இளைஞர்மணி

சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல் ! - 63

10th Sep 2019 07:29 PM

ADVERTISEMENT


நம்மிடம் இருக்கும் அளவுக்கு பலவகையான இசைகள், உலகில் வேறெங்கும் இல்லை.  பல்வேறு இசைகளில் நம்நாட்டு மக்களுக்கு இருக்கும் திறமைகளை இந்தியா உலகிற்கு வெளிக் கொண்டு வருவதில்லை. அந்தத் திறமைகள் வீணடிக்கப்படுகின்றன. 

குறிப்பாக,  இந்தியாவைப் பொறுத்த அளவில் கர்நாடக சங்கீதமும், ஹிந்துஸ்தானி இசை ஆகிய இரண்டு மட்டுமே இந்தியாவின் இசையாக உலகிற்குத் தெரியப்படுத்தி வந்திருக்கிறோம். 

ஆனால்  இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் உலகத்திற்கே இசையின் பல்வேறு நுட்பங்களை வெளிப்படுத்திக் காட்டியிருக்கின்றனர். உதாரணமாக இளையராஜா உருவாக்கிய  "திருவாசகம் சிம்பொனி'  உலகிற்கே தமிழின் பழைமையான பக்தி இலக்கியத்தை அறிமுகப்படுத்தியது.  ஒரு சிறிய  கிராமத்தில் பிறந்த  அவருக்கு இசையின் மீதிருந்த கட்டுக்கடங்காத ஆர்வமே இத்தகைய முயற்சிகளுக்கு அவரைத் தூண்டியிருக்கிறது என்று சொல்லலாம்.  நாட்டுப்புற இசை, கர்நாடக இசை உட்பட பல இசைகளை ஒருங்கிணைத்து,  புதிய வடிவிலான இசையை உலகிற்கு அளித்தது அவருடைய சாதனை என்று சொல்லலாம். இசையின் மீதான அவருடைய  இடைவிடாத தேடல்,  அவரின் இசைப் பங்களிப்பு  உலக அளவில் புகழின் உச்சிக்கு அவரை அழைத்துச் சென்றிருக்கிறது.

இதேபோன்று ஏ.ஆர்.ரஹ்மான் "இன்ஸ்ட்ரூமென்ட்லெஸ் மியூசிக்' (இசைக்கருவிகள் இல்லாத இசை)  என்ற ஒரு புதிய முயற்சியில் இறங்கி பல்வேறு கலைஞர்களுடன் சேர்ந்து உருவாக்கியுள்ளார்.   மிகச்சிறிய வயதுள்ள இளைஞராக இருந்தபோதே இந்த முயற்சியில் அவர் இறங்கியிருக்கிறார்.

ADVERTISEMENT

இசைக் கலைஞர்களின் கையில் வாட்ச் போன்று பேண்ட் ஒன்றை மாட்டிவிடுவார்கள்.  அந்த இசைக்கலைஞர்  ஓர் இசைக் கருவியை இசைக்கும்போது கையை  எந்த மாதிரி அசைப்பாரோ அதேபோன்று,  இசைக் கருவி இல்லாமலேயே  அவர் கையை அசைத்தால் போதும்,  அந்த இசைக் கருவியின்  இசை ஒலிக்கும்.   "காக்னிட்டிவ் சயின்ஸ் அப்ளிகேஷன் ஆஃ மியூசிக்' என்ற இந்தத்   இந்தத் தொழில்நுட்பத்தை ஏ.ஆர்.ரஹ்மான் பல்வேறு கலைஞர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் ஆகியோருடன் சேர்ந்து உருவாக்கி பயன்படுத்தியுள்ளார். இது அவருக்குப் பெருமை சேர்த்துள்ளது.  பல்வேறு இசைகளை ஒருங்கிணைத்து புதிய இசையை உருவாக்கும் இரு தனிப்பட்ட கலைஞர்கள் செய்திருப்பதைப் போன்று நமது இசைப் பல்கலைக்கழகங்களும்  நம்நாட்டின் பல்வேறு இசை வகைகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். 

இன்றைய நாளில், ஒருவர் அவருடைய இசை வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்து,  அதை  1 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்தார்கள் என்றால், அதற்காக அவருக்கு  1000 முதல் 2000 டாலர்கள் வரை வழங்கப்படுகின்றன.  இவர்கள் ஒரு தடவை உருவாக்கிய இசை, பல ஆண்டுகளாக பலரால் உலகம் முழுவதும் கேட்கப்படுகிறது.  இதனால்  வருகிற வருமானம்   அதிகரித்துக் கொண்டே  போவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.  

தமிழகத்தின் தாரை, தப்பட்டையாகட்டும், வடகிழக்குமாநிலங்களில் உள்ள பழங்குடியின மக்களின் இசையாக இருக்கட்டும்,  கூமார் என்ற ராஜஸ்தான் பழங்குடியின நடனமாகட்டும்,  தாண்டியா, கச்சிபோலி (பொய்க்கால் குதிரை) போன்ற பல்வேறு நடனக் கலைகளாகட்டும் அவற்றை எல்லாம்  உலகெங்கும் காணும் வகையில் இணையத்தின் வாயிலாக   அரங்கேற்றும் வசதி இப்போது உள்ளது.  பத்தாண்டுகளுக்கு முன்பு இந்த வசதி இல்லை. 

தனிநபர் ஒருவர்,  அவருடைய திறமையை எடுத்துச் செல்ல இந்த இணையம் உதவியாக உள்ளது. 

இப்போது  இந்தியாவில் இருந்தே ஒருவர்  உலகப் புகழ்பெற்ற பெர்க்லி காலேஜ் ஆஃப் மியூசிக் - இல்   இசைக்கான காப்புரிமை ,  இசை பிசினஸ் சம்பந்தமாகப் படிக்க முடியும்.  ஹிஸ்டரி ஆஃப்  ரெக்கார்டிங் இண்டஸ்ட்ரி, மியுசிக் பிசினஸ் ஸ்ட்ரக்சர் ஆகியவற்றைப் படிக்கலாம். இசை அமைக்க ஒப்பந்தம் எவ்வாறு செய்து கொள்வது? தனிப்பட்ட கலைஞரின் இசை உருவாக்கத்துக்கு காப்புரிமை பெறுவது எப்படி? இந்தத் துறையில் உள்ள பல்வேறு பிரிவினரின் பங்கு என்ன? மியூசிக் பிராண்ட்டை எப்படி வெளிச்சத்துக்கு கொண்டு வருவது? வெளிநாட்டில் இசை நிகழ்ச்சியை நடத்த எவ்வாறு தளம் அமைத்து, ஸ்பான்சர்களைப் பிடித்து,  ரசிகர்களை எப்படி வரவழைப்பது ? என்பது பற்றியெல்லாம் மியூசிக் இன் பிசினஸில் சொல்லித் தருகிறார்கள். நமது மாணவர்கள் அவற்றைப் படிக்கலாம்.


30 ஆண்டுகளுக்கு முன்பாக பெர்க்லி காலேஜ் ஆஃப் மியூசிக்கில்  இந்திய மாணவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவாக இருந்தது. தற்போது அதிகரித்திருக்கிறது.  இந்திய வம்சாவளியினரின் குழந்தைகள் இங்கு பயில்கிறார்கள்.  இந்தியாவில் உள்ள இசைக் கல்விநிறுவனங்களில் இருந்து - குறிப்பாக கலாஷேத்ரா- சென்னை, கலாமண்டல் - திருவனந்தபுரம், சாந்திநிகேதன் - மே.வங்கம் மற்றும் தலைக்காவேரி - திருச்சி உட்பட பல்வேறு கல்லூரிகளில் இருந்து - மாணவர்கள் இங்கு சென்று பயில்கிறார்கள். இந்தியாவில் பல்வேறு மொழிகளில் உள்ள இசை வகைகளை இணைத்து, வெளிநாடுகளில் உள்ள எல்லா இந்தியர்களும் விரும்பும் வண்ணம் புதிய இசை வகைகளை அளித்து வருகிறார்கள்.  

நமது நாட்டில் சிறந்த நாதஸ்வரக் கலைஞர் கூட வாய்ப்புகளின்றி வறுமையில் வாடிக் கொண்டிருக்கும் நிலையே உள்ளது.   நமது இசைப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் செய்ய வேண்டியதெல்லாம் நமது நாட்டுப்புற இசைக் கலைஞர்களைக் கண்டுபிடித்து அவர்களுடைய திறமைகளை உலக அளவுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.   

இசைக் கலைஞர்கள் இசையில் மட்டுமே திறமையானவர்களாக இருப்பார்கள். நவீன தொழில்நுட்பங்கள் அவர்களுக்குத் தெரிந்திருக்காது.  அவற்றைத் தெரிந்து வைத்திருக்கின்ற இன்றைய இளைய சமுதாயத்தை நாட்டுப்புற இசைக்கலைஞர்களுடன்  இணைத்து,  அதன் மூலம் அவர்களின் திறமையை உலகுக்குத் தெரியப்படுத்தலாம்.  

தமிழ்நாட்டில் இசை மற்றும் நுண்கலைகள் பல்கலைக்கழகம்  அமைந்துள்ளது. இந்தப் பல்கலைக்கழகம்,   உலக அளவில் உள்ள இசைத்துறையின் வளர்ச்சிகளை - பெர்க்லி பல்கலைக்கழகம் போன்ற கல்விநிறுவனங்கள் கற்றுத் தருவதைப் போல    நமது மாணவர்களுக்கும் கற்றுத் தர - அதற்கான பாடத்திட்டங்களை உருவாக்கிக் கற்றுத் தர முன் வர வேண்டும். 

இசைத்துறையில் பயில விரும்பும் நமது  மாணவர்கள்  சென்னையில் உள்ள தமிழ்நாடு இசை மற்றும் நுண்கலைகள் பல்கலைக்கழகத்தில்    (Tamil Nadu Music and Fine Arts University) ) முதுகலைப்பட்டப்படிப்பில் (M.A.  Music) வாய்ப்பாட்டு, வீணை, வயலின், மிருதங்கம், பரதநாட்டியம், நாகஸ்வரம்  ஆகியவை  கற்றுத் தரப்படுகின்றன. 

அதேபோன்று சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில்   மூன்று ஆண்டு இசை இளங்கலைப் பட்டம் வாய்ப்பாட்டு, வீணை, வயலின் ஆகிய பிரிவுகளில் வழங்கப்படுகின்றன.  பிளஸ் டூ  தேர்ச்சி பெற்ற 17 வயதிலிருந்து 22 வயதுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.  அதேபோன்று 3 ஆண்டு இசை தொடர்பான பட்டயப் படிப்புகளும் வழங்கப்படுகின்றன.  வாய்ப்பாட்டு, வீணை, வயலின், மிருதங்கம், கடம், கஞ்சிரா, மோர்சிங், நாகஸ்வரம், தவில், பரதநாட்டியம்,  நாட்டுப்புற கலைமணி  ஆகிய பிரிவுகளில்  இந்த  பட்டயப்படிப்புகள் சொல்லித் தரப்படுகின்றன.  இரண்டாண்டு நட்டுவாங்க கலைமணி  பட்டயப் படிப்பும் வழங்கப்படுகிறது. 

