இளைஞர்மணி

வளர்த்துக் கொள்ளுங்கள்... திறமைகளை!

17th Sep 2019 11:16 AM

ADVERTISEMENT

நமது நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டத்தை விட "திறமையில்லா திண்டாட்டம்'தான் அதிகமாக உள்ளது. பட்டப்படிப்பை முடித்து விட்டு பலர் வேலையில்லாமல் சுற்றி வருகின்றனர். படிப்பை முடித்து விடுவதால் மட்டும் ஒருவருக்கு வேலை கிடைத்துவிடுவதில்லை. ஏனெனில், பணிக்குத் தேவையான திறமைகள், மாணவர்களிடம் உள்ளதா என்று மட்டும்தான் வேலைவாய்ப்பளிக்கும் நிறுவனங்கள் பார்க்கின்றன. அதனால் பட்டப்படிப்புடன் சேர்த்து கூடுதல் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டியது இன்றைய காலத்தில் மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. 
பணிக்கு தேவையான கூடுதல் திறமைகள் இருவகையாக உள்ளன. தொழில்நுட்பம், கல்வி சார்ந்தவை ஒருவகை. மற்றொன்று, ஆளுமை, தலைமைப் பண்பு, ஆங்கிலத்தில் வல்லமை உள்ளிட்ட மென்திறன்கள். வாழ்க்கையில் முன்னேற நினைக்கும் இளைஞர்களுக்கு இவை இரண்டுமே தேவை. 
வேலைவாய்ப்பளிக்கும் 
கூடுதல் திறமைகள் சில...
பல மொழி அறிந்திருத்தல்
பட்டப்படிப்பு இல்லாதவர்கள்கூட பல மொழிகளைக் கற்றுக்கொண்டு பணி வாழ்க்கையில் உயரலாம். ஏனெனில், உலகம் திறந்த சந்தையான பிறகு மொழிப்பெயர்ப்பாளர்களுக்கு அதிகமான தேவை ஏற்பட்டுள்ளது. எழுத்து சார்ந்து மட்டுமில்லாமல், தொலைக்காட்சி, திரைத்துறை, பத்திரிகைத்துறை என படைப்பு சார்ந்த அனைத்துத் துறைகளிலும் மொழி பெயர்ப்பாளர்கள் கோலோச்சுகிறார்கள். அதனால், தாய்மொழி, ஆங்கிலம் தவிர்த்து வேறு மொழிகளைக் கூடுதலாகக் கற்றுக் கொள்வதற்கு மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும். பல மொழிகளைக் கற்றுக் கொண்டு தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். 
இன்டர்ன்ஷிப் (internship)
புத்தகத்தில் படிக்கும் அனைத்தையும் பணியிடத்தில் பயன்படுத்துகின்றோமா என்றால் இல்லை என்றே கூற வேண்டும். ஏனெனில், படிப்பு என்பது பணிக்கான அடிப்படையை மட்டுமே கற்றுத் தரும். பணியிடத்தில் உண்மையில் என்ன செய்கிறார்கள், எத்தகைய பணிகளில் ஈடுபடுகிறார்கள்; அதற்குத் தேவையான திறமைகள் எவை என்பதை நிறுவனங்களுக்கு சென்று பார்த்தால்தான் விளங்கும். 
அதனால், அனைத்து மாணவர்களும் படிக்கிற காலத்திலேயே இன்டர்ன்ஷிப் (தொழில் பயிற்சி) செல்ல வேண்டியது அவசியம். அதன் மூலம், பணியிடம் குறித்த புரிதல் மாணவர்களுக்குக் கிடைக்கும். இன்டர்ன்ஷிப் செல்லும் நிறுவனத்தில் நாம் சிறப்பாகச் செயல்பட்டால், அந்த நிறுவனத்திலேயே வேலை கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. கூடுதலாக திறமைகளை வளர்த்துக் கொள்வதால் எந்தத் துறையிலும் நம்மால் சாதிக்க இயலும். 
கணினி சார்ந்த படிப்புகள்
பொறியியல் படிப்பு, கலை மற்றும் அறிவியல் துறை சார்ந்த படிப்புகள் என எதைப் பயின்றாலும், இன்றைய காலத்தில் கணினி அறிவு மிக இன்றியமையாதது. மோஷன் பிக்சர்ஸ் முதல் செல்லிடப்பேசி செயலிகள் வரை அனைத்திலும் அனிமேஷன் பயன்பாடு அதிக அளவில் உள்ளது. அதுபோல, டிசைனிங், போட்டோஷாப், எம்எஸ் ஆபீஸ், கணினி மொழிகள் என்று கற்றுக் கொண்டு கூடுதல் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கென்று தனியே காலம் செலுத்த வேண்டும் என்றில்லை. கல்லூரியில் படிக்கும்போதோ, பள்ளியில் படிக்கும்போதோ காலை அல்லது மாலையில் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் சில மணி நேரம் செலவழித்தால் போதும். 
துறை சார்ந்த கூடுதல் படிப்புகள்
ஒவ்வொரு துறைக்கும் அவை சார்ந்த சான்றிதழ் படிப்புகள் நிறைய உள்ளன. உதாரணமாக, கணிதம் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்குச் செல்வார்கள். அதுவே அவர்கள் "பைதான்', "ஆர்' லாங்குவேஜ் உள்ளிட்டவற்றை கூடுதலாகத் தெரிந்து கொண்டால் பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பைப் பெறலாம். இவ்வாறு நமது துறை சார்ந்த கூடுதல் படிப்புகளைத் தேர்ந்தெடுத்து அவற்றில் சான்றிதழ் பெற்றிருப்பது நேர்காணலின்போது நமது தகுதியை உயர்த்திக் காட்டும். 
தொழிற்கல்வி
படிப்புடன் சேர்த்து கைத்தொழில் ஒன்றையும் கற்றுக் கொள்வது நமது தகுதியை உயர்த்தும். டைப்ரைட்டிங், தையல் பயிற்சி, கைவினைப் பொருள்கள் தயாரித்தல் என தொழில் சார்ந்த திறமைகளை வளர்த்துக் கொண்டால், வேலை தேடி நாம் அலையும் நிலை மாறி, நாம் பலருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கலாம்.
க. நந்தினி ரவிச்சந்திரன்
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT