இளைஞர்மணி

கவனிக்க வேண்டிய வேலைவாய்ப்புகள்!

1st Dec 2020 06:00 AM | -ந.முத்துமணி

ADVERTISEMENT


சமூக வாழ்க்கையை மட்டுமல்லாது, கல்வி, வேலைவாய்ப்புகளையும் கரோனாவுக்கு முன், கரோனாவுக்கு பின் என்று பார்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த 8 மாதங்களாக கிடைத்துள்ள அனுபவம்,கல்வி, வேலைவாய்ப்பில் புதிய தடங்களுக்கு நம்மைப் பயணிக்க வைத்துள்ளது.

2021-ஆம் ஆண்டில் நிறுவன கட்டமைப்பிலும், வேலைத்தன்மையிலும் ஏற்படக்கூடிய மாற்றங்களை அனைவரும் புரிந்துகொள்வது, எதிர்காலத்தை திறம்படக் கையாள உதவியாக இருக்கும். புதிய ஆண்டில் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான ஐந்து முக்கியமான வேலைவாய்ப்புகளைக் கவனிக்கத்தவறக் கூடாது.

வணிக நுண்ணறிவு ஆய்வாளர்: வணிக நுண்ணறிவு ஆய்வாளர்( பிசினஸ் இன்டெலிஜென்ஸ் அனலிஸ்ட்) 2020-ஆம் ஆண்டில் தேவை அதிகமாகக் காணப்பட்ட வேலையாகும்.வணிகத்தைக் காப்பாற்றிக் கொள்ள எல்லா நிறுவனங்களும் போராடிக் கொண்டிருப்பதால், வணிகத்தைப் பெருக்க புதிய வியூகங்களை அமைக்க வேண்டியுள்ளது. அதில் வணிக நுண்ணறிவு ஆய்வுப் பணி முக்கியப் பங்கு வகிக்கிறது. எந்தவொரு நிறுவனமாக இருந்தாலும், அதன் வணிக இலக்குகள் அல்லது நோக்கங்களை அடைவதற்கு புதுமையான வர்த்தக வியூகங்களை அமைக்கவும், செம்மையான முடிவுகளை எடுக்கவும் வணிக நுண்ணறிவு ஆய்வாளரின் பணி அத்தியாவசியமாக மாறியுள்ளது. 2023-ஆம் ஆண்டுக்குள் உட்பொதிக்கப்பட்ட வணிக நுண்ணறிவு பகுப்பாய்வு சந்தையின் மதிப்பு 4.4. லட்சம் கோடியாக விரிவடைய இருக்கிறது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இத்துறை ஆண்டுக்கு 13 சதமாக வளர்ச்சி அடையவிருக்கிறது. அடுத்தடுத்த ஆண்டுகளில் வணிக நுண்ணறிவுஆய்வாளர் பணியிடங்களுக்கான தேவைகூடிக்கொண்டே இருக்கப் போகிறது.

இணைய பாதுகாப்பு நிபுணர்: உலக அளவில் அமல்படுத்தப்பட்டுள்ள கரோனா பொதுமுடக்கத்தினால் வீடுகளில் இருந்து பணியாற்றும் புதியமுறை அறிமுகமாகி இருக்கிறது.எல்லாரும் இணையம் மற்றும் அதுசார்ந்த செயலிகளைச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. இது தரவுகளைப் பன்மடங்கு பெருக்கியுள்ளதோடு, இணைய பரிமாற்றத்தையும் சுறுசுறுப்பாக்கியுள்ளது. எல்லாப் பணிகளும் இணையத்தைச் சார்ந்திருப்பதால், தரவுகள் களவு, சிதைவு போன்ற தொழில்நுட்பத் தாக்குதல்களும் அதிகரித்துள்ளன. இதனால் தமது தரவுகளையும் நெட்வொர்க் வலையத்தையும் பாதுகாப்பாக வைத்திருப்பதில் நிறுவனங்கள் அக்கறை செலுத்தத் தொடங்கியுள்ளன. மே மாதத்திற்கு பிறகு இந்தியாவின் முன்னணி நிறுவனங்களின் தரவுகள் களவாடப்பட்டிருப்பதைக் கவனித்திருக்கலாம்.

ADVERTISEMENT

இது மிகப் பெரிய சவாலாக மாறியுள்ளதால், தரவுகளைப் பத்திரப்படுத்த முனைந்துள்ள நிறுவனங்கள், அதற்காக இணைய பாதுகாப்பு நிபுணர்களை( சைபர் செக்யூரிட்டி எக்ஸ்பெர்ட்) வேலைக்கு அமர்த்தத் தொடங்கியுள்ளன. நிறுவனத்தின் தரவு வளாகத்தை தொழில்நுட்பத்தின் உதவியால் பாதுகாப்பது தான் இணைய பாதுகாப்பு நிபுணர்களின் தலையாய வேலையாகும். இணையவழி தாக்குதல்களை அறிந்து, அதன் பாதிப்புகளில் இருந்து தற்காத்து கொள்வதும்; தாக்குதலுக்கு உள்ளானால் அதில் இருந்து விடுபடுவதும் இணைய பாதுகாப்பு நிபுணர்களின் வேலையாகும். எதிர்காலத்தில் வேலைவாய்ப்புகளை தங்கு தடையில்லாமல் அள்ளித் தரும் களமாக இணைய பாதுகாப்பு மாறப் போகிறது. 2021-ஆம் ஆண்டில் உலக அளவில் 35 லட்சம் இணைய பாதுகாப்பு நிபுணர் பணிக்கு ஆட்கள் தேவைப்படுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கிளவ்ட் கட்டமைப்பாளர்: வீடுகளில் இருந்து பணியாற்றும் நடைமுறை இயல்பாகிவிட்ட நிலையில், மேகக்கணிமை சேமிப்பகத்தின் (கிளவ்ட் ஸ்டோரேஜ்) தேவை பெருகி வருகிறது. நிறுவனத்தின் தரவுகள் மேகக்கணிமை சேமிப்பகத்தில் வைக்கப்பட்டிருக்கும். அவற்றை தேவைப்படும்போது சம்பந்தப்பட்ட நிறுவனம் பெற்றுக் கொள்ள இயலும். தரவுகளை பராமரிக்கும், சேமித்து வைக்கும் நிறுவனங்கள் மேகக்கணிமை சேமிப்பகங்கள் என்று கூறப்படுகின்றன. அடுத்தடுத்த ஆண்டுகளில் மேகக்கணிமை சேமிப்பு கட்டமைப்பாளர் ( கிளவ்ட் ஆர்ச்சிடெக்ட்) பணிக்கானதேவை அதிகரிக்கஇருக்கிறது. நிறுவனங்கள் தரவுகளைக் கையாளும்போது, தரவுகளின் போக்குவரத்து தங்குத்தடையில்லாமல் முன்னும் பின்னும் நகர வேண்டும். அதன் மேலாண்மையைக் கவனிப்பது மேகக்கணிமை சேமிப்பு கட்டமைப்பாளரின் முக்கியமான பணியாகும். மேகக்கணிமை சேமிப்புசார் செயலிகளுக்கு நிறுவனங்கள் மாறத் தொடங்கியுள்ளதால், மேகக்கணிமை சேமிப்பு கட்டமைப்பாளருக்கு தேவை பெருகும்.

உற்பத்திமேலாளர்: நுகர்வோர் அல்லது வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப உற்பத்திப் பொருள்களை வடிவமைத்து, 

தயாரித்து, விற்பனை செய்வதற்கான வியூகங்களை அமைத்து, விற்பனைரீதியாகப் வெற்றி பெறுவதற்குத் தேவையான பாதையை அமைப்பதே உற்பத்திமேலாளரின் மிகப்பெரிய பொறுப்பாகும். பொருள் உற்பத்தியில்ஈடுபட்டிருக்கும் தொழில்நுட்பக்குழுவுக்கும், தொழில்நுட்பம் சாராத குழுவுக்கும் இடையே பாலமாக இயங்குவதே உற்பத்திமேலாளரின் பணி ஆகும். வெவ்வேறு நிறுவனங்களில் தற்போதைய வேலைச்சந்தையில் 20 ஆயிரம் உற்பத்திமேலாளர் பணியிடங்கள் காத்திருக்கின்றன. உற்பத்தி மேலாண்மையில் நாட்டம் கொண்டவர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. பாரம்பரிய நிறுவனங்கள், அதிநவீன நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துவகையான நிறுவனங்களிலும் உற்பத்தி மேலாண்மைசார் பணியிடங்களுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன.

செயற்கை நுண்ணறிவு நிபுணர்: நமது அன்றாட வாழ்க்கையில் கண்ணுக்குத் தெரியாமல் அசைக்க முடியாத இடத்தைப் பிடிக்கத் தொடங்கியுள்ளது செயற்கை நுண்ணறிவு. கூகிள், அமேசான், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட உலக அளவிலான தகவல் தொழில்நுட்பப் பெருநிறுவனங்கள் தத்தமது வணிகத்தில் அதிக லாபம் அடைவதற்கு கொழுத்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்தான் காரணம்.

மின்-வணிகத்தை வீச்சை பன்மடங்காக உயர்த்தியுள்ளதும் செயற்கை நுண்ணறிவின் கைங்கரியமாகும். இதன் காரணமாக, செயற்கை நுண்ணறிவு நிபுணர்களுக்கான

(ஆர்ட்டிஃபிசியல் இன்டெலிஜென்ஸ் ஸ்பெஷலிஸ்ட்) வேலைவாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன. 

2020-இல் கை நிறைய ஊதியத்துடன் அதிக அளவில் வேலைக்கு அமர்த்தப்பட்டவர்கள் செயற்கை நுண்ணறிவு நிபுணர்கள் தாம். இன்றைக்கும் ஒரு லட்சம் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. இது அடுத்தடுத்த ஆண்டுகளில் இறக்கை கட்டி பறக்கப் போகிறது. 2023-ஆம் ஆண்டுக்குள் மின்-வணிகத்தின் வர்த்தகம் ரூ.8.2 லட்சம் கோடியாக விரிவடைய இருக்கிறது. இது செயற்கை நுண்ணறிவு நிபுணர்களின் வேலைவாய்ப்புகளை விரிவாக்கும். வேலைச்சந்தை நிலையில்லாமல் தத்தளித்துக்கொண்டிருந்தாலும், 2021-ஆம் ஆண்டில் வேலைவாய்ப்புகளை அள்ளித் தரும் வேலைகளாக இவை ஐந்தும் இருக்கும் என்பதை மட்டும் உறுதியாக கூற முடியும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT