22 செப்டம்பர் 2019

கணிதப் பூங்கா!

DIN | Published: 21st May 2019 11:59 AM

ஆந்திர மாநிலம், குப்பம் அருகே 172 ஏக்கரில் "அகஸ்த்யா படைப்பு வளாகம்' உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு மாணவர்களுக்கு கணிதத்தில் அதிக ஈடுபாட்டை தூண்டுவதற்காகவும், அவர்கள் கணிதத்தின் அடிப்படையை எளிதில் புரிந்துகொள்வதற்காகவும் "ராமானுஜன் கணித பூங்கா மற்றும் ஆய்வகம்' 2017 இல் தொடங்கப்பட்டுள்ளது. கணிதத்துக்கும், பிற துறைகளான கட்டடக் கலை, இசை, கலை, இயற்பியல், பொறியியல், தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கும் இடையே உள்ள தொடர்புகளை விளக்கும் வகையில், இங்கு காட்சி விளக்கங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நேரடி அணுகுமுறையில் மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது. 
இந்த பூங்காவில் உள்ள Platonic Solids, Power of Power, தொடுதிரை கணினி மூலம் கணிதம் சார்ந்த கலந்துரையாடல் மற்றும் கணித விளையாட்டுகளுக்கான அமைப்புகளை அதிக எண்ணிக்கையிலான பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பார்வையிட வருகின்றனர். குறிப்பாக, கணித ஆய்வகம் மற்றும் பூங்காவைப் பார்வையிட ஆண்டுதோறும் 7ஆயிரத்திலிருந்து 9 ஆயிரம் மாணவர்கள் வரை வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் மாணவர்களில் சிலர், அதிக அளவிலான கணிதப் புதிர்களுக்கு விடையளிப்பவர்களாக மாறுவதைக் காண முடிவதாகவும், கணித சூத்திரத்தில் வரும் பை-யின் (pi) மதிப்பை இங்கு வந்த ஒரு மாணவி 46 தசம இடங்கள் வரை நினைவுபடுத்திக் கூறியதாகவும் கூறப்படுகிறது.

இந்த கணிதப் பூங்காவில் நடைபெறும் பயிற்சிப் பட்டறையில், இதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்று அவர்கள் பெறும் அனுபவங்களை வகுப்பறை கற்பித்தலில் பயன்படுத்துகின்றனர். இதுகுறித்து வளாக திட்ட இயக்குநர் மானஷா குட்டு கூறுகையில், "ஆசிரியர்கள், பெற்றோர்கள், தன்னார்வலர்கள், அரசு அலுவலர்கள், தொழில் பிரதிநிதிகள் கணிதப் பூங்காவின் செயல்பாடுகளில் பங்கேற்க முடியும். பெரும் அளவிலான மக்களிடம் அதிக ஈடுபாட்டைத் தூண்டுவது, கலந்துரையாடல் மற்றும் கருத்துப் பரிமாற்றம், கற்பித்தல் முறைகளை முன்னேற்றுவதற்கான முன்மாதிரிப் படைப்புகள் ஆகியவற்றுக்கு இந்த பங்கேற்பு உதவும்'' என்றார்.
ராமானுஜன் கணிதப் பூங்காவில் உள்ள கண்டுபிடிப்பு மையத்தில் மாணவர் திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அங்கு 3டி பிரிண்டர்ஸ், லேசர் கட்டர்ஸ் ஆகிய வசதிகளும் உள்ளன. இதுகுறித்து அகஸ்த்யா படைப்பு வளாகத்தின் செயல் தலைவர் கே.வி. சாய் சந்திரசேகர் கூறுகையில், ""நிகழாண்டு இந்த வளாகத்தில் உயிரி கண்டுபிடிப்பு மையம் அமைக்க உள்ளோம். முந்தைய கற்றல் திட்டங்கள் மூலம் சுய கற்றலை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். அதோடு, தற்போது மின்னணுவியல், விமானப் போக்குவரத்து, வடிவமைப்பு படைப்பாளர்கள் ஆகிய திட்டங்களையும் சேர்க்கவுள்ளோம்'' என்றார்.

இதுகுறித்து அகஸ்த்யா சர்வதேச அமைப்பின் நிறுவனர் ராம்ஜி ராகவன் கூறுகையில், "இந்த வளாகத்தை நகர்ப்புற மாணவர்கள் பார்வையிடுவதையும் நாங்கள் ஊக்குவிக்கிறோம். இது சமூகத்தில் குறைந்த சலுகைகளை மட்டுமே பெற்றுள்ள அவர்களின் கிராமப்புற சகோதரர்களின் உணர்வுகளைப்புரிந்துகொண்டு செயல்பட உதவும். இது கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்கள் என இருவரும் பலன்அடையும் இருவழி பாதை.
The Innovator`s DNA நூலில் வெளியான ஹார்வர்ட் ஆய்வு அறிக்கையில் 5 கண்டுபிடிப்பு திறன்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்தத் திறன்கள்தாம் சிலிக்கான் பள்ளத்தாக்கில் உள்ள மிகப் பெரிய தொழில்முனைவோரை வேறுபடுத்தி காட்டுகின்றன. அந்தத் திறன்கள்: questioning, observing, experimenting, associating, networking என்பதாகும். அகஸ்த்யாவின் நோக்கம் அந்தகண்டுபிடிப்பு திறன்களை நோக்கியே உள்ளது.
அதேபோல, விநியோகத் திறன்கள் (Delivery Skills) திருப்புமுனை மற்றும் புதுமையான தொழில்முனைவோரை உருவாக்கும். பெங்களூரு இளம் தொழில்முனைவோர் திட்டம் மூலம் இந்தத் திறன்களும் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகின்றன. அகஸ்த்யாவின் வடிவமைப்பு படைப்பாளர்கள் திட்டம், கலை, அறிவியல், மனிதநேயம், விளையாட்டு கொள்கைகள் ஆகியவற்றை தற்போதைய மாதிரிகள் (ஙர்க்ங்ப்ள்) மற்றும் ஆய்வுகளுடன் இணைத்து மாணவர்கள் கற்றலில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும்'' என்றார்.
இரா.மகாதேவன்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

இஸ்ரோவின் விண்வெளி கண்காட்சி!
படிச்சுட்டா...பெரிய ஆளா?
வேலை...வேலை...வேலை...
சொற்கள்!
வருமானம் தரும் அழகுக்கலை படிப்புகள்!