சனிக்கிழமை 17 ஆகஸ்ட் 2019

இந்திய மருத்துவத்துறையில் ட்ரோன்!  

DIN | Published: 18th June 2019 10:51 AM

பொழுதுபோக்குக்காக உருவாக்கப்பட்ட ட்ரோன்கள் (ஆளில்லா சிறு விமானம்) தற்போது அனைத்துத் துறைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. பேரிடர்களில் சிக்கியவர்களைப் பறந்து சென்று கேமரா மூலம் கண்டுபிடிக்கும் பணி முதல், வீட்டிற்குத் தேவையான அத்தியாவசிய பொருள்களைக் கொண்டு சேர்க்கும் பணி வரை ட்ரோன்கள் செய்து வருகின்றன.
 நவீன ட்ரோன் உருவாக்கத்தில் இந்தியாவும் சிறந்து விளங்குகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக, உத்தரகாண்ட் மாநிலம், நந்த்கான் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகளை ஒரு ட்ரோன், 18 நிமிடங்களில் டெரி மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளது. இந்தியாவில் மருத்துவத் துறையில் ட்ரோன் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
 மலைப் பிரதேச மாநிலமான உத்தரகாண்டில் நந்த்கான் கிராமத்தில் இருந்து சாலை மார்க்கமாக டெரி மாவட்ட மருத்துவ மருத்துவமனைக்குச் செல்வதற்கு சுமார் ஒரு மணி நேரமாகும். இந்தப் பயண தூரத்தை வெறும் 18 நிமிடங்களில் ரத்த மாதிரிகளுடன் ட்ரோன் கடந்துள்ளது. இது இந்திய மருத்துவத் துறையில் ட்ரோன் பயன்பாட்டில் ஒரு மைல் கல்லாகக் கருதப்படுகிறது.
 உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்த சாதனை ட்ரோனை, கான்பூர் ஐஐடியின் முன்னாள் மாணவர் நிக்கில் உபாத்யே தயாரித்துள்ளார். ஒரு முறை சார்ஜ் செய்தால் இடைநில்லாமல் 50 கி.மீ. தூரம் வரை 500 கிராம் எடையை எடுத்துச் செல்லும் திறன் உள்ளது இந்த ட்ரோன்.
 குளிர்சாதனப் பெட்டியில் 50 கிராம் எடை கொண்ட நான்கு ரத்த மாதிரிகளை எடுத்துக் கொண்டு பறந்து செல்லும் இந்த ட்ரோனை உருவாக்க சுமார் ரூ. 10 லட்சம் வரை செலவாகியதாக கூறப்படுகிறது.
 உருவாக்கம் விலை அதிகமாக இருந்தாலும், மலைப் பிரதேசங்களில் அவசர கால நேரத்தில் விலை மதிப்பில்லா உயிர்களை இதுபோன்ற ட்ரோன்கள் காப்பாற்றும் என்பதால் விலை ஒரு பொருட்டாகாது.
 அ.சர்ஃப்ராஸ்
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

காடுகளில் 11 ஆண்டுகள்...50 ஆயிரம் புகைப்படங்கள்!
கை அசைவால் இயங்கும் சக்கர நாற்காலி!
வாங்க இங்கிலீஷ் பேசலாம் 204 - ஆர்.அபிலாஷ்
விதி
அறிவால் உருவாகும் ஆரோக்கிய சமுதாயம்! விஞ்ஞானி வெ. பொன்ராஜ் (அப்துல்கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகர்)