இளைஞர்மணி

இலக்கியம் படிக்கலாம்...  இலக்கைப் பிடிக்கலாம்!

7th Apr 2020 06:05 PM | கே. பி. மாரிக்குமார்.    

ADVERTISEMENT

எனது கப்பலை எவ்வாறு செலுத்துவது என்பதை நான் கற்றுக்கொண்டிருப்பதால் புயல்களுக்கு நான் பயப்படவில்லை.

 - லூயிசா மே அல்காட்

ஏதாவது ஒரு பிராந்திய அல்லது ஆங்கில மொழியில் பட்டம் பெறுவது என்பது சுய விருப்பத்தின் அடிப்படையில் அரிதிலும் அரிதாக நடக்கின்ற நிகழ்வு. பன்னிரண்டாம் வகுப்பிற்குப் பிறகு இளங்கலை பட்டப்படிப்பிற்கான பிரிவுகளை தேர்ந்தெடுக்கின்ற காலகட்டங்களில் பி.ஏ., தமிழ் அல்லது ஆங்கில மொழிப் பிரிவுகளை தேர்ந்தெடுப்பவர்கள் பெரும்பாலும் வேறு எந்தப் பிரிவையும் தேர்ந்தெடுப்பதற்கு தகுதியற்றவர்களாகவும், பன்னிரண்டாம் வகுப்பின் இறுதி பொதுத் தேர்வில்  எடுத்த மதிப்பெண்கள் குறைவாகப் பெற்றவர்களாகவுமே இருப்பார்கள். இது நமது தமிழ்நாட்டின் நிலைமை. ஆனால், டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள வட மாநிலங்களில் பள்ளி இறுதித் தேர்வில் அதிகமான மதிப்பெண்களைப் பெற்றவர்களுக்கே ஆங்கில மொழியில் இளங்கலை படிப்பிற்கான இடங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது; கொடுக்கப்படுகிறது. 

ஆங்கில மொழியில் இளங்கலை பட்டமென்பதுகூட "ஆங்கில இலக்கியம்' என்ற பெயரிலேயே பெரும்பாலும் வழங்கப்படுகிறது. அதையும் கடந்து பி.ஏ., ஆங்கிலம், பி.ஏ., தமிழ் என்ற பெயரில் நடத்தப்படும் பட்டப்படிப்புகளிலும் அந்தந்த மொழிகளின் இலக்கியங்களே அதிகமாக பாடத்திட்டத்தில் இருக்கின்றன. பொதுவாக, பிரதானப் போட்டிகளில் பங்கெடுத்து முக்கியப் பிரிவுகள் என்று கருதப்படுகிற இளங்கலை பட்டப் படிப்புகளில் சேர்வதற்கு வாய்ப்புக் கிடைக்காத - "தேறாத'  - மாணவர்களால் நிரப்பப்படுகிற பட்டப் பிரிவுகளே இலக்கியம் என்கிற ஒரு பார்வையும் இங்குண்டு.  

ADVERTISEMENT

அப்படியென்றால், இலக்கியம் அவ்வளவு இழிவானதா? இலக்கும், இலட்சியமும் கொண்டவர்கள் இலக்கியம் படிக்கக்கூடாதா? என்கிற கேள்விகளை அடுக்கினால், அவையெல்லாம் அறியாமையில் பிறந்த கேள்விகள் என்றே நாம் விடை அளிக்க வேண்டியிருக்கும். 

சரி, இலக்கியம் என்றால் என்ன? 

நமது சமூகத்தின் வாழ்வியல் வழிகாட்டியாக விளங்குவது இலக்கியமே. இலக்கியங்களே மனித வாழ்க்கையைப் பிரதிபலிக்கின்றன. தமிழில் சங்க இலக்கிய நூல்களில் வாழ்வியல் நெறிகள் என்ற அறக்கோட்பாடுகளே தலையாய நோக்காக உள்ளது. 

இலக்கியம் என்பது மனிதர்கள் தங்களுக்கு நிகழும் வாழ்க்கைக்கு மேலதிகமாக விரிந்த வாழ்க்கையை மொழியினூடாக கற்பனை செய்து அறிவது. ஒருவரின் வாழ்க்கை அளிக்கும் அனுபவங்கள் எல்லைக்குட்பட்டவை; இலக்கியம் பல்லாயிரம் பேரின் அனுபவங்களை ஒருவர் அடைய வழிவகுக்கிறது. காலத்தால் கடந்துபோன வாழ்க்கையை நாம் வாழவும்,  நாளை நிகழவிருக்கும் வாழ்க்கையை சென்றடைந்துவிடவும் உதவுகிறது.

எல்லா பால் நிலைகளிலும் எல்லா நிலங்களிலும் எல்லா காலங்களிலும் எல்லாவகை இக்கட்டுகளிலும் எல்லா வகை பரவசங்களிலும் நாம் சென்று வாழ்வதற்கான வழியே இலக்கியம் என்பது. வாழ்க்கை அளிக்கும் அனைத்தையும் இலக்கியமும் அளிக்கும். இலக்கிய வாசகன் வாழும் வாழ்க்கை பிறவாழ்க்கைகளில் இருந்து பலமடங்கு பிரம்மாண்டமானது என்பதனால்தான் சற்றேனும் இலக்கியவாசிப்பு தேவை எனப்படுகிறது.

புற வாழ்க்கைக்கு அர்த்தமும், மையமும் கிடையாது. ஆகவே அதற்கென பொருளும் இல்லை. இலக்கியம் வாழ்க்கைக்கு அர்த்தமும் மையமும் அளித்து பொருளுள்ளதாக்குகிறது. இலக்கியமே வாசிக்காதவர்களாயினும் வாழ்க்கைக்கு அவர்கள் அளிக்கும் அர்த்தமென்பது இலக்கியத்தால் உருவாக்கப்பட்டதாகவே இருக்கும்.

"இலக்கியம் நேற்றின் ஆழம் முதல் இன்றுவரை வந்து நாளைக்கும் நீளக்கூடிய ஒரு பெருக்காக வாழ்க்கையை உருவகிக்கிறது. மூன்று காலங்களையும் தொடர்புபடுத்துகிறது. இலக்கியம் மானுடம் தன் வாழ்க்கையை நினைவில் நிறுத்திக்கொள்ளும் ஒரு வழிமுறை' என்று இலக்கியத்திற்கு விளக்கம் சொல்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். 

இலக்கியத்தை தங்களது பட்டப்படிப்பில் படிப்போருக்கு நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன. இளங்கலை தமிழ் அல்லது ஆங்கில இலக்கியம் படித்தால் கணிதம், இயற்பியல், வரலாறு உள்ளிட்ட மாணவர்களுக்கு உரிய அனைத்து வேலைவாய்ப்புகளும், இந்திய ஆட்சிப் பணி (ஐ.ஏ.எஸ்) தேர்வு உட்பட,  அனைத்தையும் இவர்கள் எழுதலாம் என்பதே உண்மை.

மேலும், தமிழ் இளங்கலையுடன் பி.எட்., அல்லது புலவர் பட்டயம் படித்திருந்தால் உயர்நிலைப் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களாகப் பணிக்குச் செல்லலாம். அது மட்டுமல்லாமல்,  முதுகலையில் தமிழ் அல்லது ஆங்கில இலக்கியத்துடன் இதழியல் உள்ளிட்ட பல்வேறு விதமான படிப்புகள் உள்ளன. முதுகலை இதழியல் படித்தோருக்கு பத்திரிகை, ஊடகத் துறையில் செய்தியாளர், உதவி ஆசிரியர் உள்ளிட்ட ஏராளமான பணி வாய்ப்புகள் இருக்கின்றன.

இன்று தமிழையும் ஆங்கிலத்தையும் பிழையின்றிப் பேசுவதற்கும், எழுதுவதற்கும் சரியான ஆட்கள் இல்லை. இத்தகுதியை வளர்த்துக் கொண்டவர்களுக்கு ஊடகத் துறை சார்ந்த தொலைக்காட்சி, வானொலி, பண்பலை (எப்.எம்) ஆகியவற்றில் செய்தி வாசிப்பவர், நிகழ்ச்சி அறிவிப்பாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆகிய பணியிடங்கள் காத்திருக்கின்றன. 

மேலும், எம்.ஏ., எம்.பில்., பிஎச்.டி., பட்டங்கள் பெற்றவர்கள் பல்கலைக்கழகம், கல்லூரிகளில் பேராசிரியர்களாகச் செல்ல முடியும். மேலும், தமிழ் இலக்கியத்துடன் கல்வெட்டு ஆய்வு,  கூடுதலாக சுவடி வாசித்தல், சுற்றுலாவியல் போன்றவற்றில் பட்டயங்கள் (டிப்ளமா) பெற்றால் தமிழக அளவில் தொல்லியல் துறையில் பணியாற்றவும்  வாய்ப்புகள் உள்ளன.

ஆங்கில மொழியில் புலமை பெற்றவர்கள் ஆங்கிலத்திலிருந்து பிற மொழிகளுக்கும், பிற மொழிகளிலிருந்து ஆங்கிலத்துக்கும்   மொழிபெயர்ப்புப் பணிகளைச் செய்யலாம். பல்வேறு கல்லூரிகளில் பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு (UGC) நிதியுதவியுடன் மொழி பெயர்ப்பியலில் சான்றிதழ், டிப்ளமோ, உயர் டிப்ளமோ படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக பி.பி.ஓ., கால் சென்டர்களில் ஆங்கிலம், ஆங்கில இலக்கியப் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. 

பொதுவாகவே எந்தவொரு கல்வியும் மனிதனை மேம்படுத்தும். இலக்கியம் நமக்கு  வாழ்கையைச் சொல்லிக் கொடுக்கும். இலக்கையும் வெல்ல உதவும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT