கின்னஸ் சாதனை படைத்த அரசுப் பள்ளி மாணவர்கள்!

அரசுப் பள்ளி மாணவர்கள் என்றாலே கல்வியில் பின்தங்கியவர்கள், விளையாட்டுகள் உள்ளிட்ட அனைத்திலும் சாதிக்கத் தகுதியற்றவர்கள் என்ற பொதுக் கருத்து சமூகத்தில் உலவி வருகிறது.
கின்னஸ் சாதனை படைத்த அரசுப் பள்ளி மாணவர்கள்!

அரசுப் பள்ளி மாணவர்கள் என்றாலே கல்வியில் பின்தங்கியவர்கள், விளையாட்டுகள் உள்ளிட்ட அனைத்திலும் சாதிக்கத் தகுதியற்றவர்கள் என்ற பொதுக் கருத்து சமூகத்தில் உலவி வருகிறது. இதனால் கடன் வாங்கியாவது தனியார் பள்ளிகளில் அதிகக் கட்டணம் செலுத்தி, குழந்தைகளைப் படிக்க வைக்கும் போக்கும் அதிகரித்து வருகிறது.
 ஆனால், அரசுப் பள்ளி மாணவர்கள் என்றால் சாதாரணமானவர்கள் அல்ல. தகுந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டால் எங்களாலும் சாதிக்க முடியும் என்று, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் தங்கள் திறமையை நிரூபித்து, எல்லாரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளனர்.
 மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் என்றால் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுதான் நினைவுக்கு வரும். அங்குள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் கொரிய நாட்டின் தற்காப்புக் கலையான தேக் வாண்டோ-வில் "ஃபிரன்ட் கிக்' என்ற முன்நோக்கி உதைத்தல் முறையில், இந்தியாவிலேயே எந்த அரசுப் பள்ளிகளும் செய்திடாத கின்னஸ் சாதனையைப் புரிந்துள்ளனர். சாதனை புரிந்த 50 மாணவர்களையும் அலங்காநல்லூர் கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர். இவர்களின் கின்னஸ் சாதனைக்கு உறுதுணையாக, தற்காப்புக் கலை நிபுணரும், 13 கின்னஸ் சாதனைகளுக்குச் சொந்தக்காரருமான நாராயணனும் அலங்காநல்லூர் அரசுப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் ஆகியோரும் இருந்துள்ளனர்.
 இது தொடர்பாக மாணவர்களுக்குப் பயிற்சியளித்த நாராயணன் கூறியது:
 "கொரிய நாட்டின் தற்காப்புக் கலையான தேக் வாண்டோ கலை பற்றி அவ்வளவாக வெளியில் தெரியவில்லை. ஆனால், தற்காப்புக் கலைகளில் தேக் வாண்டோவுக்கு மட்டுமே ஒலிம்பிக் அங்கீகாரம் உண்டு. எனவே, தேக் வாண்டோவை பிரபலப்படுத்துவதற்காக, மாணவர்களைத் தயார் செய்து கின்னஸ் சாதனைபுரிவது என்று திட்டமிட்டோம். இதற்கு, தனியார் பள்ளிகள் பல தயாராக இருந்தபோதும், அரசுப் பள்ளி மாணவர்களைக் கொண்டே சாதனை செய்ய முடிவெடுத்தோம்.
 தொடக்கத்தில் பல அரசுப் பள்ளிகளை அணுகியபோதும், பள்ளிகளின் தரப்பில் எங்களுக்கு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. அலங்காநல்லூர் அரசுப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் ஒத்துழைக்க முன்வந்தார்.
