இளைஞர்மணி

டெலிகிராம் செயலியில் புதிய சேவைகள்!

11th Aug 2020 06:00 AM | அ.சர்ஃப்ராஸ்

ADVERTISEMENT

 

வாட்ஸ் ஆப்பிற்கு மாற்று செயலியாக டெலிகிராம் உள்ளது. தகவல் பரிமாற்றம் செய்யும் டெலிகிராம் செயலி  2013-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டாலும், 2009-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வாட்ஸ் ஆப் செயலியை முந்த முடியவில்லை.

டெலிகிராமை விட வாட்ஸ் ஆப்பைதான் உலகில் அதிகமானோர் பயன்படுத்துகின்றனர்.

காரணம்,  டெலிகிராம் தொடங்குவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே வாட்ஸ் ஆப் தொடங்கப்பட்டதால் வாடிக்கையாளர்களை வசப்படுத்தி வைத்துள்ளது.

ADVERTISEMENT

எனினும், ரஷிய நாட்டில் உருவாக்கப்பட்ட  செயலியான டெலிகிராமில் வாட்ஸ் ஆப்பைக் காட்டிலும் பல புதிய சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

தற்போது 2 ஜிபி வரையிலான பைல்கள், விடியோக்கள் ஆகியவற்றை பகிரும் வகையில் டெலிகிராம் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், வாட்ஸ் ஆப்பில் 16 எம்பி வரையிலான விடியோக்களும், 100 எம்பி வரையிலான பைல்களும் மட்டுமே பகிர முடியும்.

டெலிகிராம் தொடங்கப்பட்ட ஒரு வருடத்திலேயே 1.5 ஜிபி வரையிலான பைல்களை பகிரும் வகையில் மேற்படுத்தப்பட்டது. இது வாட்ஸ் ஆப்பின் 16 ஜிபியைவிட 93 மடங்கு அதிகம்.

மேலும், டெலிகிராம் பயன்பாட்டாளர்கள் விடியோக்களை தங்களின் புரோபைலாக வைத்து கொள்ளலாம்.  "சாப்டன் ஸ்கின்" எனும் புதிய சேவையையும் டெலிகிராம் அறிமுகம் செய்துள்ளது. டெலிகிராம் செயலி மூலம் எடுக்கப்படும் புகைப்படங்களில் உள்ளவர்களை மேலும் அழகாக காட்டும் திறன்படைத்தது.

அதேபோல், விடியோக்களை எடுத்து எடிட் செய்யும் வசதியும் இதில் உண்டு.
மேலும், நமக்கு வெளியில் இருந்து பகிரப்படுவது புகைப்படமா, விடியோவா என டெலிகிராமுக்கு உள்ளே செல்லாமலேயே செல்லிடப்பேசியின் பிரதான திரையிலேயே தெரிந்து கொள்ளலாம்.

நமது நண்பர்கள், உறவினர்கள் நமக்கு அருகில் எத்தனை தூரத்தில் இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள "ஹவ் பார் அவே" எனும் சேவையும் டெலிகிராமில் உள்ளது. இதை செயல்படுத்த "கான்டாக்ட்"ஸில் சென்று "பைன்ட் பீப்பில் நியர் பை" என்பதை தேர்வு செய்து "மேக் மைசெல்ஃப் விசிபில்" என்பதை கிளிக் செய்தால் போதும்.

வாட்ஸ் ஆப்பைப்போல் குழு நண்பர்கள் எண்ணிக்கையில் கட்டுப்பாடு கிடையாது. எத்தனை பேர் வேண்டுமானாலும் இடம் பெறலாம். அவர்களின் செயல்பாடுகளை "குரூப் ஸ்டாட்ஸ்" எனும் புதிய சேவை மூலம் குழுவின் தலைவர் எளிதில் தெரிந்து கொள்ளலாம்.

புகைப்படங்கள், விடியோக்களுக்கு ஏற்ப பாட்டுகளைச் சாட்டில் பகிரும் சேவையும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், கணினியில் பயன்படுத்தப்படும் டெலிகிராமில் ஒரே நேரத்தில் மூன்று கணக்குகளைப் பயன்படுத்தலாம்.

அதுமட்டுமின்றி, டெலிகிராமில் பகிரப்படும் தகவல்கள் "கிளவுட்" எனப்படும் தனி இயங்குதளத்தில் சேமிக்கப்படுவதால் எப்போது வேண்டுமானாலும் பழைய தகவல்களை எடுத்து பார்க்கலாம்.

இதுபோன்ற பல்வேறு புதிய சேவைகளைக் கொண்ட டெலிகிராம் செயலியைதேவைக்கு ஏற்ப பயன்படுத்தினால்  பாதுகாப்பானதாக அமையும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT