படிச்சுட்டா...பெரிய ஆளா?

பதவி என்பது எவருக்கும் அதிகாரத்தையோ உரிமைகளையோ அளிப்பதில்லை, அது ஒருவருடைய பொறுப்புகளைத்தான் அதிகரிக்கிறது
படிச்சுட்டா...பெரிய ஆளா?

பதவி என்பது எவருக்கும் அதிகாரத்தையோ உரிமைகளையோ அளிப்பதில்லை, அது ஒருவருடைய பொறுப்புகளைத்தான் அதிகரிக்கிறது
 - பீட்டர் டிரக்கர்.
 பள்ளி, கல்லூரி காலங்களில் சுமாராகப் படித்துவிட்டு... பின்னர் சுதாரித்து கவனமாக, திட்டமிட்டு அரசு உயர் அலுவலராக தன்னை உயர்த்திக்கொண்ட மாணவர் அவர். நல்ல பதவிக்கு சென்று, நல்ல பெயரோடு, ஓர் அதிகாரியாக, முதன் முறையாக தனது பெற்றோரைச் சந்திக்க அவரது சொந்த கிராமத்திற்குச் சென்றார்.
 நல்ல பெயரெடுத்த அதிகாரியாக தங்கள் ஊருக்கு அவர் வந்திருப்பதை, ஊரின் நல்ல உள்ளங்கள் எல்லாம் கொண்டாடின; அந்த ஊரின் பெரிய மனிதரின் மனம் மட்டும் புழுங்கியது. பெரும் செல்வந்தரான இந்த ஊர் பெரியவர்தான்... அந்த கிராமத்தின் தலைவர் என்பதை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
 அதிகாரியாக ஊருக்குள் வந்திருக்கும் இந்த மாணவரும் இந்தப் பெரியவரின் மகனும் கிராமத்து பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். பெரியவரின் மகனுக்கு பணம் இருந்தது; படிப்பு வரவில்லை. அல்லது பணச்செருக்கில் படிக்கவில்லை. ஆனால், இன்று அதிகாரியாக ஊருக்குள் வந்திருக்கும் இந்த மாணவரோ, அவரது ஏழ்மை மற்றும் வறுமையை உணர்ந்து... தனக்கு வராத படிப்பைக் கூட பொறுமையாகக் கையாண்டு கடினமாக உழைத்து கொஞ்சம்... கொஞ்சமாகப் படித்து முன்னேறினார்.
 உழைத்து தன்னிடம் கையேந்தி கூலி வாங்கியவன் பிள்ளை, படித்து தன் ஊருக்கு அதிகாரம் பெற்றவனாக வந்திருக்க, தன் பிள்ளை ஒரு தற்குறியாய் அந்த அதிகாரி நண்பனை வரவேற்கச் சென்றிருப்பதை இந்தப் பெரியவரின் "பழமை - மனசு' இரசிக்கவில்லை. விளைவு, ""என்னய்யா... அந்த கூலிக்காரனோட புள்ள, என்னமோ... அதிகாரியாக வந்திருக்கானாம்ல? ஏன் ஐயா வந்து என்னைய பார்க்கமாட்டாரோ?''" என்று ஊராரிடம் கேள்வி எழுப்ப, பெரியவரின் வக்கிரம் கண்டு ஊர் அதிர்ந்தது.
 ""ஐயா, அந்தப் பையன் நல்லா படிச்சு... ஒரு நல்ல பெயரெடுத்த அதிகாரியா... நம்ம கிராமத்திற்கு வந்திருக்கு... அது நமக்கெல்லாம் பெருமைதானுங்கய்யா?'' என்று நேர்மையும் துணிச்சலும் கொண்ட ஒரு கிராமத்து முதியவர் ஊர் பெரியவரிடம் கேட்க, ""அதுக்கு, படிச்சிட்டா... அதிகாரியாகிட்ட... நான் போயி அவனப் பாக்கணுமா? படிச்சிட்டா... அவன் பெரிய ஆளா?''" என்று ஊர்பெரியவர் மீண்டும் விஷத்தைக் கக்கினார்.
 சொந்த கிராமத்திற்கு மகிழ்ச்சியாக வந்த அந்த அதிகாரிக்கு செய்தி போனது. "
 "அதனாலென்ன... ஐயாவை நான் போய் பார்க்கிறததுல எந்தப் பிரச்சினையும் இல்ல'' என்று ஊர் பெரியவரின் வீட்டை நோக்கி நடக்க, படித்த அதிகாரியாக வந்திருக்கும் மண்ணின் மைந்தனின் பெருந்தன்மை கண்டு வியந்த ஊர், அவரின் பின்னாலேயே பெரியவரின் வீடு நோக்கிச் சென்றது.
 படிப்பு... கல்வி... ஒரு மனிதனை அவ்வளவு பண்படுத்துமா? உயர்த்தி உச்சாணிக்கொம்பில் அமரச் செய்யுமா? மனிதனை... மனித இனத்தை மேம்படுத்துகிற அவ்வளவு ஆற்றலும், சக்தியும் வாய்ந்த உன்னத கருவியா கல்வி?
 ஒருவரின் சமூக, பொருளாதாரத் தரத்தினை உயர்த்த, கல்வியைத் தவிர வேறு சிறந்ததொரு வழியும் கருவியும் இருப்பதாக இன்னும் இவ்வுலகத்தில் நிரூபிக்கப்படவில்லை. அறியாமை எனும் இருட்டைக் கல்வி எனும் ஒளிதான் போக்குகிறது. நல்ல புத்தகங்கள் அறிவுக் கண்ணைத் திறக்கும் ஒரு திறவுகோல். கல்வி ஒருவனை மட்டும் மேம்படுத்தாது. அவனைச் சார்ந்தவர்களையும், சமுதாயத்தையும், ஏன் நாட்டையுமே அது உயர்த்த உதவும்.
 இல்லையென்றால் திருவள்ளுவர். "கல்வி'க்கென்றே ஒரு தனி அதிகாரத்தை படைத்திருப்பாரா?
 "முகத்திரண்டு புண் உடையோர் கல்லாதவர்' என்று கூறும் வள்ளுவர், "கற்றோர் மட்டுமே கண்ணுடையவர்கள்' என்று கூறுகிறார்.
 "யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
 சாந்துணையுங் கல்லாத வாறு
 - என்று குறள்
 397 -இல், "கற்றவனுக்கு எந்த நாடும் நாடாகும்; எந்த ஊரும் ஊராகும்; இதுவே உண்மையாக இருந்தும் ஒருவன் சாகும் வரைக்கும் கல்லாமலிருப்பது எதனால்?' என்று கேட்கும் வள்ளுவர், குறள்: 398 - இல், "ஒரு பிறவியிலே தான் கற்ற கல்வியானது, ஒருவனுக்குத் தொடர்ந்து வரும் ஏழு பிறப்புக்களிலும் அவனைப் பாதுகாக்கும் சிறப்புடையது ஆகும்' என்றும் குறள்: 400 - இல், "அழிவில்லாத சிறந்த செல்வம் என்பது கல்விச் செல்வமே; மற்றைய பொன் பொருள் மண் என்னும் செல்வங்கள் ஒருவனுக்குச் சிறந்த செல்வம் ஆகா' என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.
 ஒரு முறை பாரதியார் எட்டயபுர அரச சபையில் இருந்து தன் ஊருக்குத் திரும்பி வீட்டிற்குச் சென்றபோது, அரசர் கொடுத்த எல்லா பணத்திற்கும் நல்ல நூல்களை வாங்கி வந்தாராம். தன் கணவர் தமக்குப் பிடித்ததாய் வாங்கி வருவார் என்று ஆசையாக வாசலில் காத்திருந்த பாரதியின் மனைவி செல்லம்மா தன் கணவர் புத்தகங்களாக வாங்கி வந்ததைக் கண்டு சினம் கொள்கிறார். சினம் கொண்ட மனைவியிடம் கல்வியின், புத்தகங்களின் மகிமை குறித்துப் பேசி பாரதியார் சமாதானப்படுத்தினார் என்பது செய்தி.
 கல்வி என்பது அழியாத செல்வம். அது காலத்தால் அழியாது. கள்வராலும் கவர முடியாதது. வெள்ளத்தால் போகாது. தீயினாலும் வேகாது.
 "படிச்சிட்டா... பெரிய ஆளா?'' என்றால், ஆம்... தான் பெற்ற கல்வியால், ஒருவன் அடையும் பதவி கொண்டு... பண்பட்ட மனிதனாக, ஒருவன் சக மனிதனுக்கும், இந்த உலகிற்கும் செய்யும் நன்மைகளால்... படித்தவன், பெரிய ஆள்தான்.
 - கே. பி. மாரிக்குமார்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com