புத்திசாலித்தனத்தை வளர்க்கும் முயற்சியில் ஈடுபடும்போது, மூளையை மழுங்கடிக்கும் பழக்கங்களைக் கைவிட வேண்டும். போதைப் பழக்கம், புகைபிடித்தல், அளவுக்கு அதிகமாக மது அருந்துதல் மூளையின் திறனை மழுங்கடிக்குமென்று உலக அளவில் அறிவியல் ஆய்வின் மூலம் நிரூபித்திருக்கிறார்கள். இவை தவிர, உற்சாகமின்மை, சோர்வு, இலக்கின்மை, திட்டமின்மை- மந்தத் தன்மையைக் கொடுக்கும்.
நடைமுறை வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு படிப்பறிவு மட்டும் போதாது. எதையும், எவரையும் விரைவில் புரிந்து கொள்ளும் சக்தியுள்ளவர்கள் கல்வியில் சராசரியாக இருந்தாலும், நிஜ வாழ்க்கையில் வெற்றி பெற்றிருப்பதை நாம் பார்த்திருப்போம். அவர்களின் வெற்றிக்கு அடிப்படையாக இருப்பது அவர்களுடைய புத்திசாலித்தனம் மற்றும் சாமர்த்தியம்.
நாம் பொதுவாக மதிப்பெண் பெறுவதையும், பட்டங்கள் வாங்குவதையும் மட்டுமே புத்திசாலித்தனத்தின் அடையாளக் குறியீடுகளாகக் கருதுகிறோம். ஆனால் கல்வியில் மந்தமாக இருந்தவர்கள் கலை, விளையாட்டு, அரசியல் மற்றும் தொழில்துறைகளில் புத்திசாலிகளாக இருந்திருக்கிறார்கள்.
நாம் பெற்ற திறமையைச் சரியான விதத்தில் பயன்படுத்திக் கொள்வதற்கும், எந்தச் சூழ்நிலையையும் புரிந்து கொள்வதற்கும், மனிதர்களை எடை போடுவதற்கும் நம்முடைய வெற்றிப் பாதையை நிர்ணயித்துக் கொள்வதற்கும் புத்திசாலித்தனம் அவசியமாகிறது.
சி.அருண் பரத் எழுதிய "சிறிய மாற்றம் பெரிய வெற்றி' என்ற நூலிலிருந்து...