புதன்கிழமை 21 ஆகஸ்ட் 2019

நற்செயல்களே நல்வாழ்க்கையின் அடையாளம்! ஆர்.திருநாவுக்கரசு ஐ.பி.எஸ்.  

DIN | Published: 18th June 2019 11:04 AM

தன்னிலை உயர்த்து! 48

1888 -ஆம் ஆண்டில் ஒரு நாள் பிரான்ஸ் நாட்டு பத்திரிகையொன்று, ஆல்பிரட் நோபல் சகோதரர் லுக்விக் இறந்ததை "நோபல் இறந்துவிட்டார்' என்று தவறுதலாகச் செய்தி வெளியிட்டது. அதில் டைனமைட் என்னும் அழிவு சக்தியை உருவாக்கி அதன் மூலம் செல்வம் கொழித்து கோடீஸ்வரரான ஆல்பர்ட் நோபல் காலமானார் என்ற செய்தியிருந்தது. இதனை நோபலே படிக்க நேரிட்டது. அவரது கண்டுபிடிப்பு அவருக்கு அவப்பெயரை தந்திருந்ததால் அதனைப் படித்ததும் அவர் மனம் வெதும்பினார். 
டைனமைட்டை ஆல்பிரட் நோபல் கண்டுபிடித்தபோது உலகமே அவரைப் பாராட்டியது. நோபல் டைனமைட் தொழிற்சாலைகளை உருவாக்கி அதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் சேர்த்தார். அதேநேரத்தில் டைனமைட்டை சிலர் அழிவு சக்திக்காகவும் பயன்படுத்தினர். ஒரு புறம் ஆக்க சக்திக்கு பயன்பட்டாலும், மறுபுறம் டைனமைட் கண்டுபிடிப்பு, அவருக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தியிருந்ததை எண்ணி மனம் கலங்கினார். 
தன்மேல் ஏற்பட்ட களங்கத்தை அகற்ற, தனது செல்வத்தை உலக நன்மைக்காகவும், மனித குல மேன்மைக்காக பாடுபடுபவர்களுக்கு பரிசாக வழங்க முடிவு செய்தார். 1890-ஆம் ஆண்டு நோபல் அறக்கட்டளையை நிறுவி, தனது செல்வம் அனைத்தையும் அந்த அறக்கட்டளைக்கு உயில் எழுதி வைத்தார். "ஒரு நற்காரியமானாலும் அது பொன்னுக்குச் சமம்' என்கிற டச்சுப் பழமொழிக்கேற்ப அவரது இறப்பிற்குப் பின் உலகின் சிறந்த அறிவியல் அறிஞர்களுக்கும், அமைதிக்காக பாடுபடுபவர்களுக்கும் நோபலின் விருப்பப்படி உலகின் உயர்ந்த விருதான நோபல் விருதுகள் இன்றும் வழக்கப்பட்டு வருகின்றன. தன்மேலிருந்த களங்கத்தை தனது நற்செயலால் துடைத்தெறிந்தவர் ஆல்பிரட் நோபல்.
நற்செயல்களே நற்குணத்தின் அடித்தளங்கள், நற்செயல்கள் மகிழ்ச்சியின் "ஆர்ட்டீசியன் ஊற்றுகள்'. நற்செயல்கள் ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கையின் அடையாளங்கள். மன நிறைவைத் தருவதோடு, அகில உலகத்தையும் மாற்றும் வல்லமை கொண்டவை நற்செயல்களேயாகும். 
இந்த உலகில் வாழ்கின்ற அனைவரின் கண்முன்னேயும் நல்ல செயல்களும், தீய செயல்களும் விரவிக் கிடக்கின்றன. அவற்றில் எதைச் செய்ய வேண்டும் என்று ஒருவர் நினைக்கின்றாரோ, அது இயல்பாகவே நடந்தேறுகின்றது. "தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்ற புறநானூற்று பாடல் வரிகளில் ஒரு மனிதனுக்குக் கிடைக்கின்ற புகழும், அவனுக்குக் கிடைக்கின்ற இகழ்ச்சியும் அவரவர் செய்கையினாலே அமையும் என்பதை உறுதிப்படுத்துகின்றன. ஒருவரின் தீய செயல்களால் அவருக்கு பல மடங்கு தீங்கு விளையும். அதேபோல் அவர் செய்கின்ற நற்செயல்களால் அவருக்கு கோடி மடங்கு நன்மை பயக்கும். 
மண்ணுக்குள்ளே உள்ள காந்தத் துகள்கள் கண்களுக்கு அகப்படாமல் இருப்பதுபோல் எல்லா செயல்களுக்குள்ளும், எல்லா மனிதர்களுக்குள்ளும் நற்செய்திகள் மறைந்து இருக்கின்றன. காந்தம் அருகில் வந்ததும் ஓடி வந்து ஒட்டிக் கொள்ளும் துகள்களைப் போல் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இந்த சமூகத்திற்குச் செய்யப்படுகின்ற ஆக்கப்பூர்வமான செயல்களே நற்செயல்களாகும். இருப்பினும் பணத்திற்காக எதையும் செய்யத் துடிக்கிறது சில மனித கும்பல். இச்சூழலில் விளம்பரங்களின் மூலம் தன்னை உலகத்திற்கு அடையாளப்படுத்திக்கொள்ள முடியும் என்ற வாய்ப்பு கிடைத்த போதும், அதில் தீமை இருந்ததால் அதை புறந்தள்ளிய பெருமை கொண்டவர்கள் தான் வரலாறுகளில் தங்கள் தடயங்கள் மறையாமல் இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
பிரேசில் நாட்டின் உலகப் புகழ் பெற்ற கால்பந்தாட்ட வீரர் பீலே. அவர் கால்பந்தாட்ட அரங்கத்திற்குள் காலெடுத்து வைத்தால் ரசிகர்களின் கைதட்டல் விண்ணைப் பிளக்கும். அவர் புகைப்படத்தை அச்சிட்ட சட்டைகளும் கோடிக்கணக்கில் விற்பனையாகும். அவர் புகழின் உச்சியிலிருந்தபோது ஒரு சிகரெட் நிறுவனத்தினர் அவரை அணுகி, "எங்கள் சிகரெட்டை நீங்கள் புகைப்பது போல் நடியுங்கள். அதற்கு ஊதியமாக பல கோடி டாலர் பணம் தருகிறோம்' என்று ஆசை காட்டினர். அதற்கு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவரான பீலே, "இளைஞர்களிடம் நான் உயிரையே வைத்திருக்கிறேன். அவர்களும் என் மீது உயிரையே வைத்திருக்கிறார்கள். நான் செய்வதைப் பின்பற்ற கோடிக்கணக்கான இளைஞர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனாலும், நீங்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் இளைஞர்களைக் கெடுக்கும் வேலையைச் செய்ய மாட்டேன். சிகரெட் புகைப்பது, மது அருந்துவது போன்ற எந்த விளம்பரப் படத்திலும் நடிக்க மாட்டேன்' என்று மறுத்துவிட்டார். பிறக்கும்போது ஏழ்மையெனினும் பணத்திற்காக எதையும் செய்ய துடிக்காத பண்புள்ளமே நல்ல மனிதர்களின் செயல்பாடு. அத்தகைய செயல்பாடுகளே வாழ்விற்கு வளம் சேர்க்கிறது, மனிதனைப் மாண்புடையவனாக்குகிறது.
பூட்டைக் தயாரிக்கும் பொழுதே சாவிகளை வடிவமைப்பது ஆராய்ச்சியாளர்களின் குணம். அதேநேரத்தில் கள்ளச்சாவியால் அந்த பூட்டினைத் திறந்துவிட முடியுமா? என சோதித்துப் பார்ப்பதும் ஆராய்ச்சியின் ஒரு பகுதியே. ஆனால் விற்பனைக்கு வருகின்ற பொழுது, பூட்டும், சாவியும் மட்டும்தான் சந்தைக்கு வரும். கள்ளச்சாவிகள் நேர்மைச் சந்தையில் பிரசுரிக்கப்படுவதில்லை. அவ்வாறு தனது அறிவின் திறமையை இந்த உலகின் ஒரு சிறு உயிர்க்கும் தீங்கில்லாமல் உயிர்களின் ஆக்கத்திற்காக பயன்படுத்துகிறவரே, விஞ்ஞானிகளுக்கு எல்லாம் விஞ்ஞானி. அத்தகைய பெருமை பெற்றவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
இரண்டாம் உலகப்போர் தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்பட்ட நேரத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஃபிராங்களின் ரூஸ்வெல்ட் அணுகுண்டு தயாரிக்கத் திட்டமிட்டார். அந்நேரத்தில் உலகின் தலைசிறந்த விஞ்ஞானியாக இருந்தவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். எனவே, அவரை அழைத்தார். அவரிடம், "அணுகுண்டு தயாரிக்க வேண்டும். அது உங்களால் முடியும். நீங்கள் அணுகுண்டு தயாரிக்க தேவையான அனைத்து உதவிகளையும், பெருமளவு பணமும் தருகிறேன்' என்றார். அதிபரின் யோசனையைக் கேட்டவுடன் ஐன்ஸ்டீன் சிரித்துக்கொண்டே, "ஐயா! அறிவியல் கண்டுபிடிப்புகள் மனித குல மேம்பாட்டிற்குப் பயன்பட வேண்டுமே தவிர, மனித குலத்தின் அழிவுக்கு பயன்படுத்தக் கூடாது' என்றார். ரூஸ்வெல்ட் ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்தார்.
