செவ்வாய்க்கிழமை 17 செப்டம்பர் 2019

இன்றைய மாணவர்...நாளைய தொழில்முனைவோர்!  

DIN | Published: 18th June 2019 12:26 PM

காந்தத்தை வைத்து விளையாடுவது, தீப்பெட்டியில் நூலை கட்டி ஃபோன் பேசுவது, சைக்கிள் சக்கரங்களில் பலூனை கட்டி படபடவென ஒலி எழுப்புவது, விதவிதமான பட்டங்களைச் செய்து, அதில் ஏதேனும் பொருளை கட்டி பறக்கவிடுவது போன்றவை சிறுவர்களின் பொழுதுபோக்கான விளையாட்டுகளில் சில. இவற்றைப் பார்க்கும் நாம் ஒரு நகைப்போடு கடந்து சென்றுவிடுவோம். ஆனால், இந்த விளையாட்டுகள்தாம் பிற்காலத்தில் பல விஞ்ஞானிகளையும், மேதைகளையும் உருவாக்கியுள்ளன என்பதற்கு உலகம் முழுவதும் எண்ணற்ற உதாரணங்கள் உள்ளன.
மாணவப் பருவத்தில் உருவாகும் உத்திகளை மெருகேற்றவும், கண்டுபிடிப்பு எண்ணங்கள், தொழில் தொடங்கும் மனப்போக்கு ஆகியவற்றை தூண்டும் விதமாகவும் தொழில்முனைவோர் மனப்போக்கு பாடத்திட்டம் (Entrepreneurship Mindset Curriculum- EMC) என்ற புதிய பாடத்திட்டத்தை பள்ளியில் அமல்படுத்தியிருக்கிறது தில்லி மாநில அரசு.
பள்ளி மாணவர்களிடம் தொழில்முனைவு கலாசாரத்தை வளர்ப்பது, அவர்களது தொழில்நுட்ப மற்றும் கற்றல் திறனை அதிகரிக்கச் செய்வது உள்ளிட்ட நோக்கங்களுடன், 1022 அரசுப் பள்ளிகளில் 9- 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நிகழாண்டு முதல் இந்தப் பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலால் (SCERT) வடிவமைக்கப்பட்ட இந்தப் பாடத்திட்டம், சர்வோதயா கன்யா வித்யாலயா, ராஜ்கியா பிரதிபா விகாஸ் வித்யாலயா, சிவில் லைன்ஸ் உள்ளிட்ட 24 பள்ளிகளில் முன்னோட்ட திட்டமாக ஏற்கெனவே தொடங்கப்பட்டது.
இதுகுறித்து SCERT செயலர் சுனிதா கெளசிக் கூறுகையில், "இந்தத் தொழில்மய உலகில், எங்கள் மாணவர்கள் தங்களிடம் உள்ள கண்டுபிடிப்பு உத்திகளைப் பயன்படுத்தி சிறப்புத் திறன்களைப் பெற, இந்தப் பாடத்திட்டத்தின் வழியாக அவர்களிடம் நம்பிக்கையைக் கட்டமைக்க விரும்புகிறோம். வகுப்பறை கல்வியின்போதே வணிக வாய்ப்புகளை அடையாளம் காணவும், ஒரு வியாபாரத்தைத் தொடங்குவதற்கான ஆதாரங்களை மதிப்பீடு செய்வதற்கும், வெற்றிகரமான தொழில்முனைவோர் வாழ்வில் இருந்து கற்றுக்கொள்ளவும் இந்தத் திட்டம் மாணவர்களுக்கு உதவும்'' என்கிறார்.

EMC திட்டத்தின் கீழ், முக்கிய அடிப்படை விஷயங்கள், வணிக அடித்தளம், தொழில்முனைவு திறன்கள் என்ற அடிப்படையில் 7 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. சந்தை புரிதல் (Market Understanding)விமர்சனச் சிந்தனை, வாய்ப்புகளைக் கண்டறிதல், தோல்வியில் இருந்து மீண்டெழுதல் உள்ளிட்ட பல பிரிவுகளாக பாடத்திட்டம் பிரிக்கப்பட்டுள்ளது. இது மாணவர்கள் தங்கள் இலக்குகளை அடையாளம் காண உதவும் என கருதப்படுகிறது.
இதுகுறித்து தொழில்முனைவோர் மனப்போக்கு பாடத்திட்ட பொறுப்பாளர் சப்னா யாதவ் கூறியது:
"மாணவர்களின் தொழில்முனைவு ஆர்வத்தை அடையாளம் காணும் வகையில், இத்திட்டம் பகுக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 10 -ஆம் தேதி வரை 40 நிமிடங்கள் கொண்ட முன்னோட்ட வகுப்புகள் நடத்தப்பட்டன. இதற்காக, வேலைவாய்ப்பை தொழில்முனைவோராக வடிவமைத்துக்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு உதவும் வகையில், அரசுப் பள்ளிகளில் இருந்து 478 ஆசிரியர்கள், 43 அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
முன்னோட்டத் திட்டத்தின் முதல் வாரத்தில் மாணவர்களின் திறனை ஆசிரியர்கள் அறிந்துகொள்ளும் வகையில், அறிமுக அமர்வு நடைபெற்றது. கலந்துரையாடலாக அமைந்த இந்த அமர்வில், மாணவர்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் சமையல் பாத்திரங்கள் மூலம் தங்களை விவரிக்குமாறு (describe themselves) ஆசிரியர்கள் கேட்டனர். மாணவர்கள் அளிக்கும் பதில் அவர்களின் படைப்புத் திறன்களை புரிந்துகொள்ள உதவும் என்பதற்காக இந்த உத்தி கையாளப்பட்டது. அதோடு கதை சொல்லும் திறன் மற்றும் மென்திறன்களின் அடிப்படையிலும் மாணவர்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டனர். இதுவும் இந்தப் பாடத்திட்டத்தின் ஒருபகுதி'' என்றார் அவர்.


தொடக்கநிலை பாடத்திட்டம் மாணவர்களுக்கு எழுச்சியூட்டுவதாகவும், அவர்களுக்கு உதவும் ஆசிரியர்களுக்கு இடர் மேலாண்மையில் பயிற்சி அளிப்பதாகவும் இருக்கும். உயர்நிலைப் பாடத்திட்டத்தில், மாணவர்கள் தொடக்கத்தில் தங்கள் மனதில் கட்டமைத்த உத்திகளுக்கான திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்துதல் குறித்து கற்றுக்கொள்வர்.
இதுகுறித்து சப்னா யாதவ் மேலும் கூறுகையில், 9, 10 -ஆம் வகுப்பு மாணவர்களுக்காக, தொழில்முனைவோர் மனநிலையை எளிதாக்கும் கையேடு (Entrepreneurship Mindset Facilitator Manual) ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அது மாணவர்கள், தங்களின் தொழில்முனைவு திறன்களை புரிந்துகொள்ளவும், வர்த்தக செயல்பாடுகளின்போது தேவைப்படும் பல வகையான இடர் மேலாண்மை குறித்து பயிற்சி அளிப்பதாகவும் இருக்கும். 11, 12 -ஆம் வகுப்பு மாணவர்களைப் பொருத்தவரை பல்வேறு வகையான வாய்ப்புகளை எவ்வாறு அடையாளம் காண்பது, பெருநிறுவன உலகில் திட்டமிடுதல் மற்றும் தங்கள் உத்திகளை செயல்படுத்துதல் குறித்து பயிற்சி அளிப்பதாக இருக்கும்'' என்கிறார்.
பள்ளிமாணவர்களிடையே தொழில்முனைவு மனப்போக்கை உருவாக்கும் இந்தப் பார்வை மூலம் அவர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல், வேலையை உருவாக்குவோராக மாறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரா.மகாதேவன்


 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

இஸ்ரோவின் விண்வெளி கண்காட்சி!
படிச்சுட்டா...பெரிய ஆளா?
வேலை...வேலை...வேலை...
சொற்கள்!
வருமானம் தரும் அழகுக்கலை படிப்புகள்!