இளைஞர்மணி

மிச்சமெல்லாம்  உச்சம் தொடு - 63: நம் உடலில் இருக்கிறது... நோய் எதிர்ப்பு மருந்து!

7th Apr 2020 06:53 PM | விஞ்ஞானி வெ. பொன்ராஜ்

ADVERTISEMENT

 

எப்போது வெளியில் இருந்து ஒரு வைரஸ் நம் உடம்பில் உள்ள செல்களில் புகுந்து விட்டதோ, அப்போது நமது உடம்பில் வைரஸ் நுழைந்த செல் இன்டர்ஃபெரான்கள் என்ற சமிக்ஞை புரதங்களை வெளியிடும். இந்த இன்டர்ஃபெரான்கள் அருகில் உள்ள செல்களுக்கு, "என்னிடம் இப்படிப்பட்ட தன்மை கொண்ட ஒரு வைரஸ் புகுந்து விட்டது

அதற்கேற்ப நோய் எதிர்ப்பு ஆன்டிபாடிகளை நீங்கள் உருவாக்கி உங்களை பாதுகாத்து கொள்ளுங்கள்' என்று எச்சரிக்கை செய்யும். இதற்கு நாம் 3 விடயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது புரோட்டின்கள், வெள்ளை அணுக்கள், பிளாஸ்மாக்கள் எப்படி நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றன என்பதை பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

இன்டர்ஃபெரான்கள் (IFNs) சைட்டோகைன்கள் எனப்படும் பெரிய வகை புரதங்
களைச் சேர்ந்தவை. இந்த சைட்டோகைன் மூலக்கூறுகள் உயிரணுக்களுக்கு இடையேயான தகவல் தொடர்புக்கு பயன்படுத்தப்பட்டு, நோயெதிர்ப்பு மண்டலத்தின் பாதுகாப்பு அமைப்பின் நோய் பாதுகாப்புத் தன்மையைத் தூண்டி நோய்கிருமியை மற்ற உயிரணுக்களுக்குள் பரவாவண்ணம் தடுக்கவும்

ADVERTISEMENT

உதவும். வைரஸ் தொற்றுநோய்களிலிருந்து உயிரணுக்களைப் பாதுகாப்பதன் மூலம் வைரஸ் பல்கிப் பெருகாத வண்ணம் செல் என்ற உயிரணுக்குள் புகாதவாறு தடுக்கும் தன்மைகளை உடையதனால் இதை இன்டர்ஃபெரான்கள் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

இன்டர்ஃபெரான்களுக்கும் வேறு பல செயல்பாடுகள் உள்ளன: அவை இயற்கைக் கொலையாளி செல்கள் மற்றும் மேக்ரோபேஜ்கள் போன்ற நோயெதிர்ப்பு உயிரணுக்களைத் தூண்டி செயல்பட வைக்கிறது. முக்கிய ஹிஸ்டோகாம்பாட்டிபிலிட்டி காம்ப்ளக்ஸ் (MHC - Major Histo Compatibility Complex) ஆன்டிஜென்களின் வெளிப்பாட்டை அதிகரிப்பதன் மூலம் அவை ஆன்டிஜென்கள் இருப்பை கட்டுப்படுத்தி நமது உடம்பின்உயிரணுக்களை வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் தன்மையை அதிகரிக்கின்றன.

இந்த செயல் உடலில் நடக்கும் போது,

அதாவது வைரஸ் எதிர்ப்பு இன்டர்ஃபெரான்களை மற்றும் சைட்டோகைன்களை உயிரணுக்கள் வெளியிட்டு ஒவ்வொரு செல்லையும் நோய் எதிர்ப்புக்குத் தூண்டிவிடுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் வேலை செய்யும் போது தான் நமக்கு காய்ச்சல், தசை வலி மற்றும் "காய்ச்சல் போன்ற அறிகுறிகள்' போன்ற தொற்றுநோய்களின் சில அறிகுறிகளும் ஏற்படுகின்றன. இந்த காய்ச்சலைக் கட்டுப்படுத்தினால் நோய் எதிர்ப்பு வல்லமையை நாம் இழந்து விடுவோம். எனவே காய்ச்சல் வந்தவுடன் மருந்து கொடுத்து காய்ச்சலை நாம் கட்டுப்படுத்தக்கூடாது. பட்டினி கிடந்து நன்றாகத் தூங்கினால், திரவ உணவை மட்டும் உட்கொண்டால், நம் உடம்பே நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கி அந்த நோய்க் கிருமியை அழித்து விடும். 2 அல்லது 3 நாட்கள் தொடர்ந்து காய்ச்சல் விடாமல் இருக்கிறது என்றால் மட்டுமே மருத்துவரிடம் சென்று எதனால் காய்ச்சல் வந்திருக்கிறது என்று ரத்த பரிசோதனை மூலம் கண்டறிந்து, அதற்கேற்ப மருந்துகளை நாம் உட்கொண்டால் தான் அந்த நோயைக் கட்டுப்படுத்த முடியும். நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் மருத்துவர்கள், அதற்கேற்ற மருந்துகளை உங்களுக்கு கொடுத்து அந்த நோய்த் தொற்றுக்கு எதிராகச் செயல்பட வைத்து நோயை அழிப்பார்கள்.

மனிதர்கள் உட்பட விலங்குகளில் இருபதுக்கும் மேற்பட்ட தனித்துவமான இன்டர்பெரான் (IFN) மரபணுக்கள் மற்றும் புரதங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை பொதுவாக மூன்று வகுப்புகளாகப் பிரிக்கப்படுகின்றன: வகை I-IFN, வகை II-IFN மற்றும் வகை III-IFN. வைரஸ் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுவதற்கும் நோயெதிர்ப்பு மண்டலத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் மூன்று வகுப்புகளையும் சேர்ந்த IFN கள் இருக்கின்றன.

சமுதாயத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்ப்பதுதான் தொற்று நோயை முற்றிலும் ஒழிப்பதற்கு வழியாகும். நோய் தொற்று வைரஸýக்கு எதிராக உடலின் முதல் வரிசை பாதுகாப்பு கவசம் இம்யூனோகுளோபுலின்-எம் (Immunoglobulin-M) எனப்படும் பிறபொருளெதிரிகள் (ஆன்டிபாடி - Antibodies) ஆகும்.

இவற்றின் வேலை உடலில் விழிப்புடன் இருப்பது, வைரஸ் மற்றும் பாக்டீரியா போன்ற வெளியில் இருந்து ஊடுருவும் கிருமிகளுக்கு எதிராக நோயெதிர்ப்பு மண்டலத்தை எச்சரித்து அதற்கு எதிராக ஆன்டிபாடிஸ் உற்பத்தி செய்யத் தூண்டுவது ஆகும். நோய்த்தொற்று ஏற்பட்டு சில நாட்களுக்குப் பிறகு, நமது உடலில் இருக்கும் (Immune System) நோயெதிர்ப்பு அமைப்பு இந்த (Immunoglobulin-M) எனப்படும் பிற பொருளெதிரி ஆன்டிபாடி (Antibody) யை இரண்டாவது வகையாக மாற்றியமைத்து, இது இம்யூனோகுளோபுலின்-ஜி (Immunoglobulin G) என உருவெடுக்கிறது. எந்த வைரஸ் உடம்பில் நுழைகிறதோ, அந்த குறிப்பிட்ட வைரûஸ அடையாளம் கண்டு அதை அழித்து ஒழிக்கும் வகையில் நேர்த்தியாக நமது உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த நோய் எதிர்ப்பு சக்தியைசுத்திகரித்து மாற்றியமைப்பதற்கு ஒரு வாரம் வரை ஆகலாம். இளைஞர்களும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பவர்களும், நோய்த்தொற்றுக்கு சக்திவாய்ந்த ஆன்டிபாடிகளை உருவாக்குகிறார்கள். வயதானவர்கள், நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் சக்தி குறைந்த லேசான ஆன்டிபாடிகளை உருவாக்குகிறார்கள்.

நோய் எதிர்ப்பு சக்தியின் காலம்: சில வைரஸ்கள் - போலியோ அல்லது அம்மை நோய்த்தொற்றுக்கு எதிரான வகையில் உருவாக்கப்படும் ஆன்டிபாடிகள், நோய் எதிர்ப்பு சக்தியை வாழ்நாள் முழுவதும் வழங்குகின்றன. SARS 2003 தொற்றுநோயிலிருந்து மீண்ட பெரும்
பாலான மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி 8 முதல் 10 ஆண்டுகள் வரை நீடித்தது. மெர்ஸ் (MERS) வைரஸில் இருந்து மீண்டவர்களுக்கு மிகக் குறுகிய காலத்திற்குதான் நோய் எதிர்ப்பு சக்தி இருந்தது. புதிய கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களுக்கு குறைந்தது ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் வரை நோய் எதிர்ப்பு சக்தி இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கணித்திருக்கிறார்கள்.

கரோனா நோய் எதிர்ப்பு சக்தியை மதிப்பிடுவதற்கான விரைவான வழி, மீண்ட நபர்களின் இரத்தத்தில் இருந்து பாதுகாப்பு ஆன்டிபாடிகளை அளவிடும் இரத்த பரிசோதனை ஆகும். கடந்த வாரம், டாக்டர் மரியன் கூப்மன்ஸ் (ரோட்டர்டாமில் உள்ள ஈராஸ்மஸ் பல்கலைக்கழகத்தின் வைராலஜிஸ்ட்) அவரது சகாக்கள் இதுபோன்ற ஓர் ஆன்டிபாடி பரிசோதனையை உருவாக்கினர், COVID-19 உள்ள மூன்று நோயாளிகளிடமிருந்து எடுக்கப்பட்ட இரத்த பிளாஸ்மாவில் உள்ள பரிசோதனையை இந்த குழு சரிபார்த்து, FDA Cu இன் விரைவான ஒப்புதலைப் பெறுவதற்கு முயற்சி மேற்கொண்டிருக்கிறது.
மார்ச் 2020 - இன் கடைசி வாரத்தில்,
இங்கிலாந்தின் பொது சுகாதார அதிகாரிகள் புதிதாக உருவாக்கிய மில்லியன் கணக்கான ஆன்டிபாடி சோதனைக் கருவிகளை வாங்கியுள்ளதாகவும், நோயாளிகள் வீட்டில் அதைப் பயன்படுத்தி நோயை மதிப்பீடு செய்வதாகவும் தெரிவித்தனர்.
சீனாவின் கரோனோ நோய் தொற்று தடுப்பில் பெற்ற வெற்றியின் ஆரம்ப அறிக்கைகளைத் தொடர்ந்து, உலகத்தில் பல மருத்துவ ஆராய்ச்சி அணிகள் ஏற்கெனவே அத்தகைய முயற்சியில் ஈடுபட்டுள்ளன. பெய்ஜிங்கை
தளமாகக் கொண்ட அனிகோ டெக்னாலஜி நிறுவனம் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான சீன மையத்திற்கும், வுஹான், பெய்ஜிங் மற்றும் ஷாங்காயில் உள்ள மருத்துவமனைகளுக்கும் 50,000 கரோனா சோதனைகளைச் செய்திருக்கிறது என்று அதன் நிறுவனர் டாக்டர் லு சன் தெரிவித்துள்ளார்.
கடுமையான நோய்வாய்ப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க, கரோனா தொற்றிலிருந்து மீட்கப்பட்ட நோயாளிகளிடமிருந்து எடுத்த இரத்தத்தில் இருந்து எடுக்கப்பட்ட பிளாஸ்மாவைப் பயன்படுத்த 2020 மார்ச் 24அன்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (யு.எஸ். எஃப்.டி.ஏ) ஒப்புதல் அளித்திருக்கிறது.
இந்த அணுகுமுறை உண்மையில் "மிகவும் பழமையான ஒன்று' என்று கிராமர் என்றஅறிஞர் கூறினார். கொரியப் போரின்போது ஹன்டான் வைரஸால் பாதிக்கப்பட்ட அமெரிக்க வீரர்களைக் காப்பாற்றவும், அர்ஜென்டினாவில் ஜூனின் வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சையளிக்கவும் இந்த முறை பயன்படுத்தப்பட்டது.
இருப்பினும், இந்த முறை பரவலான பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பு, நோயிலிருந்து மீண்டு வந்தவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட பிளாஸ்மா, மற்ற வைரஸ்கள் மற்றும் நச்சுகள் இல்லாதது என்பதை உறுதிப்படுத்துவது மிகவும் முக்கியம். இறுதியில், இந்த சோதனைகள் மூலம் விஞ்ஞானிகள் மக்கள் தொகையில் போதுமான அளவு கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தியால் மீண்டெழும்போதுதான் கரோனா வைரஸ் நோய் தாக்கப்பட்ட மக்களிடம் இருந்து வெளியேறிவிட்டது என்று நாம் உறுதியாக சொல்லமுடியும்.
27 மார்ச் 2020 - இல், வெளியிடப்பட்ட ANI-Cu அறிக்கையின்படி, இந்தியாவில் புற்றுநோயியல் நிபுணர் விஷால் ராவ் தலைமையில் பெங்களூரு இக்ரெஸ்ட் ஸ்டெம் செல் ஆய்வகமும், என்.சி.ஜி புற்றுநோய் மையமும் இணைந்து, நோயெதிர்ப்பு உயிரணுக்கள் மூலம் COVID-19 க்கான சிகிச்சைக்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதாவது, வழக்கமான சோதனைகளுக்கான இரத்தம் மையவிலக்கு (Centrifuge) செய்யப்படும் போது மொத்த இரத்தத்தில் 55 சதவிகிதம் பிளாஸ்மா மேலே உருவாகும் 45 சதவிகிதம் சிவப்பு அணுக்கள் கீழே உருவாகும். இவை இரண்டிற்கும் இடையில் உருவாகும் பஃபி கோட் <1% வெள்ளை அணுக்களும், பிளேட்லெட்ஸýம் உருவாகும். இந்த பஃபி கோட்டில் இருந்து குறிப்பாக இன்டர்ஃபெரான் காமாக்களை உருவாக்க முடியுமா என்று டாக்டர் குருராஜ் மற்றும் ஜோத்ஸனா ஆகியோர் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். வைரஸால் பாதிக்கப்படும் நமது உடல் வெளியிலும் செல்களில் இருந்து இந்த இரண்டு இரசாயனங்கள் மற்றும் பிற சைட்டோகைன்கள் மூலம் இன்டெர்ஃபெரான்களை உருவாக்கி அதன் மூலம் நோய் எதிர்ப்புக்குரிய ஆன்டிபாடிகளை உருவாக்கி COVID-19க்கு சிகிச்சையளிக்க முடியுமா என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஆக உலகத்தில் பல ஆராய்ச்சி மையங்களில் கிருமி நோய் தொற்றுக்கு இப்படிப்பட்ட முறைகளில் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. கரோனா கிருமியால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் உடல்களில் இருந்து சேகரிக்கப்பட்ட ஆன்டிபாடிகள் கரோனா வைரஸால் ஏற்படும் நோயுடன் போராடுபவர்களுக்கு உதவ பயன்படுத்தப்படலாம்.
"கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்து தடுப்பூசி கிடைக்கும் வரை மருத்துவப் பணியாளர்களுக்கு உதவலாம். கடுமையாக நோய்வாய்ப்பட்டவர்களை தொடர்ந்து கவனித்துக்கொள்ளலாம்' என்கிறார்கள் மருத்துவர்கள். சிலருக்கு மீண்டும் இந்த அறிகுறிகள் காணப்பட்டாலும், அவர்களைக் குணப்படுத்தபட முடியும் என்பதுதான் மருத்துவர்களின், விஞ்ஞானிகளின் கருத்தாக இருக்கிறது. கரோனா நோய் தொற்று ஏற்பட்டு குணமானவர்கள், கரோனா நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் சாதாரண வாழ்க்கைக்கு திரும்பமுடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

40 ஆண்டுகளாக, கியூபா இன்டர்ஃபெரான் ஆல்பா 2பி என்ற மூலக்கூறைப் பயன்படுத்துகிறது. கியூபாவில் இன்டர்ஃபெரானின் வெவ்வேறு மரபணுக்களை குளோன் செய்து 1981-1982 -ஆம் ஆண்டுகளில் இன்டர்ஃபெரான் தயாரிக்கத் தொடங்கி அவை டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுப்பதற்கு கொடுத்தார்கள். Interferon Alfa 2-B மருந்தை உருவாக்கிய கியூபா மருத்துவர் லூயிஸ் ஹெர்ரெராவின் கூற்றுப்படி இந்த மூலக்கூறு பல்வேறு நோயின் நிலைகளுக்கு எதிராக வெவ்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இது அனைத்து வகையான ரத்த புற்றுநோய், டெங்கு, ஹெப்பாடைட்டிஸ் அ & ஆ க்காக பயன்படுத்தப்படுகிறது. இது சீனாவிலும் பிற இடங்களிலும் புதிய கரோனா வைரûஸ எதிர்த்துப் போராட வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

மனித உயிரணுக்களில் இயற்கையாக உற்பத்தி செய்யப்படும் இன்டர்ஃபெரான் அளவு குறைவதின் மூலம் உயிரணுக்களுக்குள் வைரஸ் பல்கி பெருகக் கூடிய வாய்ப்பு ஏற்படுகிறது. அதை இந்த இன்டர்பெரான்களை மருந்துகளாக செலுத்துவதின் மூலம் மூலக்கூறு வேறுபட்ட வளர்சிதை மாற்ற வழி பிறந்து வைரஸின் இனப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. சீனாவில், கரோனா தாக்கம் தொடங்கிய சில வாரங்களுக்குப் பிறகு, வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக மக்கள் இன்டர்ஃபெரான் பயன்படுத்தத் தொடங்கினர். ஹெர்ரெராவின் கூற்றுப்படி, இந்த மூலக்கூறு "சில பக்க விளைவுகளைக் கொண்டிருக்கிறது என்றாலும் அது மிகவும் சிக்கலானது அல்ல, அது சமாளிக்கக்கூடியது தான் என்கிறார்.

இன்றைக்கு உலகத்தில் குறிப்பாக கரோனா நோய் அழிப்பு மருந்துகள் என்று எதுவும் இல்லை. மற்ற வைரல் நோய் தடுப்பு மற்றும் அழிப்பு மருந்துகளை வைத்து தான், இப்போது சிகிச்சை அளிக்கிறார்கள்.

வெளிநாட்டில் அலோபதி மருந்து கண்டுபிடிக்கும் முறைகளுக்கான ஓர் அறிவியல் சார்ந்த வரைமுறை (Scientific Protocol) உருவாக்கப்பட்டு, அதற்கு ஆயிரக்கணக்கான கோடிகளை முதலீடு செய்து மருந்துகளை உருவாக்கி, அனைத்து மருந்துகளிலும் பக்க விளைவுகள் இருந்தாலும், அது அனைவருக்கும் ஒரே மாதிரியாக செயல்படுகிற நிலையில், உலகமுழுவதும் அந்த சிகிச்சை முறை ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது, எப்படி கியூபாவின் nterferon Alpha 2B, டெங்கு ஒழிப்பிற்கு வெளிநாட்டில் பயன்பட்டதோ, எப்படி chloroquine மற்றும் hydroxychlorquine மருந்துகள் மலேரியா ஒழிப்பிற்கு பயன்பட்டதோ அதே போல் தான் இந்தியாவில் சித்த மருத்துவத்தில் நிலவேம்பு கசாயம், கப மற்றும் வாத சூர குடிநீர், ஹோமியோபதியில் - ஆர்சனிக் ஆல்பம் 30, ஆயுர்வேதத்தில் - இந்து காந்தம் கஷாயம்,

அஸ்வகந்தா சூரணம், தஸமூலாரிஷ்டம் போன்ற மருந்துகளை காலங்காலமாக அனைத்து நோய் எதிர்ப்பு சக்திகளுக்கு பயன்படுத்தி கொண்டு வருகிறார்கள். சித்த மருத்துவத்தில் நிலவேம்பு கசாயமும், ஆயுர்வேதத்தில் சில மருந்துகளும் அறிவியல் சார்ந்த முறையில் அலோபதி மருந்துகளை போன்று உருவாக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இந்த மருந்துகளை வைத்து தான் டெங்கு, சிக்கன் குனியா போன்ற கிருமி நோய் தொற்றுக்கு சிகிச்சை அளித்து குணப்படுத்தியிருக்கிறார்கள்.

பின் ஏன் நாட்டு மருந்துகள் அலோபதி மருந்துகள் அளவிற்கு பரவலான நம்பிக்கை தன்மை பெறவில்லை, அரசியலா? அறிவியலா? வர்த்தகமா? நம் நாட்டின் முன் உள்ள சவால் என்ன, தொடர்ந்து பார்ப்போம்.

உங்கள் கனவுகளை, இலட்சியங்களை பகிர்ந்து கொள்ள தொடர்பு கொள்ளுங்கள்:

vponraj@live.com

(தொடரும்)

ADVERTISEMENT
ADVERTISEMENT