மீண்டும் ஐன்ஸ்டீன், "எனது அறிவாற்றலை ஒருபோதும் மனித குலத்தை அழிப்பதற்கு பயன்படுத்த மாட்டேன். பணத்திற்காக எனது மூளையை அடகு வைக்க மாட்டேன்' என்று கூறிவிட்டு வெளியேறினார். அதனால்தான் ஐன்ஸ்டீனின் (Theory of Relativity) சார்பியல் கோட்பாட்டுத் தத்துவத்தை விட பலமடங்கு அவரது மனித குலத்தின் மீது கொண்ட அன்பும் நேசமாய், அழகாய் இம்மண்ணில் வாசம் வீசுகிறது. அவரது நற்செயலுக்காகவும், நற்சிந்தனைக்காகவும் நோபல் பரிசு தேடி வந்து பெருமைப்படுத்தியது.
"உன்னால் முடிந்த நற்காரியங்களைத் தொடர்ந்து செய். எவ்வகையிலாவது அதைச் செய்து முடி. அதற்காக அனைத்து வகையிலான முயற்சிகளையும் மேற்கொள். 
அனைத்து இடங்களிலும் அதையே செய். ஒவ்வொரு விநாடியிலும் அம்முயற்சி இருக்கட்டும். அத்தனை மக்களுக்கும் அது கிடைக்கட்டும். உன்னால் முடியும் வரை அதைத் தொடர்ந்து செய்' என்ற ஜான் வெஸ்லியின் வரிகளுக்கு இலக்கணமானவர்களே வாழ்வில் உயர்ந்து பிரகாசிக்கின்றனர்.
அமெரிக்க நாட்டில் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக விளங்கியவர் ராக் பெல்லர். அவர் சுவாமி விவேகானந்தரை அமெரிக்காவில் சந்தித்தார். அப்போது அவர் தன்னிடம் உள்ள செல்வச் செழிப்பை பற்றி பெருமையாகப் பேசினார். அதற்கு விவேகானந்தர், "உங்களிடம் இருக்கும் பணம் உண்மையில் உங்களுடையது இல்லை. உலகிற்கு நன்மை செய்வதற்காக இறைவன் ஒரு வாய்ப்பை உங்களுக்குக் கொடுத்திருக்கிறார். எனவே உங்களிடம் இருக்கும் பணத்தை உலக நன்மைக்காகச் செலவு செய்யுங்கள்' என்றார். அப்பொழுது அவரது மனதில் "என்னுடைய பணத்தை எப்படி செலவு செய்ய வேண்டுமென்று இன்னொருவர் எனக்கு சொல்வதா?' என நினைத்தார். இருப்பினும் விவேகானந்தரின் வார்த்தைகள் அவர் மனதைப் பாதிக்க, ஒரு தொண்டு நிறுவனத்திற்கு ஒரு பெரிய தொகையை நன்கொடையாக அளித்தார். அச்செயலுக்காக சுவாமியிடமிருந்து நன்றியினை எதிர்பார்த்தார், சுவாமியோ "நீங்கள் நல்ல செயல்களைச் செய்வதற்கு நான் வழிகாட்டியிருப்பதால் எனக்குத்தான் நீங்கள் நன்றி கூற வேண்டுமென்றார்'. ராக் பெல்லரும் நன்றி கூறினார். அதன்பின்பு அந்த நற்செயல்களால் அடைந்த மகிழ்ச்சியின் மூலம் மேலும் பல தொண்டுகள் செய்தார் ராக் பெல்லர். நற்செயல்கள் அளவில்லாத மகிழ்ச்சியை அனுபவிக்கச்செய்கிறது.
அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால் 
அற்குப ஆங்கே செயல்.
என்ற வரிகளில் "செல்வம் நிலையில்லாத தன்மையுடையது. எனவே, அது கையில் கிடைத்தவுடன் எவ்வளவு வேகமாகப் பிறருக்கு நன்மை செய்ய முடியுமோ அத்தகைய நன்மையைச் செய்துவிடவேண்டும்' என்கிறார் நம் தெய்வப்புலவர் திருவள்ளுவர். நற்செயல்களால் மட்டுமே மனிதனுக்கு நீடித்த மகிழ்ச்சியையும், நிறைவான உணர்வையும் தரமுடியும். 
கொடுத்தவர்கள் யாரும் ஏழையாவதில்லை. கருணை கொண்டவர்கள் வாழ்வின் உயரிய நிலையையே அடைகின்றனர். புத்தரை ஓர் ஏழை இளைஞன் சந்தித்தான். "சுவாமி! "நான் மிகவும் ஏழ்மையில் இருக்கிறேன். நான் பணக்காரனாவதற்கு ஒரு நல்ல வழி சொல்லுங்கள்' என்றார். அதற்கு புத்தர் புன்முறுவலுடன், "உன்னிடம் நிறைய பொருட்கள் இருக்கின்றன, அவற்றை நீ மற்றவர்களுக்கு கொடுத்தால் உனது ஏழ்மை நிலையிலிருந்து விடுபட்டு பணக்காரனாகிவிடுவாய்' என்றார். அந்த இளைஞன் ஆச்சரியத்தோடு "என்னிடமா! என்னிடம் என்ன இருக்கிறது?' என்று கேட்டார். 
"உண்மைதான் உன்னிடம் உள்ள முக்கிய பொருட்களை நீ அறிந்து கொள்ளவில்லை. அதனால் தான் நீ ஏழ்மையில் இருப்பதாய் சொல்கிறாய். உனது முகம் அடுத்தவர்களுக்கு புன்சிரிப்பை கொடுக்கும். உனது வாயின் மூலம் மற்றவர்களின் திறமையைப் பாராட்டலாம். துயர் அடைந்தவர்களுக்கு துயரத்தில் இருப்பவர்களுக்கு ஆறுதல் மொழி கூறலாம். உனது மனதையும் செவியையும் மற்றவர்களின் கருத்தைக் கேட்க திறந்து வைக்கலாம். உனது அழகிய கண்களால் அடுத்தவர்களுக்கு கருணை காட்டலாம். உனது வலிமையான கரங்களால் பிறருக்கு உதவலாம். எத்தனையோ நல்ல செயல்களைச் செய்வதற்கு கடவுள் உனக்கு எவ்வளவோ பொக்கிஷங்களைத் தந்திருக்கிறார். இவ்வளவு பொருட்கள் இருக்கின்ற பொழுது நீ எப்படி ஏழையாக இருக்க முடியும்?' என்றார். அப்போதுதான் அந்த இளைஞனுக்கு தன்னிடமுள்ள உறுப்புகள் அனைத்தும் பொக்கிஷம் என்று அறிந்தான். "ஐயா! நான் என்னை உணர்ந்து கொண்டேன்' என்றான். அதற்குப் புத்தர் "மற்றவர்களுக்கு உதவி செய்யும் எண்ணம் இல்லாதவர்கள் தான் ஏழை' என்றார். 
நல்லவர்கள் மனிதத்தின் அடையாளம்!
நற்செயல்களே நல்வாழ்வின் அடையாளம்! 
(தொடரும்)
கட்டுரையாசிரியர்:
காவல்துறை துணை ஆணையர், நுண்ணறிவுப் பிரிவு.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

மனங்கொத்தி மாணவர்கள்!
"மகிழ்ச்சி'க்காக ஒரு படிப்பு!
மாற்றி யோசித்தால் வெற்றி நிச்சயம்!
தண்ணீரைத் தூய்மையாக்கும் கருவி!
இலவசமாகப் பாட நூல்கள்!