உயிரின் புனிதம் தியானம்!  - ஆர்.திருநாவுக்கரசு ஐ.பி.எஸ்

பல்லவ மன்னர் ஒருவர் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு பெரிய கோயிலைக் கட்டினார். கோயிலைக் கட்டி முடித்து அதனைத் திறப்பதற்கு ஒரு நாள் குறித்தார். அதற்கான ஏற்பாடுகளைத் தீவிரமாகச் செய்தார்.
உயிரின் புனிதம் தியானம்!  - ஆர்.திருநாவுக்கரசு ஐ.பி.எஸ்

தன்னிலை உயர்த்து! 49
பல்லவ மன்னர் ஒருவர் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு பெரிய கோயிலைக் கட்டினார். கோயிலைக் கட்டி முடித்து அதனைத் திறப்பதற்கு ஒரு நாள் குறித்தார். அதற்கான ஏற்பாடுகளைத் தீவிரமாகச் செய்தார். கோயில் திறப்பதற்கு மிகவும் ஆர்வமாய் இருந்தார். இந்நிலையில் அதற்கு முந்தைய நாள் இரவில் அரசனின் கனவில் இறைவன் தோன்றினார். மன்னரிடம், "என்னை மன்னிக்க வேண்டும். நாளைய தினம் உம்முடைய கோயிலில் என்னால் எழுந்தருள முடியாது. ஏனெனில் அதே நாளில் பூசாலார் கோயிலை நான் திறந்து வைக்க வேண்டும். அதற்கு நான் கட்டாயம் செல்கிறேன்' என்றார்.
மன்னர் ஆச்சரியத்தோடு, "நான் கட்டிய கோயிலைவிட சிறந்த கோயிலை கட்டிய பூசலார் யார்? அவர் கட்டிய கோயில் எங்கே இருக்கிறது? உடனே தேடுங்கள்' என ஆணையிட்டார். மன்னரின் படை வீரர்கள் பூசலாரைத் தேடிக் கண்டுபிடித்தனர். பூசலார் மிகவும் ஏழ்மையான பகுதியில் ஒரு குடிசையில் வாழ்ந்து வந்தார். அவரைக் கண்டதும், "உங்களுடைய கோயில் எங்கே இருக்கிறது?' என்றார் மன்னர். அதற்கு பூசலார், "மன்னா! நான் எனது இறைவனுக்கு கோயிலை என் இதயத்தில் கட்டினேன். வேறு எந்தக் கோயிலும் நான் கட்டவில்லை. என்னிடம் அதற்கான செல்வமும் இல்லை' என்றார்.
மாட கோபுர கோயில்களை விட ஒரு புனிதமான மனதில் தங்கி இருக்க நினைப்பதுவே இறைவனின் விருப்பம். அத்தகைய புனிதத்தைத் தியானத்தின் மூலம் கண்டார் பூசலார். அழுக்குப் படிந்த மனதை வெள்ளையடிப்பது தியானம். ஆற்றல் வாய்ந்த உடலை ஆலயமாக்குவது தியானம். தியானம் ஆற்றல்களின் அரசன். அது மனித உயிரைப் புனிதப்படுத்துகிறது. வாழ்க்கையை அற்புதமாக்குகிறது. அதனால் தான் "நெஞ்சமே கோயில்; நினைவே சுகந்தம்; அன்பே மஞ்சனநீர்; பூசைகொள்ள வாராய் பராபரமே' என்று அழைத்தார் தாயுமானவர்.
மனதின் செயல்பாடு அலைபாய்வது. அது காற்றினால் அலைக்கழிக்கப்படும் தீபம் போன்றது. அத்தகைய தீபத்தைக் காற்றினால் கட்டுப்படுத்தப்பட்ட அறைக்குள் எரியவிடும் போது அது அற்புதமாய் எரிகிறது. அது போல மனிதனின் எண்ணங்களைக் கட்டுப்படுத்தும் அறைதான் தியானம். அத்தகைய அறைக்குள் சிந்தனைகள் வலுப்பெறுகின்றன.
ஒரு குருவிடம் தியானம் கற்க ஒரு சீடர் வந்தார். அவரிடம் துறவி, "காட்டிற்குள் சென்று அமைதியாக கண்ணை மூடி அமர்ந்துகொள். உன்னைச் சுற்றி நடப்பனவற்றையெல்லாம் கவனி. அதன்பின்பு உனது உணர்வை என்னிடம் பகிர்ந்து கொள்' என்றார். துறவி கூறியபடியே சீடர் காட்டுக்குள் சென்றார். சில நாட்களில் திரும்பி வந்து, "சுவாமி! காட்டுக்குள்ளே மிருகங்களின் சப்தமும். பறவைகளின் ஓசையும் கேட்டேன். தூரத்தில் விழும் அருவியின் ஓசையைக் கேட்டேன்' என்றார். துறவி அந்த சீடரிடம், "மீண்டும் அதே இடத்திற்குச் செல். இன்னும் உன்னிப்பாய் கவனி' என்றார்.
சில மாதங்கள் கழித்து சீடர் திரும்பி வந்தார். மிகுந்த மகிழ்ச்சியுடன் "சுவாமி! எறும்புகள் ஊர்ந்து செல்லும் சப்தத்தையும். மொட்டுகள் மலர்ந்திடும் ஓசையையும் கேட்டேன்' என்றார். இதைக் கேட்டதும் துறவி புன்முறுவலோடு, "மீண்டும் செல். நன்கு கவனி' என்றார். சில வருடங்கள் கழித்து சீடர் திரும்பி வந்தார். துறவியிடம் அமைதியாய் "சுவாமி! இம்முறை என் காதில் எதுவும் கேட்கவில்லை. மனம் லயித்த நிலையில் என்னுள்ளேயே இருந்து விட்டேன். என் சூழலைக் கூட என்னால் உணர முடியவில்லை' என்றார். அதைக் கேட்டதும் துறவி, "உன்னை நீ தரிசிக்க தொடங்கிய பொழுதே உனக்கு தியானம் கைகூடியது' என்றார்.
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு
என்னும் தெய்வப் புலவர் திருவள்ளுவரின் வரிகள் மூலம் நெருப்பில் புடமிடப்படுகின்ற பொன் சுடச்சுட ஒளிர்தல்போல, உடலினை வருத்தி தவம் செய்தாலும் அவர்கள் ஞானத்தின் ஒளியாய் மிளிர்வார்கள் என்று தியானத்தின் பயனை சிறப்பிக்கிறார். 
அமைதியை ரசிப்பது தியானம். ஆனந்தத்தை மனதிற்குள் நிலைநிறுத்துவது தியானம். தன்னையே தரிசிப்பதும் தியானமே. நிறைவில்லாமல் வாழும் மனிதனையும் இறை வாழ்வு வாழ செய்வது தியானம். தியானத்தில் குறைகள் எரிக்கப்படுகிறது. மனக்கண்ணாடி அழகாய் பிரதிபலிக்கச் செய்ய பூசப்படும் பாதரசமே தியானம். ஞானத்தின் முதற்படி நிலை தியானம். விஞ்ஞானத்திற்கும் மெய்ஞ்ஞானத்திற்கும் முக்கிய படிநிலையும் தியானமே.
இன்றையச் சூழலில் மனிதன் ஒரு செல்லிடை பேசியாவே மாறியிருப்பது தான் உண்மை. செல்லிடை பேசியின் மூலம் உலகத்தின் மற்றொரு மூலையில் உள்ள எந்த ஒரு மனிதனையும் தொடர்பு கொண்டு விட முடியும். அதற்கு அந்த மனிதரின் பத்து இலக்க செல்லிடை பேசியின் எண் இருந்தால் போதும். அதேபோல் தியானம் என்னும் செல்லிடை பேசி எண் மூலம் பரம்பொருளிடமும் தொடர்பு கொள்ள முடியும். பிரபஞ்ச சக்தி உலகெங்கும் விரவிக் கிடக்கின்றது. இதனை உணர்கின்ற போது தியானம் வசப்படும்.
தியானம் ஓர் அளப்பரிய ஆற்றலின் பிறப்பிடம். மனித எண்ணங்களை ஒழுங்குபடுத்தும் மாபெரும் சக்தி. ஒளியினை ஒற்றைப்புள்ளியில் குவிக்கும்போது நெருப்பினை உண்டாக்கும் சக்தி பிறக்கிறது. அதே போன்று ஒளியினை மேலும் ஒளிக் கற்றையாக (Laser Beam) மாற்றும் போது அது இரும்பை அறுக்கும் வலிமை பெறுகிறது. அதுபோல மனதினை ஒருமுகப்படுத்தும்போது அவன் மாபெரும் சக்தியாகவே மாறிவிடுகிறான். மனதை ஒருமுகப்படுத்தும் சக்தியே தியானமாகும். தனக்குள்ளே இருந்த சக்தியை, தன்னை அறியும் சக்தியை உணர்த்துவது தியானம். அதனை உணர்ந்ததால்தான்
"என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது இல்லையே
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ
என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டெனே'
என்கிறார் சித்தர் சிவவாக்கியர். 
கடல்நீர் உப்பாக இருக்கிறது. கழிவு நீரும் துர்நாற்றம் வீசுகிறது. ஆனால் அதுவே ஆவியாகி மேகத்தோடு கலக்கின்றபோது அது தூய நீர் ஆகிறது. அது மழை நீராக மீண்டும் மண்ணிற்கு வருகின்றபோது அமிழ்தமாகிறது. அதேபோன்று பிரபஞ்ச சக்தியோடு தியானத்தின் மூலம் தன்னை இணைத்துக் கொள்ளும் ஒவ்வொரு மனிதனும் தூய்மையடைகிறான். புனிதமாகின்றான்.
1892 ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி சுவாமி விவேகானந்தர் நம் தமிழகத்தின் கன்னியாகுமரிக்கு வந்தார். அவர் முக்கடலும் சங்கமிக்கும் கடலின் நடுவில் அமைந்த பாறைக்குச் சென்று மூன்று நாட்கள் தியானம் செய்தார். தியானம் கைவரப்பெற்ற சுவாமிஜிக்கு அந்த மூன்று நாட்களில் பண்டைய இந்தியாவின் வரலாற்றையும், நிகழ்கால இந்தியாவையும், எதிர்கால இந்தியாவையும் அவரால் அறிய முடிந்ததாக குறிப்பிடுகிறார். சுவாமிஜியிடம், "தாங்கள் தியானம் செய்ததின் மூலம் எதனைப் பெற்றீர்கள்?' என்று ஒரு துறவி கேட்டார். அதற்கு சுவாமிஜி, "தியானத்தின் மூலம் நான் எதையும் பெறவில்லை. மாறாக, நான் என்னிடமிருந்ததை இழந்தேன்' என்றார். "உங்களிடம் இருப்பதை இழப்பதற்கு ஏன் தியானத்தைக் கடைபிடிக்கிறீர்கள்?' என்ற கேள்விக்கு, சுவாமிஜி அவர்கள், "நான் தியானம் கற்றுக்கொண்டதால் கர்வத்தை இழந்தேன். ஆணவத்தை இழந்தேன். மொத்தத்தில் என்னிடமிருந்த தேவையற்ற குணங்கள் யாவும் தியானத்தில் எரிக்கப்பட்டன' என்றார். எதனையும் தேடிப் பெறுவது அல்ல தியானம். எதையும் தேடாமல் இருக்கும்போது நம் தேடுதல் நிறைவேறுவதுதான் தியானம் என்பதைப் புரிந்து கொண்டார். தியானத்தின் விளைவு நற்குணங்களின் வளர்ச்சி என்பதையும் அறிந்தார். 
அறிவியல் ஆராய்ச்சியால் தியானத்தின் மூலம் இரத்த அழுத்தம் தீர்க்கப்படுவதும், மன அழுத்தம் சரிப்படுத்தப்படுவதும், நீரிழிவு நோய்கள் நிர்மூலமாக்கப்படுவதும், ஆயுளை மேம்படுத்துவதும் சாத்தியமாகிறது என்பதை அமெரிக்க அறிவியல் பத்திரிகைகள் உறுதிப்படுத்துகின்றன.
தியானம் ஒரு செயல் அல்ல; அது ஓர் அனுபவம். அது அனைத்தையும் உள்வாங்கும் ஒரு விழிப்பு நிலை. "மனதை அடக்க நினைத்தால் ஆடும். உற்றுக் கவனித்தால் அடங்கும்' என்பதே மனச்சூத்திரம்
புத்தர் தனது சீடர்களிடம் மனதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். ஒரு சீடர், "சுவாமி! மனதை எப்படி அடக்குவது?' என்றார். அப்பொழுது புத்தர் அவருக்கு பதில் அளிக்காமல், "அது இருக்கட்டும். உனது வலது கால் கட்டை விரல் ஏன் ஆடிக் கொண்டே இருக்கிறது?' என்றார். "சுவாமி! அதை நான் கவனிக்கவே இல்லையே' என்றார். புத்தர் தனது உரையாடலைத் தொடர்ந்தார். சிறிது நேரத்திற்கு பிறகு அந்த சீடரிடம், "இப்பொழுது உனது கட்டை விரல் ஆடவில்லையே' என்றார். அதற்கு சீடர், "சுவாமி! முதலில் நான் அதை கவனிக்கவில்லை. அதனால் ஆடியது. நீங்கள் சுட்டிக்காட்டிய பின் நான் அதனை கவனிக்க ஆரம்பித்தேன். அது ஆடவில்லை' என்றார். புத்தர் புன்முறுவலோடு, "மனம் ஆடாமல் இருப்பதற்கும் இதுதான் வழி' 
என்றார். ஆடாத மனமே தியானம்.
மனதைக் கவனித்தால் தியானம்;
தியானம் கைகூடுவது புனிதம்!
(தொடரும்)
கட்டுரையாசிரியர்:
காவல்துறை துணை ஆணையர், நுண்ணறிவுப் பிரிவு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com