ஏவுகணைகளைத் தயாரிக்கும் இளைஞர்!

பள்ளிப் படிப்பைத் தாண்டாத இளைஞர் ஒருவர், ஏவுகணைகளைத் தயாரிக்கும் திறன் பெற்றிருக்கிறார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா?
ஏவுகணைகளைத் தயாரிக்கும் இளைஞர்!

பள்ளிப் படிப்பைத் தாண்டாத இளைஞர் ஒருவர், ஏவுகணைகளைத் தயாரிக்கும் திறன் பெற்றிருக்கிறார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா? அவர் புதுவை மாநிலம் முருங்கம்பாக்கம் அங்காளம்மன் நகரைச் சேர்ந்த 29 வயதான ராஜா. அவர் இப்போது வானூர்தி பொறியியல் படிக்க ஆர்வமாக உள்ளார்.
 துல்லியமாக இலக்கை குறிவைத்து தாக்கும் வகையிலான பல ஏவுகணைகளைத் தயாரித்திருக்கும் இவர், தற்போது, நிலம், நீர், ஆகாயம் என எந்த இடத்திலிருந்தும், எதையும் தாக்கும் திறன் படைத்த அதிநவீன ஏவுகணை ஒன்றை வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
 பத்தாம் வகுப்பே தேர்ச்சி பெறாத இவர் கடினமான தொழில்நுட்பங்கள் கொண்ட ஏவுகணைகளையும், விமானங்களையும் உருவாக்குவது எப்படி?
 இது குறித்து ராஜா நம்மிடம் பகிர்ந்து கொண்டவை:
 "எனக்கு சிறுவயதிலிருந்து ராக்கெட் மீது ஆர்வம் அதிகம். அதனை வீட்டிலேயே தயாரித்து விளையாடிக் கொண்டிருப்பேன். ஒரு சமயம் முதலியார்பேட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் எழுதாத பேனாவைப் பயன்படுத்தி ஏவுகணை செய்து விளையாடிப் பார்த்தேன். இதைப் பார்த்த எனது பள்ளி ஆசிரியை லதா என்னை ஊக்கப்படுத்தினார்.
 என்னுடைய 13 ஆம் வயதில் சிறிய ஏவுகணை ஒன்றை வடிவமைத்து பரிசோதித்த போது, அது எதிர்பாராதவிதமாக வெடித்து, எனது முகத்தில் கடுங்காயத்தை ஏற்படுத்தியது. இச்சம்பவத்துக்குப் பிறகு, வீட்டிலும், பள்ளியிலும் எனது செயல்களுக்கு எதிர்ப்பு கிளம்பியது. அடுத்த ஓராண்டுக்கு பள்ளி செல்லாமல் வெறுமனே வீட்டிலேயே இருக்க வேண்டியதாகிவிட்டது.
 இருப்பினும் மனம் தளராமல் எனது ஆய்வுகளைத் தொடர்ந்தேன். ஆய்வுகளுக்காக பல்வேறு இடங்களுக்கு சென்ற வேளையில், பத்தாம்வகுப்பு தனித்தேர்வராக எழுதியும் என்னால் தேர்ச்சியடைய முடியவில்லை.

 இருப்பினும் தளராத ஆர்வத்தால் நூலகங்கள், நண்பர்கள், அறிவார்ந்த பெரியோர்களை அணுகி, விமானம், ஏவுகணை தொழில்நுட்பங்களை பல்வேறு புத்தகங்கள் வழியாகப் படித்தறிந்து, ஆய்வுகளில் ஈடுபட்டேன். ஆளில்லாத விமானங்களை சொந்த முயற்சியில் தயாரித்து, கண்காட்சிகளில் காட்சிப்படுத்தினேன். விஞ்ஞானிகள், அறிவியல் ஆய்வாளர்களுக்கு செயல்விளக்கம் செய்து காண்பித்தேன்.
 இதன் விளைவாக விஞ்ஞானி ஒருவரின் தயவில், 2011 இல் பெங்களூருவில் மத்திய ராணுவ ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம் (டிஆர்டிஓ) நடத்திய வானூர்திகள் தொடர்பான போட்டி ஒன்றில், ரூ. 43 ஆயிரம் செலவில் நான் வடிவமைத்த 150 கி.மீ. வேகத்தில் செல்லும் ஆளில்லாத விமானத்துடன் பங்கேற்றேன். செயல்விளக்கம் செய்து காண்பித்தேன். இதனால் எனக்குக் கிடைத்த வாய்ப்பில், பெங்களூர் வானூர்தி அபிவிருத்தி நிறுவனத்தில் (ஏடிஇ) அடிப்படை வானூர்திகள் தொடர்பான பயிற்சி எனக்குக் கிடைத்தது. இதன் வழியாகவே எனக்கு விமானத்திலிருந்து புதுவிதமான அதிநவீன ஏவுகணைகளைத் தயாரிக்கும் ஆர்வம் ஏற்பட்டது.
 இதையடுத்து மிகக் குறைந்த விலையில் ஏவுகணைக்குப் பயன்படும் ஜெல் வகை எரிபொருளைத் தயாரித்தேன். அதை பயன்படுத்தி இயக்கப்படும் இலகு ரக ஏவுகணைகளைத் தயாரித்தேன். இதனிடையே நான் தயாரித்த ஏவுகணைகளைப் பற்றி முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு தெரிவித்து, கடந்த 2012 இல் அவருடைய பாராட்டுக் கடிதத்தையும் பெற்றுள்ளேன். கலாம் அவர்களின் அறிவுரைப்படியே, டிஆர்டிஓ-க்கு சென்றேன்.
 என்னுடைய திறமையைப் பார்த்து சென்னை அண்ணா விண்வெளி ஆராய்ச்சி மையத்தினர் விடுத்த அழைப்பை ஏற்று, கடந்த 2015 - இல் அங்கு எனது ஏவுகணையின் செயல்திறனைப் பரிசோதித்துக் காண்பித்தேன். இதையடுத்து எனக்கு 2018 - இல் நடைபெற்ற ராணுவ கண்காட்சியில் பங்கேற்க அனுமதி கிடைத்தது. அங்கே என்னுடைய ஏவுகணையை காட்சிப்படுத்தியிருந்தேன்.
 இதைப் பார்த்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், முன்னாள் இஸ்ரோ தலைவர் மயில்சாமி அண்ணாதுரை ஆகிய இருவரும் என்னை அழைத்து பாராட்டியதுடன், அடுத்தகட்டமாக பயிற்சி பெற உதவி செய்வதாகக் கூறியுள்ளனர்.
 மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் வாழ்ந்து வரும் நான், மாணவர்களுக்கு புராஜெக்ட் ஓர்க் செய்து கிடைக்கும் வருமானத்திலிருந்தும், பெரியோர்களின் உதவியுடனும் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறேன். அரசு எனக்கு வானூர்தி தொழில்நுட்ப படிப்பைக் கற்கும் வாய்ப்பைக் கொடுத்து, அரசுப் பணி வழங்கினால் என்னால் மேலும் பல சாதனைகள் படைக்க முடியும்'' என்றார் அவர்.
 க. கோபாலகிருஷ்ணன்
 படங்கள்: கே. ரமேஷ்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com