இளைஞர்மணி

பொருள் இயைபியலின் தந்தை 

7th Apr 2020 06:24 PM | மு.கலியபெருமாள்

ADVERTISEMENT

 

சென்ற இதழ் தொடர்ச்சி...

முன் இதழில் சொல்லப்பட்ட இரு எடுத்துக்காட்டுகளில் குறிப்பிட்ட மாற்றம் ஒரு நிலை மாற்றம் அல்லது ஒரே மாற்றமாகும். அதாவது இரண்டு பொருள்களும் நீர்ம நிலையிலிருந்து வளி நிலைக்கு மாறின. இந்த முறையை அவர் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் பல பகுதிப் பொருள்களுக்குக் (Components) கையாண்டார். இதையே மேலும் விரிவுபடுத்தி, ஒன்றுக்கொன்று கலந்து கொள்ளும் இயல்புடைய பல பகுதிப் பொருள்களுக்குப் பயன்படுத்தும்போது அவர் கண்ட சமன்பாடுகள் இயைபியல் இயக்கத்தையும் (Chemical reaction) அவற் றின் சம நிலையையும் (Equalibrium) விளக்குகின்றன.

இந்த ஆராய்ச்சிகளிலிருந்து தான் கிப்சின் புகழ்பெற்ற நிலை விதி (Gibb’s Phase Rule) உருவாகியது. இந்த விதியை முழுவதும் எழுதி முடிப்பதற்கு அவர் நான்கு பக்கங்களே செலவு செய்தார். அதில் அவர் எந்த எடுத்துக்காட்டுகளும் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் கிப்சின் விதி வெளிவந்த அடுத்த 50 ஆண்டுகளில் அதைப்பற்றி மற்ற அறிவியல் புலவர்கள் நூல்களும் தனிக்கட்டுரைகளுமாக சேர்ந்து மொத்தமாக 11 ஆயிரம் பக்கங்கள் எழுதினார்கள். அந்த 11 (ஆயிரம் பக்கங்களில் கிப்சு நிலை விதியைக் கனிப்பொருள் ஆராய்ச்சி (Mineralogy), பாறையியல் (Petrology), உடற்கூறு, பொன்னியல் (Metallurgy) போன்று இன்னும் மற்ற அறிவியல் துறைகளிலும் எப்படிப் பயன்படுத்தலாம் என்பதைப் பற்றி எழுதியிருந்தார்கள். கிப்சின் நிலை விதி, திடம், நீர்மம் ஆவி போன்ற வெவ்வேறு நிலைகளிலுள்ள பல கூட்டுப் பொருள்கள் சமநிலையில் இருப்பதற்கான வரையறைகளை விளக்கிக் கூறுகிறது.

ADVERTISEMENT

கிப்சு அமைதியான குணம் உடையவர். குழந்தைகளிடத்தில் அன்போடும் பெருந்தன்மையோடும் நடந்துகொள்வார். எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார். அவருடைய ஆராய்ச்சியே அவரது வாழ்வின் குறிக்கோள். அவருடைய ஆராய்ச்சியின் பெருமையும் சிறப்பும் அவருக்கு நன்கு தெரியும். அதுவே அவரது மகிழ்ச்சிக்குக் காரணம். மெல்லிய உடம்பும், நடுத்தர உயரமும், உறுதியான உள்ளமும் கொண்டவர். அப்போதைய நாகரிகம் (Fashion) என்று கருதப்பட்ட அழகான தாடியை வைத்திருந்தார். உரத்தும் பண்பமைதியும் கொண்ட குரலில் அவர்பேசுவார். அறிவொளி சுடர்விடும் கண்களை உடைய அவர் வேடிக்கைப் பேச்சிலும் வல்லவராயிருந்தார். ஆனால்அவருடைய வேலைக்குத் தொடர்பில்லாத மற்றவர்களிடம் நெருங்கிப் பழகும் பழக்கும் அவரிடத்தில் இல்லை. அன்பும் அடக்கமுமாகிய உயர்ந்த பண்புகள் அவரிடத்தில் அடைக்கலம் புகுந்திருந்தன.

கிப்சு தம்முடைய வாழ்நாட்களில்20 தனி ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். அந்தக் கட்டுரைகளை எல்லாம் உலகத்தின் 27 நாடுகளிலுள்ள 507 தலைசிறந்த அறிவியல் புலவர்களுக்கு அனுப்பி வந்தார். அந்தப் பட்டியலிலுற்றவர்களில் ஒருவர்தான் முன்பு குறிப்பிட்ட இங்கிலாந்தின் கிளார்க் மாக்சுவெல். அதனால் தான் மாக்சுவெல்லும் அந்தக் கூட்டத்தில்கிப்சைப் பற்றி அவ்வளவு சிறப்பாகப்பேச முடிந்தது.

இப்படி அறிவுச் சிறப்பும் அன்பும் நிறைந்த கிப்சின் இறுதிக் காலம் மிகவும் துன்பம் நிறைந்ததாக இருந்தது. அவர் உயிருக்கு உயிராக நேசித்த அவருடைய தங்கை அவரைவிட்டு மறைந்து போனார். இதற்கு மேலாக கதிர் வீச்சு (Radioactivity), புதிர்க்கதிர்கள் (X-rays) , மின்னணுவின் உண்மைத் தன்மை (Reality of electron), போன்ற பல புதிய புரட்சிகரமான கண்டுபிடிப்புகள் அவரது உள்ளத்தைப் பெரிதும் பாதித்தன. அவர் கண்ட உலகத்தில் இந்த எதிர்பாராத கண்டுபிடிப்புகள் எல்லாம்

எப்படிப் பொருந்தும் என்பது அவருக்குப் புரியவில்லை. அவர் மிகவும் சோர்வுற்ற நிலையில் இருந்தார். ""நான் இறப்பதற்கு இதுவே சரியான நேரம்'' என்று தம் மாணவர் ஒருவரிடம் சொன்னார். தனிமைஅவருடைய வாழ்க்கையை மேலும் மேலும் வெற்றிடமாக்கியது. அவர் வாழ்வதற்குரிய காரணம் எல்லாம் போய்விட்டதாக அவருக்குத் தோன்றியது.

கிப்சின் கவலைகள் தேவையற்றவைகளாகும். 19-ஆம் நூற்றாண்டில் வெளிவந்து வளர்ந்த எல்லாக் கொள்கைகளிலும் அவருடைய கொள்கையே சிறப்பான மாறுதல் எதவும் இல்லாமல் இருக்கிறது. கிப்சு 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 1903-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 28-ஆம் நாள் புகழுடல் அடைந்தார். கிப்சைப் போன்ற மிகப்பெரிய ஒரு கொள்கை நிலையான அறிவியற் புலவரை (Theoretical Scientist) அமெரிக்கா அவருக்கு முன்னும் பெற்றெடுத்ததில்லை. இதுவரை பெற்றெடுக்கவுமில்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT