இளைஞர்மணி

அமையுங்கள்... முழக்க வாசகத்தை !

10th Sep 2019 06:29 PM | - மு. சுப்பிரமணி 

ADVERTISEMENT

அரசு அமைப்புகள், அரசியல் கட்சிகள், வணிக நிறுவனங்கள் போன்றவை, தங்களது செயல்பாட்டை மக்களுக்கு எளிமையாகக் கொண்டு சேர்க்கத் தங்களுக்கென்று தனியாக முழக்க வாசகங்களை உருவாக்கிப் பயன்படுத்துவதுண்டு. இந்த முழக்க வாசகங்கள் சொல்வதற்கு எளிமையாகவும், அதே வேளையில் அந்தச் செயல்பாட்டை அனைவரது மனதிலும் ஆழமாகப் பதிவு செய்வதாகவும் அமைகின்றன.  

இந்தியாவில் 1871 -ஆம் ஆண்டு முதல் பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது. வருகிற 2021 -ஆம் ஆண்டில் பதினாறாவது மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி நடைபெற இருக்கிறது. 2021 -ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்கு ஏற்றதாக ஒரு முழக்க வாசகத்தை உருவாக்கும் போட்டி ஒன்றை இந்திய அரசு அறிவித்திருக்கிறது. 

வழிமுறைகள்

1. இந்தியாவில் அல்லது வெளிநாட்டில் வசித்து வரும் இந்தியக் குடியுரிமை பெற்ற அனைவரும் கலந்து கொள்ள முடியும். 

ADVERTISEMENT

2. போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் ஒரு வரியில் அமையும்படியான முழக்க வாசகத்தை உருவாக்கி, அதனை "பிடிஎஃப் கோப்' வடிவில் வலைத்தளத்தில் சமர்ப்பிக்க வேண்டும். 

3. போட்டிக்குச் சமர்ப்பிக்கப்படும் வாசகம் சொந்தமாக உருவாக்கப்பட்டதாக இருக்க வேண்டும். 

4. போட்டியில் பங்கேற்பவர்கள் வலைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் பெயர், ஒளிப்படம், அலைபேசி எண் உள்ளிட்ட முழுத்தகவல்களை அளித்திட வேண்டும். முழுமையான தகவல்கள் இல்லாத பங்கேற்பு நிராகரிக்கப்படும். 

5. போட்டிக்கு வரப்பெற்ற முழக்க வாசகத்தினை, படைப்புத்திறன், உண்மைத்தன்மை, உருவாக்கமுறை, எளிமை, கவரும் தன்மை போன்றவற்றைக் கணக்கில் கொண்டு, அவ்வாசகம் 2021 - ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அவசியத்தை இந்தியாவிலுள்ள அனைத்துக் குடும்பத்தினருக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் அமைக்கப் பெற்றிருக்கிறதா என்பதையும் அடிப்படையாகக் கொண்டு நடுவர் குழு சிறந்த முழக்க வாசகத்தைத் தேர்வு செய்யும்.

6. தேர்வு செய்யப்படும் சிறந்த ஒரு வாசகத்திற்கு ரூ. 25,000/- பரிசு வழங்கப்படும்.

7. பரிசு பெற்ற வாசகம், இந்திய அரசின் 2021 -ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணிகளுடன் தொடர்புடைய அனைத்திலும் பயன்படுத்தப்படும். 

8. இப்போட்டியில் நடுவர்குழுவின் முடிவே இறுதியானது.

9. போட்டிக்கான முழக்க வாசகத்தை வலைத்தளத்தில் சமர்ப்பிக்கக் கடைசி

நாள்: 19-9-2019.

கூடுதல் தகவல்கள்

இப்போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள், இந்திய அரசின் https://www.mygov.in/task/create-slogan-census-2021/ எனும் வலைத்தள முகவரிக்குச் சென்று கூடுதல் விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT