இளைஞர்மணி

தம்பிதான் ஃபர்ஸ்ட் ரேங்க்... ஆனா... ஃபெயிலு!

1st Oct 2019 11:40 AM | - கே.பி.மாரிக்குமார்

ADVERTISEMENT

 

வேலைக்கு ஆள் எடுப்பது என்பது கடினமானது. அது வைக்கோல் போரில் ஊசியைத் தேடுவது போன்றது. ஒரு மணி நேர நேர்காணலில் போதுமான அளவு தெரிந்து  கொண்டுவிட முடியாது. இறுதியில் ஏதோ உள்ளுணர்வு சொல்வதை வைத்துத் தான் முடிவு செய்ய வேண்டியதாகிறது.

 - ஸ்டீவ் ஜாப்ஸ்.

இந்திரன், சந்திரன் இருவரும் பள்ளிக் காலம் தொட்டே வகுப்புத் தோழர்கள், நண்பர்கள். படிப்பில் சந்திரன் முழு நிலவாய்ப் பிரகாசித்தான். இந்திரன்  எந்த நிலையிலும் ஒரு சீராக இல்லாமல், அமாவாசையாகவும் இல்லாமல் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதாவது ஒரு பிறை நிலைக்குப் போவதும் வருவதுமாக இருப்பான்.  கல்லூரிப் படிப்பு முடியும்வரை, பெளர்ணமியாய் மட்டும் பிரகாசிக்கவேயில்லை. 

ADVERTISEMENT

இருவருமே கலை, அறிவியல் கல்லூரிகளின் வீச்சை, தற்காலிக செழிப்பில் பொறியியல் கல்லூரிகள் விழுங்கியிருந்த காலகட்டத்தில் முதுகலைப் பொறியியல் பட்டம் பெற்றவர்கள். பொறியியல் கல்லூரியில் முதுகலை பட்டம் பெறுகின்றவரை படிப்பிலும்,  கெட்டிகாரத்தனத்திலும் அவரவர் அவரது நிலையை அப்படியே தக்கவைத்துக் கொண்டே நகர்ந்தனர். சந்திரன்  தான் எப்போதுமே "ஃபர்ஸ்ட்'.

இவர்கள் இருவரும் முதுகலைப் பொறியியல் படித்தது கூட விருப்பத்தினால் அல்ல. இளங்கலை படித்து முடித்தபோது, இவர்களது படிப்புக்கிருந்த வரவேற்பும், தேவையும் குறைந்து போனதால்... கெளரவமாக முதுகலைக் கூண்டில் தஞ்சம் அடைந்தவர்கள். முதுகலைக் கூண்டை விட்டு வெளியேறி வந்தவுடன், உலகம் முழுமைக்கும் பொறியியற் படிப்புக்கு சாதகமாக மாறியிருக்கும் என்று அவர்களும் எதிர்பார்த்து இருக்கவில்லை. இன்று காவல்பணியில், வங்கிப் பணிகளில், தமிழக அரசுத் துறைகளில் உதவியாளர் என்று,  "கிளாஸ் ஐஐஐ மற்றும் ஐய' என்பார்களே, அப்படிப் பணிகளில் இருக்கும் பல பொறியியற் பட்டாதாரிகளைப் போல... நம்ம இந்திரனும் சந்திரனுமே போட்டித் தேர்வு கோதாவில் குதித்தார்கள். 

சுமார் படிப்பு இந்திரனுக்கு இந்த கதி என்பது புரிந்துகொள்ள முடிகிறது, "ஃபர்ஸ்ட் ரேங்க் சந்திரனுக்குமா?' என்று நீங்கள் சந்தேகிப்பது சரியே. கல்லூரி வளாக வேலை வாய்ப்புக்கான "கேம்ப்பஸ் இன்டர்வியூ' க்களில் கிடைத்த வாய்ப்புகளின் உத்திரவாதமற்ற, நிலையற்றதன்மை சந்திரனுக்குள் ஒரு பீதியை, அச்ச உணர்வை ஏற்படுத்திவிட, பிடித்த... நிலையான... பெரிய வாய்ப்ப்புகளைப் பெற  போட்டித் தேர்வுகள் சமுத்திரத்தில் இந்திரனின் கைப்பிடித்து சந்திரனும் குதித்தான்.

""நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை. உன்னால் வெற்றியடைய முடியும்'' என்பதில் நம்பிக்கை கொண்டவன் நம்ம "சுமார்' இந்திரன். ஆனால், நம்ம "ஃபர்ஸ்ட்' ரேங்க் சந்திரனுக்கோ... தாம் ஏற்கெனவே வெற்றியாளராக நிரூபித்துவிட்டதாக ஓர் எண்ணம். இதே மனநிலையில், இருவரது போட்டித்தேர்வு பயணமும் தொடங்கி பயணித்தது. பிறகென்ன, சந்திரனுக்கு வெற்றி மேல் வெற்றி, தொடர் வெற்றி... என்று பயணம் அமர்க்களமாக இருந்தது.  இந்திரனுக்கு அரிதிலும்... அரிதாக வெற்றி எட்டிப் பார்த்தது. ஆனால், இந்திரனுக்கு வந்த வெற்றிகள் தரமானதாகவும், தனித்துவமாகவும் இருந்தன.

போட்டித் தேர்வுகளுக்கான வழிமுறைகளைப் புரிந்து நிதானமாக தனது தயாரிப்பினை செய்த இந்திரனுக்கும், வெறுமனே அறிவுரைகளை மட்டுமே ஏற்றுக் கொண்டு ஆரவாரமாக, ஆர்ப்பாட்டமாக தேர்வுகளை எதிர்கொண்ட சந்திரனுக்குமான வேறுபாடு இங்கு வேறுவிதமாக, தலைகீழாக மாறியிருந்தது. வெற்றி பெற்ற ஒரு சில தேர்வுகளுள் நல்ல பதவியினை ஒன்றைத் தேர்ந்து எடுத்து நிம்மதியாக தன் பணி செய்யத் தொடங்கினான் இந்திரன். 

சந்திரனுக்கோ பல வெற்றிகள் கிட்டியும், திருப்தியற்ற குழப்பமான சூழலே நிலவியது. இதன் காரணமாக, ஒரு பணியில் இருக்குபோதே, வேறு பணிகளுக்கான தேர்வில் வெற்றி பெற்று,  இதைவிட அது பெரிது, சிறப்பு என்றெல்லாம் கருதி, இருக்கின்ற பணியிலியிருந்து அடுத்த பதவிக்கு -துறைக்கு - இலாகாவுக்கு மாறுவதிலேயே குறியாய், "மரம்விட்டு மரம் தாவும் குரங்கு மனதாய்' பரிதவிப்புடனேயே பயணித்தான் சந்திரன். 

பரபரப்பு என்றுமே சுறுசுறுப்பு ஆகாது. பதறுகிற காரியம் சிதறும். இங்கு எவ்வளவு பெரிய படிப்பாளியாக இருந்தாலும் இது பொருந்தும். பதவி வேட்டையில் தேர்தெடுத்த ஒரு துறையில் ஏதாவது ஒரு  பணியில் தன்னை நிலைநிறுத்தத் தெரியாத சந்திரன், அவனது பயணத்தில், ஒரு துறைவிட்டு வேறொரு துறைக்கு மாறும்போது, முறையான துறை சார்ந்த அனுமதியினை பெறாத சட்டச் சிக்கலில் மாட்டினான். 

புதிதாக ஒரு பணியில் சேரும்போது, முந்தைய துறையில் இருந்து தரப்படும் அனுமதி அல்லது ஒப்புதல் கடிதம் மிகவும் முக்கியமானது, சட்டப்பூர்வமானது. குழப்பத்தில், அவசரத்தில், அதீத புத்திசாலித்தனத்தில் ஒரே நேரத்தில், ஒன்றல்ல.... 

இரண்டுக்கும் மேற்பட்ட துறைகளின் சம்பளப் பட்டியலில்  "ஊழியர்' என்கிற அடையாளத்தோடு "ஃபர்ஸ்ட்' ரேங்க் சந்திரன் பெயர் இருந்தது. உண்மை வெளிவந்து, புகாருக்கு ஆளாகி... விசாரணைக்குட்பட்டு...  பணிகளில் கட்டாயமாக விடுவிக்கப்பட்ட சந்திரன், ஐந்து ஆண்டுகள் எந்தவித போட்டித்தேர்வுகளிலும் கலந்துகொள்ள முடியாத தடைக்கு ஆட்பட்டு, சிறைவாசத்தைத் தவிர எல்லா சிக்கல்களையும் அனுபவித்து, பல ஆண்டுகள் விரயத்திற்குப் பின் இப்பொழுது அவரது படிப்பிற்கும்... பள்ளி, கல்லூரி படிப்பின்போது மிளிர்ந்த பளபளப்பிற்கும் தொடர்பில்லாத பதவியில்,  தனியார் நிறுவன ஊழியராக தன் காலத்தை ஓட்டுகிறார். 

"சுமார்' இந்திரனின் நிதானமும், தெளிவும் இன்று அவனை... மன்னிக்க வேண்டும், "அவரை' ஒரு கண்ணியமிக்க, அனுபவமிக்க  அதிகாரியாக ஒரு முக்கியமான இலாகாவில் பணியாற்றுகிற வாய்ப்பினை பெற்றுக் கொடுத்திருக்கிறது. "பாஸ்', "ஃபெயில்', "ஃபர்ஸ்ட்' ரேங்க், "லாஸ்ட் மார்க்'... இவையெல்லாம் வாழ்க்கைப் பயணத்தில் எந்த நேரத்திலும் மாறுபடலாம். எச்சரிக்கை! நிதானம்... நிரந்தர வெற்றியைத் தரும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT