டுக்கு தாங்கள் இருவருமே மேற்படி நபர்கள் இருவரின் தொழுவங்களிலும் மருத்துவம் பார்த்திருக்கிறோம் என்று இரண்டு மருத்துவர்களும் சொன்னார்கள்.

ஒரே குழந்தைக்காக இரண்டு அம்மாக்கள் தகராறு செய்தபோது, அரசர் சாலமன், அந்தக் குழந்தையை இரண்டு துண்டுகளாக வெட்டி இருவருக்கும் கொடுக்கும்படி தீர்ப்புச் சொல்லி, அதை நிராகரித்த பெண்தான் உண்மையான தாய் என்று கண்டுபிடித்த கதையை நாமெல்லாம் அறிவோம். ஆனால் அப்படி ஒரு முடிவெடுக்க முடியாத காவல்துறை அதிகாரி அந்தப் பசுவை மூன்றாமவர் ஒருவரிடம் தற்காலிகமாக ஒப்படைத்துவிட்டு, மேற்படி நபர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்துக் கொண்டிருக்கிறாராம்.

இந்தப் பிரச்னையை தொடர்புடையோர் நேரடியாக நடத்தும் பேரப் பேச்சின் மூலமாக மட்டுமே தீர்க்க முடியும். பேரப் பேச்சில் கலாசாரம் என்பது ஒரு மிக முக்கியமான அம்சமாக இருக்கிறது. இந்தியாவில் தனது தரப்பை நூறு விழுக்காடு சரியானது என்றும், எதிர்த்தரப்பை நூறு விழுக்காடு தவறானது என்றும் பார்க்கும் போக்குத்தான் பரவலாகக் காணப்படுகிறது.

தன்னுடைய தவறுக்கு எள்ளளவும் பொறுப்பேற்காமல், ஒட்டுமொத்தப் பழியையும் பிறர் மீது போட்டுவிட்டுத் தப்பிக்க முனைவது; அல்லது அப்படிச் செய்துவிடுவேன், இப்படிச் செய்துவிடுவேன் என்று மிரட்டுவது; அல்லது அவரைத் தெரியும், இவரைத் தெரியும் என்று சிபாரிசுக்கு ஆள் சேர்ப்பது; அல்லது கொஞ்சம் காசு தருகிறேன் என்று தட்டிக் கழிப்பது; இப்படித்தான் நம்முடைய செயல்பாடுகள் அமைகின்றன.

நமது திரைப்படங்களில் கூட கதாநாயகன் தனது எதிரிகளோடு பேரப் பேச்சில் ஈடுபடுவதில்லை. தன் எதிரிகளை அடி அடி என்று அடித்து, மிதி மிதி என்று மிதித்து, ரத்தம் பீறியெழப் பிய்த்தெறிந்து பிரச்னையைத் தீர்க்கிறார். இப்படி கதாநாயகன் எதிரிகளை அடித்துப் போட்டால்தான், கதாநாயகி கூட அவர் மீது காதல் கொள்கிறார்.

எனது பன்னிரண்டு ஆண்டு கால அமெரிக்க வாழ்வில் நான் கண்டுணர்ந்த விடயம், அந்த மக்களிடம் ஒரு நயமை இருக்கிறது. பிரச்னைகளைப் பேசித் தீர்க்கத் தெரியாமல், சிலர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது ஒருபுறம் நடந்தாலும், பெரும்பாலான அமெரிக்கர்கள் நியாயமாக நடந்து கொள்வார்கள். தம்முடைய தவறுகளை ஏற்றுக் கொள்வார்கள்; எதிர்த்தரப்பின் உண்மைகளையும் அங்கீகரிப்பார்கள். எனவே அவர்களோடு பேரப் பேச்சு நடத்துவது பெருமளவு எளிதானது.

இந்த கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்டு, ரோஜர் பிஷ்ஷர், வில்லியம் யூரி எனும் இரு அமெரிக்க வல்லுநர்கள் 1981-ஆம் ஆண்டு உலகப்புகழ் பெற்ற "கெட்டிங் டு எஸ்' எனும் புத்தகம் ஒன்றை வெளியிட்டார்கள்.

பேரப்பேச்சுக்களில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளின் அடிப்படையில், மூன்று முக்கியமான அறிவுரைகளை அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஒன்று, ஒவ்வொரு பேரப்பேச்சையும் ஒன்றிணைந்த தேடலாக வடிவமையுங்கள். எடுத்துக்காட்டாக, ஒரு வீடு வாங்கத் திட்டமிடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். விற்பவருக்கு கூடுதல் விலை வேண்டும்; ஆனால் வாங்குகிற உங்களுக்கோ, குறைந்த விலை வேண்டும். நீங்கள் இருவருமே எதிரெதிர் ஈடுபாடுகள் கொண்டிருந்தாலும், இலக்கு ஒன்றேதான். அது நியாயமான விலையை நிர்ணயிப்பது. எனவே இருவருக்கும் பாதகமில்லாத ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரு விலையை நிர்ணயிப்பதுதான் உங்கள் பேரப் பேச்சின் குறிக்கோள்.