இந்தப் பட்டயப் படிப்புகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓராண்டு மியூசிக் டீச்சிங் படிப்பு சொல்லித் தரப்படுகிறது.  அதில் சேர பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும்  இசைக்கலைமணி பிரிவில் பட்டயப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.  அல்லது இசையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இங்கு இரண்டாண்டு  மாலை நேர  சான்றிதழ் இசை படிப்புகள் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், மிருதங்கம் ஆகியவற்றில் சொல்லித் தரப்படுகின்றன.  இதில் சேர 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். 

மதுரை- பசுமலையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டில் 3 ஆண்டு இளங்கலைப் பட்டப்படிப்பு உள்ளது.  மூன்றாண்டு பட்டயப்படிப்பு வாய்ப்பாட்டு, வீணை, வயலின், புல்லாங்குழல்,  மிருதங்கம், நாகஸ்வரம், தவில், நாட்டுப்புறக் கலை ஆகியவற்றில் சொல்லித் தரப்படுகின்றன. ஓராண்டு மியூசிக் டீச்சிங் படிப்பும்,  இரண்டாண்டு சான்றிதழ்  இசைப் படிப்பு வாய்ப்பாட்டு, வீணை, வயலின், மிருதங்கம், பரதநாட்டியம் ஆகியவற்றில் கற்றுத் தரப்படுகின்றன. 

அதேபோன்று கோவை - மலுமிச்சம்பட்டியில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் மூன்று ஆண்டு இசை இளங்கலைப் பட்டம் வாய்ப்பாட்டு, வீணை, வயலின் ஆகிய பிரிவுகளில் உள்ளன. 

அதேபோன்று 3 ஆண்டு இசை தொடர்பான பட்டயப்படிப்புகளும் வழங்கப்படுகின்றன.  வாய்ப்பாட்டு, வீணை, வயலின்,   பரதநாட்டியம்   ஆகிய பிரிவுகளில் கற்றுத் தரப்படுகின்றன.  ஓராண்டு மியூசிக் டீச்சிங் படிப்பும், இரண்டாண்டு  சான்றிதழ்  இசைப் படிப்பு வாய்ப்பாட்டு, வீணை, வயலின் ஆகியவற்றிலும் கற்றுத் தரப்படுகின்றன. 

திருவையாறில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் மூன்று ஆண்டு இசை இளங்கலைப் பட்டம் வாய்ப்பாட்டு, வீணை  ஆகிய பிரிவுகளில் உள்ளன.  இதில் முதுகலைப் பட்டமும் சொல்லித் தரப்படுகிறது. 

அதேபோன்று 3 ஆண்டு இசை தொடர்பான பட்டயப் படிப்புகளும் வழங்கப்படுகின்றன.  வாய்ப்பாட்டு, வீணை, வயலின்,   பரதநாட்டியம், மிருதங்கம், தவில், நாகஸ்வரம்   ஆகிய பிரிவுகளில் கற்றுத் தரப்படுகின்றன.  ஓராண்டு மியூசிக் டீச்சிங் படிப்பும் இங்கு உள்ளது. 

திருச்சிராப்பள்ளியில் உள்ள  கலைக்காவேரி காலேஜ் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ்,  மதுரை தல்லாகுளத்தில் அமைந்துள்ள சத்குரு சங்கீத வித்யாலயம், சென்னை பாரிமுனையில் அமைந்துள்ள தமிழ் இசைக் கல்லூரி  ஆகியவற்றிலும் இசைதொடர்பான படிப்புகள் சொல்லித் தரப்படுகின்றன. 

நமது நாட்டுப்புற இசைகள்  இந்தக் கல்விநிறுவனங்களில் கற்றுத் தரப்படுவதில்லை.  அவற்றை கற்க விரும்பும் மாணவர்களுக்கு இவை வாய்ப்பளிப்பதில்லை.  இது வருந்தத்தக்கது. 

(தொடரும்)

கட்டுரையாசிரியர்: சமூக கல்வி ஆர்வலர் www.indiacollegefinder.org

ADVERTISEMENT
ADVERTISEMENT