மறுப்பதும் ஒரு கலை!

திறமையான மனிதர்கள் தான் செய்ய நினைக்கும் அனைத்து காரியங்களையும் வெற்றிகரமாக முடிப்பார்கள். அவர்களது இந்தத் திறமையை அறிந்துகொண்ட அருகில் இருப்பவர்கள்,
மறுப்பதும் ஒரு கலை!

திறமையான மனிதர்கள் தான் செய்ய நினைக்கும் அனைத்து காரியங்களையும் வெற்றிகரமாக முடிப்பார்கள். அவர்களது இந்தத் திறமையை அறிந்துகொண்ட அருகில் இருப்பவர்கள், அவர்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்வார்கள். நிறைய சந்தேகங்களும் கேட்பார்கள். இன்னும் சிலர், தங்களால் முடியாத வேலைகளை திறமை வாய்ந்தவர்களிடம் அளித்து நிறைவேற்றிக் கொள்ள முயற்சிப்பார்கள். அதேபோல திறமையானவர்களிடம் தங்களது பொறுப்புகளை ஒப்படைக்க அதிகாரிகளும் விரும்புவர்.
 மயில் இறகு தானே என்று துச்சமாக எண்ணி அளவுக்கு அதிகமாக வண்டியில் ஏற்றினால் கனம் தாங்காமல் வண்டியின் அச்சு முறிந்து விடும் என்கிறார் வள்ளுவர். அதுபோல, அனைத்தையும் முடிக்கவல்ல திறமையுள்ளவராய் இருப்பினும், அளவுக்கு அதிகமான வேலைகளை செய்யும்போது நேரம், உழைப்பு, உடல்நலம், மனநலம் பாதிக்கப்படுவது மட்டுமன்றி, வாழ்க்கையில் நிர்ணயித்த இலக்கை அடைவதற்கும் அது தடையாக இருக்கும்.
 எனவே நாம் செய்ய விரும்பாத ஒன்றை நமது நண்பர்களோ, உறவினர்களோ, அதிகாரியோ செய்யக் கோரும்போது அந்தக் கோரிக்கையை மறுப்பது எப்படி?
 ஏன் மறுக்க வேண்டும்?
 நமக்கு திறமை இருக்கலாம். செய்யக் கூடிய ஆற்றலும் இருக்கலாம். அதற்காக அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்ய வேண்டியதில்லை. நம்முடைய வேலைகளுக்கு அப்பாற்பட்டு, பிறரது வேலைகளைச் செய்வது அவர்களது திறமையை கட்டிப் போடுவதுடன் அவர்களை சோம்பேறியாக்கவும் வழிவகுக்கும்.
 எனவே நாம் நட்பு பாராட்டும் நண்பர்கள் முன்னேற வேண்டும் என அக்கறை கொண்டிருந்தால், அவர்களிடம் மாட்டேன் என்று சொல்லப் பழகியே ஆக வேண்டும்.
 மறுப்பது ஒரு கலை
 "என்னால் இதைச் செய்ய முடியாது. நான் இதைச் செய்ய மாட்டேன் என்று சொல்லுங்கள்' என அடுத்தவருக்கு அறிவுரை கூறுவது மிக எளிது. ஆனால் நம்மிடம் உதவி கேட்டோர் மனம் காயப்படாதவாறு, அவர்களிடையே உள்ள உறவு பாதிக்கப்படாதவாறு அதை மறுப்பது நடைமுறை வாழ்க்கையில் மிகக்கடினம்.
 ஏனென்றால் ஓர் இயந்திரத்தைப் போல "ஆம்', "இல்லை' என்று இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வகையில் எளிய வகையில் நமது மனம் கட்டமைக்கப்படவில்லை.
 சாதக, பாதகங்களை பகுத்தாய்ந்து, விருப்பமுள்ளவர், வேண்டாதவர் எனப் பார்த்து, சூழ்நிலைக்கேற்றாற் போல முடிவு எடுக்க வேண்டும்.
 இதற்கு என்ன செய்ய வேண்டும்?
 மனதைத் தயார் படுத்துதல்

 நமக்கு நெருங்கிய ஒருவர் ஒரு பணியை அளிக்கும்போது "மாட்டேன்' என்று சொல்லிவிடுவதால், அவர்களுடனான நட்பு முறிந்து விடுமோ, பழக்கம் பாதிக்கப்படுமோ என்ற குற்ற உணர்வு அறவே வேண்டாம்.
 ஏனெனில் நம் மேலதிகாரி ஒரு பணியை அளிக்கும்போது, அதற்கு "மாட்டேன், முடியாது' என்று கூறுவது கீழ்படியாமை அல்ல. நண்பர்கள் கோரும் உதவிக்கு "முடியாது' என்பது உதவக் கூடாது என்பதற்காக அல்ல.
 அவர்களுக்கு உதவும் நோக்கில், நமது பணிக்கு அப்பாற்பட்டு, வேண்டா, வெறுப்பாக நாம் செய்யும் வேலைகள், நமது உழைப்பு, நேரம், நலம், ஈடுபாடு அனைத்தையும் பாதிப்பதோடு, சில சமயங்களில் அந்தப் பணியையும் பாதிக்கும் என்பாதாலேயே ஆகும்.
 எந்த ஒரு நல்ல நண்பரும் அத்தகைய காரணத்துக்காக நம்மை விட்டு விலக மாட்டார்கள். அதேநேரத்தில் நமது நண்பர்களின் இக்கட்டான சூழ்நிலைகளில் நாம் அவர்களுக்கு உதவாமல் இருக்க போவதில்லை.
 எனவே இவையனைத்தையும் மனதில் நிறுத்திக் கொண்டு "மாட்டேன்' என்று சொல்ல மனதைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.
 சுற்றி வளைக்க வேண்டாம்
 பல சமயங்களில் பிறரது கோரிக்கைகளை மறுப்பது நமக்கும் மிகவும் கடினமான காரியமாக இருக்கும். நமது பதில் தெளிவாகவும், உறுதியாகவும் இருக்க வேண்டும். இல்லையென்றால், அந்த பேச்சுவார்த்தை வளர்ந்து கொண்டே போவதோடு, பல சமயங்களில் நாம் மறுக்க முடியாமல் வேண்டா வெறுப்பாக ஏற்றுச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுவோம்.
 ஒருவர் ஒரு பணியை அளிக்கும்போது, அச்சமயத்தில் முடியாது என்று நமக்கு திட்டவட்டமாக தோன்றினால் அதை உடனே தெரியப்படுத்தி விட வேண்டும். அதைவிட்டு, பார்க்கலாம், யோசிக்கலாம் என்று நேரம் எடுத்துக் கொண்டால், பின்னர் மறுப்பது மிகவும் கடினமே.
 பக்குவமாக எடுத்து சொல்லுதல்
 ஒரு காரியம் செய்யும்போது, பேசும்போது அதற்கான இடம், பொருள் பார்த்தே செய்ய வேண்டும். "மாட்டேன், முடியாது' என்று அனைத்து இடத்திலும் நேரடியாகச் சொல்லி விட முடியாது. எனவே காரியமறிந்து, நேரமறிந்து பக்குவமாக "முடியாது' சொல்ல வேண்டும்.
 சில இடங்களில் குறிப்பால் உணர்த்த வேண்டும். சில சமயங்களில் சாதுர்யமாக பேச வேண்டும். சில சமயங்களில் நேர்பட பேசி மறுக்க வேண்டி வரும். இவ்வாறு அந்தந்த இடத்துக்கு தகுந்தவாறு சரியாகப் பேசினால், "முடியாது' என்பதை நாம் எளிதாகச் சொல்லி விடலாம்.
 தள்ளிப் போட்டால் போதும்
 சில நேரங்களில் நமக்கு மிகவும் வேண்டுபவர் கோரிய பணியை நம்மால் உடனே செய்ய இயலாது அல்லது வேறு ஒரு முக்கியமான பணியில் நாம் ஈடுபட்டிருப்போம். அத்தகைய சமயங்களில், நம்மிடம் உதவி கோரியவரிடம், "எல்லாம் சரிதான்..ஆனால்..' என்று சந்தேகத் தொனியில் இழுத்து பேசி குறிப்பால் உணர்த்தும்போது, அந்தப் பணியை செய்ய நமக்கு விருப்பமில்லை என்பதை அவரே உணர்ந்து விடுவார்.
 அத்துடன், "என்னால் இதைச் செய்ய முடியுமா? என்பது சந்தேகம்தான்' என்று சாதுர்யமாக கூறலாம். நாம் செய்யும் பணி, கேட்பவர் பணியை விட முக்கியமானது என்று தோன்றும்போது, "எனக்கு வேறொரு முக்கியமான வேலை இருக்கிறது. இதுகுறித்து நாம் பின்னர் விவாதிக்கலாம்' என்று உண்மையை கூறலாம்.
 முற்றிலும் தவிர்க்க
 எந்த ஒரு கோரிக்கையையும் முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டுமென்றால் "முடியாது' என்ற ஒற்றை வார்த்தையில் உறுதியாக இருந்தால்தான் முடியும்.
 எனக்கு இந்த இந்த வேலைகள் உள்ளன. எனது சூழ்நிலைகள் இவ்வாறு உள்ளன. எனவே என்னால் இந்த கோரிக்கையை ஏற்க முடியாது என நேரடியாகச் சொல்லி விட வேண்டும். சில நேரங்களில் அவர்கள் தரும் பணியைச் செய்வதற்கு நமக்கு தெரிந்த வேறோர் ஆள்கூட இருக்கலாம். அந்த நேரத்தில், " இந்த பணியை என்னைக் காட்டிலும் அவர் சிறப்பாகச் செய்வார். அவருக்கு ஈடுபாடும் அதிகம் . அவரிடம் முயற்சி செய்யுங்கள்'' என்று லாகவமாக நழுவினால், நாம் மறுத்த மாதிரியும் ஆயிற்று. அவரது பணியை நிறைவேற்ற வழிகாட்டியதாகவும் ஆயிற்று.
 இவ்வாறு வார்த்தைகளை கவனமாக கையாண்டு, சூழ்நிலைக்கு தகுந்தவாறு செயல்பட்டால் "மாட்டேன், முடியாது' என்று சொல்லவும் நாம் கற்றுக் கொள்ளலாம்.
 -க. நந்தினி ரவிச்சந்திரன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com