இளைஞர்மணி

சரியான பார்வை... வழி... செயல்! - 92

7th Apr 2020 07:42 PM

ADVERTISEMENT


மருத்துவப் படிப்புகளில் இதுவரை துணை மருத்துவப் படிப்புகளைப் பற்றி பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக முதுநிலை மருத்துவப் பட்டயப் படிப்புகள் பற்றி இப்போது பார்ப்போம். வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் கீழ்க்காணும் முதுநிலை மருத்துவப் பட்டயப் படிப்புகள் உள்ளன.

Assisted Reproductive Technology, Cardiac Technology, Clinical Pastoral Counselling, Community Health Management, Cytogenetics, Dietetics, Genetic Diagnosis Tech, Health Economics, Policy & FinancialManagement, Histopathological Lab.
Technology, Hospital Administration, Medical Microbiology ஆகிய பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. மேலும் Fellowship in
Antimicrobial Stewardship for Clinical Pharmacists, Fellowship in Hospital
Chaplaincy ஆகிய படிப்புகளும் கற்றுத் தரப்படுகின்றன.

PG Dip in Assisted Reproductive Technology என்ற படிப்பில் குழந்தைப் பேறு இல்லாத தம்பதியினர் எவ்வாறு பல்வேறு மருத்துவ சிகிச்சைகளின் வாயிலாக அவர்களின் உடல்நிலையை மேம்படுத்தி, குழந்தைப் பேறு பெற வைப்பதற்கான மருத்துவத்தை இந்தப் படிப்பு கற்றுத் தருகிறது. குழந்தைப் பேறின்மைக்கான சிகிச்சை தொடர்பான பல நவீன தொழில்நுட்பங்களைக் கற்றுத் தருகிறது. ஒன்றரை ஆண்டு படிக்கக் கூடிய இந்தப் படிப்பைப் படிக்க, விலங்கியல், பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, மெடிகல் லெபாரட்டரி டெக்னாலஜி ஆகிய பிரிவுகளில் இளநிலைப் பட்டம் பெற்ற, 30 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒன்றரை ஆண்டு படிப்புடன் கூட ஆறு மாதம் செயல்முறைப் பயிற்சியும் இதற்கு உண்டு.

இதேபோன்று PG Dip in Cardiac Technology என்ற படிப்பு உள்ளது.  தற்போது இருதய சிகிச்சையில் உள்ள நவீன தொழில்நுட்பப் பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. உதாரணமாக எலக்ட்ரோ கார்டியோகிராபி, ட்ரெட்மில் ஸ்ட்ரெஸ் டெஸ்டிங், 24 மணி நேர இசிஜி மானிட்டரிங், கார்டியாக் கேத்தெட்ரிசேசன் லெபாரட்டரி டெக்னாலஜி, எலக்ட்ரோபிசியாலஜி ஆகிய நவீன தொழில்நுட்பப் பயிற்சிகளைச் சொல்லலாம்.

ADVERTISEMENT

இம்மருத்துவம் தொடர்பான அறிவையும், நடைமுறை செயல்முறைப் பயிற்சிகளையும் உடனுக்குடன் தருவது இப்படிப்பின் சிறப்பாகும். இந்தப் படிப்பை முடித்தவர்கள் தனியாக மருத்துவப் பணி செய்யலாம். அல்லது ஏதேனும் இருதய நல மருத்துவமனையில் தொழில்நுட்ப உதவியாளராகப் பணியாற்றலாம். இந்தப் படிப்பில் சேர இளங்கலைப் பட்டத்தில் ஆங்கிலம் மற்றும் ஏதேனும் அறிவியலை முதன்மைப் பாடமாக எடுத்துப் படித்தவர்கள் சேரலாம். இரண்டாண்டு படிப்புடன் ஓராண்டு செயல் முறைப் பயிற்சி இதன் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

PG Diploma in Community Health Management (PGDCHM) என்ற படிப்பு அப்ளைடு சோசியாலஜி, ஹெல்த் அண்ட் நியூட்ரிஷன், பெர்சனல் க்ரவுத் அண்ட் டெவலப்மென்ட், சமூக ஆராய்ச்சி முறைகள், பார்டிசிபேட்டரி பிளானிங் அண்ட் மேனேஜ்மென்ட், கம்யூனிடி மேனேஜ்மென்ட், ஆர்கனைசேஷனல் டெவலப்மெண்ட் அண்ட் கம்யூனிகேஷன் மேனேஜ்மென்ட் ஆகிய துறை சார்ந்த அறிவைக் கற்றுக் கொடுக்கிறது. நேரடியாக மக்களைச் சந்தித்து கள அனுபவங்களின் அடிப்படையில் மாணவர்கள் இது சார்ந்த அறிவைப் பெறுகிறார்கள். குழுப்பணி, கலந்துரையாடல்கள், களப்பணி, செய்முறைப் பயிற்சிகள், சொற்பொழிவுகள், செயல்முறைப் பயிற்சிகளின் வாயிலாக மாணவர்கள் சமூக நல மேலாண்மையைக் கற்றுக் கொள்கிறார்கள்.

இந்தப் படிப்பைப் படித்தவர்களுக்கு பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் நிர்வாகப் பணிகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. அரசு மற்றும் தேசிய, சர்வதேச நிதிநிறுவனங்களிலும் வேலை வாய்ப்புகள் உள்ளன. இந்தப் படிப்பு ஒருங்கிணைக்கப்பட்ட சுகாதாரம் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள், சுகாதார நிறுவனங்களின் திட்டமிடல் பிரிவுகள், மனித வளமேம்பாட்டுப் பிரிவு போன்ற துறைகளின் தலைமைப் பொறுப்புக்குத் தகுதியானவர்களை உருவாக்குகிறது. இந்தப் படிப்பில் சேர ஏதாவது இளங்கலைப் பட்டம் அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஓராண்டு காலம் இந்தப் படிப்பு சொல்லித் தரப்படுகிறது.

PG Diploma in Cytogenetics என்ற படிப்பில் சேர பயோ கெமிஸ்ட்ரி, பயோ டெக்னாலஜி, தாவரவியல், வேதியியல், மரபியல், மெடிகல் லெபாரட்டரி டெக்னாலஜி, மைக்ரோ பயாலஜி, விலங்கியல் ஆகிய பிரிவுகளில் இளங்கலைப் பட்டத்தில் முதல் வகுப்பில் தேறியவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இது குரோமோசோம்களைப் பற்றிய படிப்பாகும். மனித உடலில் உள்ள குரோமோசோம்களின் இயல்பான நிலையில் மாறுதல் ஏற்படும்போது, அது பல உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. உடல் ஊனம், மன, அறிவு வளர்ச்சிக் குறைபாடு, மகப்பேறின்மை, தொடர்ச்சியான கருச்சிதைவு, புற்றுநோய் உட்பட பல பாதிப்புகள் ஏற்படக் காரணமாகின்றது.

இந்தப் படிப்பு மைக்ரோஸ்கோப் மூலமாக குரோமோசோம்களின் நிலையைக் கண்டறிந்து கணினி மற்றும் மென்பொருள்களின் வாயிலாக குரோமோசோம்களைப் பற்றி ஆராயக் கற்றுத் தருகிறது. ரத்தம், எலும்பு மஜ்ஜை, திசுக்கள், கட்டிகள், தோல் ஆகியவற்றிலிருந்து குரோமோசோம்களை எடுத்து ஆராயக் கற்றுத் தருகிறது.

வேதியல், தாவரவியல், விலங்கியல், பயோகெமிஸ்ட்ரி, மைக்ரோபயாலஜி, பயோ டெக்னாலஜி அல்லது மெடிகல் லெபாரட்டரி டெக்னாலஜி ஆகிய துறைகளில் இளங்கலைப் பட்டத்தில் முதல் வகுப்பில் தேறியவர்கள் இந்தப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். இரண்டு ஆண்டுகள் இந்தப் படிப்பு சொல்லித் தப்படுகிறது.

PG Diploma in Dietetics என்ற படிப்பு உடல் ஆரோக்கியம் சார்ந்த உணவு மற்றும் சத்துகள் தொடர்பான படிப்பாகும். இந்தப் படிப்பு இந்தியன் டயடெட்டிக் அசோசியேஷனால் அங்கீகரிக்கப்பட்ட படிப்பாகும். இந்தப் படிப்பு படித்தவர்கள் சத்துணவியல் நிபுணராக மருத்துவமனைகள், பள்ளிகள், பன்னாட்டு நிறுவனங்கள், நட்சத்திர ஹோட்டல்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றில் பணிபுரியலாம்.

ஹோம் சயின்ஸ், நியூட்ரிஷன் அண்டு டயடெட்டிக்ஸில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் இந்தப் படிப்பில் சேரத் தகுதியுடையவர்கள். ஓராண்டு படிப்பும், ஆறுமாத செயல்முறைப் பயிற்சியும் வழங்கப்படுகிறது.

PG Diploma in Genetic Diagnosis Technology என்ற படிப்பு 2008 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதாகும்.
மாலிகுலர், செல் பயாலஜி ஆய்வுக் கூடங்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களைத் தெரிந்து கொள்ள விரும்பும் இளங்கலைப் பட்டதாரிகளுக்கான படிப்பாகும் இது. இரண்டாண்டு படிப்பான இதில் சேர விரும்புபவர்கள் தாவரவியல், விலங்கியல், பயோகெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, பயோ டெக்னாலஜி ஆகிய பிரிவுகளில் இளங்கலைப் பட்டத்தில் முதல் வகுப்பில் தேறியிருக்க வேண்டும்.

PG Diploma in Health Economics,Policy & Financial Management (HEPFM) என்ற படிப்பு மருத்துவத்துறை சார்ந்த நிதி மேலாண்மை, நிர்வாகம், மருத்துவமனை மேலாண்மை ஆகியவற்றில் ஆர்வமுடைய மருத்துவப் படிப்பு முடித்தவர்களுக்கு பயன்படும் படிப்பாகும்.

உலகமய சூழலில் உலக அளவிலான மருத்துவக் காப்பீடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. பொருளாதாரம் மற்றும் நிதி ஆகியவை உலக அளவில் மருத்துவமனைகளின் வளர்ச்சி, பொது மற்றும் தனியார்நிறுவனங்களின் வளர்ச்சி ஆகியவற்றில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பெரிய மருத்துவநிறுவனங்களுக்கு நிதி மற்றும் பொருளாதாரம் சார்ந்த பகுப்பாய்வுகள் செய்து, வளர்ச்சிக்குத் தேவையான ஆலோசனைகள் சொல்பவர்கள் தேவைப்படுகிறார்கள். பல மருத்துவ மனைகளுக்கு நிதி மேலாளர்கள் தேவைப்படுகின்றனர். இந்தப் படிப்பு படித்தவர்களுக்கு பெரிய மருத்துவமனைகளில் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.
இந்தப் படிப்பில் சேர ஏதேனும் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஓராண்டு பயில வேண்டும்.

மேலே குறிப்பிட்ட படிப்புகளைத் தவிர மேலும் பல முதுநிலை மருத்துவப் பட்டயப் படிப்புகள் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் கற்றுத் தரப்படுகின்றன.

எல்லாருக்கும் தெரிந்த பல படிப்புகளே நிறைய மாணவர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அவ்வாறு தேர்ந்தெடுப்பதனால், படித்து முடித்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிடுகிறது. இதனால் வேலை வாய்ப்புகளில் போட்டி அதிகமாகிறது.

மேலும், உலக அளவில் உள்ள வேலைவாய்ப்புகளைப் பெற எதைப் படிக்க வேண்டும் என்று தெரியாத நிலை மாணவர்களிடம் உள்ளது. பலரும் கேள்விப்பட்டிராத படிப்புகளைத் தேடிக்கண்டுபிடித்து படிக்கும் மாணவர்கள் வேலைவாய்ப்புகளை எளிதாகப் பெற்றுவிடுகிறார்கள். அரிதினும் அரிதாக உள்ள பல படிப்புகளைப் பற்றிய விவரங்களை மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் தெரியப்படுத்துவதே நமது நோக்கமாகும். அந்த நோக்கத்தின் அடிப்படையில் பலரும் அறியாத படிப்புகளைப் பற்றிப் பார்ப்போம்.

அத்தகைய படிப்புகளில் ஒன்றுதான் பாப்புலேஷன் சயின்ஸ் என்ற படிப்பாகும்.

(தொடரும்)

கட்டுரையாசிரியர் சமூக கல்வி ஆர்வலர் www.indiacollegefinder.org

ADVERTISEMENT
ADVERTISEMENT