இளைஞர்மணி

விட்டுவிடுதல்... தோல்வி அல்ல!

சுரேந்தர் ரவி

விட்டுவிடுதல்... இதை இரு விதங்களில் நாம் ஆராய முடியும். ஏற்கெனவே தொடங்கிய செயலை விட்டுவிடுவது, பாதியிலேயே ஒரு விஷயத்தை விட்டுவிடுவது ஆகியவற்றை நமது சமூகம் எதிர்மறையாகப் பார்க்கிறது. அதே வேளையில், தீயபழக்கங்களை விட்டுவிடுவது, குறிப்பிட்ட விஷயத்தின் மீதான அடிமைத்தனத்தை விட்டுவிடுவது போன்றவற்றை நேர்மறையானதாகச் சமூகம் கருதுகிறது.

அப்படியானால் விட்டுவிடுவதை நாம் எவ்வாறு எடுத்துக் கொள்வது? ஏற்கெனவே தொடங்கப்பட்ட விஷயத்தைப் பாதியிலேயே விட்டுவிடுவதைத் தோல்வியாகவே பெரும்பாலானோர் கருதுகின்றனர். ஆனால், அது மெய்யன்று. எப்போது நாம் ஒரு விஷயத்தை விட்டுவிடுகிறோம் என்பதை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.

நாம் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்காதபோது ஏற்கெனவே நாம் செய்து கொண்டிருந்த செயல்களைக் விட்டு விடுகிறோம். ஆனால் சிலர் விட்டுவிடாமல் மேலும் தொடர்ந்து செயல்படுகின்றனர். அவர்கள்தான் வெற்றியாளர்களாக மாறுகிறார்கள் என்ற மாயத்தோற்றமே சமூகத்தில் காணப்படுகிறது.

சில சமயங்களில் குறிப்பிட்ட விஷயங்களைப் பாதியிலேயே விட்டுவிடுவதும்
நல்லதுதான்.

பல சமயங்களில் நமக்கு விருப்பமான, ஈடுபாடு மிகுந்த விஷயம் என்னவென்றே தெரியாமல், அதைப் பற்றி யோசிக்காமல் எதையாவது ஒன்றை அவசரமாக செய்யத் தொடங்கிவிடுகிறோம். அப்படிப்பட்டவற்றை நம்மால் தொடர்ந்து செய்ய முடியுமா, அவற்றின் மீது தொடர் கவனம் செலுத்த முடியுமா என்பதையெல்லாம் நாம் தொடக்கத்தில் ஆராய்ந்து பார்ப்பதில்லை.

அவ்வாறு ஆராயாமல் தொடங்கப்பட்ட விஷயங்களில் வெற்றியடைவது குதிரைக் கொம்பாகவே இருக்கும். அவ்வாறான சூழலில், அந்த விஷயங்களைப் பாதியிலேயே விட்டுவிட்டு அடுத்த விவகாரத்துக்கு நகர்வதே புத்திசாலித்தனம்.
குறிப்பிட்ட விஷயத்தின் மீது நமக்கு ஈடுபாடே இல்லை என்று தெரிந்த பிறகும் அதைத் தொடர்ந்து செய்வது பேரிழப்புக்குத்தான் நம்மை அழைத்துச் செல்லும்.

ஆனால், இவ்வளவு நாள்கள் செய்து வந்த விஷயத்தைத் திடீரென்று ஏன் விட்டுவிடுகிறாய்? தற்போது இதை விட்டுவிடுவதன் மூலமாக வாழ்க்கையில் தோற்றுவிடுவாய். சிறு சிறு தோல்விகள் வரத்தான் செய்யும்; அதற்காக பாதியிலேயே விட்டுவிடுவாயா என்றெல்லாம் பலர் கேட்பார்கள்.

அவர்களது பேச்சிலும் ஒரு நியாயம் இருப்பதாகவே உங்களுக்கும் தோன்றும்.
ஆனால், இந்த விவகாரத்தில் முக்கியமான விஷயத்தை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். ஒரு விஷயத்தின் மீது முழு ஈடுபாடு கொண்டு அதைச் செய்யும்போது ஏற்படும் தோல்வி வேறு; ஈடுபாடே இல்லாமல் மனம்போன போக்கில் செய்யும் செயல்களில் ஏற்படும் தோல்வி வேறு. இரண்டையும் எந்த வகையிலும் ஒப்பீடு செய்ய இயலாது; ஒப்பிடவும் கூடாது.

அத்தகைய தோல்விகளுக்கான வேறுபாட்டை அறியாதவர்களே மேற்கண்ட அறிவுரைகளை வழங்கும் நபர்களாக இருப்பார்கள். குறிப்பிட்ட விவகாரத்தைப் பாதியிலேயே விட்டுவிடுவதற்கு முன் சிலரிடம் கருத்து கேட்பது நல்லதுதான். ஆனால், அவர்கள் கூறும் கருத்துகளை மட்டுமே முழுமையாக நம்பவும் கூடாது.
மற்றவர்களிடம் ஆலோசனை கேட்கும்போது, அவர்களின் கருத்தை (விருப்பத்தை) நம் மீது திணிப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது. எனவே, நம் மனம் சொல்வதற்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நமக்கு எந்த விஷயத்தில் ஈடுபாடு உண்டு; எந்தச் செயலைச் செய்தால் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பது நமக்கு மட்டுமே தெரியும்.

அதை முடிவு செய்த பிறகு ஏற்கெனவே தொடங்கிய பொருத்தமில்லாத செயலை விட்டுவிடலாம். அது தவறில்லை. அது தோல்வியாகாது. ஆனால், அவ்வாறு ஒரு செயலை விட்டுவிட்டு மற்றொரு செயலைத் தொடங்கும்போது பல்வேறு விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏற்கெனவே செய்து வந்த செயல் மீது ஈடுபாடு இல்லை என்ற காரணத்தினாலேயே அதைப் பாதியிலேயே விட்டுவிட நேர்ந்தது. எனவே, புதிதாகத் தொடங்கும் செயல் மீது முழு ஈடுபாடு உள்ளதா என்பதைத் தீர ஆராய்ந்து மேற்கொள்ள வேண்டும்.

அதேபோல், மற்றவர்கள் சொல்வதற்காகவும் புதிய செயலைத் தொடங்குதல் கூடாது. உங்களுக்கு அக்கறையும் ஈடுபாடும் இருந்தால் மட்டுமே எந்தச் செயலிலும் ஈடுபட வேண்டும்.

சிறு வயதிலிருந்து பல்வேறு செயல்களைப் பாதியிலேயே விட்டுவிட்டிருப்போம். அச்செயல்களை எல்லாம் வேண்டுமென்றே நாம் விட்டுவிடவில்லை. அதற்கான தேவை இல்லாமல் போனதாலும், அதற்கான நேரமும் காலமும் கிடைக்காமல் போனதாலும் அவற்றை விட்டுவிட்டிருப்போம். அவற்றையெல்லாம் நாம் தோல்வியாகப் பார்ப்பது இல்லை.

அடுத்தடுத்த விஷயங்களில் கவனத்தைச் செலுத்தி வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறோம். எனவே, வாழ்க்கையில் தோல்வி அடைந்துவிட்டோம் என்று பிறர் சொல்வது, உண்மையல்ல. அவர்கள் சொற்கள் மற்றவர்கள் நம் மீது எறியும் அம்புகளே. நாம் உண்மையிலேயே தோல்வியடைந்து விட்டோமோ இல்லையா என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

SCROLL FOR NEXT