இளைஞர்மணி

உணவு குறித்த தகவல்தளம்!

11th Aug 2020 06:00 AM | - மு. சுப்பிரமணி 

ADVERTISEMENT

 

உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் பல்வேறு வகையான உணவுப் பழக்க வழக்கங்கள் இருக்கின்றன. இந்த உணவுப் பழக்கம் மனிதர்களிடையே எப்போது தொடங்கியிருக்கும்? பண்டைய ரோமானியர்கள் தங்கள் படைவீரர்களுக்கு எப்படி உணவளித்திருப்பார்கள்? உருளைக்கிழங்கு சிப்ûஸ யார் கண்டுபிடித்தார்கள்? ஐஸ் கிரீமை எப்போதிருந்து உண்கிறார்கள்? இந்த உலகில் என்ன வகை உணவெல்லாம் இருக்கிறது? இந்த உணவுகளையெல்லாம் யார் கண்டுபிடித்தார்கள்? என்று உணவு பற்றிப் பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். 

இந்த உணவு வகைகள் எல்லாம் எவராலும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவையெல்லாம் இடத்திற்கேற்ப, தேவைக்கேற்ப உருவானவைதான். அதன் காலவரையறையை கண்டறிவதுதான் கடினம் என்றுதான் உணவுத்துறை வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். இருப்பினும், மனிதனின் உணவுப் பழக்கத்தின் காலம், உணவுகள் போன்ற பட்டியலைக் கொண்ட கால அட்ட வணையை http://www.foodtimeline.org/ என்ற  இணையதளம் அளிக்கிறது.

இந்த இணையதளத்தில் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு, அதாவது கி.மு 17,0000 - இல் தொடங்கி கி.பி.2010 ஆம் ஆண்டு வரை பல்வேறு காலகட்டங்கள் அளிக்கப்பட்டு ஒவ்வொரு காலத்திலும் தொடங்கிய உணவுப் பொருள்கள், அதற்கான உணவு வகைகள் போன்றவை குறித்த குறிப்புகளும் அளிக்கப்பட்டுள்ளன. இந்தக் குறிப்புகளில் கொடுக்கப்பட்டுள்ள உணவுப்பொருள் மற்றும் காலத்தில் சொடுக்கினால், அந்த உணவு குறித்த முழுத் தகவல்களையும் தெரிந்து கொள்ள முடிகிறது.

ADVERTISEMENT

உதாரணமாக,  ஊறுகாயைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பினால்,  இந்தத் தளத்திற்குச் சென்று Pickles என்ற பிரிவில் தேட வேண்டும். 

ஊறுகாய் என்றால் என்ன? என்ற கேள்விக்கு விடை அளிப்பதில் தொடங்கி, மனிதகுலம் எப்போது உணவு வகைகளை உப்பு சேர்த்துப் பதப்படுத்தி பாதுகாக்கத் தொடங்கியது என்கிற தகவலைக் கூறுகிறது. பண்டைய எகிப்திய காலகட்டத்தில் இந்தப் பழக்கம் இருந்திருக்கிறது என்ற தகவல் மற்றும் பலவகையான ஊறுகாய் வகைகள் பற்றிய தகவல்களும் இதில் தரப்பட்டுள்ளன. 

சிந்து சமவெளி நாகரிக காலத்தில் வெள்ளரிக்காய் ஊறுகாய் பயன்படுத்தப்பட்டதற்கான அகழ்வராய்ச்சி சான்றாதாரம் நியூயார்க்கில் உள்ள நியூயார்க் ஃபுட் மியூசியத்தில் உள்ளது என்ற தகவலையும் தெரிந்து கொள்ள முடிகிறது. 

கிறிஸ்டோபர் கொலம்பஸ் 15- ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் ஊறுகாயை அறிமுகப்படுத்தியது;  வடக்கு ஐரோப்பிய பகுதிகளில் 19 -ஆம்  நூற்றாண்டில் வெந்தய ஊறுகாய் பயன்படுத்தப்பட்டது பற்றி எல்லாம்  தெரிந்து கொள்ள முடிகிறது.

இவ்வாறு பல்வேறு உணவுவகைகள் குறித்த பல்வேறு சுவையான தகவல்களைக் கொண்டிருக்கும் இந்தத் தளத்தின் மூலம் மக்களின் உணவுப் பழக்கம் எவ்வாறு மாறிவந்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது.  ஒரு பகுதியில் உள்ள ஓர் உணவு இன்னொரு பகுதியில் என்ன மாற்றங்களை அடைந்துள்ளது என்பதையும் தெரிந்து கொள்ள முடிகிறது. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT