செவ்வாய்க்கிழமை 17 செப்டம்பர் 2019

ஒரு கப் பாலும், பத்து காபியும்!  

DIN | Published: 18th June 2019 12:16 PM

"ஒரு காபி... ரொம்ப ஸ்ட்ராங்கா"!''
நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்த நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டே உணவருந்த சென்ற, ஒரு சிறிய மாலை நேர "சைவ' உணவகத்தில் எங்களை வரவேற்ற குரல் இது. 
"மீட்டிங் வித் ஈட்டிங்' (Meeting with Eating) என்பார்களே அதை நானும் என் நண்பரும் சரியாக செய்ய தேர்ந்தெடுத்ததே அந்த "சைவ' உணவு விடுதி. பரிமாறுபவரின் "காபி" சத்தம், எங்களுக்குள்ளும் ஆசையையும் ஏற்படுத்த, "ஏம்ப்பா சர்வர்...'' என்று நாம் கேட்டு முடிப்பதற்குள், "இரண்டு காபி சொல்லவா... சார்''" என்று சர்வர் குறிப்பறிந்து எங்களிடம் கேட்ட அடுத்தநொடி... நாங்கள் இருவரும் வழிந்து சிரிக்க, "இரண்டு ஸ்ட்ராங் காபி" - சர்வரின் குரல் வீதிக்கு கேட்டது.
தமிழ்நாடு அரசுப் பணி தேர்வாணையம் (TNPSC) ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட நான்காம் பிரிவு (Group -IV) காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு தொடர்பாக எங்களது உரையாடல் திசை திரும்பியிருந்தது. 
ஒரு சில மாணவர்கள் திட்டமிட்ட குறுகிய கால முயற்சியில், பயிற்சியில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிக்கு சென்றதையும்... இன்னும் பல மாணவர்கள் ஒரே தேர்வை பலமுறை எழுதிகொண்டே தேர்ச்சியடையாமல் வருடங்களை... வயதை வீணாக்குவது குறித்தும் நான் ஆதங்கப்பட்டேன்.
எனது வருத்தத்தை பொறுமையாக உள்வாங்கிக் கொண்ட என் நண்பர், கையில் இருந்த காபியை சுவைத்துக் கொண்டே, ""சார்! ஒரு "கப்' பால்ல பத்து காபி போடணும்னு முயற்சி செஞ்சா எப்படி? விளங்குமா?'' என்றார். 
"புரியலையே சார்'' என்றேன்.
நண்பர் தொடர்ந்தார்:"சார்! காபியில நம் நரம்புகளை உற்சாகப்படுத்துற "காஃபின்' அதிகமிருக்குன்னா இப்ப நாம காபி சாப்பிடுறோம். இல்ல... குழந்தைப் பருவத்திலயிருந்தே காபின்னா... ஒரு தெம்புன்னு நாம நம்பவைக்கப்பட்டதாலும்... காபியோடு ருசிக்கு நம்ம நாக்கு பழக்கப்பட்டதாலும் காபிமேல ஒரு ஈர்ப்பு... சாப்பிடுறோம். வயோதிகத்தால் சாப்பிட மறுக்கும் முதியோர்களுக்கு காபி ஆசைகாட்டி சாப்பிட வைக்கும் வித்தையையும் நாம் பார்த்திருக்கிறோம். "காபி' என்கிற சொல்லை கேட்டவுடன் கண்களை ஆந்தைபோல விரித்து வாய் திறக்கும் மனிதர்களையும் நாம் பார்த்திருப்போம். அது மாதிரி அரசு வேலைக்கு எப்போதுமே ஒரு ஈர்ப்பு நம்மிடையே உருவாக்கப்பட்டிருக்கு. ஆசைக்கு... பாதுகாப்பான வாழ்க்கைக்கு ஒரு நல்ல வேலைக்கு போகணும்ன்னு விரும்பினா... முதல்ல ஒரு பணியில சேர்ந்துட்டு... அடுத்தடுத்து மேல வேறு பதவிகளுக்கோ... விரும்பிய இலக்கையோ அடைய படிப்படியா முயற்சி பண்ணனும். பிடிச்ச... சாப்பிட்ட "காபி' நல்லாயிருக்கா... அடுத்து ஒன்னு சாப்பிடலாம். ஒரு கப் பால்ல பத்து காபி தயாரிக்கிற புத்திசாலி நாமன்னு நினைக்கிறதும், ஒரே நேரத்துல... எல்லா பதவிக்கும் ஆசைபடுறதும், எங்க போகணும்னு தெரியாமலே... முடிவு பண்ணாமலே வண்டிய கிளப்புறதும் எல்லாம் ஒன்னுதான்'' "
மீண்டும், "ஒன்னும் புரியல சார்'' என்றேன்.
"ஏங்க.... "பல மரம் தேடும் தச்சன் ஒரு மரமும் வெட்ட மாட்டான்', "விரலுக்கு தகுந்ததுதான் வீக்கம்' இப்படிலாம் பழமொழி நீங்க கேள்விப்பட்டதில்லையா?''
"ஆமா... கேள்விப்பட்டிருக்கேன்''
"அப்படின்னா.... அந்தப் பழமொழியோட கருத்தையும்... என் காபி கதையையும் ஒப்பிட்டு சிந்திச்சுப் பாருங்க''" என்று சொல்லிவிட்டு, " "ஏம்ப்பா சர்வர்... பில் சார் கொடுப்பாருப்பா'' என்கிற தகவலை ஹோட்டலுக்குள் பரவவிட்டுவிட்டு தெளிவாக வெளியேறினார்.
ஒரு குறிப்பிட்ட தேர்வை... இலக்கை முடிவு செய்து, அதற்கு அவசியமான கால அவகாசத்திற்கு உட்பட்ட திட்டங்களைத் தீட்டி சரியாக முயற்சியும்... பயிற்சியும் செய்த மாணவர்கள், இன்று ஏதாவது ஒரு துறையில் ஊழியர்களாக... உயர் அலுவலர்களாக இருக்கின்றனர். ஆனால், தங்கள் தகுதியும்... தேவையும் இதுதான் என்று தெளிவாக முடிவு செய்யாமல், முடிவு செய்ய முடியாமல் அவர்களது கல்வித்தகுதிக்கு ஏற்ப வருகின்ற வாய்ப்புகளையெல்லாம்... போட்டித் தேர்வுகளுக்கெல்லாம் விண்ணப்பித்துவிட்டு, பொத்தாம் பொதுவாக படிக்கின்ற மாணவர்கள் "கிடைத்தால் ஆட்சியர் பதவி, இல்லையேல் ஏதாவது ஒரு அரசுப் பதவி - கடைநிலை ஊழியராக இருந்தாலும் சரி' என்கிற விட்டேத்தியான மனநிலையில் பயணிப்பதால்தான், மூன்று மாத உழைப்பில் தேர்ச்சியடைய வேண்டிய போட்டித்தேர்வில் மூன்று வருடங்களுக்கும் மேலாக முயற்சி செய்தும் வெற்றியடைய முடியாமல் திணறுகின்றனர்.
ஓர் இலக்கை... ஒரு தூரத்தைச் சென்றடைய நாம் எந்த பாதையில், எவ்வளவு வேகத்தில், எந்த வாகனத்தில் செல்கின்றோம் என்பதை பொறுத்து பயண நேரம் மாறுபடலாம். கூடலாம் அல்லது குறையலாம். ஆனால், குறைந்தபட்ச கால அவகாசம் என்று ஒன்றிருக்கிறது. அந்த கால அவகாசத்திற்கு உட்பட்ட கவனமான உழைப்பு என்பது எந்தவொரு வெற்றிக்கும் தேவையே. சிதறிய கவனம்... ஒருமுகப்படாத, பரவலாக்கப்பட்ட கவனம் நம்மை ஊர் கொண்டுபோய் சேர்க்காது. அதே போல, என் நண்பர் சொன்ன "காபி' ஒப்பீட்டில் ஒழிந்திருப்பது "பேராசை பெரு நஷ்டம்' என்கிற தத்துவமே. ஒரு கப் பாலில் தரமான பத்து காபி தயாரிக்க நினைப்பதும், ஒரே முயற்சியில்... ஒரே நேரத்தில் பல போட்டித் தேர்வுகளை வெல்வோம் என்று அதிபுத்திசாலியாக பேராசைப்படுவதும் வீண் முயற்சியே. 
டி.என்.பி.எஸ்.சி., அறிவித்திருக்கும் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பதவிகளுக்கான தேர்வை எந்த வகையில் கையாளப் போகிறீர்கள் நீங்கள்? பேராசை பிடித்த அதிபுத்திசாலியாகவா? அல்லது யதார்த்தம் புரிந்த ஒரு மரம் தேடிய தச்சனாகவா?
- கே.பி. மாரிக்குமார்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

இஸ்ரோவின் விண்வெளி கண்காட்சி!
படிச்சுட்டா...பெரிய ஆளா?
வேலை...வேலை...வேலை...
சொற்கள்!
வருமானம் தரும் அழகுக்கலை படிப்புகள்!