செவ்வாய்க்கிழமை 17 செப்டம்பர் 2019

வாங்க இங்கிலீஷ் பேசலாம் 196 - ஆர்.அபிலாஷ்  

DIN | Published: 18th June 2019 12:05 PM

புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் ஒரு சேர சிகிச்சை தரும் உளவியலாளரான சேஷாச்சலத்திடம் செல்கிறார்கள். அங்கே அவர்களும் நடாஷா எனும் பெண்ணும் மருத்துவரின் அறையில் அரட்டையடிக்கிறார்கள். அப்போது சேஷாச்சலம் நார்சிசிசம் பற்றி பேசுகையில் நார்சிசஸ் எனும் கிரேக்க தொன்ம பாத்திரத்தின் கதையைக் கூறுகிறார். அதன் தொடர்ச்சியைப் பார்ப்போமா!
சேஷாச்சலம்: சரி பேரழகனான நார்சிசஸ் தன்விருப்பத்தின் பெயரில் தன்னை விரும்பி பின்வந்த பலரையும் புறக்கணித்து காயப்படுத்திய கதையைச் சொன்னேன் அல்லவா? இப்போது மிச்ச கதை - நார்சிசஸ் தொழில்முறையில் ஒரு வேடன். அவன் ஒருநாள் வேட்டையாட வனத்தில் அலைந்து கொண்டிருந்தான். எக்கோ எனும் காட்டு தேவதை ஒருத்தி அவனைக் கண்டு பெருங்காதலில் விழுந்தாள். அவன் நார்சிசûஸப் பின் தொடர்ந்து வனம் எங்கும் அலைந்தாள். அவள் அவன் பின்னிருந்து, "நார்சிசஸ் நார்சிசஸ்' என அன்பாய் அழைப்பாள். அவன் திரும்பிப் பார்க்கும்போது யாரும் இருக்க மாட்டார்கள். அவள் மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டிருப்பாள். ஒரு கட்டத்தில் அவன் எரிச்சலானான். ஆகையால் அவள் வந்து அவனைத் தழுவிக் கொண்ட போது அவன் அவளைக் கடிந்து ஒதுக்கினான். தனக்கு யார் மீதும் ஆர்வமில்லை என்றும் தன்னால் இன்னொருவரைக் காதலிக்க முடியாது என்றும் கூறி விலகிச் சென்றான். இதனால் எக்கோ மனமுடைந்து போனாள். அவள் நார்சிசஸுக்காக உருகி உருகி தன் உருவழிந்து காணாமல் ஆனாள். அவளது குரல் மட்டுமே நிலைத்தது. அதுவும் நார்சிசஸ் எனும் ஒரே சொல்லை திரும்பத் திரும்ப சொல்லும் ஒரு தீராக் காதலின் சுடராய் அவள் நிலைத்தாள். 
நடாஷா: ஓ... இப்படித் தான் echo எனும் சொல் உருவானதா? 
சேஷாச்சலம்: Of course. Echo, அதாவது எதிரொலி, என்றால் நாம் சொல்வது திரும்ப நமக்கே கேட்பதுதானே? அதாவது நடாஷா என்று நான் அழைத்தால் நீ திரும்ப respond பண்ண வேண்டும். ஆனால் நீ அப்படி பண்ணவில்லை. நான் தனியாக ஒரு பள்ளத்தாக்கில் நின்று உன் பெயரையே அழைத்துக் கொண்டிருக்கிறேன். எதிரொலி மட்டுமே எனக்குக் கேட்கிறது. இது அந்த காட்டுத் தேவதை தன் அழைப்பைக் கேளாத நார்சிசஸிடம் மன்றாடியதைப் போன்ற வீண் முயற்சி தானே? அப்படித் தான் இச்சொல் நிச்சயமாக உருப்பெற்றது. 
கணேஷ்: சார்... அப்புறம் நார்சிசஸூக்கு என்னாச்சு? 
சேஷாச்சலம்: Nemesis என்றொரு வன தெய்வம் எக்கோவின் இந்த அவல நிலையைக் கண்டு மனம் நொந்து நார்சிசஸ் மீது கடும் சினம் கொண்டாள். அவள் நார்சிசûஸப் பழிவாங்க முடிவெடுத்து ஒருநாள் அவன் வனத்தில் திரிகையில் அவனைத் தாகம் கொண்டு அலையச் செய்தாள். நார்சிசஸ் ஒரு நீர்நிலையைக் கண்டு அதில் நீர் அருந்த குனிந்தான். அப்போது அவன் கண்ட தன்னுடைய பிரதிபலிப்பு அபார அழகுடன் இருந்தது. அவன் வாழ்நாளில் தனது பிம்பத்தை இவ்வளவு துல்லியமாகக் கண்டதில்லை. அவன் தன்னை மறந்து தன் மீதே பெருங்காதலில் விழுகிறான். அவனால் நிம்மதியாய் நீரருந்த முடியவில்லை; நீரருந்தும் போது தன் பிம்பம் கலைவதை அவன் விரும்பவில்லை. பிம்பம் அப்படியே நிலைத்தாலும் கூட அவனால் தன்னையே காதலித்து அடைய முடியாதே? Selfக்கும் self- imageக்குமான போராட்டத்தில் அவன் காட்டிக் கொள்கிறான். அவன் மறுகி மறுகி ஒரு கட்டத்தில் உயிரிழக்கிறான். அவன் இறந்த இடத்தில் ஒரு பூஞ்செடி வளர்கிறது. 
கணேஷ்: ஏன் பூஞ்செடியாகிறான்? 
சேஷாச்சலம்: பூ என்பது ஒரு செடியின் பேரழகின் வெளிப்பாடு. சரியா? 
கணேஷ்: ஆமா
சேஷாச்சலம்: அது எங்கிருந்து வருகிறது? தன்னில் இருந்து. பூ என்பது ஒரு செடியின் சுயமோகத்தின் பிம்பம் எனும் கவித்துவம் தான் இந்த கதையின் முடிவு. ஒரு செடி தனது பூவை மிகவும் நேசித்தால் அது வாடி விழுவதை அது தாங்கிக் கொள்ளாது, இன்னொருவர் பறிப்பதையும் அனுமதிக்காது. மனிதர்கள் இப்படி மாறினால் அவர்கள் narcissistic ஆகிறார்கள். 
நடாஷா: Doctor, is this the same as self-centredness? Egocentrism?
சேஷாச்சலம்: இல்லை. ரெண்டுக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கு. விளக்குகிறேன். 
(இனியும் பேசுவோம்)

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

இஸ்ரோவின் விண்வெளி கண்காட்சி!
படிச்சுட்டா...பெரிய ஆளா?
வேலை...வேலை...வேலை...
சொற்கள்!
வருமானம் தரும் அழகுக்கலை படிப்புகள்!