தன்னலமின்மையே தரணியாளும்! ஆர்.திருநாவுக்கரசு ஐ.பி.எஸ்.

வட இந்தியாவில் இருக்கும் அமர்நாத்தின் பனிலிங்கத்தைக் காண மூன்று இளம் துறவிகள் பயணமானார்கள். கடும் குளிரிலிருந்து அவர்களைப் பாதுகாத்துக் கொள்ள ஒரு சிறிய பாத்திரத்தில் நிலக்கரியை
தன்னலமின்மையே தரணியாளும்! ஆர்.திருநாவுக்கரசு ஐ.பி.எஸ்.

தன்னிலை உயர்த்து! 45

வட இந்தியாவில் இருக்கும் அமர்நாத்தின் பனிலிங்கத்தைக் காண மூன்று இளம் துறவிகள் பயணமானார்கள். கடும் குளிரிலிருந்து அவர்களைப் பாதுகாத்துக் கொள்ள ஒரு சிறிய பாத்திரத்தில் நிலக்கரியை எரியவிட்டு பின்னர் அதனை மூடி நெருப்பைக் கனன்று கொண்டிருக்குமாறு செய்து எடுத்துச் சென்றனர். அவர்களுடைய பயணத்தில் ஓரிடத்தில் பலர் குளிரால் நடுங்கிக் கொண்டிருப்பதைக் கண்டதும் ஒரு துறவி தனது பாத்திரத்திலிருந்த நெருப்பினை எடுத்தார். சுள்ளிகளைப் பொறுக்கி பற்ற வைத்தார். அனைவரும் அதில் தீக்காய்ந்து மகிழ்ந்தனர்.
பின்னர் அவர்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். அவர்கள் அன்று இரவு கோயிலுக்குச் செல்வதற்கு முன்பே இருள் கவ்வியது. இரண்டாமாவர் தனது பாத்திரத்திலுள்ள நெருப்பினை எடுத்து ஒரு தீப்பந்தத்தை உருவாக்கினார். அதன் வெளிச்சத்தில் அந்த மூவரும் கோவிலை அடைந்தனர். அப்போது அங்கே குளிர் அதிகமாயிருந்தது. அப்போது மூன்றாமாவர், "நீங்கள் இருவரும் முட்டாள்கள், உங்களது நெருப்பை மற்றவர்களுக்காக வீணாக்கிவிட்டீர்கள். இப்போது நான் மட்டும் குளிர்காயப் போகிறேன்'' என்றார். மேலும், அகந்தையோடு அவர் தனது பாத்திரத்தை திறந்தபோது அதில் நெருப்பே இல்லை, சிறிது சாம்பலும், நிலக்கரியும் மட்டுமே இருந்தன.
கொண்டு வந்த நெருப்பினால் ஒருவர் பலருக்கு கதகதப்பைத் தந்தார். மற்றொருவர் வெளிச்சத்தினை தந்தார். ஆனால் ஒருவர் தனது தன்னலமான செயல்பாட்டினால் அந்த நெருப்பு அவருக்கே பயனில்லாமல் போய்விட்டது.
தன்னலம் தன்னையே அழிக்கும். தன்னலமின்மை தன்னை உயர்த்துவதோடு பிறரையும் உயர்விக்கும். "பிறருக்காக வாழ்பவரே, அழியாப் புகழினைப் பெறுகின்ற பாதையில் பயணிக்கிறார்' என்ற புனித பவுலின் வரிகளைப்போல் வாழ்க்கையின் அழகும், அற்புதமும் மற்றவர்களுக்காக வாழ்வதில்தான் இருக்கிறது.
தன்னலமின்மை மனிதனின் உயர்ந்த குணம். மனிதனை உயர்த்துகின்ற குணம். தன்னலமின்மையே ஒரு மனிதனின் உன்னதம். அது மனிதனுக்குள் இருக்கும் அன்பினையும், இரக்கத்தையும் வெளிக்கொணரும். தன்னலமின்மை மகிழ்ச்சியான வாழ்க்கையின் அடித்தளம். அது மனதை மகிழ்ச்சியாக்குவதோடு ஆத்மாவையும் வலுப்படுத்துகிறது. பிறருக்காக உழைப்பதும், பிறரை மகிழ்விப்பதும் ஒரு சுகம். அது ஓர் அற்புதமான அனுபவம். அதனை அனுபவித்தவர்கள் தனக்கென வாழ்வதை விரும்புவதில்லை.
தன்னை வளர்த்துக் கொள்வது தன்னலம் அல்ல. தனது ஆடம்பரத்தைக் கூட்டிக் கொள்வதும், அடுத்தவர் தேவையைப் பறித்துக்கொள்வதும், இயன்றதைச் செய்யாமலிருப்பதும் தன்னலமே. தன்னலமில்லாதவர் தனது வசதிகளைப் பார்ப்பதில்லை. மாறாக தன்னைச் சார்ந்தவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்கிறார். அவர் தன்னலத்திற்காக பிறரது துணையையோ பிறரது உடமையையோ எதிர்பார்ப்பதில்லை.
ஒருமுறை மகாத்மா காந்தி எரவாடா சிறையிலிருந்தபோது, சிறை அதிகாரி அவருக்காக மேசை, நாற்காலி மற்றும் பல பொருட்களை வாங்கி வந்தார். "இதெல்லாம் யாருக்காக' என்று காந்திஜி கேட்க, "எல்லாம் உங்களுக்காகத்தான். இன்னும் என்ன வேண்டும் என்று சொல்லுங்கள்? நான் வரவழைக்கிறேன்' என்றார் அந்த சிறை அதிகாரி. 
"எனக்கு எதுவும் வேண்டாம்' என மறுத்தார் காந்திஜி. அதற்கு, "அரசாங்கம் அனுமதிக்கும்போது, நீங்கள் ஏன் மறுக்கிறீர்கள்?' என்று சிறை அதிகாரி கேட்டார். "அரசாங்கம் அனுமதிக்கலாம், ஆனால் எனது நாட்டு மக்களின் வரிப்பணத்தை இவ்வாறு செலவு செய்வதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்' என்றதோடு அவர் கொண்டு வந்த பொருட்களை பயன்படுத்த மறுத்துவிட்டார் காந்திஜி. 
தன்னலமின்மையை தங்கள் இதயத்திலிருந்து வெளிக்கொணர்ந்த ஒவ்வொருவரும் இச்சமூகத்தின் விடிவெள்ளிகளே. கல்கத்தா நகரத்து சாலையோரங்களிலும், சாக்கடைகளிலும், துவண்டு கொண்டிருந்த நோயாளிகளை வாரியெடுத்து ஆரத்தழுவி அவர்களுக்கு மருந்திட்ட கரங்கள் அன்னை தெரசாவின் தன்னலமற்ற கரங்களாகும். நம் இந்தியநாடு அடிமைப்பட்டுகிடந்தபோது, "சுதந்திர தேவி! உன்னை தொழுதிடல் மறக்கிலேனே'' என சுதந்திரப் போருக்காக வெள்ளையனை எதிர்த்து வீறுநடை போட்ட கால்கள் தன்னலமற்ற கால்களாகும். அமெரிக்க நாட்டின் உயர் ரக தங்கும் விடுதியில் தங்கியபோதும், "எனது தேச மக்கள் கோடிக்கணக்கானோர் வெற்றுத் தரையிலும், ஒரு குட்டிப் பாயிலும் உறங்குகின்றபொழுது எனக்கு மட்டும் எதற்கு இந்த ஆடம்பரம்?' என்று தரையினில் படுத்து உறங்கி தனது தன்னலமின்மையே தரணிக்குக் காட்டிய இதயம் சுவாமி விவேகானந்தருடையது.
தன்னலமில்லாதவர்கள் இம்மண்ணிற்கு மகத்தானவர்கள். அவர்கள் விரும்பியதை அடைவர். மேலும் அவர்களுக்கு மணற்கேணியின் ஊற்றைப்போல் நிறைய கிடைக்கும். ஸ்டாக்ஹோம் மற்றும் தெற்கு கரோலினா பல்கலைக்கழகத்தினரின் ஆராய்ச்சியில் தன்னலமில்லாதவர்கள் அதிகச் சம்பளம் பெறும் பதவிகளை வகிக்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. பரந்த மனப்பான்மையுடையவர்கள் ஆரம்ப காலத்தில் கஷ்டப்பட்டாலும் அவர்களின் பிற்பகுதியில் மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள் என்பதே உண்மை.
வாழ்வின் இறுதி தீர்ப்பு நாளில் நாம் அனைவரும் படைத்தவரின் முன்பு நிறுத்தப்படுவோம். அப்பொழுது அவரின் நியாயத்தராசு நாம் தன்னலத்துடன் வாழ்ந்தோமா அல்லது தன்னலமின்மையுடன் இவ்வாழ்வினைப் பெருமைப்படுத்தினோமா என்பதைத் தெரிவிக்கும். அதற்கு அவர் நம்மிடம் எட்டு கேள்விகளைக் கேட்பார். முதலாவதாக, "நீங்கள் எவ்வளவு பெரிய வீட்டில் வசித்தீர்கள்?' என்று கேட்காமல் "நீங்கள் வாழ்ந்த வீட்டில் எத்தனை பேரை வரவழைத்து தங்க இடம் கொடுத்தீர்கள்?' என்ற கேள்வியை முன்வைப்பார். இரண்டாவதாக, "உனது வீட்டின் அலமாரியில் எத்தனை வகையான ஆடைகள் இருந்தன?' என்பதை விட அதில் எத்தனை ஆடைகளைப் பிறருக்கு தந்து மகிழ்ந்தாய்? என்று கேட்பார். 
மூன்றாவதாக, "எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாய்?' எனக் கேட்காமல் உன்னால் நீ வகித்த பதவிக்கு பெருமை சேர்த்தாயா? எனக் கேட்பார். நான்காவதாக, உனது சொத்தின் மொத்த மதிப்பு எவ்வளவு? என்று கேட்க மாட்டார். அந்த சொத்தினை சேர்ப்பதற்கு உனது மனசாட்சியை அடகு வைத்தாயா? எனக் கேட்பார். ஐந்தாம் கேள்வியாக, "உனக்கு எத்தனை நண்பர்கள்?' என கேட்காமல் "உன்னை எத்தனை பேர் நண்பர்களாக ஏற்றுக் கொண்டார்கள்?' எனக் கேட்பார். ஆறாவதாக, "உன்னுடைய சுற்றம் எவ்வளவு?' என்பதைவிட "உனது சுற்றத்தினை எவ்வாறு நடத்தினாய்?' என்பார். ஏழாவதாக "நீ கறுப்பா? சிவந்த நிறமா?' எனக் கேட்கமாட்டார். "நீ எத்தகைய பண்புள்ளவன்?' எனக் கேட்பார். எட்டாவதாக நீ எவ்வளவு கற்றுக் கொண்டாய்? என்று கேட்பதைவிட நீ எத்தனை பேருக்கு நல்லவற்றை கற்றுக் கொடுத்தாய்? என்று கேட்பார்.
மொத்தத்தில் வாழ்க்கையில் வாழும் காலத்தில் வெறும் மனிதனாக வாழ்வதைவிட பிறருக்கு பயன்படும் வகையில் வாழ்பவனே இச்சமூகத்தில் வாழ்ந்ததாக கருதப்படுகிறார். "நீங்கள் உங்களிடம் இருப்பவற்றை கொடுத்தால் மிகவும் குறைவாக கொடுக்கிறீர்கள், உங்களையே கொடுத்தால் தான் உண்மையாக கொடுக்கிறீர்கள்' என்ற கலீல் ஜிப்ரானின் வரிகளுக்கேற்ப வாழ்வதே தன்னலமற்ற அற்புதமான வாழ்வாகும்.
ஒரு நாள் பகவான் கிருஷ்ணரும், அர்ஜுனரும் நடந்து வந்து கொண்டிருந்த பொழுது ஒருவர் யாசகம் கேட்டார். அப்பொழுது, "கிருஷ்ணா! இவரது வறுமையை போக்கிட வேண்டியது தானே?" என்றார் அர்ஜுனர். அப்படியே ஆகட்டும் என்று கூறி, அவரது கைகளில் இருந்த விலை உயர்ந்த பொன்னும் பொருளையும் அந்த யாசகரிடம் கொடுத்தார் கிருஷ்ணர்.
மிகுந்த மகிழ்ச்சியோடு அதனைப் பெற்றுக் கொண்டு, "இது என்னுடைய வறுமையையும் எனது தலைமுறையின் வறுமையையும் போக்கும்' என்று கூறி கொண்டே அந்த யாசகன் சென்றான். வழியிலே நான்கு கயவர்கள் அவரை நிறுத்தி அவரிடமிருந்த அனைத்து நகைகளையும் பறித்து கொண்டார்கள். சில நாட்கள் கழிந்தது. மீண்டும் யாசகம் கேட்டு வந்த அவரிடம் நடந்ததைக் கேட்டறிந்தார் கிருஷ்ணர். அவருக்கு மீண்டும் ஒரு விலை உயர்ந்த நவரத்தின கல்லை தந்தார் கிருஷ்ணர். அதனை வாங்கியதும், "இது எனது வாழ்க்கையின் வறுமையினைப் போக்கும்' என்று கூறிக்கொண்டே அவனது வீட்டில் பரணில் இருந்த பழைய பானையில் ஒளித்து வைத்தான். ஒரு நாள் அவனது மனைவி அந்த பானையினை எடுத்துக்கொண்டு ஆற்றிற்குச் சென்றார், அப்பொழுது அந்த நவரத்தினக் கல் ஆற்றில் விழ, அதனை ஒரு பெரிய மீன் ஒன்று விழுங்கியது. சிறிது நாட்கள் கழித்து மீண்டும் அந்த யாசகன் பிச்சை எடுக்க, நடந்ததைக் கேட்டறிந்தார் கிருஷ்ணர். 
அவரிடம் இரண்டு நாணயங்களைக் கொடுத்தார். அதனை வாங்கிக் கொண்டு "இந்த இரண்டு நாணயம் நமக்கு ஒன்றும் பெரிதாக பயன்படாது.இதனை யாருக்காவது கொடுத்துவிட வேண்டும்' என நினைத்துக் கொண்டே சென்றான். அவன் செல்லும் வழியில் மீன்களை ஒருவன் கூவி விற்றுக் கொண்டிருந்தான். அவனிடம் உயிரோடு மீன்கள் இருந்தன.இந்த மீன்களை வாங்கினால் மீனவனுக்கு பணம் கிடைக்கும். மீன்களைக் கடலில் விட்டால் அவையும் உயிர் பிழைக்கும் என்று இரண்டு நானயத்திற்கு மீன்களை வாங்கினான். அதில் ஒரு மீன் அதன் சுவாசத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டது. அதன் வாயில் இருப்பது என்னவென்று எடுப்பதற்கு முயற்சிக்க அதனுள்ளே அன்று அவன் மனைவி நழுவவிட்ட நவரத்தின கல் இருந்தது. அதை எடுத்ததும் ஆனந்தமாய், "ஆ! என் கையிலே மாட்டிக்கிடுச்சி!' என்று கத்தினான். அதே நேரத்தில் முதன் முதலில் யாசகனிடம் களவாடியவர்கள் தங்களைத் தான் அடையாளம் கண்டுவிட்டான் என்று ஓட ஆரம்பித்தனர். அவர்களை கிருஷ்ணர் ஓடிச் சென்று பிடித்தார். அவர்களும் தங்களது குற்றத்தை ஒப்புக் கொண்டு எல்லாவற்றையும் திருப்பிக் கொடுத்தனர். 
"இதிலிருந்து வாழ்க்கைக்கு என்ன செய்தி சொல்ல வருகிறாய் கிருஷ்ணா?' என்றார் அர்ச்சுனர். அதற்கு, "முதலில் இரண்டு முறை நாம் பொன்னும், பொருளையும் கொடுத்தபொழுது அவரது எண்ணமெல்லாம், அவனது குடும்பம் மட்டுமே உயர வேண்டும் என்று நினைத்தான். ஆனால், இந்த முறை "தன்னலமில்லாமல்' மீன் வியாபாரிக்காகவும் மீன்களுக்காகவும் தன்னிடமிருந்த பணத்தைக் கொடுத்தான். தன்னலமின்றி அவர் வாழ நினைக்கும் போது அவர் பிறரை வாழ வைக்கிறார்.அந்த நற்குணத்தால் அவர் வேண்டியதை அடைவதோடு, வாழ்க்கையில் இழந்ததையும் பெறுகிறார்'' என்றார் பகவான் கிருஷ்ணர். 
தன்னலம் வாழும் !
தன்னலமின்மை வாழ வைக்கும்!
(தொடரும்)
கட்டுரையாசிரியர்:
காவல்துறை துணை ஆணையர், நுண்ணறிவுப் பிரிவு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com