இளைஞர்மணி

வளர்ச்சிக்கு அடிப்படை... நம்பிக்கையான சூழல்! விஞ்ஞானி வெ. பொன்ராஜ்(அப்துல்கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகர்)

17th Sep 2019 10:46 AM

ADVERTISEMENT

மிச்சமெல்லாம் உச்சம் தொடு 35

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த 
வகுத்தலும் வல்லது அரசு 
திருக்குறள் (385) 
ஓர் அரசு பொருள் வரும் வழிகளை மென்மேலும் உருவாக்குதலும், வந்தவற்றைத் தொகுத்தலும், தொகுத்தவற்றைப் பிறர் கொள்ளாமல் காத்தலும், காத்தவற்றை அறம், பொருள், இன்பங்களின் பொருட்டுக் கொடுத்துத் தன் கடமையைச் செய்யவல்லது என்கிறார் திருவள்ளுவர். அரசு இம்முறையில் செயல்பட்டால்தான் நாடு தன்னிறைவு அடையும். தன்னிறைவு பெற்றால்தான் உலக நாடுகளுடன் போட்டி போட முடியும். போட்டி போட வேண்டும் எனில் நாடு செல்வ நிலையில் செழித்து இருக்க வேண்டும். நாட்டில் விவசாயம், தொழில், உற்பத்தி பெருகும். அதனால் உள்நாட்டு வணிகம் சிறக்கும். ஏற்றுமதி பெருகும். அதனால் வளர்ச்சி அதிகரிக்கும். அதனால் அனைவருக்கும் வேலைவாய்ப்பு உருவாகும். தேவை அதிகரிக்கும். அதனால் செலவு செய்வது பெருகும். அதனால் நாட்டின் பொருளாதாரம் உயரும். 
ஆனால் பொருளை உருவாக்கும் அனைத்து வழிகளையும் அடைத்துவிட்டு நாட்டின் பொருளாதாரத்தை கொடுமையான வரிகளின் மூலம் உயர்த்த முடியும் என்று ஓர் அரசு நம்பினால் அது நாட்டிற்கு ஏற்பட்ட கேடு காலமாகும். வளர்ச்சிக்கான சட்டங்களும், திட்டங்களும் இயற்றப்பட்டு, செயல்படுத்தப்பட்டால் மட்டுமே நாட்டை முன்னேற்றப் பாதையில் செலுத்த முடியும். ஆனால் கடந்த 6 ஆண்டுகளில் பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் (RERA - Real Estate Regulation and Development Act 2016),  IBC - Insolvency and Bankruptcy Code- 2016 
(IBC), போன்ற நடவடிக்கைகள், இயற்றப்பட்ட சட்டங்கள், அதை அமல் படுத்திய விதம் அனைத்தும் தோல்வியில் முடிந்தால்தான் இன்றைக்கு இந்தியா பொருளாதாரம் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது; வேலைவாய்பை இழந்திருக்கிறது; பணப்புழக்கம் யாரிடமும் இல்லை என்ற நிலைமை காணப்படுகிறது. 
"வரி தீவிரவாதத்தின்' காரணமாக கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்ட வரிவிதிப்பினால் ஏற்பட்ட தகராறு வழக்குகள் மட்டும் கிட்டத்தட்ட ரூ. 3.5 லட்சம் கோடியில் இருந்து ரூ. 6.5 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. இதில் 80% வழக்குகளில் வருமானவரித்துறை இலக்கை நிறைவேற்றும் அதிகாரிகளின் அழுத்தத்தால் தோற்று இருக்கிறது. வரிவசூல் துறையினருக்கு உயரும் பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக வரி வசூலிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து வசூலிக்கச் சொன்னால் வரி வசூல் அதிகாரிகள், மக்களை, தொழில்துறையினரைக் கசக்கிப் பிழிவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? இது எல்லா மட்டத்திலும் மிகப் பெரிய சிக்கலை உருவாக்குகிறது. இவ்வளவு கொடூரமாக வரி வசூலிக்கும் அதிகாரிகள், ஜிஎஸ்டி ரீஃபண்ட் கொடுக்கத் தெரியாமல் தவிக்கிறார்கள். 
RERA மற்றும் IBC சட்டங்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்ட நிலையில் விளைவுகளை ஏற்படுத்தி, அது வழக்குகளுக்கு வழிவகுத்து, ரியல் எஸ்டேட் மற்றும் ஆட்டோமொபைல் தொழில்துறையை வீழ்ச்சியடைய வழிவகுத்திருக்கிறது. இன் சால்வன்சி பேங்க்ரப்சி கோடு (IBC) வங்கிகளிடமிருந்து கடன் பெற்ற கம்பெனிகள் கடனை அடைக்க முடியாத பட்சத்தில் அந்தக் கம்பெனியை விற்று அல்லது ஏலத்தில் விற்று அதன் மூலமாக கிடைக்கும் பணத்தில் இருந்து கடனில் ஒரு குறிப்பிட்ட சதவீதமாவது திரும்பப் பெறுவதற்கு வழிவகுக்கிறது. 
RERA சட்டம் வீடு வாங்குவோரது உரிமையைப் பாதுகாத்து வீடுகட்டி கொடுக்கக்கூடிய கட்டுமான நிறுவனங்கள் (Builders and Developers) வீடு வாங்குபவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க சொல்கிறது. ஆனால் ஐபிசி சட்டம் வீடு வாங்கியவர்களை பாதுகாப்பற்ற கடன் வழங்குநர்கள் (Unsecured Creditors) என்ற வகையில் மதிப்பீடு செய்து ஐபிசி சட்டம் கடன் கொடுத்த வங்கிகளுக்கு முன்னுரிமை கொடுத்து வீடு வாங்கியவரின் உரிமைகளைப் பின்னுக்குத் தள்ளுகிறது. இந்த இரண்டு சட்டங்களுக்கு இடையே ஏற்பட்ட குழப்பம் ரியல் எஸ்டேட் துறையில் மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கி இருக்கிறது. 
ஓர் அமைச்சகத்தால் இயற்றப்படும் சட்டம் எவ்வாறு மற்ற துறையைப் பாதிக்கும் என்ற கணிப்பு இல்லாமல் தனித்தே இயற்றப்படுவதால் இங்கு மத்திய அமைச்சரவைக்கு கூட்டு பொறுப்போடு செயல்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது. மற்ற அமைச்சர்களுக்கு தங்கள் துறையின் வளர்ச்சியைப் பற்றியும், வீழ்ச்சியைப் பற்றியும் தெரியுமா என்ற கேள்வி எழுகிறது? தெரியாது என்ற பதிலுக்கு விடையாக பொருளாதார வீழ்ச்சி தொடங்கிவிட்டது. இதை பாராளுமன்றம் விவாதித்து இருக்கிறதா? இல்லை பெரும்பான்மையால் அனைத்தும் புறம்தள்ளப்பட்டதா என்ற கேள்வியும் எழுகிறது?
இன்றைக்குப் பணப்புழக்கம் மிகவும் குறைந்து காணப்படுகிறது. அதனால் நுகர்வோர் தேவை மிகவும் குறைந்து விட்டது. ஒட்டுமொத்த நிதி நிர்வாகத்தில் பணப்
புழக்கம் தேவையான அளவில் இல்லாமல் குறைந்து போய்விட்டது. வங்கிகள் மூலமாக பணப் பரிவர்த்தனைக்கு ரூ. 97 லட்சம் கோடி கொடுக்கப்பட்டு வந்த நிலையில், அவற்றில் ரூ. 22 லட்சம் கோடி அதாவது வங்கி சாராத நிதி நிறுவனங்கள் என்று சொல்லப்படும் NBFC  மூலமாக பணப்புழக்கம் நடைபெற்றது. 
கோடக் மகேந்திரா அறிக்கையின்படி இந்தியாவில் ஒட்டுமொத்த ஆட்டோ, கார் விற்பனையின் மதிப்பு ரூ. 5 லட்சம் கோடி. இதில் 20% விற்பனையின் அளவு சரிந்தாலும் ஒட்டுமொத்தமாக ரூ. 1 லட்சம் கோடியாகச் சரிகிறது. இதன் காரணமாக எதிர்மறை வளர்ச்சி (Negative growth) ஆட்டோமொபைல் துறை, ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்டது. ஏனென்றால் இந்த துறைகள் பெரும்பாலும் NBFC நிதி நிறுவனங்களைச் சார்ந்தே இயங்குகிறது. 2018 செப்டம்பர் முதல் 2019 செப்டம்பர் வரை NBFC நிதி நிறுவனங்கள் ரூ. 3 லட்சம் கோடியை சந்தையில் இருந்து திரும்பப் பெற்று விட்டது, அப்படி என்றால் கிட்டத்தட்ட ரூ 1.5 முதல் ரூ. 2 லட்சம் கோடியை தங்களது கடனை திருப்பிச் செலுத்துவதற்காக வைத்துக் கொண்டு விட்டது. NBFC நிதி நிறுவனங்களில் ஏற்பட்ட இந்த குழப்பம் ரியல் எஸ்டேட் கம்பெனிகளை மிகவும் பாதித்தது. பல்வேறு கட்டடப் பணிகள், கட்டுமான பணிகள் முடிக்க முடியாமல் இன்றைக்கு பாதியிலேயே கைவிடப்பட்டு இருக்கிறது. இதனால் மிகப்பெரும் பணப்புழக்க சிக்கல் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையில் ஏற்பட்டிருக்கிறது. NBFC நிதி நிறுவனங்கள் வாகன டீலர்கள் முதல் அதன் கடைசி இணைப்பு தொழில் வரை 95% வாகனங்களுக்கு நிதி உதவி அளித்து வந்தது, கார், லாரி மற்றும் இரண்டு சக்கர வாகன விற்பனை சரிந்ததின் காரணமாக பல டீலர்கள் கார்களை வாங்கி தேக்கி வைப்பதற்கு வழி இல்லாமல் மூடும் நிலை ஏற்பட்டுவிட்டது
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும் 
எஃகதனிற் கூரிய தில். 
- திருக்குறள் (759)
எதையும் சாதிக்க எண்ணுவோர் பணத்தைச் சம்பாதியுங்கள்; பகைவரின் அகங்காரத்தை அறுக்கும் கூரிய ஆயுதம், பணத்தைவிட வேறு இல்லை. ஆனால் நேர்மையான வழியில் யாரும் பணம் சம்பாதிக்க முடியாது என்ற நிலைமையை அரசின் சந்தேகச் சட்டங்கள் உருவாக்கிவிட்டன. யாரும் தொழில் செய்து நேர்மையாகப் பிழைக்க முடியாது என்ற நிலை உருவாகிவிட்டது. நேர்மையற்ற முறையில் சேர்த்த அரசியல்வாதிகளின் லஞ்சப் பணப்புழக்கத்தை தவிர, உழைக்க நினைக்கும் மக்களிடம் பணப்புழக்கம் சுத்தமாக இல்லை. 
அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து 
தீதின்றி வந்த பொருள்.
- திருக்குறள் (754) 
நேர்மையான வழியில், தீமை ஏதும் செய்யாமல் சம்பாதிக்கப்பட்ட பணம் அறத்தையும் தரும்; இன்பத்தையும் தரும். இது தனிமனிதனுக்கும் பொருந்தும்; அரசுக்கும் பொருந்தும். ஆனால் தீமை செய்து சம்பாதிப்பவர்கள் தான், அரசை ஏமாற்றிப் பிழைப்பவர்கள் தான் இந்தியாவில் பிழைக்க முடியும்; நேர்மையாக தொழில் செய்து உழைப்பவர்கள், வருமான வரி 30 சதவிகிதமும், விற்பனை வரி 28 சதவிகிதமும் சேர்த்து அதிகபட்சம் 58 சதவிகிதம் செலுத்திவிட்டு செய்யும் தொழிலில் எப்படி லாபம் ஈட்ட முடியும்? 
நட்டம் வராமல் தொழில் நடத்துவது என்பது இந்தியாவில் இனிமேல் முடியாத காரியம் என்று ஆகிவிட்டது. விமானத் தொழில் முதல் சில்லறை விற்பனை தொழில் வரை அனைத்தும் நட்டமாக ஒடுகிறது என்றால் என்ன அர்த்தம்? 
கடந்த 20 ஆண்டுகளில் விமானப் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டிருக்கிறது, ஆனால் 13 விமான கம்பெனிகள் மூடப்பட்டிருக்கின்றன. காரணம் என்ன என்று அரசு ஆராய்ந்திருக்கிறதா? இல்லை. கடந்த 8 ஆண்டுகளில் 10 லட்சம் சிறு, குறுந் தொழில்கள் மூடப்பட்டு விட்டன. 50 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் வேலைவாய்ப்பை இழந்திருக்கிறார்கள். இதற்கு காரணம் என்ன? இதைச் சரி செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறதா, என்றால் இல்லை. இன்றைக்கு ஆட்டோமெபைல் கம்பெனிகள் மூடப்பட்டதால் வேலை இழந்தோர் எண்ணிக்கை 3.5 லட்சம். அதனால் இனிமேல் மூடப்பட விருக்கிற கம்பெனிகளின் எண்ணிக்கை எவ்வளவோ தெரியவில்லை. கார்ப்பரேட் கம்பெனிகள் முதல் சாதாரண சிறு குறுந் தொழில்கள் வரை மூட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது, பொருளாதார வீழ்ச்சி தொடங்கிவிட்டது. 
இந்தநிலையில் தொழில் செய்தால் நட்டம்தான் என்ற மனநிலை மக்கள் மத்தியிலும், தொழில் முனைவோர் மத்தியிலும் வந்துவிட்டது. இந்த மனநிலை நாட்டிற்கு நல்லது இல்லை. இது ஒரு மிகப்பெரிய பொருளாதாரச் சீரழிவிற்கு இந்தியாவை இட்டுச்செல்லும் நிலை கூடிய சீக்கிரம் ஏற்படும். தொழில் செய்யாமல் இருந்து விடலாம் என்ற எண்ணம் தானே பெரும்பாலான மக்களுக்கு வரும்? உலகமயமாக்கலின் விளைவால் உலகத்தோடு போட்டு போட்டு, உலக தொழில்நுட்பத்தோடு போட்டி போட்டுத்தான் இன்றைக்கு அனைத்து தொழில்களையும் உற்பத்தியையும் பெருக்குவதற்கு ஏற்ற சூழலை உருவாக்கி, தொழில் முனைவோர்களுக்கு முதலீட்டையும், வரி சலுகைகளையும், சமமான வாய்ப்புகளையும், உலக தொழில்நுட்ப முன்னேற்றத்தைப் பயன்படுத்துவதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்குவதற்குப் பதிலாக, தொழிலை மூடிவிட்டு இருப்பதை வைத்து பிழைத்துக்கொள்ளலாம் என்ற நிலைக்கு தொழில் முனைவோர்கள் வந்தால், வேலை வாய்ப்பு எப்படிப் பெருகும்? 
வெளிநாட்டு முதலீட்டிற்கு ரத்தினக் கம்பளம் விரித்து, நிலம் கொடுத்து, வரிச் சலுகை கொடுத்து, அனைத்து சலுகைகளையும் கொடுத்து வரவேற்கத் தயாராக இருக்கும் மத்திய, மாநில அரசுகள், உள்நாட்டு தொழில்முனைவோர்கள் அனைவரையும், ஏமாற்றுபவர்களாக, திருடர்களாகப் பார்த்து கடுமையான சட்டங்கள் மூலம் அவர்களை ஒழிப்பதை முன்னெடுத்து செயல்படுத்துவது அப்பட்டமாகத் தெரிகிறது. 2 சதவிகிதம் ஏமாற்றுக்காரர்களைப் பிடிப்பதற்காக 98 சதவிகிதம் நேர்மையாகத் தொழில் செய்ய எண்ணுபவர்களைச் சந்தேகிக்கும் நமது தொழில் சட்டங்களை மாற்றுங்கள். நம் நாட்டு தொழில்முனைவோர்களை நம்புங்கள்; ஊக்கப்படுத்துங்கள்; மனமுவந்து வரி கட்டும் சூழலை உருவாக்குங்கள்; முதலீட்டைக் கொடுங்கள்; கடனுக்கு ஈடாக மண்ணை நம்புவதை விட மனிதனின் மூளையை நம்புங்கள். 
வேலைவாய்ப்பின்மை பெருகினால் தீவிரவாதம் தான் பெருகும். திருட்டு, கொலை, கொள்ளை அதிகரிக்கும், நாட்டில் அமைதியின்மையையும், சட்டம் ஒழுங்கு பிரச்னைகளையும் உருவாகும். நம்மை ஆள்வோர்களை நம்பிப் பயனில்லை. உழைப்பை நம்பிப் பயனில்லை என்று மக்கள் கடவுளை நோக்கிதான் ஒடும் நிலை அதிகம் ஏற்படும். "கடவுளே என்னைக் காப்பாற்ற யாரும் இல்லை; நேர்மையாக உழைக்க வழியில்லை; எப்படியோ சாகும் நிலையில் இருக்கும் என் குடும்பத்தை நீயாவது காப்பாற்று' என்று மக்கள் கடவுளிடம் அதிகம் முறையிட்டால் நாட்டில் ஆளும் ஆட்சிமுறை நிர்வாகம் சீரழிந்து விட்டது என்பது உறுதி செய்யப்படும். 