 முதற்கட்டமாக, விளையாட்டில் ஈடுபாடு உள்ள 50 மாணவர்களைத் தேர்ந்தெடுத்தோம். அவர்களுக்கு தேக் வாண்டோ கலையின் அடிப்படைப் பயிற்சிகளை அளித்து, கின்னஸ் சாதனைக்கான ஃபிரன்ட் கிக் பயிற்சியில் ஈடுபடச் செய்தோம். பயிற்சியின் போதும் பல்வேறு தடைகள் ஏற்பட்டன. அவற்றையெல்லாம் தாண்டி தொடர்ந்து 6 மாதங்களுக்கு தினசரி 2 மணி நேரம் கடும் பயிற்சி எடுத்துக்கொண்டு மாணவர்கள் தயாராகினர்.
 பின்னர், அலங்காநல்லூரில் கின்னஸ் சாதனைக்காக பந்தல் அமைக்கப்பட்டது. மேலும், சாதனை முயற்சியை படம் எடுக்க 5 கேமராக்களும் பந்தலில் பொருத்தப்பட்டன. மாணவர்களின் கின்னஸ் சாதனையைப் பார்வையிடுவதற்காக, ஹைதராபாதில் இருந்து ஜெயந்த் ரெட்டி என்பவர் தலைமையில் கின்னஸ் குழுவினரும் வந்தனர்.
 கடந்த 2018 செப்டம்பர் 15-ஆம் தேதி அலங்காநல்லூர் அரசுப் பள்ளி வளாகத்தில் சாதனை நிகழ்ச்சி தொடங்கியது. மொத்தம் 50 மாணவர்கள் 25 பேர் கொண்ட 2 அணியாகப் பிரிக்கப்பட்டனர். இதில், 25 பேர் கொண்ட முதல் அணி தொடர்ந்து 2 நிமிடங்கள் ஃபிரன்ட் கிக் செய்து முடித்தவுடன், அடுத்த அணியினர் தொடர்ந்து 2 நிமிடங்கள் ஃபிரன்ட் கிக்கை தொடர்வார்கள். இதேபோன்று, தொடர்ந்து 1 மணி நேரத்தில் 1,06,411 ஃபிரன்ட் கிக்கை விடாமல் செய்து முடித்தனர்.
 இதற்கு முன்பாக, ஐதராபாதில் கராத்தே நிபுணர்கள் 50 பேர் ஒரு மணி நேரத்தில் 89ஆயிரம் ஃபிரன்ட் கிக்குகள் செய்ததுதான் கின்னஸ் சாதனையாக இருந்தது. ஆனால், கராத்தே நிபுணர்களாக இல்லாமல் சாதாரண அரசுப் பள்ளி மாணவர்கள் அந்த நிபுணர்களின் சாதனையை முறியடித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.
 மாணவர்களின் இந்த சாதனையை கின்னஸ் அமைப்பும் அங்கீகரித்து, 50 மாணவர்களுக்கும் கின்னஸ் சாதனை சான்றிதழை 2019 ஏப்ரல் 20-ஆம் தேதி வழங்கியது. இந்தியாவிலேயே தற்காப்புக் கலையில் கின்னஸ் சாதனை படைத்தது, அலங்காநல்லூர் அரசுப் பள்ளி மாணவர்கள்தான். மாணவர்களின் சாதனை முயற்சிக்கு, அலங்காநல்லூர் கிராமம் முழுவதும் உறுதுணையாக இருந்தது. சாதனை நிகழ்ச்சிக்கான பந்தல், குடிநீர், போக்குவரத்து, கின்னஸ் குழுவினரின் விமானக் கட்டணம், மாணவர்களுக்கான சீருடை, ஃபிரன்ட் கிக் செய்தவற்கான உபகரணங்கள் என ரூ.1 லட்சத்துக்கும் மேல் செலவாகியது. இவை அனைத்தும் பல்வேறு நிறுவனங்கள் தந்து உதவின.

கின்னஸ் சாதனை படைத்த மாணவர்களை அலங்காநல்லூர் கிராமமே கொண்டாடி வருகிறது. மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன
 என்றார்.
 - எஸ்.பி.உமாமகேஸ்வரன்
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com