அறிவின் ஆழம்! ஆர்.திருநாவுக்கரசு ஐ.பி.எஸ்.

அமெரிக்காவில் சுவாமி விவேகானந்தர் ஒரு நாள் ஓர் ஆற்றங்கரையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அறிவின் ஆழம்! ஆர்.திருநாவுக்கரசு ஐ.பி.எஸ்.

தன்னிலை உயர்த்து! 36
அமெரிக்காவில் சுவாமி விவேகானந்தர் ஒரு நாள் ஓர் ஆற்றங்கரையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அங்கே சில இளைஞர்கள் முட்டை ஓடுகளை கயிற்றில் கட்டி, அதனை ஆற்றிலே மிதக்கவிட்டு தூரத்திலிருந்து குறிபார்த்து துப்பாக்கியால் சுட்டு பயிற்சி செய்து கொண்டிருந்தனர். அவர்களில் பெரும்பாலானோரின் குறி தப்பியது. அவர்களைப் பார்த்து புன்னகை செய்தார் சுவாமி விவேகானந்தர்.
இதனைக் கவனித்த ஓர் இளைஞர், "எங்களைப் பார்த்து ஏன் சிரிக்கிறீர்கள்? இது ஒன்றும் அவ்வளவு சாதாரண காரியமல்ல. உங்களிடம் இப்பொழுது நான் ஒரு துப்பாக்கியைத் தருகிறேன். உங்களால் இந்த முட்டை ஓடுகளைச் சுட முடியுமா? என்று பாருங்கள்' என்றார். சுவாமி விவேகானந்தர் துப்பாக்கியை வாங்கினார். முட்டை ஓடுகளை குறி பார்த்து சுட, முதல் ஓடு உடைந்தது. அனைவரும் ஆச்சரியமாய்ப் பார்த்தனர். இரண்டாவது முட்டை ஓட்டினையும் சரியாக சுட்டுவிடவே, அனைவருடைய கண்களும் விவேகானந்தர் பக்கம் திரும்பியது. அனைத்து முட்டை ஓடுகளையும் சுட்டு வீழ்த்தினார் விவேகானந்தர்.
உடனே அந்த இளைஞன், "சுவாமி! நீங்கள் நிறைய பயிற்சி செய்து வந்திருக்கிறீர்கள். துப்பாக்கி சுடுதலில் நிறைய கற்றறிந்து இருக்கிறீர்கள். அதனால்தான் உங்களால் எல்லா முட்டை ஓடுகளையும் சரியாக சுட முடிந்தது' என்றான். அதற்கு விவேகானந்தர், "தம்பி! எனது வாழ்க்கையில் ஒரு துப்பாக்கியை எடுத்து சுடுவது இதுதான் முதல் முறை. ஆனால், துப்பாக்கி சுடுவதற்கு அவசியமானது மன ஒருமைப்பாடு என்பதை அறிவேன். குறி பார்த்து சுடுவதிலேயே மட்டும் கவனம் செலுத்தினேன். அதனால் தான் இது சாத்தியமானது' என்றார். மன ஒருமைப்பாடு அசைக்க முடியாத வெற்றிக்கு அஸ்திவாரம் ஆகிறது.
சிந்தனையை ஒரு நல்ல நோக்கத்திற்காக இயக்குவது ஒருமுகப்படுத்துதலாகும். ஒருமுகப்படுத்துதல் அறிவின் ஆழம். ஓர் அற்புதமான திறன்; இது கவனத்தின் மீதே கவனத்தைப் படிய வைக்கும், நினைவாற்றலை மேம்படுத்தும்; எளிதில் பற்றிக்கொள்ளும் கற்பூரம் போல் உலகியலைப் புரிய வைக்கும்; இலட்சியம் விரைவில் கைகூட வைக்கும்; செய்யும் பணியின் தரம் உயர்த்தும், வெற்றியின் மறு பெயராகும்.
ஒரு மனிதனின் மனதில் ஒரு நாளில் அறுபதாயிரம் எண்ணங்கள் உருவாகின்றன. ஆனால் சராசரியாக ஒரு மனிதன் அறுநூறு செயல்பாடுகளை மட்டுமே செய்கிறான். மீதமுள்ள சிந்தனைகள் எல்லாம் விழலுக்கு இரைத்த நீரைப்போல பயனற்றுப் போகின்றன. ஓர் அரை மணிநேரம் தொலைக்காட்சி பார்ப்பதற்குள் குறைந்தது ஐந்து முறையாவது வெவ்வேறு தொலைக்காட்சி அலைவரிசைகளுக்குத் தாவுவது அலைபாயும் மனது. இத்தகைய அலைபாயும் சிந்தனைகள் நிறைய ஆற்றலை விரையமாக்குவதோடு செயல்படவிருந்த ஆற்றலுக்கும் தடைவிதிக்கிறது.
தான் கட்டிய புதிய வலையில் ஏற்படுகின்ற ஒவ்வோர் அதிர்விலும் தனக்கு இரை கிடைக்குமா என்று சிலந்தி ஓடிச் சென்று பார்க்கும். சிறிது நாளில் அது விழிப்படைந்து அதிர்வுறும் பகுதியில் தனது கண்களுக்கு பூச்சி ஏதும் தென்படவில்லையெனில் அவ்விடம் நோக்காது. அதுபோல மனதினை எல்லாவற்றிற்கும் பதிலளிக்கப்படாமல் தனக்குத் தேவையானவற்றிற்கு தன்னைத் திருப்பிக் கொள்வதுதான் ஒருங்கமைத்தலாகும்.
ஓர் இளைஞருக்கு ஞானி ஆகவேண்டும் என ஆசை நேர்ந்தது. அதற்காக ஒரு மகானைச் சந்தித்து, "சுவாமி! உங்களைப் போல் நானும் மகான் ஆக வேண்டும். நீங்கள் இந்த நிலையை அடைவதற்கு என்ன பயிற்சி செய்வீர்கள்?'என்றார். அதற்கு அந்த மகான், "நான் உண்கிறேன், உறங்குகிறேன், தியானம் செய்கிறேன், உபதேசிக்கிறேன்' என்றார். 
இளைஞனுக்கு ஆச்சரியம் கலந்த சிரிப்பு உண்டாகியது. "சுவாமி! இந்த உலகில் உள்ள அனைவரும் இதைத் தானே செய்கிறார்கள். அப்படியென்றால், அவர்களால் ஏன் மகானாக முடியவில்லை?' என்றார்.
"அது உண்மைதான். அவர்களுக்கும் எனக்கும் உள்ள ஒரே ஒரு வித்தியாசம், அவர்கள் ஒரு செயலை செய்கின்றபொழுது அதில் முழுவதுமாக மனதை ஒருமுகப்படுத்துவது இல்லை. எடுத்துக்காட்டாக உணவு அருந்தும்போது தொலைக்காட்சி பார்ப்பார்கள், பேசுவார்கள். உறங்கும்போது தேவையில்லாதவற்றைச் சிந்திப்பார்கள். இவ்வாறாக, ஒவ்வொரு பணியின்போதும், அதற்குத் தொடர்பில்லாத மற்றொரு பணியின் மீது அவர்களது மனம் அலைபாயும். ஆனால் நான் உண்ணும் பொழுது அதைத் தவிர, வேறு எதையும் நினைப்பதில்லை. உறங்கும் பொழுது நன்றாகவே உறங்கி விடுவேன். தியானம் செய்யும் பொழுது அதிலேயே என் மனம் இருக்கும்' என்று பதிலளித்தார். 
மனம் லயித்து "ஒன்றிணைந்திருப்பதுதான் மனதை ஒருநிலைப்படுத்துதல்' என்பதைப் புரிந்து கொண்டார் அந்த இளைஞர்.
மன ஒருமைப்பாட்டிற்கு தியானமும் ஒரு கருவி. அது மனபலத்துடன் உடல் பலமும் தரும். 1996 - ஆம் ஆண்டு அமெரிக்க ஆராய்ச்சியாளர் சார்லஸ் அலெக்சாண்டர் தியானம் செய்பவர்கள் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டார். அதில் இரத்த அழுத்தம் உள்ளவர்களை இரு பிரிவாகப் பிரித்தார். அதில் ஒரு பிரிவினருக்கு தியானம் கற்றுத்தரப்பட்டது. விளைவு, தியானம் செய்தவர்களின் ரத்த அழுத்தம் உரிய அளவில் இருந்தது என்று உறுதிப்படுத்தினார். மனது ஒருமுகப்படுத்தப்படும்போது பதற்றம் அடைவது குறைகிறது. மனதினை ஒருமுகப்படுத்த, ஒரு பள்ளிக்கூடத்து வகுப்பு நேரங்கள்போல் வாழ்க்கையில் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் சரியான நேரங்களைப் பிரித்து அதன்படி வாழ்கின்ற மனிதன் சக்திவாய்ந்தவனாகத் திகழ்வான். 
அதேபோல் மனதை ஒருமுகப்படுத்தும் போது மனதும் உடலும் இளமையாகிறது. இதனை ஆராய நியூஸ்வீக் (News Week) என்னும் பத்திரிகையினர் சராசரியாக 80 வயது முதியவர்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டனர். அவர்களை மூன்று பிரிவுகளாகப் பிரித்தனர். முதலாம் பிரிவினருக்கு மனதை ஒருமுகப்படுத்தும் தியானம் கற்று தந்தனர். இரண்டாம் பிரிவினருக்கு உடலை இலகுவாக்கும் பயிற்சி (Relaxation) அளித்தனர். மூன்றாம் பிரிவினருக்கு எவ்வித பயிற்சியும் அளிக்க வில்லை. மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் அவர்களின் ஆராய்ச்சியில் தியானப் பயிற்சியை மேற்கொண்டவர்கள் அனைவரும் உயிரோடு இருந்தனர். உடலை இலகுவாக்கும் பயிற்சி மேற்கொண்டவர்களில் 88 சதவீதம் பேர் உயிரோடு இருந்தனர். எவ்வித பயிற்சியும் மேற்கொள்ளாதவர்கள் 62 சதவீதம் பேர் மட்டுமே உயிர் வாழ்ந்திருந்தனர். 
சிந்தனைகளை ஒருங்கிணைத்தால் புலன்கள் அடங்கும்; புலன்களை அடக்கினால் சிந்தனைகள் ஒருங்கிணையும். இவ்வுலகிலேயே அதிகமாக உயிர் வாழும் உயிரினம் ஆமை. அதற்குக் காரணம், அது "சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ நன்றின்பால் உய்ப்ப தறிவு' (குறள் - 422) என்ற திருவள்ளுவரின் வரிகளுக்கேற்பவும், "மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்' என்ற உலகநாதரின் உலகநீதிக்கேற்பவும், தனது புலன்களை சிந்தனைகளால் கட்டுப்படுத்தி வாழ்வதனாலாகும். 
சூரியக் கதிர்கள் மண்ணிற்கு ஒளியாக வருகின்றன. அவ்வொளி சாதாரண நாட்களில் வெளிச்சத்தைத் தருகிறது. கோடைக்காலத்தில் சூடேற்றுகிறது. அதே ஒளியினை ஒரு குவி ஆடியின் வழியாகச் செலுத்தி அதனை ஒரு காகிதத்தில் குவிக்கும்போது அதன் ஆற்றல் பன்மடங்காகிறது. அதனால் அவ்வொளிக் கற்றைகள் தீயினை உருவாக்கி அக்காகிதத்தையே எரிக்கிறது. அதேபோன்று மனதினை ஒற்றைச் சிந்தனையில் குவிக்கும்போது அபார ஆற்றல் மேம்படுகிறது. நினைத்தது நிறைவேறுகிறது. 
மனம் ஒருமுகப்படும்போது செயல்பாடு முழுமனதோடு இருக்கும். முழுமனதோடு செயல்படுதல் என்பது ஒரு காந்தத்தின் செயல்பாடு போன்றது. காந்தத் துகள்கள் காந்தப் புலத்தினால் கவரப்படுவதைப்போல், ஒருமுகப்படுத்தவர்களால் மக்கள் கவர்ந்திழுக்கப் படுவார்கள். அவர்களால் பிறருக்கு நன்மையே உருவாகும். 
"பகவத் கீதையை படிப்பதன் மூலம் சொர்க்கத்தை நெருங்குவதை விட கால்பந்து ஆடுவதன் மூலம் வேகமாக அடைய முடியும். ஏனெனில் கால்பந்தில் உங்களின் மனது விரைவில் ஒழுங்குபடும்' என்பார் சுவாமி விவேகானந்தர்.
அவரிடம் ஓர் இளைஞர், "சுவாமி! எனக்கு எல்லா வசதிகளும் இருக்கிறது. கடவுள் நம்பிக்கை இருக்கிறது. நான் கடவுளை நீண்ட நேரம் பிரார்த்திப்பவன். இருப்பினும் என் கண்ணை மூடினால் எனது மனம் அலைபாய்கிறது. எனது மனதை ஒருநிலைப்படுத்த வழி சொல்லுங்கள்' என்றார். அதற்கு விவேகானந்தர், ஒரு காட்டில் மூன்று ஞானிகள் இருந்தனர். வெகுநாட்களாக பசி தாகம் மறந்து தியானித்து இருந்தனர். ஒருநாள் அவர்களில் ஒருவர் வாய் திறந்து, "சற்று நேரத்துக்கு முன் ஒரு கருப்புக் குதிரை ஓடியது என நினைக்கிறேன்' என்றார். மற்ற இருவரும் எதுவும் பேசவில்லை. ஆறு மாதம் கழித்து இரண்டாவது ஞானி, "அது கருப்புக் குதிரையாக இருக்க வாய்ப்பில்லை வெள்ளை குதிரையாக இருக்கும் என நினைக்கிறேன்' என்றார். மற்ற இருவரும் எந்த பதிலும் சொல்லவில்லை. அடுத்த ஆறு மாதத்திற்குப் பிறகு மூன்றாவது ஞானி, "இப்படியே நீங்கள் பேசிக் கொண்டிருந்தால் நான் எப்படி தியானம் செய்வேன்?' என்றார். மொத்தத்தில் இந்த மூன்று ஞானியரும் மற்றவர்கள் என்ன சொன்னார்களோ, அதையேதான் தங்கள் மனதில் நினைத்துக்கொண்டு இருந்தார்களே தவிர, உண்மையான இறைப் பொருளின் மீது தங்கள் மனதை ஒருமுகப்படுத்தவில்லை. இவர்கள் கண்ணை மூடி தியானம் செய்தார்களே தவிர, மனதை மூடி தியானம் செய்யவில்லை. வாழ்வின் உன்னத நிலையினை அடைய, மனதை ஒருமுகப்படுத்தி தியானிக்க வேண்டும்' என்றார்.
மேலும், "மனதை ஒருமுகப்படுத்துவதற்கும், மன அமைதி பெறுவதற்கும் சிறந்த வழி, சுயநலமற்ற பொதுசேவைதான். உன் வீட்டை சுற்றியுள்ள ஏழைக்கும் ஆதரவற்றோருக்கும் உன்னால் முடிந்த உதவிகளைச் செய். கேட்பாரற்றுக் கிடக்கும் நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல். அத்தகைய சேவையில் தான் மன நிம்மதி கிடைக்கும். மன நிம்மதியே மனதை ஒருமுகப்படுத்துவதற்கு அடிப்படை' என்றார் சுவாமி விவேகானந்தர்.
மனதை ஒருமுகப்படுத்தினால் ஆற்றல்;
மனதை ஒழுங்குபடுத்தினால் பேராற்றல்!
(தொடரும்)
கட்டுரையாசிரியர்:
காவல்துறை துணை ஆணையர், நுண்ணறிவுப் பிரிவு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com