இதற்கு எம்மாதிரியான தரநிலை ஏற்புடையதாக இருக்கும்? நீங்கள் இருவரும் ஒன்றிரண்டு அளவுகோல்களை நிர்ணயித்துத் தொடங்கலாம். அந்த குறிப்பிட்ட பகுதியில் இம்மாதிரி வீடுகளின் அண்மை விலைமதிப்பை மதிப்பீட்டாளர் ஒருவரின் உதவியோடு அறிந்து கொண்டு விலையை நிர்ணயிக்கலாம். அல்லது குறிப்பிட்ட வீட்டின் பயன்பாட்டுக் காலத்தின் அடிப்படையில் வீட்டின் தற்போதைய விலையைக் கணக்கிடலாம். வீட்டை விற்பவர் இருபது லட்சம் ரூபாய் என்று விலை நிர்ணயித்தால், அந்தத் தொகையை அவர் எப்படிக் கண்டடைந்தார் என்று கேட்டறியலாம். இருவரும் எந்தெந்தக் கொள்கையின் அடிப்படையில் இயங்குகிறீர்கள் என்று தெரிந்து கொள்வது மிகவும் நன்மை பயக்கும்.

இரண்டு, நீங்கள் ஏற்றுக் கொள்ளும் தரநிலையை எப்படிக் கடைப்பிடிப்பது? வீடு வாங்குவதில் சந்தை மதிப்பு, மதிப்பிறக்கம் எனும் இரண்டு தரநிலைகளைக் காணலாம். இரண்டுமே வெவ்வேறு விலைகளை நிர்ணயிக்கும். இம்மாதிரியான குழப்பமான தருணங்களில் இரண்டு விலைகளுக்கும் பொதுவான ஒரு விலையைத் தேர்வது, அல்லது அவற்றுக்கிடையே எழும் வேறுபாட்டை இருவருமாகப் பகிர்ந்துகொள்வது என்று முடிவெடுக்கலாம்.

கொள்கைரீதியான பேரப் பேச்சில் ஈடுபடுகிறவர்கள் திறந்த மனத்துடன் இயங்குவதாலும், நியாயமான முறையில் தீர்வுகாண்பதில் குறிப்பாக இருப்பதாலும், அந்தப் பேரப் பேச்சு ஏற்றுக் கொள்ளத் தக்கதாகவும், செயலூக்கம் உடையதாகவும் அமைகிறது.

மூன்று, எந்தவிதமான அழுத்தங்களுக்கும் அடிபணியாதீர்கள்; உங்கள் கொள்கைக்கு மட்டுமே மதிப்பளியுங்கள். எடுத்துக்காட்டாக, ஒரு புதிய வீடு கட்டுகிறீர்கள் எனக் கொள்வோம். அஸ்திவாரம் போடும்போது, உங்கள் காண்டிராக்டரிடம் பேரப் பேச்சு நடத்துகிறீர்கள். அவர் உங்கள் மைத்துனருக்கு வேலை தருகிறேன், அஸ்திவாரத்தின் ஆழத்தை ஓரடி குறைத்துக் கொள்வோம் என்று சொன்னால், நீங்கள் சம்மதிக்க மாட்டீர்கள்.

அதேபோல, ஒப்பந்தக்காரர் திடீரென கட்டுமானத் தொகையை அதிகரிக்கப் போகிறேன் என்று தெரிவித்தால், பிற காண்டிராக்டர்கள் எவ்வளவு தொகை வசூலிக்கிறார்கள் என்று விசாரித்துவிட்டு, நீங்கள் உங்களுக்காகும் செலவைச் சொல்லுங்கள், உரிய லாபத்தையும் சேர்த்து எவ்வளவு தொகை என்பதைத் தீர்மானிப்போம் என்று அவரிடம் தெரிவிப்பீர்கள். "என்னை நீங்கள் நம்பவில்லையா?' என்று அவர் மழுப்பினால், நம்பிக்கை வேறு, வீட்டின் பாதுகாப்பை நிர்ணயிக்கும் அஸ்திவாரத்தின் ஆழம் வேறு என்று பதில் சொல்வீர்கள்.

பேரப்பேச்சில் அழுத்தம் என்பது லஞ்சமாக, மிரட்டலாக, மழுப்பலாக, ஒத்துழையாமையாக அமையலாம். இன்னோரன்ன தருணங்களில், கொள்கைரீதியான பேரப்பேச்சில் ஈடுபடுகிறவர் என்ன செய்ய வேண்டும்? எதிர்த்தரப்பின் காரணங்களை அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் தேர்வு செய்யும் புறநிலை அளவுகோல்களைத் தெளிவாக எடுத்துரையுங்கள். வேறு எதற்கும் சம்மதிக்கமாட்டேன் என்பதை உறுதிபடத் தெரிவியுங்கள். அழுத்தத்துக்கு அடிபணியாது, கொள்கைக்கு அடிபணியுங்கள்.

(தொடரும்)

கட்டுரையாளர்: சுற்றுச்சூழல் ஆர்வலர்.
தொடர்புக்கு: spuk2020@hotmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

SCROLL FOR NEXT