இந்தியாவில் மக்கள் தொகை 127 கோடிப்பேரில், வேலை செய்யும் திறன் பெற்றவர்கள் 49 கோடிப்பேர், வேலை செய்ய முடியாதவர்கள் 78 கோடிப்பேர். இவர்களில் 18 வயதிற்கும் கீழே இருப்போர் மற்றும் முதியோர்கள், வேலை செய்யும் திறன் இழந்தவர்கள் இருக்கிறார்கள். வேலை செய்யும் திறன் பெற்ற 49 கோடிப்பேரில் 22 கோடிப்பேர் விவசாயம் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்கள். 27 கோடிப்பேர் விவசாயம் சாராத மற்ற தொழில், உற்பத்தி மற்றும் சேவைத் துறையில் ஈடுபடுபவர்கள். விவசாயத்தொழில் ஈடுபடுவர்களுக்கு வருமான வரி கிடையாது. மற்ற தொழிலில் ஈடுபடும் 27 கோடிப்பேரில் 18 கோடிப்பேர் 2.5 லட்சத்திற்கும் குறைவாக வருமானம் ஈட்டுபவர்கள், 9 கோடிப்பேர் 2.5 லட்சத்திற்கும் மேல் வருமானம் ஈட்டுபவர்கள் எண்ணிக்கை 34 சதவிகிதமாகும். இதில் 5.9 கோடிப்பேர் தான், அதாவது 4.5 சதவிகிதம் பேர் தான் வருமான வரி செலுத்துகிறார்கள். இதில் 3.1 கோடிப்பேர் வருமான வரி ஏய்ப்பு செய்கிறார்கள். 
2018-19 இல் தனிநபர் வருமான வரி மற்றும் கார்ப்பரேட் வருமான வரியும் சேர்த்து நேரடி வரிகளாக ரூ 11.50 லட்சம் கோடி. இது ஒட்டு மொத்த பட்ஜெட்டில் 64.7 சதவிகிதம். வருமான வரியை 20 சதவிகிதத்திற்கும் கீழே குறைத்து பாருங்கள், வரி ஏய்ப்பதற்குப் பதில் கட்டுவதே மேல் என்ற எண்ணம் அனைவருக்கும் வரும். அதனால் வருமான வரி குறையாது 1.5 முதல் 2 மடங்கு பெருகும். 
GST  மூலமாக 2018-19 -இல் வந்த வருமானம் ரூ 11.77 லட்சம் கோடி. 2019-20- இல் இலக்காக மத்திய அரசு ரூ 13.71 லட்சம் கோடி நிர்ணயித்திருக்கிறது. ஜி.எஸ்.டி வரியை 28 சதவிகித்தில் இருந்து 16 சதவிகிதத்திற்கும் கீழ் குறைத்துப் பாருங்கள். தொழில், உற்பத்தி மற்றும் சேவை துறை உயரும், மூடப்பட்ட கம்பெனிகள் திறக்கப்படும், புது கம்பெனிகள் தோன்றும், வேலைவாய்ப்புப் பெருகும். ஜி.எஸ்.டி மூலம் வரும் வரி வருவாய் குறைந்தது 1.5 முதல் 2 மடங்கு கண்டிப்பாகப் பெருகும். இதை அடுத்த 2 ஆண்டுகளுக்கு செயல்படுத்திப் பார்த்தால் கண்டிப்பாக இழந்த பொருளாதாரத்தை மீட்க எடுத்த முதல் முயற்சி மட்டும் அல்ல. வரி தீவிரவாதத்தை ஒழித்து, அனைவரையும் நாட்டின் வளர்ச்சிக்கு உழைக்க ஊக்குவிக்கும் நடவடிக்கையாக இது அமையும். 
உங்கள் கனவுகளை, இலட்சியங்களை பகிர்ந்து கொள்ள தொடர்பு கொள்ளுங்கள்.
vponraj@gmail.com  
(தொடரும்) 


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT