இளைஞர்மணி

சிவில் சர்வீஸ் தேர்வு... பார்வையற்றவர்களும் எழுதலாம்!

12th Nov 2019 09:27 AM | - வி.குமாரமுருகன் 

ADVERTISEMENT


பார்வையற்றோர் பலர் எத்தனையோ தளங்களில் பயணப்பட்டு வெற்றி பெற்று வருகிறார்கள். ஆனால், யுபிஎஸ்சி எனப்படும் சிவில் சர்வீஸ் தேர்வுகளை எதிர்கொள்வதில் பார்வையற்றோர் சில தடுமாற்றங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அவர்களின் பிரச்னைக்கு தீர்வு கண்டு பாடக்குறிப்புகளை பிரெய்லி மற்றும் ஒலி வடிவில் வழங்கி வருகிறார் தன்னார்வலர் ஒருவர்.

அவர் ஹைதராபாத்தைச் சேர்ந்த அகெல்லா ராகவேந்திரா.

""1994-ஆம் ஆண்டு முதல் 1999-ஆம் ஆண்டு வரை சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுதினேன். ஆனால்,12 மதிப்பெண்களில் வெற்றி வாய்ப்பை இழந்தேன். தோல்விக்கு காரணம் என்ன? எங்கு தவறு நிகழ்கிறது? என்பதை ஆய்வு செய்து தெரிந்து கொண்டேன். அதன்பின், இந்த தவறுகள் நிகழாமல் வெற்றியை எட்டுவதற்கான வழிமுறையை வருங்காலத்தில் யுபிஎஸ்சி தேர்வு எழுதுபவர் களுக்குத் தெரிவித்து இளைஞர்களுக்கு வழிகாட்ட தீர்மானித்தேன். இதற்காக 2001-ஆம் ஆண்டு தில்சுக்நகரில் ஐஏஎஸ் பயிற்சி மையத்தைத் தொடங்கினேன்'' என்கிறார் அவர்.

""அதன் பின், 2016-ஆம் ஆண்டு அமெரிக்கா சென்றபோது அங்கு பார்வையற்றோருக்கும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டதைப் பார்த்தேன். அதுதான் இந்திய பார்வையற்ற மற்றும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கும் அத்தகைய வசதிகளை வழங்கவேண்டும் என்ற எண்ணத்தை எனக்கு ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து அந்த ஆண்டு முதல் பார்வையற்றோருக்கான இந்தப் பணியைச் செய்து வருகிறேன்.

ADVERTISEMENT

போட்டித் தேர்வுகளிலேயே யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு கடினமான ஒன்றாக கருதப்படுகிறது. 2018 ஆம் ஆண்டில் முதல்நிலைத் தேர்வெழுதிய 8 லட்சம் பேரில் 10,500 பேர் மட்டுமே முதன்மைத் தேர்விற்கு தகுதி பெற்றுள்ளனர். ஒவ்வோர் ஆண்டும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் பார்வையற்றோரும் இந்தத் தேர்வினை எழுதுகின்றனர். தேர்விற்கான ஒட்டுமொத்த பாடத்திட்டங்களில் வெறும் 20 சதவீதம் மட்டுமே இவர்களுக்கு பிரெய்லி முறையில் கிடைக்கிறது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் யுபிஎஸ்சி தேர்வு தொடர்பான விரிவான பாடக்குறிப்புகளை பிரெயில் முறையிலும் ஆடியோ புத்தகமாகவும் வெளியிட்டு பார்வையற்றோருக்கு பயிற்சி அளித்து வருகிறேன்.

சுமார் 7 ஆண்டுகள் கடினமாக உழைத்து ஆய்வு மேற்கொண்டு பாடங்களை விரிவாகவும் முழுமையாகவும் தொகுத்து வழங்கியுள்ளேன். அதிகஅளவில் புத்தகங்கள் இருந்தால் யாரும் படிப்பதில்லை என்பதால் ஒரு முழுமையான தொகுப்பையும், ஆடியோ பதிப்பையும் உருவாக்கினேன். இன்று அனைவரும் ஸ்மார்ட் போன் வைத்துள்ளனர். எனவே அவர்கள் அன்றைய தினம் படிக்க வேண்டிய இரண்டு அல்லது மூன்று பாடங்களை மட்டும் பதிவேற்றம் செய்வேன்.

அவர்கள் எந்த அளவிற்கு கற்றுக் கொண்டுள்ளனர் என்பதையும் டைம்-டேபிள் போட்டு கண்காணித்து வருகிறேன்'' என்கிறார் அவர்.

சிவில் சர்வீஸ் தேர்விற்கு தயாராகி வரும் சாகர், சிவப்பிரகாஷ் ஆகிய பார்வையற்ற மாணவர்கள் இருவருடன் இணைந்து ஆடியோ புத்தக வடிவில்
30- க்கும் மேற்ட்ட புத்தகங்களைத் தொகுத்துள்ள அவர், அகெல்லா ராகவேந்திர பவண்டேஷன் மூலம் இந்த சேவையை மேற்கொண்டு வருகிறார்.

ஆங்கில மொழியில் இருக்கும் இந்த ஆடியோ புத்தகம் நாடு முழுவதும் உள்ள அனைவருக்கும் கிடைக்கும் வகையில் online-ias.com, www.akellaraghavendra.com.. ஆகிய இணையதளங்களில் இலவசமாகக் கிடைக்கிறது. இந்த தளத்திற்குள் சென்று யார் வேண்டுமானாலும் சிவில் சர்வீஸ் தேர்விற்குரிய ஆடியோ, வீடியோக்களைப் பார்வையிட முடியும். அந்த தளத்திலுள்ள தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பார்வையற்றோர் தங்களின் ஆடியோ, பிரெய்லி வடிவிலான புத்தகங்களையும் பெற்றுக் கொள்ள முடியும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT